TNPSC Thervupettagam

உறவின் அடுத்த கட்டம்... - சீன அதிபரின் மாமல்லபுரம் பயணம்

October 14 , 2019 1664 days 852 0
  • சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் மாமல்லபுரம் பயணம் வெற்றிகரமாக முடிந்திருப்பது பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதுபோல, இந்திய - சீன உறவில் ஒரு புதிய அத்தியாயம் என்றுதான் கூற வேண்டும்.
  • எத்தனையோ கேள்விக்குறிகளுக்கும் பிரச்னைகளுக்கும் இடையில் இரண்டு நாடுகளும் கலந்து பேசவும், இரண்டு நாட்டின் தலைவர்களும் நட்புறவுடன் விவாதிக்கவும் முடிந்திருக்கிறது என்பதேகூட இந்த விஜயத்தின் மிகப் பெரிய வெற்றி என்றுதான் கொள்ள வேண்டும்.

பேச்சுவார்த்தை

  • இந்திய விஜயத்துக்கு முன்னால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு வரவழைத்து அதிபர் ஷி அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, அவரது மாமல்லபுரம் விஜயமும் இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பும் நடக்குமா என்றுகூட சந்தேகம் ஏற்பட்டது.
  • ஷி - மோடி சந்திப்புக்கு முன்னால், அருணாசலப் பிரதேசத்தில் ராணுவ ஒத்திகை நடத்த இந்தியா முற்பட்டது சீனாவில் பதற்றத்தை ஏற்படுத்தியது. அருணாசலப் பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடுகிறது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
  • இந்தப் பின்னணியில் மாமல்லபுரம் சந்திப்பு நடந்திருக்கிறது என்பதிலிருந்து இரண்டு நாடுகளும் பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கு இடையிலும் பகைமையை வளர்க்காமல் நட்புறவை நாடுகின்றன என்பது தெளிவாகிறது.
  • அருணாசலப் பிரதேசத்தையும் அந்தமான் நிகோபார் தீவுகளையும்போல லடாக், அக்ஸாய் சின் உள்ளிட்ட இந்தியாவின் மேற்குப் பகுதிகளையும் சீனா சொந்தம் கொண்டாடுகிறது. இந்திய அரசின் காஷ்மீர் குறித்த முடிவுகளை சீனா ஏற்றுக்கொள்ள மறுப்பதன் பின்னணி அதுதான்.

பிரச்சினைகள்

  • இந்தியா - சீனா இடையே ஒன்றோ இரண்டோ அல்ல, பல்வேறு பிரச்னைகள் தொடர்கின்றன. திபெத்தில் உள்ள லல்ஹோ பகுதியில் பிரம்மபுத்திராவின் கிளை நதியான ஷியாபுக்குவில் நீர் மின் நிலையத்தை சீனா அமைக்க இருப்பது இந்தியாவைப் பாதிக்கும். திபெத்தில் எர்லுங் ஷங்போ என்று அழைக்கப்படும் பிரம்மபுத்திரா அஸ்ஸாம், வங்கதேசப் பகுதிகளின் வாழ்வாதாரம் என்பதும், இந்திய எல்லையையொட்டி லல்ஹோ அணை அமைகிறது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.
  • மாமல்லபுரம் சந்திப்பின் முடிவில் வெளியுறவுத் துறைச் செயலர் விஜய் கோகலே பத்திரிகையாளர்களைச் சந்தித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, இரண்டு நாடுகளும் வர்த்தகத்துக்கு முன்னுரிமை கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.
  • 2018-19-இல் இந்தியா 70 பில்லியன் டாலர்கள் அளவில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்தபோது, நமது சீனாவுக்கான ஏற்றுமதி வெறும் 17 பில்லியன் டாலர்கள் மட்டுமே. வர்த்தக சமநிலையை நோக்கி நகர வேண்டும் என்கிற இந்தியாவின் கோரிக்கைக்கு சீனா உதட்டளவு ஆதரவு அளித்திருக்கிறது என்றாலும், அது சாத்தியப்படாது என்பது இரு தரப்புக்குமே நன்றாகத் தெரியும்.

வர்த்தக சமநிலை

  • அதே நேரத்தில், வர்த்தக சமநிலையை ஏற்படுத்துவதற்கு இரு தரப்பு உயர்நிலைக் குழுவை அமைப்பது, மருந்து உற்பத்தியில் சீனாவில் இந்திய முதலீடுகளை அதிகரிப்பது, தமிழகத்துடன் வரலாற்றுத் தொடர்புடைய சீனாவின் புஜியன் மாகாணத்துடன் கலாசாரத் தொடர்பை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல ஆக்கப்பூர்வமான முடிவுகளுக்கு இரு தலைவர்களின் சந்திப்பும் வழிகோலியிருக்கிறது.
  • இரு தரப்பினரும் காஷ்மீர் பிரச்னைக்கு முன்னுரிமை அளிக்கவில்லை என்பது இந்திய ராஜதந்திரத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. இரண்டு தலைவர்களும் இரண்டரை மணி நேரம் இரவு உணவுக்குப் பிறகு தனிமையில் உரையாடியபோது, காஷ்மீர் பிரச்னை குறித்து நிச்சயமாக விவாதித்திருக்கக் கூடும். ஆனால், அது சந்திப்பில் முக்கியத்துவம் பெறவில்லை என்பது இரு நாட்டு வெளிவிவகாரத் துறையினரின் சாமர்த்தியமான அணுகுமுறை.
  • தங்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளை கவனத்துடனும் புத்திசாலித்தனமாகவும் அணுக வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இருக்கிறது.
  • இந்த இரு நாடுகளுக்கும் இடையே வித்தியாசமான தனித்துவமான உறவு நிலவுகிறது. இரண்டு நாடுகளும் ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றுத் தொடர்புடையவை என்பது மட்டுமல்லாமல் 3,380 கி.மீ. எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.
  • கடந்த அரை நூற்றாண்டு கால எல்லைப் பிரச்னைக்கு சீனாவின் சுயநலம்தான் காரணமே தவிர, ஆக்கிரமிப்பு முயற்சியில் இந்தியா ஈடுபடவில்லை. 1988-இல் ராஜீவ் காந்தியின் சீன விஜயத்துக்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான பகைமை அகன்றிருக்கிறது என்றாலும், இன்னும்கூட மனக்கசப்பும், பரஸ்பர அவநம்பிக்கையும் தொடராமல் இல்லை.

நட்புறவு

  • 2014 செப்டம்பர் 17-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் 64-ஆவது பிறந்தநாளின்போது, ஆமதாபாத் சபர்மதி நதிக்கரையோரமாக அதிபர் ஷியும் பிரதமர் மோடியும் ஊஞ்சலாடிய வண்ணம் ஏற்படுத்திக்கொண்ட நட்புறவின் நீட்சிதான் வூஹான், மாமல்லபுரம் சந்திப்புகள். சபர்மதி நதிக்கரையில் தொடங்கிய உறவு இப்போது மாமல்லபுரத்தில் வங்கக் கடலோரம் நடந்தபடி தொடர்கிறது.
  • இந்தச் சந்திப்புகளின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் முற்றிலுமாகக் களையப்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நட்புறவின் அடிப்படையில் விவாதம் தொடரப்பட்டு கருத்து வேறுபாடுகள் படிப்படியாகக் களையப்படும் என்பதுதான் எதிர்பார்ப்பு.
  • அந்த வகையில் இந்திய - சீன உறவில், பிரதமர் மோடி கூறியிருப்பதுபோல, புதிய அத்தியாயம் சென்னையில் தொடங்கியிருக்கிறது.
  • இதை ராஜதந்திர வெற்றி என்று கூறுவதைவிட, அரசியல் ரீதியான வெற்றி என்று வகைப்படுத்துவதுதான் சரியாக இருக்கும்.

நன்றி: தினமணி (14-10-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories