TNPSC Thervupettagam

உரவிலை உயர்வு

April 22 , 2021 1106 days 1409 0
  • மத்திய அரசு ஆண்டுதோறும் பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.
  • 2021-22- நிதியாண்டு பட்ஜெட்டில் ரசாயன உரங்களுக்கான மானியத் தொகை குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  • இதற்கிடையே, உர நிறுவனங்கள், உரங்களின் விலையைக் கடுமையாக உயர்த்தி அறிவித்தன.
  • உரங்களின் உபயோகம் அதிகரித்ததால், அத்தியாவசியப் பொருள்கள் சட்டம் 1955-இல் உரம் ஒரு முக்கிய பங்கு வகித்தது.
  • அதன்பின் 1985-இல் உரங்கள் உற்பத்தி, உரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின்கீழ் கொண்டு வரப்பட்டது.
  • 1987-இல் மத்திய அரசு உரங்களின் உற்பத்தி, விலை நிர்ணயம், தரம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக மாற்றி அமைத்து, அவற்றை மத்திய - மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.
  • 1982-இல் உரங்களின் தயாரிப்பில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டதால் அது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது.
  • விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரங்களை விற்கும் வகையில் உர நிறுவனங்களுக்கு மானியம் அளிக்கும் திட்டம் அப்போது உருவாக்கப்பட்டது.
  • 2005-இல் உர மானியம் வழங்கும் முறையைக் கண்காணித்து, உரங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையை மேம்படுத்தும் வகையில் சில திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்தது.
  • ஆனால், உர நிறுவனங்களுக்கு வழங்கி வந்த மானியத் தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்ததால், 2010 ஏப்ரல் முதல் தேதி முதல் புதிய உரக் கொள்கையை மத்திய அரசு அறிவித்தது.
  • அதன்படி யூரியா உரத்தின் விலையை மட்டும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, மற்ற உரங்களின் விலையை உற்பத்தி செலவுக்கு ஏற்ப அந்தந்த நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்தது.
  • அத்துடன், அத்தியாவசிய பட்டியலில் இருந்து உரத்தை நீக்கியது.
  • மத்திய அரசின் இந்த முடிவால் ரசாயனங்கள் உரங்கள் ஆகியவற்றின் விலை இரு மடங்காக உயர்ந்தது. ஆண்டுதோறும் உர நிறுவனங்கள் உரங்களின் விலையை உயர்த்தி வந்தன.

உயர்ந்த உரங்களின் விலை

  • 2018-ஆம் ஆண்டு வரை யூரியா மூட்டை ஒன்று ரூ.268 முதல் ரூ.283 வரையும், டிஏபி மூட்டை ஒன்றுக்கு ரூ.900 முதல் 1,100 வரையும் விற்றன.
  • 2010-ஆம் ஆண்டு வெளியான உரக் கொள்கை அறிவிப்புக்கு முன்பிலிருந்து கடந்த ஆண்டு வரை, 30 சதவீதம் அதிகமாக விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
  • கடந்த ஆண்டு பட்ஜெட்டில், ரூ. 81 ஆயிரத்து 124 கோடியை உர மானியமாக ஒதுக்கிய மத்திய அரசு, நடப்பு ஆண்டு ரூ. ஒரு லட்சத்து 33ஆயிரத்து 947 கோடி உர மானியம் அளிக்க திட்ட மதிப்பீடு தயார் செய்தது.
  • ஆனால், 2021-22 பட்ஜெட்டில் உர மானியத் தொகை ஒதுக்கீடு குறைக்கப்பட்டு ரூ.79 ஆயிரம் கோடி மட்டும் உர மானியமாக ஒதுக்கீடு செய்தது.
  • இந்நிலையில், டிஏபி 58 சதவீதமும், நைட்ரஜன், பாஸ்பேட் பொட்டாஷ் மற்றும் கலப்பு உரங்கள் 46 சதவீதம் முதல் 51 சதவீதம் வரையும் விலை உயர்த்தி உர நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
  • வரலாறு காணாத இந்த விலை உயர்வு காரணமாக, டெல்டா மாவட்டங்களில் டிஏபி உரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.1,900, என்பிகே உரங்கள் ரூ.1,775 முதல் ரூ.1,800 வரையும் உயர்த்தப்பட்டன. இந்த விலை உயர்வு விவசாயிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
  • உரத் தயாரிப்பு நிறுவனமான இப்கோ, டிஏபி உர விலையை கடுமையாக உயர்த்தியுள்ளது.
  • மூட்டை ஒன்றுக்கு ரூ.700 விலை உயர்த்தப்பட்டுள்ளது. உரம் விலை உயர்த்தப்பட்டதை நிரந்தரமாக கைவிட வேண்டும் என்று தமிழகம் முழுவதும் விவசாயிகளின் குரல் வலுத்து வருகிறது.
  • உரங்கள் விலையேற்றத்துக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் சிலரும், விவசாய சங்க நிர்வாகிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பரவலாக எதிர்ப்பு எழுந்ததையடுத்து மத்திய அரசு இப்போது உர விலை உயர்வுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
  • அரசிடமிருந்து மறு உத்தரவு வரும் வரை, டிஏபி மூட்டை ஒன்றுக்கு ரூ.1,200 என்றும், கலப்பு உரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.925 என்றும், என்பிகே -1 உரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.1,175 என்றும், என்பிகே -2 உரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.1,175 என்றும் விற்பனை செய்ய வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
  • மத்திய அரசு, உரத்துக்கான மானியத்தைக் குறைத்து விட்டதாலும், உர நிறுவனங்கள் உரங்களின் விலையை கடுமையாக உயர்த்தியதாலும், விவசாயிகள் கவலையில் மூழ்கியுள்ளனர்.

விவசாயிகள் கவலை தீருமா

  • அடுத்த (2022) ஆண்டுக்குள் விவசாய உற்பத்தி இரு மடங்காக உயர்த்தப்படும். விவசாயிகளின் வருமானம் மும்மடங்காக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளது.
  • இந்நிலையில், உரங்கள் விலை கடுமையாக உயர்த்தப்பட்டால் விவசாயிகளின் வருமானம் ஒரு மடங்காகக்கூட உயர்வதற்கு வாய்ப்பு இல்லை.
  • ஆகவே, உரங்களின் விலை உயர்வைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.
  • உர மானியத்தை உரம் தயாரிக்கும் நிறுவனங்களுக்குத் தருவதை விடுத்து, விவசாயிகளுக்கு நேரடியாக தர ஆவன செய்ய வேண்டும்.
  • வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் உர மானியத்தைக் குறைத்து உரங்களின் விலையை உயர்த்தி விவசாயிகள் மீது மேலும் ஒரு தாக்குதலை மத்திய அரசு தொடுத்துள்ளது.
  • இது ஒருபுறம் இருக்க, தமிழ்நாட்டில் சட்டப்போரவைத் தேர்தல் முடிந்த உடனேயே விவசாயிகளுக்கான மும்முனை மின்சாரம் நிறுத்தப்பட்டு விட்டது.
  • இதனால் மாநிலம் முழுதும் உள்ள விவசாயிகள் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். எனவே உடனடியாக மீண்டும் மும்முனை மின்சாரம் வழங்கிட தமிழக அரசு முன்வர வேண்டும்.
  • வேளாண் அதிகாரிகள் கூறுகையில், உர நிறுவனங்கள், உரங்கள் விலையை உயர்த்தியுள்ள நிலையில், விலை உயர்வுக்கு மத்திய அரசு இடைக்காலத் தடை விதித்துள்ளது என்றும், உரங்களின் விலையைக் குறைக்க அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.
  • அவர்கள் கூறியதுபோல் நடக்குமா? விவசாயிகள் கவலை தீருமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நன்றி: தினமணி  (22 – 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories