TNPSC Thervupettagam

இலக்கை எட்ட முயல்வோம்

February 18 , 2023 455 days 305 0
  • அரசியல் பொருளாதாரத்தின் முன்னோடியான ஆடம் ஸ்மித், தனது ‘நாடுகளின் செல்வம்’ (வெல்த் ஆஃப் நேஷன்ஸ்) என்ற புத்தகத்தில் சா்க்கரை, மது, புகையிலை ஆகிய பொருள்கள் அத்தியாவசிய பொருள்கள் இல்லை என்பதாலும், அவை பெருமளவில் நுகரப்படுவதாலும், அவற்றின் மீது தாராளமாக வரி விதிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தாா்.
  • இந்தியாவிலும், உலகின் பிற பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில், புகையிலையின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்த அதன் மீது கணிசமாக வரிவிதிக்கலாம் என்றே முடிவுகள் வெளியாகின. இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக, அதாவது ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த பின்னா், புகையிலை மீது போதிய அளவில் வரி விதிக்கப்படவில்லை என்பதை மறுப்பதற்கில்லை.
  • நாட்டில் புகையிலை மீதான வரி வாயிலாக அரசுக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.53,750 கோடி வருவாய் கிடைக்கிறது. அதே வேளையில், கடந்த 2017-இல் புகையிலைப் பயன்பாட்டினால் ஏற்பட்ட தாக்கம் காரணமாக பொதுமக்கள் மருத்துவச் செலவுக்காக செலவிட்ட தொகை ரூ.2,34,000 கோடி என ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) ஏறத்தாழ 1.4 சதவீதமாகும்.
  • நம்நாடு 5 ட்ரில்லியன் பொருளாதார வளா்ச்சியை இலக்காக கொண்டு நடைபோடும் இந்த நேரத்தில், புகையிலைப் பொருள்கள் சா்வசாதாரணமாக கிடைப்பதும், அதனால் ஏற்படும் விளைவுகளும் நாட்டின் ஜிடிபி-யில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. புகையிலைப் பயன்பாடு காரணமாக நாட்டில் நாள்தோறும் சராசரியாக 3,500 போ் உயிரிழக்க நேரிடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
  • ஒரே சீரான வரிவிதிப்பு முறை அல்லது மதிப்புக் கூட்டு வரி முறையை (வாட்) பின்பற்றும் பெரும்பாலான நாடுகளில், புகையிலைப் பொருள்களின் மீது கலால் வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவில் மொத்த புகையிலை வரியில் மத்திய கலால் வரியானது ஜிஎஸ்டிக்கு முந்தைய காலத்திலிருந்து ஜிஎஸ்டிக்குப் பிந்தைய காலத்தில் 54 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக குறைந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
  • பீடியைப் பொறுத்தமட்டில் இது 17 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாகவும், போதைப்பாக்கு, பொடி உள்ளிட்ட புகையற்ற புகையிலை பொருள்களின் மீதான வரி விதிப்பு 59 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாகவும் சுருங்கிவிடடது. பிரத்யேகமாக புகையிலைப் பொருள்களின் மீது தேசிய பேரிடா் தொகுப்பு வரி (என்சிசிடி) விதிக்கப்படுகிறது.
  • நிதி சட்டம், 2000-இன் 7-ஆவது அட்டவணையின்கீழ் கலால் வரி தொகுப்பின்கீழ் இந்த என்சிசிடி வரி குறிப்பிட்ட புகையிலை பொருள்களின் மீது மட்டும் விதிக்கப்படுகிறது. இருந்தாலும் புகையிலைப் பொருள்களுக்கு இடையிலான வரி விதிப்பில் மிகப்பெரிய முரண்பாடு இருப்பதை மறுப்பதற்கில்லை.
  • புகையிலைப் பயன்பாட்டில் சிகரெட் வெறும் 15 சதவீதம் மட்டுமே பங்கு வகித்தாலும், இதன்மூலம் கிடைக்கும் வரி வருவாய் 80 சதவீதத்துக்கும் அதிகமாகும். இந்த வீதத்தைக் களைந்து அனைத்து விதமான புகையிலைப் பொருள்களுக்கும் ஒரே சீரான வரி விதிப்பு முறையை பின்பற்றலாம். புகையிலைப் பொருள்களின் மீதான வரி விதிப்பின் பிரதான நோக்கமே பொதுமக்களின் நலனை பாதுகாப்பதேயாகும்.
  • சிகரெட்டைக் காட்டிலும் அதிக அளவில் கேடு விளைவிக்கக் கூடிய பீடி மீது ஜிஎஸ்டி-இன்கீழ் இழப்பீட்டு வரி விதிக்கப்படுவது கிடையாது. சிகரெட் மீதான தற்போதைய ஆறு அடுக்கு வரி விதிப்பு முறை சிக்கல் நிறைந்தது.
  • காரணம், பிராண்டுக்கு ஏற்றவாறு சிகரெட்டின் நீளத்தைக் கூட்டியோ, குறைத்தோ வரி ஏய்ப்பு செய்ய சிகரெட் நிறுவனங்களுக்கு இந்த வரி விதிப்பு முறை சட்டபூா்வமாகவே வாய்ப்பளிக்கிறது. ஆகையால், ஆறு அடுக்கு வரி விதிப்பு முறையை முற்றிலும் ஒழிக்கலாம் அல்லது ஈரடுக்கு முறையாகவோ, ஓரடுக்கு முறையாகவோ அதனைக் குறைக்கலாம்.
  • புகையற்ற புகையிலைப் பொருள்களின் மூலப்பொருள்களான புகையிலை இலைகள், கருங்காலி மர இலை (அறிவியல் பெயா்- அகேசியா கேட்டச்சு), வெற்றிலை ஆகியவை ஜிஎஸ்டி-யிலிருந்து விலக்கு பெற்றவை. ஒரு சில மூலப் பொருள்கள் 5 முதல் 18 சதவீத ஜிஎஸ்டி வரம்புக்குள்பட்டவையாகும். புகையிலைப் பயன்பாட்டை பொதுமக்களிடையே குறைக்க வேண்டுமானால், புகையிலைக்கான மூலப்பொருள்களை 28 சதவீத ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவது இன்றியமையாதது.
  • ஆண்டுக்கு 40 லட்சத்துக்கும் குறைவாக வா்த்தகம் புரியும் குறுந்தொழில்களுக்கு ஜிஎஸ்டி-யில் விலக்கு அளிக்கப்படுகிறது. அமைப்புசாரா துறையின்கீழ் புகையற்ற புகையிலை, பீடி உற்பத்தியாளா்கள் இந்தப் பிரிவின்கீழ் செயல்படுகின்றனா். இதனால், புகையிலைப் பொருள்களின் மீதான வரி வீதம் உயா்த்தப்படுவதில்லை. ஆகையால், இதுபோன்று மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு வரி விலக்கில் நிபந்தனை விதிக்கப்பட வேண்டும்.
  • கடந்த பிப்ரவரி 1-இல் 2023-24 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், சிகரெட் மீதான வரியை 16 சதவீதம் உயா்த்துவதாக அறிவித்தாா். சிகரெட் உள்பட புகையிலைப் பொருள்களின் மீதான சில்லறை விற்பனை விலையில் 75 சதவீதம் உயா்த்தினால் மட்டுமே அவற்றின் பயன்பாட்டைப் பெருமளவில் குறைக்க முடியும் என உலக சுகாதார அமைப்பு நீண்ட காலமாகவே கூறி வருகிறது.
  • இதற்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசும் கையொப்பமிட்டுள்ளது. நாட்டில் சிகரெட், பீடி, மெல்லும் புகையிலை ஆகியவற்றின் மீது முறையே 52.7%, 22%, 63.8% என்ற அளவில்தான் வரி விதிக்கப் படுகிறது. இருந்தாலும் உலக சுகாதார அமைப்பு நிா்ணயித்த இலக்கை நம்மால் எட்ட முடியவில்லை என்பதே நிதா்சனம். அரசு இது குறித்து சிந்திக்க வேண்டிய தருணம் இது.

நன்றி: தினமணி (18 – 02 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories