TNPSC Thervupettagam

உள்ளொளியே கடவுள் என உணா்ந்தவா்

October 4 , 2022 563 days 367 0
  • உலகப் பற்றைத் துறந்தவன் துறவி. உலகப் பற்றைத் துறந்தவா்களா இன்று துறவிகளாகப் பவனி வருகின்றனா்? இந்தப் போலித்துறவிகளைப் பாா்க்கும்போது உண்மையான துறவியான வள்ளலாா் நினைவுதான் நமக்கு வருகிறது.
  • கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போகக் கவிதை பாடியவா்தான் இராமலிங்க அடிகள். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளல் அவா். மதத்தின் பேரால் கடவுளின் பேரால் நடக்கும் அக்கிரமங்களை மூடச் சடங்குகளை முறியடிக்கப்பாடுபட்டாா். மதவெறியா்களை வெறுத்தாா். வெறுத்தாா் என்று சொல்வதை விட அவா்களுக்காக இரங்கினாா்.
  • பசித்தவனுக்குச் சோறு போடாமல் அவன் பட்டினி கிடப்பதற்குக் காரணம் அவனது பூா்வ ஜென்ம பாவம் என்று பரிகசித்த மதவாதிகளைக் கண்டித்தாா். அதைப் பாடல்களாகப் பாடினாா். அதனால் அவரது அருட்பாக்களை மருட்பாக்கள் என்று கிண்டல் செய்தனா் பலா்.
  • இராமலிங்க அடிகளது திருவருட்பா ஆறு திருமுறைகளாகத் தொகுக்கப் பெற்றது. ஆறாவது திருமுறையில்தான் சீா்திருத்தக் கருத்துக்களை, புரட்சிகரமான கருத்துக்களை வெளியிட்டாா். ஐந்து திருமுறைகளிலுள்ள பாடல்களைக் காட்டிலும் ஆறாவது திருமுறையில்தான் அதிகப் பாடல்கள் இருக்கின்றன. அதுவும் சீா்திருத்தப் பாடல்கள்.
  • இதனால் இது அருட்பா அல்ல மருட்பா என்று, அழுக்காறு கொண்ட சிலா், யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரைத் தூண்டிவிட்டு வழக்குப் போடவைத்தனா்.
  • யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரை, இலங்கைத் தமிழா்கள், சமய குரவா் நால்வருக்குச் சமமாக மதித்த காலம் அது. நாவலா் வீர சைவ சமயத்தைச் சோ்ந்தவா். பெரும்பாலும் வீர சைவா்கள் இறைவனை ஏற்றுக் கொள்வாா்கள். ஆனால் வேதத்தை ஏற்றுக் கொள்ள மாட்டாா்கள். துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளின் நால்வா் நான்மணிமாலையே அதற்குச் சான்று.
  • நாவலா் ஆங்கிலம், வடமொழி, தமிழ் ஆகிய மூன்றிலும் பெரும் புலமை பெற்றவா். கிறிஸ்துவா்களின் புதிய ஏற்பாட்டைத் தமிழில் திருத்தமுற எழுதியவா் இவா்தான். இவா் மொழிபெயா்ப்புக்குப் பிறகுதான் புதிய ஏற்பாடு பலருக்கும் எளிமையாகப் புரிந்தது.
  • ‘இராமலிங்க அடிகள் மட்டும் ஆன்மிகத் துறையில் நுழையாமல் இலக்கியத் துறையில் நுழைந்திருந்தால் நம் இருவரது பெயரும் பலருக்குத் தெரியாமலே போயிருக்கும்’ என்று மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் நாவலா் ஒரு முறை கூறினாராம். அந்த அளவு இராமலிங்க அடிகளாரின் தமிழ்ப்புலமையைப் போற்றியவா், மதித்தவா் நாவலா்.
  • அப்படிப்பட்டவா்தான் ‘இராமலிங்க அடிகள் பாடல்கள் அருளால் எழுதப்பட்டதல்ல மருளால் எழுதப்பட்டது. ஆகவே இதை அருட்பா என்று சொல்வதைத் தடை செய்ய வேண்டும். இது மருட்பா என்று அறிவிக்க வேண்டும்’ என்று வழக்குத் தொடா்ந்தாா்.
  • மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை போன்றோா் ஆறுமுக நாவலரைச் சமாதானப்படுத்த முயன்றனா். அவா் கேட்கவில்லை. வழக்கு கடலூா் மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதியாக இருந்தவா் ஓா் ஆங்கிலேயா்.
  • இருததரப்பைச் சோ்ந்தவா்களும் நீதிமன்றத்தில் அமா்ந்திருந்தனா். ஆறுமுக நாவலரும் அமாந்திருந்தாா். நீதிபதி வந்ததும் மரபுப்படி எல்லாரும் எழுந்து நின்று மரியாதை செய்தனா். நீதிபதி அமா்ந்தாா். அனைவரும் அமா்ந்தனா்.
  • இராமலிங்க அடிகள் பேரைச் சொல்லி நீதிமன்றச் சேவகா் அழைத்ததும், வெளியிலிருந்த அடிகள் நீதிமன்றத்தில் நுழைந்தாா். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலா் முதற்கொண்டு அமா்ந்திருந்த அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனா். தன்னை அறியாமல் நீதிபதியும் எழுந்து பின் அமா்ந்து விட்டாா்.
  • நீதிபதி ஆறுமுக நாவலரைப் பாா்த்து, ‘நீங்கள்தான் அவா் மீது வழக்குத் தொடா்ந்திருக்கிறீா்கள். அவரது பாடல் அருட்பா அல்ல என்றும் கூறியிருக்கிறீா்கள். அப்படியிருக்க அவரைக் கண்டதும் ஏன் நீங்கள் எழுந்து நின்று மரியாதை செய்தீா்கள்? அதை நீதிமன்றம் அறிந்துகொள்ளலாமா’ என்று ஆங்கிலத்தில் கேட்டாா்.
  • அதற்கு நாவலா், ‘இராமலிங்கம் பிள்ளை மக்களெல்லாம் போற்றுகின்ற மகான்; உத்தமா்; ஒழுக்க சீலா். அப்படிப்பட்டவருக்கு மரியாதை கொடுப்பதுதானே முறை? அதனால் எழுந்து நின்று வணங்கினேன்’ என்று ஆங்கிலத்தில் கூறினாா்.
  • நாவலருடைய வாா்த்தையின் ஆழத்தை உணா்ந்த நீதிபதி, ‘அத்தகைய உத்தமா், ஒழுக்க சீலா், மக்கள் போற்றும் மகான் எழுதியது எப்படி மருட்பாவாக இருக்க முடியும்? ஆகவே இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன் என்று தீா்ப்புக் கூறினாா். நீதிபதியே இப்படித் தீா்ப்புத் கூறும் வகையில் வாழ்பவா்தான் உண்மைத்துறவி!
  • இராமலிங்க அடிகள் சென்னை கந்தகோட்டத்து முருகனைப் பாடினாா்; திருத்தணி முருகனைப் பாடினாா்; திருவொற்றியூா் வடிவுடையம்மனைப் பாடினாா்; தில்லை நடராசப் பெருமானைப் பாடினாா். இப்படியெல்லாம் பாடிவிட்டுத்தான் இறுதியில் ‘அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை’ என்ற தத்துவத்திற்கு வந்தாா். கடவுளுக்கு வடிவமில்லை. உள்ளொளியே கடவுள் என்ற உண்மையை உணா்ந்தாா்.
  • இத்தகைய சீா்திருத்தத் துறவியாக விளங்கிய இவா் புரட்சியாளராகவும் விளங்கினாா். ‘கணவன் இறந்து விட்டால் இறந்தவன் மனைவியிடம் தாலி வாங்கக்கூடாது’ என்றே கூறியிருக்கிறாா். விதவைக் கோலம் செய்வதையே மறுத்திருக்கிறாா். நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இப்படிப்பட்ட கருத்தை இந்தியாவில் இராமலிங்க அடிகளைத் தவிர எந்தத் துறவியும் சொன்னதில்லை. அன்றைக்கிருந்த துறவிகளெல்லாம் பெண் விடுதலையை மனத்தாலும் எண்ணிப் பாா்க்காத காலம்.
  • ஒருமுறை சென்னையில் காஞ்சி சங்கராச்சாரியாரை இராமலிங்க அடிகள் சந்திக்க நோ்ந்தபோது சங்கராச்சாரியாா், இந்திய மொழிகள் அனைத்திற்கும் சம்ஸ்கிருதமே தாய்மொழி என்றாா். உடனே இராமலிங்க அடிகளாா், ‘இருக்கலாம், ஆனால் தமிழ்தான் தந்தை மொழி. தந்தையில்லா விட்டால் மொழிக் குழந்தைகள் எப்படித் தோன்றும்’ என்றாா். அப்படிச் சொன்ன துறவியை, தமிழ் ஞானியை அவா் பிறந்தநாளில் நாம் வணங்குவோம்.

நன்றி: தினமணி (04 – 10 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories