TNPSC Thervupettagam

இயற்கை உணவை மீட்டெடுப்போம்

December 18 , 2021 897 days 510 0
  • நவீன மருத்துவம் வந்த பின் நாம் பழைய மூலிகைத் தாவரங்களை ழுழுவதுமாக மறந்து விட்டோம். நம் தோட்டத்தில் விளையும் பல சத்துள்ள தாவரங்களின் அருமை தெரியாமல் அவற்றைப் பிடுங்கி எறிந்திருக்கிறோம்; வயலுக்கு உரமாக்கியிருக்கிறோம்; மாட்டுக்கு தீவனமாகப் போட்டிருக்கிறோம்.
  • ஆங்கில மருத்துவத்துக்கான மருந்துக்கடைகள் வந்தவுடன் நாட்டுமருந்துக் கடைகள் என்ற பெயர்ப் பலகைகளை தேடிப்பிடிக்க வேண்டியதாகிவிட்டது. கால ஓட்டத்திற்குத் தகுந்தாற்போல் நாம் அதன் பின்னாலேயே, எங்கே போகிறோம் என்று தெரியாமலே மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கிறோம்.
  • உடை, உறைவிடம், உணவு பழக்கவழக்கம் என எல்லாவற்றையும் மாற்றிவிட்டு நாம் பெருமிதத்தோடு வாழ்வதாக நினைத்துக்கொண்டு வாழ்ந்துவரும் இன்று ஒரு விஷயத்தில் நாம் செல்லும் பாதை தவறு என்றுணர்ந்து மறுபடியும் பல ஆண்டுகள் பின்னோக்கிப் பயணிக்க ஆரம்பித்துள்ளோம். இந்தப் பயணம் உணவு சம்பந்தமானது பொதுவாக நாம் சாப்பிடும் உணவுகளை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று பயிர்களிலிருந்து கிடைப்பவை. மற்றொன்று கால்நடைகளிலிருந்து கிடைப்பவை.
  • அவசரமான உலகில் அதிக மகசூல் என்ற கோஷத்தில் அவசரமான தானியங்களை-ஆயுள் குறைவான நாள்களில் -அதிக ரசாயன உரங்களையிட்டு உற்பத்தி செய்து உணவுகளின் உயிர்த் தன்மையை மாற்றிவிட்டோம்.
  • மாடுகளின் காம்புகளில் குடிநீர் குழாய்களில் தண்ணீர் வருவதுபோல் பால் வரவேண்டுமென பல மந்திர ஜாலங்களை அதற்கு கொடுக்கும் உணவுகள் மூலம் செய்கிறோம்.
  • ஒரு காலத்தில் பாலில் தண்ணீர் கலப்பதையே மிகப்பெரிய குற்றமாகப் பார்த்த நமது தேசத்தில் இப்போது அதைப் பதப்படுத்துவதற்காக அதில் எதையெதையோ கலக்குகிறார்கள். பனைவெல்லத்தையும் கரும்பு ஆலை சர்க்கரையையும் பயன்படுத்திவந்த நாம், வெள்ளை சர்க்கரை ருசிக்குப் பழகிவிட்டோம். வெண்மை என்ற ஈர்ப்பில் வீழ்ந்து அழகான அரிசிகளை ருசி கண்டு விலகாத நோய்களை வாங்கிக் கொண்டோம்.
  • கீரை வகைகளுக்காக அலைகிறோம். பச்சைக் காய்கறிகளின் முக்கியத்துவம் அறிந்தோம். வயலிலே வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டு அதே வயல் வெளியிலேயே வேலைசெய்து கலோரிகளை விட்டுவிட்டு வந்த நாட்களை இன்று மருத்துவமனை சென்று மாத்திரைகளில் கரைக்கிறோம்; நடைப்பயிற்சியால் மீட்கப் பார்க்கிறோம்.
  • உணவு விஷயத்தில் புதியன கழிந்து பழையன புகுதலை வரவேற்கிறோம்.
  • மக்களிடையே உணவு விஷயத்தில் விழிப்புணர்வை நோயே உண்டு பண்ணிவிட்டது. இனி ரசாயனம் கலந்து உருவான உணவை உட்கொண்டால் ஆயுள் குறையும், நோய் பெருகும் என்ற அச்சம் மனிதனுக்கு வந்துவிட்டது. அதனால் ரசாயனக் கலப்பில்லாத உணவுகளைத்தேடி மனிதர்கள் அலைய ஆரம்பித்துவிட்டார்கள்.
  • இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய சிலர் ஆக்கபூர்வமாகச் செயல்பட்டார்கள். ஆங்காங்கே ரசாயன கலப்பில்லாத இயற்கை உணவுப்பொருள் அங்காடிகள் திறக்கப்பட்டன. இயற்கை (ஆர்கானிக்) தயாரிப்புகளான தானியங்கள், மரச்செக்கு எண்ணெய், நாட்டு மாட்டுப்பால் , நாட்டுக்கோழி என பெயர்ப்பலகைகள் தொங்க ஆரம்பித்துவிட்டன.
  • அதைப்பார்த்த மனிதன் அந்தக் கூடாரத்துக்குள்ளும் நுழைகிறான். இழந்த ஆரோக்கியத்தை இங்கே மீட்கலாம் என்ற நம்பிக்கை வருகிறது. ஆனாலும் அங்கேயும் அவனுக்கு பிரச்னை. அங்கேயும் கலப்படம். நாட்டு சர்க்கரை என்ற பேரில் சாயம்பூசிய சர்க்கரைகள் பிடிபட்ட செய்திகளும் வந்தன.
  • உண்மையான இயற்கை அங்காடிகளும் இயங்கிக் கொண்டுதானிருக்கின்றன. ஆனால் உண்மையோடு பொய்யையும் கலக்கும்போது எப்படித் தரம் பிரிப்பது?
  • இப்படிப்பட்ட கலப்படங்களால் எது நிஜம், எது போலி என அறியாமல் மனிதன் குழம்புகிறான். எது இயற்கை உணவு என்று எப்படி அறிவது? அதற்கான சான்றிதழ் இருக்கிறது என்று கடைக்காரர் சொல்கிறார். சான்றிதழ் கொடுப்பவர்கள் யார்?
  • அவசர வாழ்க்கையில் இதையெல்லாம் சோதித்துப் பார்க்க யாருக்கு நேரம் இருக்கிறது? வாங்கிய மாத்திரையைக் கூட படித்துப்பார்க்காமல் வாயினில் போடுகிற மனிதர்களாயிற்றே நாம்?
  • மனிதன் வான்முட்ட வீடுகட்டுகிறான். விலை உயர்ந்த ஆடைகளை அணிகிறான். வீதியெங்கும் மேடைபோட்டுப் பேசுகிறான். வானூர்தியில் பயணம் செய்கிறான். வேற்றுக்கிரகத்தில் கால் பதிக்கிறான். பயணம் செய்யும் வாகனத்தை வாங்குவதற்கு முன்பு பலதடவை அதை பரிசோதிக்கிறான். எதையெதையோ தயாரிக்கும் மனிதனால் தன் உயிர் உடலில் தங்குவதற்கு ஆதாரமான சுத்தமான உணவைத் தயாரிக்க முடியாதா?
  • நிலத்தில் மகசூல் குறைந்தாலென்ன? மனிதனின் ஆயுள் பெருகுமே. பழங்காலத்து அரிசிகளைப் பயன்பாட்டிற்கு கொண்டுவர இப்போதே பயிற்சி எடுக்கலாமே. நிலம் இருக்கிறது. நீரூற்றுக்கள் இருக்கின்றன. வளம் இருக்கிறது. வான் மழையும் துணையிருக்கிறது. உழவுக்கும் அறுவடைக்கும் இயந்திரம் இருக்கிறது. ரசாயனம் கலவாத தானியங்களை உற்பத்தி செய்வதில் என்ன தயக்கம்?
  • மனிதர்களே யோசியுங்கள். வருங்காலங்களில் நீங்கள் நிறைய பணம் சம்பாதிக்கலாம். ஆனால் நல்ல ஆரோக்கியமான உணவுகளைக் காண்பது அரிதாகவே இருக்கும். இதில் கிராமவாசிகளுக்குக் கூட பிரச்னையில்லை. குறிப்பிட்ட காய்கறி எப்படிப்பட்டது என்று கண்டுபிடித்துவிடுவார்கள். ஆனால் நகரவாசிகளால் இதை அறிய இயலாது.
  • இதற்கெல்லாம் என்னதான் தீர்வு? காய்கறிகள் பயிரிடுவதற்கு ஏற்ற இட வசதி உள்ளவர்கள் தாங்களே தங்கள் வீட்டுக்கு தேவையானவற்றை உற்பத்தி செய்துகொள்ளலாம். அவ்வாறு இடம் இல்லாதவர்கள் வேலை தேடும் விவசாயி ஒருவரின் துணை கொண்டு ஓர் இடத்தில் பண்ணை அமைத்து அந்த ஊருக்குத் தேவையான காய்கறிகள், மாட்டுப்பால், ரசாயனம் கலவாத இயற்கை உணவுகளை உற்பத்தி செய்துகொள்ளலாம்.
  • நம் உடல் நலத்தை நாம்தான் பேணவேண்டும். கல்வி தொடங்கி மருத்துவம் வரை வணிகமயமாகிவிட்ட இந்தக் காலகட்டத்தில் நோய்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது. உயிரைக் காக்கும் உணவு விஷயத்தில் கவனம் கொள்வதே, நோயிலிருந்து நம்மைக் காக்கும்.

நன்றி: தினமணி (18 – 12 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories