TNPSC Thervupettagam

இலக்கை எட்டட்டும் அனைவருக்கும் இலவசத் தடுப்பூசித் திட்டம்

June 11 , 2021 1072 days 483 0
  • தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்ட நான்கரை மாதங்களுக்குள் சீனா, அமெரிக்க நாடுகளுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் தடுப்பூசித் தவணைகள் போடப்பட்ட மூன்றாவது நாடாகியிருப்பது, பெருந்தொற்றுக் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும்.
  • ஒன்றிய அரசு உறுதியளித்தபடி நடப்பாண்டின் இறுதிக்குள் நாட்டிலுள்ள அனைத்து வயது வந்தவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான இலக்கு எட்டப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையை இது உறுதிப்படுத்துகிறது.
  • ஜனவரி 16-ல் தொடங்கி மே இறுதி வரையிலும் மொத்தம் 16.8 கோடிப் பேருக்குத் தடுப்பூசி முதல் தவணையும், 4.3 கோடிப் பேருக்கு இரண்டாவது தவணையும் போடப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் மக்கள்தொகை மதிப்பீடு 136.3 கோடி எனக் கொண்டால், இதுவரையில் 12% பேருக்கு முதல் தவணையும், 3% பேருக்கு இரண்டு தவணைகளும் போடப்பட்டுள்ளன.
  • 18 - 45 வயது வரையிலானவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கான செலவுகளை நிதிச் சுமை கருதி, மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ளாத நிலையில், அந்தப் பொறுப்பையும் ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்வது தவிர்க்க இயலாததாகிவிட்டது.
  • தடுப்பூசிக் கொள்முதலுக்காக ரூ.35,000 கோடி செலவிடத் திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது அது ரூ.50,000 கோடியாக உயர்ந்திருக்கிறது.
  • சீரம் நிறுவனத்திடமிருந்து 25 கோடி, பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து 19 கோடித் தடுப்பூசிகளை வாங்கி மாநிலங்களுக்கு விநியோகிப்பதற்கு ஒப்பந்தங்கள் போடப் பட்டுள்ளன.
  • இதற்கு முன்பு பயோலாஜிக்கல்-இ நிறுவனத்திடம் 30 கோடித் தடுப்பூசி தயாரிக்கக் கோரப் பட்டுள்ளது. இவை அனைத்தும் ஆகஸ்ட் தொடங்கி டிசம்பர் மாதங்களுக்குள் கிடைத்து விடும்.
  • தற்போதைய நிலவரங்களின்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் இன்னும் 12.5 கோடிப் பேருக்கு இரண்டாவது தவணையும், 73.1 கோடிப் பேருக்கு இரண்டு தவணைகளும் போடப் பட வேண்டும்.
  • இரண்டையும் கவனத்தில் கொண்டால், இன்னும் ஏழு மாதங்களுக்குள் குறைந்தபட்சம் 159 கோடித் தடுப்பூசித் தவணைகள் மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும்.
  • சராசரியாக மாதம் ஒன்றுக்கு 23 கோடித் தடுப்பூசிகள் தேவை. தவிர, நாடுகளுக்கு இடையிலான நல்லுறவு கருதி, உடனடித் தேவையுள்ள நாடுகளுக்குத் தடுப்பூசி ஏற்றுமதியை அனுமதிக்கவும் வேண்டியிருக்கிறது.
  • மொத்தத்தில், ஆண்டு இறுதிக்குள் வயதுவந்தவர்கள் அனைவருக்கும் தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் அளித்துவிட முடியும் என்று நம்பிக்கை பிறந்திருக்கிறது.
  • அதே வேளையில், வயதுவராதோர், குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவது குறித்தும் முன்கூட்டியே திட்டமிட வேண்டிய தேவையும் எழுந்துள்ளது. இந்தியாவில் 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை 46.3 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
  • இது நாட்டின் மக்கள்தொகையில் 34%. மூன்றாவது அலையில், குழந்தைகளும் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக அச்சம் நிலவுகிறது. குழந்தைகள் பள்ளிக்குத் திரும்புவதற்கான வாய்ப்புகளைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கவும் முடியாது.
  • எனவே, குழந்தைகள், வயதுவராதோரிடையே தடுப்பூசி போடுவதன் பாதுகாப்பு அம்சங்களைப் பரிசோதனைகளின் வாயிலாக உறுதிப்படுத்தவும், தடுப்பூசி வாயிலாக நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கவும் இப்போதே யோசிக்கவும் தயாராகவும் வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (11 - 06 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories