TNPSC Thervupettagam

உலகின் முதல் கார்பன் நெகட்டிவ் நாடு: உலகுக்கு வழிகாட்டும் பூடான்

May 19 , 2023 364 days 255 0
  • உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார ஏற்றமே முக்கியம் என்று ஓடிக்கொண்டு இருக்கின்றன. இந்தப் போக்குக்கு பூடான் மட்டும் விதிவிலக்கு. கடந்த 50 ஆண்டுகளாக பூடான் அரசாங்கம், மக்களின் மகிழ்ச்சியும் சுற்றுச்சூழல் பாதுகாப்புமே முக்கியம் எனச் செயலாற்றிவருகிறது.
  • பூடான் அரசு மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) அளவிடுவதற்குப் பதிலாக, மொத்தத் தேசிய மகிழ்ச்சியில் (GNH) கவனம் செலுத்தியது; சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்துப் பல முன்னெடுப்புகளையும் தொடர்சியாக செயல்படுத்தியது. இன்று உலகின் முதல் 'கார்பன் நெகட்டிவ் நாடு' எனும் சாதனையைப் படைத்து, உலகுக்கே வழிகாட்டியாக பூடான் மாறியிருக்கிறது.

கார்பன் நெகட்டிவ்

  • 'கார்பன் நெகட்டிவ்' நாடு என்றால், அந்த நாடு தான் உற்பத்தி செய்வதை விட அதிகமாகக் கரியமில வாயுவை உறிஞ்சுகிறது என்று அர்த்தம்.
  • 2017இன் தரவுகளின்படி பூடானில் உமிழப்படும் கரியமில வாயுவின் அளவு சுமார் 22 லட்சம் டன். ஆனால், பூடான் நாட்டின் அடர்ந்த காடுகள் இதனை விட மூன்று மடங்கு கூடுதல் கரியமில வாயுவை உறிஞ்சும் திறனைக் கொண்டிருக்கின்றன.
  • 'கார்பன் நெகட்டிவ்' நாடு என அது இன்று அறியப்பட்டாலும், தண்ணீர் பிரச்சனை, வறுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைக் கடந்தே தற்போது இந்தச் சாதனையை பூடான் படைத்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பூடானின் அமைப்பு

  • இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே, கிழக்கு இமயமலையில் அமைந்து இருக்கும் ஒரு சிறிய நாடு இது. இதன் மக்கள்தொகை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம்.
  • உலகின் பசுமையான நாடெனக் கருதப்படும் பூடானின் நிலப்பரப்பு 47,000 சதுர கி.மீ; அதாவது, தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் சரியாக மூன்றில் ஒரு பங்கு.
  • பூடானின் நிலப்பரப்பில் சுமார் 70% அடர்ந்த காடுகள். பூடானில் சமவெளி எதுவும் கிடையாது. மலைகளும், பள்ளத்தாக்குகளும், அதில் அடர்த்தியான காடுகளும் நிறைந்த நாடு அது.
  • நான்குபுறமும் நிலத்தால் சூழப்பட்டு இருக்கும் பூடான், தனது எல்லைகளை வடக்கில் சீனாவுடனும், தெற்கு, கிழக்கு, மேற்கில் இந்தியாவுடனும் பகிர்ந்து கொள்கிறது.

கரியமில வாயுவை அதிகம் உமிழும் நாடுகள்

  • உலகின் பெரும்பாலான நாடுகள் தாம் உறிஞ்சக்கூடியதை விட அதிகமான அளவில் கரியமில வாயுவை வெளியிடுகின்றன. 2020இன் மதிப்பீட்டின்படி, அதிக அளவில் கரியமில வாயுவை அதிகமாக வெளியிடும் நாடுகளின் பட்டியலில் சீனா (உலகளாவிய உமிழ்வுகளில் 31%) முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக, அமெரிக்கா (14%), இந்தியா (7%), ரஷ்யா (5%), ஜப்பான் (3%) ஆகிய நாடுகள் உள்ளன.

பூடான் எப்படிச் சாதித்தது?

  • பூடானின் அரசியலமைப்பு அதன் நிலப்பரப்பில் குறைந்தது 60 சதவீதம் காடுகளால் நிறைந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. பூடானின் நிலப்பரப்பில் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட தேசிய காடுகள், இயற்கை இருப்புக்கள், காட்டுயிர் பாதுகாப்பு பகுதிகளாக உள்ளன.
  • பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள், காடுகளைப் பாதுகாக்கவும், வேட்டையாடுதலைத் தடுக்கவும் உதவுகின்றனர். முக்கியமாக, பூடான் அரசின் 'தூய்மையான பூடான்' அல்லது 'பசுமை பூடான்' போன்ற தேசிய வளப் பாதுகாப்பு திட்டங்கள் மிகுந்த வீரியத்துடன் செயல்படுத்தப்படுகின்றன.
  • தற்போது, உலக அளவில் தண்ணீர் பிரச்சனை, உணவு பிரச்சனை, காற்று மாசுபாடு, தண்ணீர் மாசுபாடு உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ளாத நாடாக பூடான் உள்ளது.

நன்றி: தி இந்து (19 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories