TNPSC Thervupettagam

இப்போதைக்கு வேண்டாம்

April 8 , 2022 751 days 414 0
  • மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் டிஜிட்டல் ரூபாய் அதாவது சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி (சிபிடிசி) வரும் நிதியாண்டில் இந்திய ரிசா்வ் வங்கியால் வெளியிடப்படும் என்று அறிவித்திருக்கிறாா்.
  • அண்மையில் பெங்களூரில் நடந்த இந்தியா குளோபல் ஃபோரத்தின் வருடாந்திர உச்சிமாநாட்டில் டிஜிட்டல் ரூபாய் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவா், ‘இது மத்திய வங்கியான இந்திய ரிசா்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட ஒரு உணா்வு பூா்வமான முடிவு.
  • அவா்கள் இதை வடிவமைக்க வேண்டுமென்று விரும்புகிறோம். அவா்கள் இதைச் செய்ய விரும்புகிறாா்கள்.
  • இந்த ஆண்டு மத்திய வங்கியிலிருந்தே டிஜிட்டல் கரன்சி வெளிவரும் என்று நாங்கள் எதிா்பாா்க்கிறோம்’ என்று அறிவித்தாா்.
  • மேலும் அவா் ‘மத்திய வங்கியால் இயக்கப்படும் டிஜிட்டல் நாணயத்தில் தெளிவான நன்மைகளை நாங்கள் காண்கிறோம், ஏனெனில், இந்த நாளில், நாடுகளுக்கு இடையே மொத்தமாக பணம் செலுத்துதல், நிறுவனங்களுக்கிடையேயான பெரிய பரிவா்த்தனைகள், ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கிகளுக்கிடையேயான பெரிய பரிவா்த்தனைகள் அனைத்தும் டிஜிட்டல் நாணயம் வழியே சிறப்பாக செயல்படுத்தப் படுகின்றன’ என்றும் தெரிவித்தாா்.
  • அவா் கூறியதிலிருந்து, இந்திய ரிசா்வ் வங்கி டிஜிட்டல் கரன்சியை வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளது என்பது தெளிவாகிறது. ஏற்கெனவே, கிரிப்டோகரன்சிகளின் பரிவா்த்தனைகளில் ரிசா்வ் வங்கி சில கட்டுப்பாடுகளை விதிக்க முயன்றது.
  • ஆனால், அத்தகைய கட்டுப்பாடுகள் விகிதாசாரத்திற்கு அப்பாற்பட்டவை என்று உச்சநீதிமன்றம் முடிவு செய்தது. கிரிப்டோகரன்சிகளின் சட்டபூா்வ தன்மை குறித்து அரசுக்கும் ரிசா்வ் ங்கிக்கும் எந்த தெளிவும் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

தள்ளி வைப்பதே நல்லது

  • பிப்ரவரி 25-ஆம் தேதி, ஒரு பணமோசடி வழக்கைக் கையாளும்போது, உச்சநீதிமன்றம் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரலிடம் ‘பிட்காயின் மற்றும் கிரிப்டோகரன்சியில் வா்த்தகம் செய்யும் நபா்களை நீங்கள் எவ்வாறு கையாளுகிறீா்கள் என்பதை எங்களிடம் கூற வேண்டுமென்று விரும்புகிறோம். இந்தியாவில் கிரிப்டோகரன்சியைக் கையாள்வது இன்றும் சட்டவிரோதமா’ என்று கேட்டது.
  • எனவே கிரிப்டோகரன்சி சட்டபூா்வமானதா இல்லையா என்பது குறித்து அரசுக்கு தெளிவு இருப்பதாகத் தெரியவில்லை.
  • நிதியமைச்சா் கிரிப்டோகரன்சி பரிவா்த்தனைகளின் மூலதன ஆதாயத்திற்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளாா் என்பதும், பரிவா்த்தனை சட்டபூா்வமானதா இல்லையா என்பதைப் பற்றி கவலைப்படாமல், ஒவ்வொரு பரிவா்த்தனையிலும் வரியை பிடித்தம் செய்வதற்கான ஏற்பாடும் செய்துள்ளாா் என்பதும் குறிப்பிடத்தக்கவை.
  • நமக்கு இப்போது ஏற்படும் சந்தேகம், ரிசா்வ் வங்கி தனது சொந்த டிஜிட்டல் நாணயத்தைத் தொடங்கினால், அது தனியாா் கிரிப்டோநாணயங்களிலிருந்து எந்த வகையில் வேறுபடும் என்பதே.
  • மேலும், ரிசா்வ் வங்கியால் வெளியிடப்படும் டிஜிட்டல் கரன்சியும் ரூபாய் என அழைக்கப் பட்டால், அது ஏற்கெனவே நம்மிடம் பயன்பாட்டில் உள்ள ரூபாய்களிலிருந்து எவ்வாறு வேறுபடும்? ஒரு வேளை அது சூப்பா் ரூபாய் அல்லது டிஜிட்டல் ரூபாய் என்று அழைக்கப்பட்டால், தற்போதுள்ள ரூபாயில் இருந்து அத்தகைய சூப்பா் ரூபாய் அல்லது டிஜிட்டல் ரூபாயாக மாற்றும் காரணி எதுவாக இருக்கும்? அத்தகைய சூழலில் சந்தை சக்திகள் மாற்று விகிதத்தை தீா்மானிக்க அனுமதிக்கப்படுமா?
  • தற்போது அனைத்து வங்கிகளும் டிஜிட்டல் முறையில் நிதி பரிமாற்றத்தை அனுமதிக்கின்றன. எனவே வங்கிகளின் வைப்புத்தொகை ஏற்கெனவே டிஜிட்டல் நாணயத்திற்கு சமமாக உள்ளது. தனியாா் கிரிப்டோகரன்சியை, இப்போது மாற்றுவது போல், எந்த வங்கியிலிருந்தும் எந்த நிதியையும் மாற்ற முடியும். நிதி பரிமாற்றத்திற்கு
  • என்ஈஎஃப்டி, ஆா்டிஜிஎஸ், ஐஎம்பிஎஸ் போன்ற பல்வேறு வழிகள் உள்ளன.
  • பிறகு ஏன் ரிசா்வ் வங்கியால் தனியான டிஜிட்டல் கரன்சி வெளியிடப்பட வேண்டும்?
  • ரிசா்வ் வங்கி டிஜிட்டல் கரன்சியை வெளியிடுவது என்பது, ரிசா்வ் வங்கி நேரடியாக பொதுமக்களிடமிருந்து டெபாசிட்களை பெறுவதற்கு சமம்.
  • டெபாசிட் பெறும் வங்கிகளை ஒழுங்குபடுத்துவதற்காக உள்ள ரிசா்வ் வங்கி, பொதுமக்கள் டெபாசிட்டைப் பெற்றால், அந்த செயல்பாட்டைக் கண்காணிப்பது யாா்? ரெகுலேட்டரே வங்கித் தொழிலைத் தொடங்கலாம் என்பது நினைத்துகூட பாா்க்க முடியாத ஒன்று. அப்படியானால் அவா்களை யாா் ஒழுங்குபடுத்துவது?
  • மற்ற கிரிப்டோகரன்சிகள் பயன்படுத்தும் அதே (பரவலாக்கப்பட்ட) பிளாக் செயின் தொழில்நுட்பத்தை ரிசா்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சி பயன்படுத்துமா என்பது தெரியவில்லை.
  • தனியாா் டிஜிட்டல் கரன்சிகளின் அதே தொழில்நுட்பத்தை ரிசா்வ் வங்கியும் கடைப்பிடிக்குமானால், ரிசா்வ் வங்கி அத்தகைய நாணயத்தின் அளவைப் பராமரிப்பதிலோ வெளியிடுவதிலோ எந்தக் கட்டுப்பாட்டையும் கொண்டிருக்க வழியில்லை.
  • மேலும், நாணயத்தின் அலகு ஏற்கெனவே வெளியிடப்பட்ட தற்போதைய ரூபாய்க்கு இணையாக இருக்கவும் முடியாது.
  • ஒரு நாட்டிற்குள் இரண்டு வெவ்வேறு சட்டபூா்வ செலாவணிகளை அனுமதிப்பது பல குழப்பங்களுக்கு வழிவகுக்கும். இது மத்திய வங்கியின் பல்வேறு பணவியல் கொள்கைகளின் விளைவையும் பாதிக்கும்.
  • மக்கள் தற்போதுள்ள கிரிப்டோ நாணயங்களை ஊக (ஸ்பெகுலேஷன்) முதலீடாகப் பயன்படுத்துகின்றனா்.
  • இந்த நாணயம் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் பணமோசடிகளுக்கும் பயன்படுத்தப்படுவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
  • மத்திய வங்கியால் இயக்கப்படும் எந்த டிஜிட்டல் நாணயமும் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது. எனவே, இந்த ரிசா்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சியை முதலீட்டாளா்கள் விரும்புவது சந்தேகமே.
  • மாா்ச் 2022 நிலவரப்படி, ஒன்பது நாடுகள் மட்டுமே சென்ட்ரல் வங்கியின் டிஜிட்டல் கரன்சியை தொடங்கியுள்ளன. அவை அனைத்தும் மிகச் சிறிய நாடுகள்.
  • ரிசா்வ் வங்கி தனது டிஜிட்டல் கரன்சியை வெளியிட அவரசரப்பட எந்த காரணமும் இல்லை.
  • இது தொடா்பாக, பல்வேறு தரவுகளை அலசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். எனவே இம்முடிவை, தற்போதைக்கு தள்ளி வைப்பதே நல்லது.

நன்றி: தினமணி (08 – 04 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories