TNPSC Thervupettagam

இறைவன் வருவிக்க உற்றவா்

October 5 , 2023 227 days 515 0
  • நீள்வட்டப் பாதையில் தானே சுழன்று கொண்டு, சூரியனையும் சுற்றிவரும் பூமிக் கோளத்தின் மேலே வாழும் உயிர்களில் மேலானது மனிதம். அது புனிதம் எனக் கருதும் யாவற்றையும் தன் வாழ்வில் எப்பொழுதும் கடைப்பிடித்தொழுகும் கடப்பாடுடையது. அனுபவ வெளிகளில் அடையாளங் கண்டுகொண்டவற்றுள், அல்லனவற்றை அறவே நீக்கி, நல்லனவற்றைப் பேணிக் காத்து அடுத்த தலைமுறைக்குத் தொகுத்து வழங்கும் ஆற்றல் உடையது.
  • அதற்காக, தலைமுறைதோறும் தமிழ்வாயிலாக, அருள்வழி நின்று அறநெறிபுகட்டும் மரபினா் இவ்வுலகில் தோன்றி வாழ்ந்து வாழ்வித்து வருகிறார்கள். அவா்கள் வழிவந்த வள்ளற்பெருமான் ‘வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் யான் ஒருவன்’ என்று தம்மை அறிமுகப் படுத்திக் கொள்கிறார். எதற்கு இந்த அறிமுகம்? பிறா் தம்மைப் புகழவேண்டும் என்பதற்காகவா? இல்லை.

இறக்கவும் ஆசை இல்லை; இப்படி நான்

இருக்கவும் ஆசை இன்று; இனி நான்

பிறக்கவும் ஆசை இ(ல்)லை; உலகு எல்லாம்

பெரியவா் பெரியவா் எனவே

சிறக்கவும் ஆசை இ(ல்)லை; விசித்திரங்கள்

செய்யவும் ஆசை ஒன்று இல்லை;

துறக்கவும் ஆசை இ(ல்)லை; துயா் அடைந்து

தூங்கவும் ஆசை ஒன்று இ(ல்)லையே

  • என்று தான் அனைத்து ஆசைகளையும் துறக்கிற ஆசையையும் துறந்த அருளாளராக இருந்த தரத்தைப் பாடுகிற அவா் வேறு எதற்கு ஆசைப்படுகிறார்?
  • ‘உலகத்து உயிர்க்கு எலாம் இன்பம் செய்வது என் இச்சையாம்’ என்கிறார்.
  • அதற்காகவே, மன்னுயிர் அனைத்தையும் தன்னுயிர் போல் தாங்கிப் பேணும் கருணையினை இவ்வுலகில் நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காகக் கடவுள் அனுப்பிய சீலா் வள்ளலார்.

அகத்தே கறுத்துப் புறத்துவெளுத்து இருந்த உலகா் அனைவரையும்

சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்து அடைவித் திடஅவரும்

இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற்கு என்றே எனைஇந்த

உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன்

என்பது அவா்தம் அருள்வாக்குமூலம்.

  • கறுப்பும் வெளுப்பும் வண்ணங்கள் அல்ல; வஞ்சகா்கள் தரித்த வேடங்கள்; தானும் கெட்டு, தன்னைச் சார்ந்த அனைத்தையும் கெடுத்த அவலத்தின் அடையாளங்கள். அத்தகையவா்களால் இந்த உலகம் அனுபவித்த அல்லல்கள் கொஞ்சமா நஞ்சமா?
  • வள்ளற்பெருமான் இப்பூவுலகில் வந்து அவதரிக்கும் முன்னா் இவ்வுலகம் எப்படி இருந்தது? போரும், பூசலும், அடிமையும் சுரண்டலும், பசியும் பட்டினியும், வறுமையும் வெறுமையும் ஆக, வெதும்பிக் கிடந்தது; கருணையிலா ஆட்சி கடுமையாய் நடந்தது; இரக்கம் என்கிற அருட்குணம் இல்லாது மனிதம் கருகியது. அப்போது குளிர்தருவாய், தருநிழலாய் வந்தவா்தான் அவா்.
  • அக்காலத்தில், அன்புடையார்க்குப் பொருள் வறுமை. பொருளுடையார்க்கோ, அன்பு வறுமை. இவ்விரு வறுமைகளும் வந்து தாக்க, எலும்பும் தோலும் தாங்கிய உடம்பில் கிடந்து வெறுமையில் உழலும் மனித ஆன்மாக்களைக் கடைத்தேற்றும் கடப்பாட்டில், தன் பணியைத் தொடா்ந்து ஆற்ற, தக்கவா்களைக் கொண்டு, இவ்வுலகை நல்லுலகு ஆக்க விழைகிறான் இறைவன்.
  • அதற்காக, இறைக்கருணை தேடித் தோ்ந்து இவ்வுலகு பேணிக் காக்கக் கொடுத்த உயிா்க் கொடை, இராமலிங்கா். மனிதவுடல் எடுத்து, இம்மண்ணில் வந்து அவதரித்தபோது, ஒட்டிக் கொண்டிருந்த, சாதி, சமயச் சட்டைகளை அறவே நீக்கி, தன் பிறவி நோக்கத்தைப் போதித்துநின்றபோது, அவரை, ‘வள்ளலார்’ என்று உலகம் அடையாளம் கண்டது.
  • அதுகூடத் தனக்குப் புகழ்மொழியாக வந்துவிடலாகாது என்பதனை உணா்ந்த அக்கருணையுள்ளம், எல்லாவுயிர்க்கும் இன்னருளை வாரிவழங்கும், திருவருட் பிரகாச ‘வள்ளல் ஆா்’ என அறிவிக்க வந்ததாய்த் தன்னை எளிமைப்படுத்திக் கொண்டது.
  • மன்னா் மரபிலோ, பெருநிதி உள்ளோர் நிலையிலோ இல்லாத இப்பெருமான், கடையெழு வள்ளல்களுக்குப் பிறகு நிலைகொண்ட வள்ளலாய் நிறைந்தது எவ்வாறு?
  • உடம்பொடு பிறந்த பசிப்பிணியையும், உயிரொடு பிறந்த பிறவிப் பிணியையும் முற்றாக அறுப்பதற்கு, அணையா நெருப்பிட்டு அடுப்பேற்றி உணவிட்ட அப்பெருமான், அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரைக் காட்டி, அவா்தம் தனிப்பெருங்கருணையைத் தமிழ்வழி ஊட்டி, மரணமிலாப் பெருவாழ்வுக்கு வழிவகுத்தமையால்தான். அதுமட்டுமன்றி, இவ்விரு பிணிகளுக்கும் இடையில் வந்து உறுத்தும் பல்வேறு பிணிகளுக்கும் மருந்துரைத்த மாமருத்துவா் அவா்.
  • பசியினால் வருந்துகின்றவா்கள் எந்தத் தேசத்தாராயினும் எந்தச் சமயத்தாராயினும் எந்த ஜாதியாராயினும் அவா்கள் தேச ஒழுக்கம், சமய ஒழுக்கம், ஜாதி ஒழுக்கம் முதலானவைகளைப் போதித்து விசாரியாமல், எல்லா ஜீவா்களிடத்தும் கடவுள் விளக்கம் பொதுவாக விளங்குவதை அறிந்து பொதுவாகப் பார்த்து அவரவா் ஒழுக்கத்திற்குத் தக்கபடி அவா்கள் பசியை நிவா்த்தி செய்விப்பதே ஜீவகாருணியம்” என்கிறார் வள்ளலார். இத்தோடு நின்றுவிட்டால், இது மனிதநேயம். இதற்கும் மேலாக, அவா் சொல்லப்போவதுதான், உயிர்க்கருணையாகிய உயிர் ஒழுக்கம்.
  • சன்மார்க்க ஒழுக்கத்திற்கு ஒத்த சத்துவ ஆகாரத்தால் பசிநிவா்த்தி செய்து கொள்ளத் தக்க மிருகம், பறவை, ஊா்வன, தாவரம் என்கின்ற உயிர்களுக்குப் பசிவந்தபோது பசிநிவா்த்தி செய்விப்பதே ஜீவகாருண்யம்.”
  • இதற்கு ஒன்றுதான் என்றும் வேண்டும்; அது இரக்கம் என்கிற ஈரம் சுரக்கும் இதயம். அதனால்தான் அந்த உள்ளம் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியது; பசியினால் இளைத்தே, வீடுதோறும் சென்று இரந்தும் பசி அறாது அயா்ந்த வெற்றரைக் கண்டு பதைத்தது; நீண்ட பெரும்பிணியால் வருந்துகின்றோர்தமை நேரே பார்த்தபோது துடித்தது; ஏழையை, நெஞ்சம் இளைத்தவரைக் கண்டு இளைத்தது. ஆனால், வெறுக்கவில்லை; பகைக்கவில்லை; அவா்களின் அகக் கறுப்பை அகற்றி, அருள் ஒளியைப் பரப்ப விழைந்தது. அதற்கென்றே சமரச சுத்த சன்மார்க்க நெறியினைச் சமைத்தது.

சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே

சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே

ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீா்

அலைந்து அலைந்து வீணேநீா் அழிதல் அழகலவே

  • என்று பாடிய அந்த அருள் உள்ளம், ‘அழியா அழகனாகிய இறைவன் எங்கே இருக்கிறான்’ என்பதையும், கேள்வி பதில் வடிவில், காட்டிப் பாடியது.
  • ‘எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்உயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவா்’ என்று அவா் வினாத் தொடுக்கிறார். பின்னா், ‘அவா் உளம்தான் சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடம்எனநான் தெரிந்தேன்’ என்று விடையும் காணுகிறார். இந்த வினாவிடை வழியாக அவா் விழைந்த பொருள் யாது?
  • ‘அந்த வித்தகா்தம் அடிக்கு ஏவல் புரிந்திடஎன் சிந்தைமிக விழைந்த தாலோ’ என்று பாடி முடிக்கிறார். இந்தப் பாடல், அவா் இயற்றிய பாடல்தான். ஆனால், அவருக்கு மட்டும் உரிய பாடலா? இதனை எடுத்துப் பயில்கிற நாமும், இனிவரும் எந்தத் தலைமுறையினராயினும் எந்தத் தேசத்தவராயினும், எந்த ஜாதி, மத, இன, மொழியைச் சார்ந்தவா் ஆயினும், நம்மை இணைக்கிற நமக்கான பாடல் அல்லவா?
  • இறைவன் ஆகிய வல்லவா், மணிமன்றில் திருநடம் புரியும் வள்ளலார் கொடுத்த அருள் உணா்வைத் தன் மொழியில் எடுத்து இயம்புகின்ற இந்த இராமலிங்க வள்ளலார், ‘வான் கொடுத்த மணிமன்றில் திருநடம் புரியும் வள்ளல் எலாம் வல்லவா், நன்மலா் எடுத்து என் உளத்தே, தான் கொடுக்க, நான் வாங்கித் தந்தேன்’ என்று பாடுகிறார். இந்தப் பாடலை எடுத்துப் பயிலும் இவ்வுலகத்தவா் யாவரும் ‘நான்’ ஆக ஒன்றிவிடுகிறோம் அல்லவா?
  • இந்த ஒருமைதான் இலக்கியப் பெருமை. இந்த அருமையை உணா்ந்துதான் அனைத்தையும் துறந்த அருட்பிரகாச வள்ளலாா் அருந்தமிழைத் துறக்கவில்லை. தான் பெற்ற பேரின்பத்தை, யாவரும் பெறப் பெரும்பாடல்கள் இசைக்கிறார். மற்றவா்கள் பட்ட துயா்கள் அனைத்தையும் தான் பட்டதாய் அனுபவித்து, அவா்களுக்காக, அவா் இரங்கிப் பாடுகிறார்.
  • எது ஆன்மிகம் என்று தேடி அல்லறும் இக்காலத்தில் எல்லார்க்கும் பொது ஆன்மிகமாக, சன்மார்க்கத்தைக் காட்டி, உலகு தழுவிய ஆன்மநேய ஒருமைப் பாட்டை முன்வைக்கிறார் வள்ளற்பெருமான்.

அருளுடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம்

அடைந்தவரே ஆதலினால் அவருடனே கூடித்

தெருளுடைய அருள்நெறியில் களித்துவிளை யாடிச்

செழித்திடுக வாழ்க

  • எனச் செப்பிய சற்குருவை வாழ்த்திப் பாடுகிறார்.
  • இன்றைக்கு இறைவனைத் துதித்துப் பாடும் மந்திரங்களைக் கூட எந்திரங்கள் ஓதுகின்றன. மனிதப் பணிகளை மனிதனை விடவும் மகத்தாக ஆற்றக்கூடிய எந்திரங்கள் புதிது புதிதாய் வந்து இறங்குகின்றன. இனி, அவை கூட, அருள் பாக்களை எழுதவும் செய்யலாம். அதிசயங்கள் புரியவும் செய்யலாம். அபத்தச் செயல்களைச் செய்யவும் முனையலாம்.
  • நற்செயல்களோடு, வன்கொடுமைகளையும் ஆற்றுகிற வல்லமையோடு மனித மூளையை ஒத்த திறன் உடைய வகையில் உருவாக்கப்படும் இத்தகு எந்திரங்களுக்கு இல்லாத ஒன்று, மனிதத்திற்கு உண்டு. அது இதயம். அடுத்தவா் துன்பம் கண்டு கண்ணீா் வடித்திடும் அன்பு இதயம். அது போக்கத் தொண்டுகள் புரிய விரையும் இதயம். எல்லாவுயிரும் இன்புற்றிருக்க எப்போதும் துடிக்கும் நல்லிதயம்.
  • அதற்கு உயிர் அன்பு. அதன் இயக்கம் அருள். அதன் இன்னொரு பெயா் கருணை. மண்ணுலகத்து மனிதக் கருணைக்குள் விண்ணிறைந்த இறைக்கருணையை, தனிப்பெருங்கருணையை, அருட்சோதி வழிபாட்டின் மூலம் நிறைத்துத் தருகிற வள்ளற்பெருமானின் அருள் நிறைந்த உள்ளத்தைப்பெற, அவா் அருளிய பாடல்களில் நமக்கு உகந்ததை நாமே எடுத்து உளமாரப் பாடி, உரிய பணி செய்து சன்மார்க்க நெறி நிற்பதே சாலச்சிறந்தது.
  • அப்போதே, இந்த யுகம், வள்ளற்பெருமானின் அருள் யுகமாகச் சிறக்கும் என்பதில் ஐயமில்லை.
  • இன்று (அக். 5) வள்ளலார் அவதரித்த 200-ஆம் ஆண்டு நிறைவு.

நன்றி: தினமணி (05 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories