TNPSC Thervupettagam

நீங்கள் தென்னிந்தியர்கள் ஏன் பதற்றப்படுகிறீர்கள்

April 23 , 2024 11 days 75 0
  • செளதி அரேபியாவின் வடமேற்கில் இருக்கிறது தபுக். சிறு நகரம். அங்கு சில காலம் பணியாற்றினேன். டெல்லியிலிருந்து ஒரு நண்பர் தபுக் வந்திருந்தார். பன்னாட்டு உணவகம் ஒன்றில் சந்தித்தோம். உணவகத்தின் பரிசாரகர் மிகுந்த நட்புணர்வுடன் எங்களை வரவேற்றார். அவரது ஆங்கிலத்தில் எகிப்திய மணமிருந்தது.
  • எங்களிடம் உணவுப் பட்டியலை நீட்டினார். அது பெரிய புத்தகமாக இருந்தது. நண்பர் அவரையே தேர்ந்தெடுக்கச் சொன்னார். நண்பருக்குத் தந்தூரி ரொட்டியும் பட்டர் சிக்கனும் பரிந்துரைத்த பரிசாரகர், என்னிடத்தில் இடியாப்பமும் மீன் கறியும் நன்றாக இருக்கும் என்றார். இருவருக்கும் அவரது தெரிவுகள் பிடித்திருந்தன. அதையே சொன்னோம். அவை விரைவாகவும் வந்தன.
  • நண்பர் பரிசாரகரிடம் கேட்டார்: “எங்களுக்கு எப்படி இந்த உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்தீர்கள்?” - கேள்வி சாதாரணமானது. ஆனால், பரிசாரகரின் பதில் எதிர்பாராதது. “நீங்கள் இந்தியர், இவர் கேரளியர். யாருக்கு என்ன பிடிக்கும் என்று எங்களுக்குத் தெரியும்”. நண்பர் பதறிப்போனார். அவர் வேகவேகமாகப் பதிலளித்தார்.
  • “இவர் தமிழர். நான் பிஹாரி. கேரளம் இவருக்கு அருகிலிருக்கும் மாநிலம். பிஹார் தொலைவிலுள்ள மாநிலம். ஆனால், நாங்கள் அனைவரும் இந்தியர்கள்.” நண்பரின் முகத்தில் கொஞ்சம் கடுமை தெரிந்தது. பரிசாரகர் அனுபவம் மிக்கவர். உரையாடலை நீட்டுவது உசிதமல்ல என்று அவருக்குத் தெரிந்தது. குரலைத் தாழ்த்திக்கொண்டார்; நண்பரை ஆமோதித்தார்; மெதுவாக எங்கள் மேசையிலிருந்து விலகிவிட்டார்.
  • நண்பர் சமாதானமடையவில்லை. “செளதி அரேபியாவில் கேரளியர்கள் அதிகமாக வசிப்பதால், அவர்களைத் தனி நாட்டவர்கள் என்று இங்குள்ளவர்கள் கருதியிருக்கக்கூடும்” என்றார். நான் கேட்டுக்கொண்டேன். அப்புறம் மெல்லச் சொன்னார். “உணவில் வித்தியாசம் இருக்கலாம்.
  • அதற்காக ஒரே நாடு என்பது இல்லாமலாகுமா?” - இப்போது நான் பதில் சொன்னேன். “நிச்சயமாக நாம் ஒரே நாட்டினர்தான், ஆனால் உணவில் மட்டுமில்லை, வித்தியாசம் உடை, மொழி, நிறம், இசை, வழிபாடு, கட்டிடம், கலை, பண்பாடு எல்லாவற்றிலும் இருக்கிறது”. நண்பருக்கு இப்போது என் மீது கோபம் வந்துவிட்டது. அவர் கேட்டார்: “நீங்கள், தென்னிந்தியர்கள் ஏன் எப்போதும் பதற்றப்படுகிறீர்கள்?”
  • அந்த மாலை ரம்மியமாக இருந்தது. முன்னொரு காலத்தில் நாங்கள் இருவரும் பணியாற்றிய நிறுவனத்தின் சகாக்களைப் பற்றி நண்பரிடம் நிறைய வம்புகள் இருந்தன. இரண்டையும் நான் இழக்க விரும்பவில்லை. நான் பேச்சை மாற்றினேன். அன்றைய தினம் நண்பர்தான் பதற்றத்தில் இருந்தார். ஆனால், இந்தத் தேர்தல் களத்தில் அவர் சொன்னதுபோல் தென்னிந்தியர்கள் பதற்றத்தில் இருப்பதாகத்தான் தோன்றுகிறது.
  • சமீபத்தில் நாடெங்கிலும் நடத்தப்பட்ட ஒரு கள ஆய்வு, இந்தத் தேர்தலின் முக்கியப் பிரச்சினைகளாக விலைவாசியையும் வேலையின்மையையும் குறிப்பிடுகிறது. தென்னகத்தில் மட்டுமே இந்த ஆய்வு நடத்தப்பட்டிருந்தால் மாநிலங்களுக்கு இடையிலான நிதிப் பகிர்வு ஒரு பிரச்சினையாகச் சேர்ந்திருக்கும். குறிப்பாக, ஒரு புள்ளிவிவரம் இந்தத் தேர்தல் களத்தில் பேசப்படுகிறது.
  • தமிழ்நாடு மத்திய அரசுக்குச் செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 29 காசு மட்டுமே திரும்பப்பெறுகிறது. அதே வேளையில், உத்தரப் பிரதேசம் ஒரு ரூபாய் செலுத்தி ரூ.2.73 பெறுகிறது. பிஹாரோ தான் செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் ரூ.7.06 பெறுகிறது.
  • இது 2021-22ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரம். இதன்படி தென் மாநிலங்களில் அதிகமாகப் பெறுவது கேரளம் (53 காசு); குறைவாகப் பெறுவது கர்நாடகம் (15 காசு). இதன் எதிர்மாறாக உத்தராகண்ட், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் முதலான வட இந்திய மாநிலங்கள் கொடுப்பதைவிடப் பெறுவது அதிகம்.
  • காரணம் எளிமையானது. தென்னிந்திய மாநிலங்களின் மக்கள்தொகை குறைந்துவருகிறது. அதாவது, இந்திய மக்கள்தொகையில் தென்னிந்தியர்களின் விகிதம் குறைகிறது (1971 - 24.7%, 2011 - 20.7%). மேற்குறிப்பிட்ட இந்தி பேசும் ஏழு வட இந்திய மாநிலங்களின் மக்கள்தொகை கூடிவருகிறது (1971 - 39.3%, 2011 - 42.4%). 2026இல் நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுவரைவுக்கான கெடு வருகிறது. இது நடந்தால், நாடாளுமன்றத்தில் தென் மாநில இருக்கைகள் குறையும்.
  • அதாவது, நாடாளுமன்றத்தில் தென்னகத்தின் குரல் தேயும். அவை வடகிழக்கு மாநிலங்களைப் போல முக்கியத்துவத்தை இழக்கும். தென் மாநிலங்களுக்கான நிதி அரசமைப்பு விதிகளைப் பின்பற்றியே குறைக்கப்படுகிறது. வருங்காலத்தில் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டால், அதுவும் அரசமைப்பின் வழியாகவே செய்யப்படும். ஏனெனில், நமது அரசமைப்பில் மாநிலங்களைவிட மத்திய அரசே அதிகாரம் மிக்கது.
  • எனில், இந்தி மொழியின் அதிகாரத்துக்கு அரசமைப்பு மட்டுமே காரணமல்ல. அரசமைப்பின்படி மத்திய அரசின் அலுவல் மொழிகள் இரண்டு. அவை இந்தியும் ஆங்கிலமும். இந்தி, இந்தியாவின் தேசிய மொழியல்ல. எந்த மொழியும் இந்தியாவின் தேசிய மொழியல்ல. எனினும் தமிழகத்தின் எல்லா ரயில் நிலையங்களிலும் அறிவிப்புகள் இந்தியில் இருக்கும். சலுகையாகத் தமிழிலும் அறிவிக்கப்படும்.
  • ரயில் பயணிகளுக்குக் கிடைக்கும் இந்தச் சலுகை, விமானப் பயணிகளுக்குக் கிடைப்பதில்லை. தமிழக விமான நிலையங்கள் எதிலும் தமிழ் அறிவிப்புகளைக் கேட்க முடியாது. விமானங்களிலும் அப்படித்தான். விமான நிலையங்களில் பணியாற்றும் சி.ஐ.எஸ்.எஃப் காவலர்களுக்கு இந்தி மட்டுமே தெரியும். பயணிகள் அனைவருக்கும் இந்தி தெரிந்திருக்க வேண்டுமா? இது ஆதிக்க மனோபாவம் ஆகாதா?
  • ஆதிக்கம் ஒரு புறம் என்றால், புறக்கணிப்பு மறுபுறம். சமீபத்திய எடுத்துக்காட்டு ‘Swadeshi Steam’. இது ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய நூல். பிரிட்டிஷ் பேரரசை எதிர்த்து வ.உ.சி எனும் ஒரு சாமானியத் தமிழன் கப்பலோட்டிய கதையைப் பேசும் நூல். ஆய்வுப் புலத்தில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கும் இந்த நூலின் அறிமுக விழா, ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்றது.
  • நூல் உருவாக்கத்தில் உதவியவர்களுக்கு விழாவில் சலபதி நன்றி கூறினார். அதில் சி.பி.எஸ்.இ. பாடநூல் நிறுவனமும் இருந்தது. ஏன்? அந்தப் பாடநூல்களில் வ.உ.சி.யைப் பற்றி ஒரு வரிகூட இல்லை. அதுவே வ.உ.சி. குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளத் தனக்கு உத்வேகமாக அமைந்தது என்றார் சலபதி.
  • இந்த நிகழ்வு குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தேன். அதைப் படித்த எனது பிஹாரி நண்பர் வ.உ.சி.யால் ஈர்க்கப்பட்டுவிட்டார். நூலை வாங்கிவிட்டதாகவும் வாசித்து வருவதாகவும் எனக்கு மடல் எழுதினார். கூடவே, ஒரு கேள்வியும் எழுப்பினார். “வ.உ.சி. ஒருவரின் பெயர் விடுபட்டுப்போனதால், மொத்தத் தமிழகமும் விடுபட்டதாகப் பொருள்படுமா?”. நான் பதில் எழுதினேன்.
  • “அழகு முத்துக்கோன், பூலித்தேவன், மருதநாயகம், வேலு நாச்சியார், கட்டபொம்மன், மருது சகோதரர், திருப்பூர் குமரன், விஸ்வநாத தாஸ் முதலான எந்தத் தமிழ்ப் பெயரையாவது சி.பி.எஸ்.இ. நூல்களில் பார்க்க முடியுமா? விந்தியத்துக்குத் தெற்கே விடுதலைப் போர் நடந்ததா என்கிற ஐயம் அந்த நூல்களைப் படித்தால் வரக்கூடுமல்லவா?”
  • இந்த முறை நண்பர் தபுக் உணவகத்தில் கேட்ட கேள்வியைக் கேட்கவில்லை. மாறாக, நிலைமை சீராகும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். அந்த நம்பிக்கை நல்லது. அது மனமாற்றத்துக்கு வழிவகுக்கும். தென்னிந்தியர்களின் மீதானபுறக்கணிப்பும் ஆதிக்கமும் முடிவுக்கு வர வேண்டும்.
  • அப்போது தென்னிந்தியர்கள் அவர்களுக்கு அருகதையுள்ள நிதியையும் பிரதிநிதித்துவத்தையும் பெறுவார்கள். அரசமைப்பில் மாநிலங்களின் பங்கு கூடும். அது பன்மைத்துவத்தை வளர்க்கும். கூட்டாட்சி பேணப்படும். கூடவே, தென்னிந்தியர்களின் பதற்றமும் குறையும்.

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories