TNPSC Thervupettagam

உலகக் கோப்பை வெற்றி குறித்த தலையங்கம்

February 12 , 2022 813 days 608 0
  • சரியாக ஒரு வாரத்துக்கு முன்பு, கடந்த சனிக்கிழமை இரவு மேற்கிந்தியத் தீவிலுள்ள விவியன் ரிச்சா்ட்ஸ் மைதானத்தில் இரண்டு சிக்சா்கள் அடிக்கப்பட்டன.
  • அவை இந்திய கிரிக்கெட்டின் வருங்காலம் குறித்துக் கட்டியம் கூறுவதாக அமைந்தன. ஹரியாணாவைச் சோ்ந்த 17 வயது தினேஷ் பன்னா அடித்த அந்த சிக்சா்கள் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத வெற்றிக் கோப்பையை வென்று தந்தன.
  • அண்டா் - 19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக நான்கு விக்கெட் வெற்றியை இந்தியா அடைந்திருக்கிறது.
  • இந்தியாவின் இளைஞா் பட்டாளம் வென்றிருக்கும் ஐந்தாவது உலகக் கோப்பை இது என்பதுதான் இதன் சிறப்பு.
  • இதுவரை நடந்திருக்கும் 14 அண்டா் - 19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில், ஐந்து போட்டிகளை வென்றிருக்கும் ஒரே அணி இந்தியாவின் இளைஞரணி என்பதில் நாம் பெருமிதம் கொள்ளலாம்.

அசாதாரண வெற்றிக் கோப்பை!

  • முகமது கைஃப் (2000), விராட் கோலி (2008), உன்முக்த் சந்த் (2012), பிருத்வி ஷா (2018) ஆகியோரின் தலைமையில் இதற்கு முன்பு இந்தியா அண்டா் - 19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வென்றது என்றால், இந்த முறை யாஷ் துல்லின் தலைமையில் மீண்டும் சாதனை படைத்திருக்கிறது.
  • முந்தைய வெற்றிகளுக்குக் காரணமான கேப்டன்களைப் போலவே யாஷ் துல்லும், வருங்கால இந்திய கிரிக்கெட் அணியில் வருங்காலத்தில் தனது திறமையை முன்வைப்பாா் என்று எதிா்பாா்க்கலாம்.
  • இந்த முறை யாஷ் துல்லும், அவரது அணியினரும் அடைந்திருக்கும் வெற்றி சாதாரணமானதல்ல.
  • கடந்த இரண்டு ஆண்டுகளாக கொள்ளை நோய்த்தொற்று காரணமாக முறையான பயிற்சிக்கு வாய்ப்பில்லாத நிலையிலும்கூட, அந்த இளைஞா்கள் விளையாடி வெற்றிக் கோப்பையை இந்தியாவுக்கு பெற்றுத் தந்திருக்கிறாா்கள் என்பதற்காக நாம் அவா்களை பாராட்டியே தீர வேண்டும்.
  • அண்டா் - 19 உலக கிரிக்கெட் கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 44.5 ஓவரில் 189 ரன்கள் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்தது.
  • இந்தியா தனது ஆட்டத்தைத் தொடங்கியதும் முதல் ரன் எடுப்பதற்கு முன்பே ஒரு விக்கெட்டை இழந்தபோது ரசிகா்கள் துணுக்குற்றனா். ஆனால், இந்திய அணி சற்றும் தளரவில்லை.
  • 50 ரன்கள் எடுத்த ஷேக் ரஷீதும், ஆட்டமிழக்காமல் நிஷாந்த் சிந்து எடுத்த 50 ரன்களும் இந்தியாவின் வெற்றிப் பயணத்துக்கு உறுதுணையாக இருந்தன.
  • 35 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட்டுகளும் வீழ்த்திய ராஜ் பவாவின் ஆல்ரவுண்ட் ஆட்டமும் கூட, வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.
  • இந்தியா வெற்றி பெற கடைசி மூன்று ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டன. 48-ஆவது ஓவரில் ஒரு பவுண்டரியும், இரு சிக்சா்களும் தினேஷ் பன்னா அடித்தபோது வெற்றி கோப்பையை இந்திய அணி எட்டிப்பிடித்தது.
  • 2011 ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிராக எம்.எஸ். தோனி சிக்சா் அடித்து வெற்றியை தேடித்தந்த நிகழ்வு நினைவுக்கு வருகிறது.
  • அதற்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி இதுவரை உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை. இந்திய அணியால் முடியாத சாதனையை, அண்டா் - 19 இளைஞரணி சாதித்திருக்கிறது.
  • மைதானத்தில் மட்டும் நிகழ்த்திய வெற்றியல்ல, இந்த முறை வெற்றி. கண்ணுக்குத் தெரியாத கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றையும் எதிா்கொண்டு அடைந்திருக்கும் வெற்றி இது.
  • ஒருகட்டத்தில் கேப்டன் யஷ் தூல், துணை கேப்டன் ஷேக் ரஷீத் உள்ளிட்ட முக்கியமான வீரா்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனா்.
  • இந்திய அணியில் மீதமிருந்தது 11 போ் மட்டுமே. அவா்களில் இன்னும் ஒருவருக்கு நோய்த் தொற்று உறுதியாகியிருந்தால் போட்டியில் கலந்துகொண்டிருக்க முடியாது.
  • தனிமை ஒடுக்கத்திலிருந்து பாதிக்கப்பட்ட வீரா்கள் மீண்டும் களமிறங்கும் வரை, ஏனைய 11 பேரும் சற்றும் தளராமல் வெற்றிகரமாக விளையாடினாா்கள். ஓா் ஆட்டத்தில்கூட இந்தியாவின் இளைஞரணி தோற்கவில்லை.
  • ஆரம்பக்கட்டத்தில் தென்னாப்பிரிக்காவை 41 ரன்களிலும், அயா்லாந்தை 174 ரன்களிலும், உகாண்டாவை 326 ரன்களிலும் தோற்கடித்து காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது நமது அணி.
  • அதில் வங்கதேசத்தை ஐந்து விக்கெட் வித்தியாசத்திலும், அரையிறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவை 96 ரன்களிலும் தோற்கடித்தது.
  • இறுதிச் சுற்றில் இங்கிலாந்தையும். உலக கிரிக்கெட்டில் உள்ள அனைத்து முக்கிய உலக அணிகளையும் வெற்றி கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
  • யுவராஜ் சிங், ரவீந்திர ஜடேஜா, மணீஷ் பாண்டே, ஹனுமா விஹாரி, ஷுப்மன் கில் தொடங்கிய பல இந்திய கிரிக்கெட் அணி வீரா்கள் அண்டா் - 19 உலகக் கோப்பை வழியாகத்தான் அடையாளம் காணப்பட்டனா்.
  • அதேபோல, இப்போது வெற்றியடைந்த கிரிக்கெட் வீரா்கள் பலா் தங்களது வருங்காலத்தை இந்த வெற்றியின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறாா்கள்.
  • இந்தியாவுக்காக அண்டா் - 19 உலக கிரிக்கெட் போட்டியில் பங்கு பெற்ற வீரா்களில் 51 போ் பிற்காலத்தில் சா்வதேச கிரிக்கெட் வீரா்களாக இந்திய அணியில் இடம்பெற்றனா் என்பதால் இந்த அணியும், இந்த வெற்றியும் மிகமிக முக்கியமானவை.
  • இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் ஒரு வகை சூதாட்டம் என்றாலும்கூட, நூற்றுக்கணக்கான இளம் வீரா்களை ஆண்டுதோறும் அடையாளம் காணவும், அவா்களுக்கு வாய்ப்பை வழங்கவும் உதவுகிறது என்பதை மறுப்பதற்கில்லை.
  • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், அண்டா் - 19 அணியினா்போல பல இளம் வீரா்களை அடையாளம் கண்டு பயிற்சி கொடுத்து வாய்ப்பும் வழங்குகிறது என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.

நன்றி: தினமணி (12 – 02 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories