TNPSC Thervupettagam

உயிரிப் பல்வகைமை மாநாடு ஏற்படுத்தும் எதிர்பார்ப்பு

January 15 , 2023 490 days 268 0
  • இயற்கை மீது நிகழ்த்தப்படும் அழிவு, மனிதர்களைப் பாதிக்கும் என்பதைப் பேரிடர்களின்போதுதான் பலரும் உணர்ந்துகொள்கிறார்கள். இயற்கை அழிவில் பெரும்பாலானவை மனிதச் செயல்பாடுகளால் ஏற்படுபவைதான் எனும்போது அதைத் தடுக்கும் தார்மிகப் பொறுப்பும் நமக்கு இருக்கிறது.
  • அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கான முக்கியத் தருணம் தற்போது வாய்த்திருக்கிறது. உயிரிப் பல்வகைமைக்கான 15ஆவது உச்சி மாநாடு (COP 15- Convention on Biodiversity) அந்த வாய்ப்பை நல்கியிருக்கிறது.

அழிக்கும் கரங்கள்

  • 1970ஆம் ஆண்டிலிருந்து இப்போதுவரை மொத்த வனவிலங்குகளில் 69% வரை குறைந்திருக்கின்றன. இப்போது இருக்கும் உயிரினங்களில், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 10 சதவிகிதமாவது அழியும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான உலகளாவிய 10 அச்சுறுத்தல்கள் பட்டியலில், உயிரிப் பல்வகைமையின் (Biodiversity) அழிவு மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
  • உலகின் மொத்த உயிரினங்களில் கால்வாசிக்கும் மேல், அதாவது, 10 லட்சம் இனங்கள் அழியக்கூடிய நிலையில் இருக்கின்றன. எங்கோ ஒரு கொறி விலங்கோ ஒரு மழைக்காட்டில் காளான் இனமோ அழிவதற்கும் நமக்கும் தொடர்பு இல்லை என்று நாம் இருந்துவிட முடியாது. அதை இந்த மாநாடு அழுத்தமாக உணர்த்தியிருக்கிறது. கனடாவின் மான்ட்ரியால் நகரில் டிசம்பர் 7 முதல் 21 வரை நடந்த இந்த மாநாட்டில், 190 உலக நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். பல்வேறு அரசியல் காரணங்கள் மற்றும் கரோனா பெருந்தொற்று காரணமாக 4 ஆண்டுகளாக இந்த மாநாடு நடைபெறவில்லை.
  • மேலும், 2010இல் தீர்மானிக்கப்பட்ட உலகளாவிய ஐசி உயிரிப் பல்வகைமை இலக்குகளில் (Aichi Biodiversity Targets) ஒன்றுகூட எட்டப்படவில்லை. எகிப்தில் சமீபத்தில் நடந்துமுடிந்த காலநிலை உச்சி மாநாட்டிலும் இயற்கை/உயிரிப் பல்வகைமை பற்றிய விரிவான விவாதங்கள் நடைபெறவில்லை. எனவே, மான்ட்ரியால் மாநாடு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

முக்கிய இலக்குகள்

  • மாநாட்டில் பல உப தலைப்புகளில் பல்வேறு குழுக்கள் கூடி விவாதித்தன. இறுதி அறிக்கையில், கன்மிங்-மான்ட்ரியால் 2050 இலக்குகள் (Kunming-Montreal Goals of 2050) என்ற தலைப்பில் நான்கு இலக்குகள் வெளியிடப்பட்டிருக்கின்றன:
  • 1. எல்லா சூழல் அமைப்புகளுடைய ஒழுங்கமைவு, இணைப்புகள் மற்றும் வலிமை பராமரிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு, மீட்டெடுக்கப்பட வேண்டும். மனிதர்களால் ஏற்படும் உயிரின அழிவுகள் நிறுத்தப்பட வேண்டும். 2050ஆம் ஆண்டுக்குள் இயற்கையான சூழலின் பரப்பளவு அதிகரிக்கப்பட வேண்டும். மரபணுப் பல்வகைமை (Genetic Diversity) பராமரிக்கப்பட வேண்டும்.
  • 2. உயிரிப் பல்வகைமையானது வளங்குன்றா முறையில் பயன்படுத்தப்படுவதையும், இயற்கையிலிருந்து மக்களுக்குக் கிடைக்கும் அனைத்தும் தொடர்வதையும் உறுதிசெய்ய வேண்டும்.
  • 3. டிஜிட்டல் மரபணுத் தொகுதிகள் உள்ளிட்ட மரபணு வளங்களிலிருந்து கிடைக்கும் பொருளாதாரப் பலன்கள் மற்றும் பிற பயன்கள் அனைவருக்கும் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
  • 4. மாநாட்டுத் தீர்மானங்களை அமல்படுத்துவதற்கேற்ற சூழலை உருவாக்க வேண்டும். இதில் பொருளாதார உதவி, தகுதிகளைக் கட்டமைப்பது, தொழில்நுட்ப மற்றும் அறிவியல் ஒத்துழைப்பு, தொழில்நுட்பப் பகிர்தல் எல்லாமே அடங்கும்.
  • இதைத் தவிர 23 முக்கிய இலக்குகளும் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அவற்றில், ‘பாலினச் சமத்துவம்’ பற்றிய இலக்கும் இடம்பெற்றிருப்பது முக்கியமானது. தொல்குடிகளின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

நிதி முக்கியத்துவம்

  • இந்த மாநாட்டின் தீர்மானங்களிலேயே மிகவும் முக்கியமானது, 2030ஆம் ஆண்டுக்குள் 30% பூமிப்பரப்பைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்ற வேண்டும் என்ற இலக்குதான். நிலம், கடல் ஆகிய இரண்டுமே இதில் அடங்கும். உயிரிப் பல்வகைமையைப் பேணுவதில், பாதுகாக்கப்பட்ட இடங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு என்பதையொட்டியே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
  • இப்போதைக்கு 17% நிலப்பரப்பும் 7 முதல் 10% கடற்பரப்பும் மட்டுமே பாதுகாக்கப்பட்டிருக்கின்றன என்பதால், இந்த இலக்கு முக்கியமானதாக இருக்கும். உயிரினங்கள் அழியக்கூடிய ஆபத்தை 2030ஆம் ஆண்டுக்குள் 20% குறைப்பது, கரிமக் கால்தடத்தைக் குறைப்பது, சீரழிந்த நிலங்களில் 30% பரப்பளவை 2030க்குள் மீட்டெடுப்பது உள்ளிட்ட இலக்குகளும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
  • உயிரிப் பல்வகைமையை அழிக்கும் செயல்பாடுகளுக்குக் கொடுக்கப்படும் மானியங்களை 2030ஆம் ஆண்டுக்குள் 500 பில்லியன் டாலர் வரை குறைக்க வேண்டும் என்பது மற்றொரு முக்கியமான முடிவு. சூழல் மீட்டெடுப்பு உள்ளிட்ட எல்லா சூழல்சார் செயல்பாடுகளுக்கும் நிதி உதவி அவசியமானது.
  • அதிலும் குறிப்பாக, மேலைநாடுகள் மற்றும் பிற வளர்ந்துவரும் நாடுகளுக்கு இடையே உள்ள பொருளாதார இடைவெளி அதிகமாக இருக்கும் இன்றைய காலகட்டத்தில், ஒரு சில நாடுகளுக்கு இந்த நிதி உதவிதான் உயிர்ச்சரடாகவே இருந்து இயற்கையைப் பாதுகாக்கும்.

முக்கியப் பின்னடைவுகள்

  • நுகர்வு, அயல் ஊடுருவி விலங்குகள், உயிரிப் பல்வகைமையின் வணிகமாக்கல், உணவு, பூச்சிக்கொல்லி மருந்துகள் பற்றிய நேரடியான இலக்குகள் எதுவும் உருவாக்கப்படவில்லை. முந்தைய மாநாட்டில் இருந்த சூழல் அமைப்புகள் பற்றிய சில தீர்மானங்கள் இந்த மாநாட்டு அறிக்கையில் நீக்கப்பட்டிருக்கின்றன.
  • தனிப்பட்ட ஒரு வரியில் தொல்குடிகளின் உரிமை பற்றிப் பேசியிருந்தாலும் 30% பகுதிகளைப் பாதுகாக்கும்போது அங்கே இருக்கும் தொல்குடிகளின் உரிமைகளை மீறக் கூடாது, அவர்கள் வெளியேற்றப்படக் கூடாது என்று அறிக்கை வலியுறுத்தவில்லை.
  • உயிரிப் பல்வகைமை பற்றிய அரசின் தீர்மானங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைக்காததால், அமெரிக்காவால் பங்கேற்க முடியவில்லை. அமெரிக்காவே கலந்துகொள்ளவில்லை என்பது பிற நாடுகளின் பொறுப்புணர்வில் நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். பொதுவாக, வெற்றிகரமானதாகக் கருதப்படும் ஒரு மாநாட்டில்கூடக் கடல்சார் சூழல் குறித்த கவலை பதிவாவதில்லை.
  • இம்மாநாடும் விதிவிலக்கல்ல. காடுகள், நிலம், விவசாயம் பற்றியெல்லாம் விரிவாகப் பேசப்பட்டிருக்கும் இறுதி அறிக்கையில், கடல் சூழல் பற்றிய வரிகள் மிகவும் குறைவு. ஆழ்கடலிலிருந்து கனிம வளங்களை எடுக்கும் செயல்பாடு கடல்சார் உயிரிப் பல்வகைமைக்கு ஒரு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கிறது. ஆனால், பவளத்திட்டுகளைப் பாதுகாப்பது, மீன்பிடித் தொழிலில் உள்ள பிரச்சினைகளைச் சரிசெய்வது, ஆழ்கடல் கனிமச் சுரங்கங்களை நிறுத்துவது உள்ளிட்ட முக்கிய கடல்சார் பிரச்சினைகள் பற்றிப் பேசப்படவே இல்லை.
  • மேலும், ‘உலக அளவில் 30% பாதுகாக்கப்பட வேண்டும்’ என்ற இலக்கில் கடல் சூழலும் அடங்கும் என்பதே குழப்பத்தை விளைவிக்கிறது. இது நாடுகளின் எல்லைக்கு உட்பட்ட பகுதியா அல்லது எல்லை கடந்த கடல் பகுதியும் இதில் வருமா என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை இல்லை.
  • சில சறுக்கல்கள் இருந்தாலும் வெற்றிகரமாகவே நடந்து முடிந்துள்ளது உயிரிப் பல்வகைமை உச்சி மாநாடு. ‘இயற்கை மட்டும் இல்லாவிட்டால், நாம் ஒன்றுமே இல்லை’ என்கிறார் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ். அந்தப் புரிதலோடு பல தீர்மானங்கள் இந்த மாநாட்டில் எடுக்கப்பட்டுள்ளன. இனி இவற்றை வெற்றிகரமாக அமல்படுத்துவதில்தான் எல்லாமே இருக்கிறது.

நன்றி: தி இந்து (15 – 01 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories