TNPSC Thervupettagam

இருளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்

April 12 , 2022 769 days 639 0
  • பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த இருளர்கள் மீண்டும் பாம்பு பிடிக்கலாம் என்ற அனுமதியைத் தமிழ்நாடு அரசு கடந்த மார்ச் 28-ம் தேதி வழங்கியிருக்கிறது.
  • இவர்கள் நீலகிரி, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருச்சி, மதுரை, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் அதிகமாக வாழ்கிறார்கள்.
  • இந்த அறிவிப்பில், ஒரு முழுமையான தெளிவு இல்லையென்று பலரும் கூறுகிறார்கள்.
  • மாமல்லபுரத்துக்கு அருகில் உள்ள வடநெம்மேலியில் செயல்படும் இருளர், பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த அனுமதி வழங்கப்படுகின்றது என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
  • இந்த அரசாணை இன்னும் கூடுதலாகச் செய்ய வேண்டியது என்ன, மற்ற பகுதிகளில் பாம்பு பிடிப்பதில் ஈடுபட்டுள்ள இருளர்கள், காட்டுநாயக்கர்களின் நிலை என்னவாகும்? அவர்களும் இந்தத் தொழிலில் ஈடுபடக் கூடாதா? இதனால் அவர்களுடைய வாழ்வாதாரம் எப்படியெல்லாம் பாதிக்கப்படும் என்பதைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

எல்லோருக்கும் மரியாதை ஏற்படும்

  • 1978-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தச் சங்கத்தின் மூலம் ஆண்டுக்கு நான்கு கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் அளவுக்குப் பாம்புகளிடமிருந்து விஷம் எடுத்துக் கொடுப்பதற்கான வாய்ப்பு இருந்தது.
  • இந்தியாவிலேயே இந்தச் சங்கம்தான் பாம்பிலிருந்து விஷம் எடுக்கும் வேலையைச் செய்யும் பெரிய சங்கமாக இருந்தது.
  • ஆனால், தற்போது தமிழக அரசு 224 கிராம் எடையுள்ள பாம்பு விஷத்தை மட்டும் விற்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
  • இந்தக் கூட்டுறவுச் சங்கத்தில் 358 இருளர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
  • இவர்கள் மட்டுமே பாம்பு பிடிக்க வேண்டுமென்றால், இந்த வேலையை எத்தனை பேருக்கு நிறைவாகத் தர முடியும் என்று தெரியவில்லை.
  • இருளர்கள் ஏற்கெனவே வருடத்துக்கு 13 ஆயிரம் பாம்புகள் பிடிப்பதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற்றிருக்கிறார்கள்.
  • ஆனால், தமிழ்நாடு அரசு தற்போது கொடுத்திருக்கும் அரசாணையில் வருடத்துக்கு 5 ஆயிரம் பாம்புகள் மட்டுமே பிடிக்க வேண்டுமென்று கூறியிருக்கிறது.
  • பாம்புகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால், அவற்றிலிருந்து எடுக்கிற விஷத்தின் அளவும் குறைந்துவிடும்.
  • இதனால் குறைவான நபர்களுக்குத்தான் வேலையைப் பிரித்துக் கொடுக்க முடியும். கட்டுவரியன், கண்ணாடிவிரியன், சுருட்டைவிரியன், நல்லபாம்பு ஆகிய நான்கு வகையான பாம்புகளை மட்டுமே பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
  • அதில் ஒழுங்குபடுத்தப்பட்ட விதிமுறைகளின்படி, வாரத்துக்கு ஒரு முறை பாம்புகளிலிருந்து விஷத்தை எடுத்த பிறகு, ஒரு மாதம் கழித்து, அவற்றை மீண்டும் காட்டுக்குள் விட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
  • இந்தப் பணியின் மூலம், பாம்பிலிருந்து விஷம் எடுத்து, மருந்து தயாரிப்பதற்கான படிகத் துகள்களைச் சேகரித்துக் கொடுக்கிறார்கள்.
  • அதை வைத்துக்கொண்டு அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், பாம்புக் கடியால் ஏற்பட்ட விஷத்தை முறிப்பதற்கான மருந்து, புற்று நோயைக் குணப்படுத்துவதற்கான மருந்து, இன்னும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்துகளைத் தயாரிப்பதற்கான ஆய்வில் ஈடுபடுகிறார்கள்.
  • இந்த ஆய்வுகள் அதிகமாக நடக்கும்போது அதிக அளவில் பாம்புகளைப் பிடிப்பதற்கான தேவை ஏற்படும். அதன்மூலம், தமிழ்நாட்டில் பாரம்பரியமாகப் பாம்பு பிடிக்கத் தெரிந்த எல்லா இருளர்களையும் இந்தப் பணிகளில் ஈடுபடுத்தலாம்.
  • இதனால், இந்தக் கூட்டுறவுச் சங்கத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்குவதற்கான சூழலை ஏற்படுத்தலாம். அதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்; இருளர்களின் வாழ்வாதாரம் உயரும்.
  • பாம்புகள் தங்களின் பாரம்பரிய சொத்து என்கிறார்கள் இருளர்கள். எனவே, அவர்கள் யாரும் பாம்புகளைப் பார்த்தால், அவற்றைக் கொல்வதில்லை.
  • மாறாக, யாருக்கும் எந்தத் தீங்கும் இழைக்காத வகையிலே அவற்றைப் பிடித்து, மீண்டும் காட்டுக்குள்ளேயே விட்டுவிடுவதுதான் அவர்களுடைய வழக்கம்.
  • இருளர்கள் காலங்காலமாகக் காட்டுக்குள் சென்று பாம்புகளைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
  • முன்னோரிடமிருந்து கற்றுக்கொண்டதன் அடிப்படையில் பாம்பு பிடிப்பதில் நுணுக்கமான அறிவைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
  • அதாவது, தங்களின் ஐம்புலன்களையும் சரியாகப் பயன்படுத்தி, பாம்பு இருக்கும் இடம், பாம்பு செல்லும் தடம், பாம்பின் குணம் அனைத்தையும் உள்ளார்ந்த அனுபவத்தால் அறிந்தவர்களாக இருக்கிறார்கள்.
  • உதாரணமாக, பறவைகளின் ஒலியை வைத்துப் பாம்பு ஒரு இடத்தில் இருக்கிறதா, இல்லையா என்பதை அவர்களால் சொல்ல முடியும்.
  • பாம்பு விட்டுச்சென்ற கழிவின் மூலம் பாம்பு நகர்ந்து சென்ற திசையைக் கண்டறிய முடியும்.
  • பாம்பு பிடிப்பது ஏன் தடைபட்டது என்று நாம் கேள்வி கேட்கலாம்? இருளர்களும் மற்றவர்களும் பாம்புகளைப் பிடித்து அவற்றின் தோலை எடுத்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, வருமானம் ஈட்டினார்கள்.
  • பாம்புத் தோலை வைத்து மணிபர்ஸ், இடுப்பு வார் போன்றவற்றைச் செய்தார்கள்.
  • ஆனால், பாம்பின் தோலை உரித்தால் பாம்புகள் செத்துப்போய்விடுகின்றன. இதனால், பாம்புகளின் எண்ணிக்கை குறைவதற்கான ஆபத்து இருக்கின்றது. எனவே, பாம்பு பிடிப்பது தடை செய்யப்பட்டது.
  • அதுமட்டுமல்லாமல், 1972-ல் வெளிவந்த வன விலங்குப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் 2006--ல் கொண்டு வரப்பட்ட வன உரிமைப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, பழங்குடியினர் காடுகளுக்கும் மலைகளுக்கும் சென்று எந்த உயிரினத்தையும் வேட்டையாடக் கூடாது.
  • காட்டுக்குள் இருக்கும் சிறுசிறு விலங்குகளைப் பாதுகாக்க வேண்டும் என்னும் போர்வையில் பாம்புகளைப் பிடிப்பதும் குற்றமாகக் கருதப்பட்டது.
  • தங்கள் பசியைப் போக்கிக்கொள்வதற்காக இருளர்கள் முயல், எலி, அணில் போன்ற உயிரினங்களை வேட்டையாடி உண்பதுண்டு.
  • காடும் மலையும் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று வாழ்ந்த பழங்குடியினர், இன்று காட்டுக்குள் சென்று சிறுதானியங்களை எடுப்பதையோ, விறகுகள் சேகரிப்பதையோ உணவுக்காக வனவிலங்குகளை வேட்டையாடுவதையோ செய்ய முடியாமல் போய்விடுகிறது.
  • பாம்பு பிடிப்பதற்கான உரிமத்தை இருளர்களுக்கு வனத் துறை அதிகாரிகள் விரைவாக வழங்க வேண்டும்.
  • பாம்பு பிடிப்பதற்கான உபகரணங்களை அரசு முன்வந்து வழங்க வேண்டும். உதாரணமாக கத்தி, கடப்பாரை, வயர் கூடை, பாம்பு பிடித்தவுடன் போடுவதற்கான துணிப்பை, வெயில் நேரத்தில் பயன்படுத்தும் குடை, வெட்ட வெளியில் படுத்துத் தூங்கும்போது கொசு கடிக்காமல் இருப்பதற்குக் கொசுவலை, இரவில் பயன்படுத்த டார்ச்லைட், சமைப்பதற்கான உபகரணங்கள் என அனைத்தையும் வழங்கினால், பாம்பு பிடிப்பதை எளிதாகச் செய்ய முடியும்.
  • கூடவே, வனத் துறை அதிகாரிகள் இருளர் மக்களை அன்புடனும் மதிப்புடனும் நடத்த வேண்டும்.
  • பாம்பு பிடித்தலில் உள்ள சிக்கல்கள் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள, வனத் துறை அலுவலர்களுக்கும் வனத் துறை அதிகாரிகளுக்கும் இருளர்களைக் கொண்டு பயிலரங்குகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யலாம்.
  • ஏனென்றால், புத்தக அறிவைவிட, இருளர்கள் கொண்டிருக்கும் பட்டறிவு மேலானது. அப்போது தான் இருளர்களின் மீது எல்லோருக்கும் மரியாதை ஏற்படும்.

நன்றி: தி இந்து (12 – 04 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories