TNPSC Thervupettagam

உண்மையை மறைப்பானேன்?

June 3 , 2021 1081 days 504 0
  • சர்வதேச அளவிலான உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிவரமொன்று வெளியிடப்பட்டிருக்கிறது. 89 நாடுகளில் உயிரிழந்தவர்கள் குறித்து வெளியிடப் பட்டிருக்கும் அந்தப் புள்ளிவிவரப்படி, 89 நாடுகளின் அதிகாரபூர்வ மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையைவிட, உண்மையான உயிரிழப்பு 1.6 மடங்கு அதிகமாகக் காணப்படுகிறது.
  • சமீபத்தில் வெளியான இன்னொரு புள்ளிவிவரம், மே 3, 2021 வரையிலான கணக்கெடுப்பில் சர்வதேச அளவில் 69.3 லட்சம் பேர் கொவைட் 19 கொள்ளை நோய்த் தொற்றின் காரணமாக உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கிறது.
  • இது பல்வேறு நாடுகளின் மொத்த உயிரிழப்பான 32.4 லட்சத்தைவிட இரு மடங்கு அதிகம். இதிலிருந்து உயிரிழப்பு குறித்த புள்ளிவிவரங்களைப் பல்வேறு நாடுகள் துல்லியமாகக் கணக்கெடுப்பதில்லை அல்லது தெரிவிப்பதில்லை என்று தெரிகிறது.
  • கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் மக்கள் பீதியடைந்துவிடக் கூடாது என்பதற்காக, உயிரிழப்புகளைக் குறைத்துக் காட்டுவது என்பது நீண்டகால நிர்வாக நடைமுறையாக இருந்து வந்திருக்கிறது.
  • இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. ஓர் அமைப்பின் மே 3-ஆம் தேதி புள்ளிவிவரப்படி, உலகின் மொத்த உயிரிழப்புகளில் 10%, அதாவது 6,54,395 பேர் என்பதுதான் இந்தியாவின் உயிரிழப்பு எண்ணிக்கை. அரசு புள்ளிவிவரத்தைவிட இது இரண்டு மடங்கு அதிகம்.
  • ஏப்ரல் 16-ஆம் தேதி குஜராத் மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அதிகாரபூர்வ தகவலின் படி, உயிரிழப்பு எண்ணிக்கை 78. அதே நாளில் கொவைட் 19 விதிமுறைகளுக்கு உள்பட்டு தகனம் செய்யப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 689.
  • ஒடிஸா மாநிலத்தின் உயிரிழப்பு விகிதம் சுமார் 0.4%. கேரளம், மிஜோரம் மாநிலங்களுக்கு அடுத்த படியாக மிகக் குறைவான உயிரிழப்பு ஒடிஸாவில் காட்டப்படுகிறது.
  • ஒடிஸாவில் தினசரி உயிரிழப்பாக அதிகபட்சமாகக் காட்டப்பட்டிருப்பது கடந்த மாதம் 20-ஆம் தேதி 25 உயிரிழப்புகள். கடந்த ஆண்டு எண்ணிக்கையையும் சேர்த்தாலும்கூட ஒடிஸாவில் இதுவரையிலான மொத்த கொவைட் 19 உயிரிழப்பு 2,403 தான்.
  • இரண்டாவது அலையில், 10 நாள்கள் முன்பு வரையிலான உயிரிழப்பு எண்ணிக்கை 485. தினசரி தொடர்ந்து 10,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்படும் நிலையில், ஒடிஸா அரசின் உயிரிழப்புப் புள்ளிவிவரம் ஆச்சரியத்தையும், சந்தேகத்தையும் எழுப்புகிறது.
  • மயானங்களில் இரவு - பகல் என்றில்லாமல் சடலங்கள் எரியூட்டப்படும் நிலையில், அரசு கணக்கெடுப்பின் உண்மைத்தன்மை கேள்விக்குறியாகிறது.
  • இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களிலும் மயானங்களில் சடலங்களை எரியூட்டுவதற்காக மக்கள் வரிசையில் காத்திருக்கும் நிலையில், அரசின் அறிக்கைகள் தரும் எண்ணிக்கைகள் அர்த்தமற்றவையாகி விடுகின்றன. இந்தியாவிலுள்ள எந்தவொரு மாநிலமும் இந்தப் போக்குக்கு விதிவிலக்காக இருப்பதாகத் தெரியவில்லை.

மறந்துவிடக் கூடாது

  • கடந்த ஆண்டு தமிழ்நாடு, தில்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இணை நோய் உள்ளவர்களின் உயிரிழப்பு கொவைட் 19 பாதிப்பு உயிரிழப்பாக எடுத்துக் கொள்ளப் பட வில்லை. கடுமையான எதிர்ப்புக்குப் பிறகு அந்த குறைபாடு சரி செய்யப்பட்டது.
  • இந்தியாவில் மூன்றில் இரண்டு உயிரிழப்புகள் பாதிக்கப்பட்டோரின் வீடுகளில் ஏற்படுகின்றன. 14% உயிரிழப்புகள் பதிவாவதில்லை.
  • மாநிலங்களுக்கு உள்ளேயே எத்தனை உயிரிழப்புகள் உண்மையாக நிகழ்ந்தன என்பது குறித்த பதிவுகளும், அவற்றில் கொவைட் 19 நோய்த்தொற்று உயிரிழப்புகள் எத்தனை என்பதும் முறையாகக் கண்காணிக்கப்பட்டு தொகுக்கப்படுவதில்லை என்பதுதான் நிஜ நிலைமை.
  • தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டக் கூடாது என்றும், உண்மை நிலையைச் சொன்னால்தான் மக்களுக்கு பயத்துடன் விழிப்புணர்வும் ஏற்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்திருப்பது சரியான புரிதல்.
  • தமிழகத்தில் நோய்த்தொற்று பாதிப்பு விகிதம் குறைந்து வருகிறது என்றாலும், இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் அதிகபட்சமாக 0.8%-கூடத் தாண்டாத இறப்பு விகிதம், தற்போது ஏறத்தாழ 2%-ஆக உயர்ந்திருக்கிறது.
  • கடந்த 10 நாள்களில் பாதிப்பு விகிதம் ஏறத்தாழ 25% குறைந்திருக்கிறது. அதே நேரத்தில் கடந்த 21-ஆம் தேதி நோய்த்தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தவர்கள் 467 என்றால், மே 31-ஆம் தேதி அந்த எண்ணிக்கை 478.
  • இந்த எண்ணிக்கைகூட சரியான புள்ளிவிவரம்தானா என்பதை அறுதியிட்டுக் கூற முடியவில்லை.
  • நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைத் துல்லியமாகக் கணக்கெடுப்பதில் சில பிரச்னைகள் இருக்கின்றன.
  • பாதிக்கப்பட்ட ஒருவர் ஓரளவுக்குக் குணமாகி 14 நாள்களுக்குப் பிறகு இறக்கும்போது, அவரது சளி மாதிரியைப் பரிசோதித்தால் அதில் தொற்று காணப்படுவதில்லை. அதனால் நோய்த் தொற்றால் உயிரிழந்தவர் என்கிற கணக்கில் அவரை சேர்த்துக் கொள்வதில்லை.
  • நீண்டநாள் சிகிச்சைபெற்று கொள்ளை நோய்த்தொற்றின் எதிர்விளைவுகளாலும், குறைந்து விட்ட எதிர்ப்பு சக்தியாலும் அவர்களது இணை நோய்கள் காரணமாக உயிரிழப்போர் பலர். அவர்களது இறப்புகளும் கொவைட் 19 உயிரிழப்புகளாகக் கணக்கிடப்படுவதில்லை.
  • மத்திய - மாநில அரசுகள் சரியான விவரங்களை வெளியிடுவது, அரசின் மீதான நம்பிக்கை அதிகரிப்பது மட்டுமல்லாமல், மருத்துவத்துறையினரும், நிர்வாகமும் நோய்த்தொற்றை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை செம்மைப்படுத்தவும் உதவும்.
  • புள்ளிவிவரங்கள் பொய் சொன்னாலும், மயானப் புகை உண்மையை உணர்த்திவிடும் என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிடக் கூடாது.

நன்றி: தினமணி  (03 – 06 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories