TNPSC Thervupettagam

ஊரடங்கு உருவாக்கும் மனப் பிரச்சினைகளை எப்படிப் புரிந்துகொள்வது?

April 7 , 2020 1480 days 1051 0
  • ஊரடங்கைத் தொடர்ந்து எழுந்த, ‘இந்த ஊரடங்கும் தனிமைப்படுத்துதலும் மனிதர்களுக்கு மனப் பிரச்சினைகளை ஏற்படுத்துமா?’ என்ற கேள்வி சற்று தீவிரமாகி, ‘இந்தச் சமூக விலக்கலால் மனநோய் வருமா?’ என்று மாறியிருக்கிறது. அரசாங்கமே மனநல அமைப்புகளிடம் பேசி 24 மணி நேர இணைய ஆற்றுப்படுத்துதல் முகாமை அமைக்கப் பரிசீலிக்கிறது எனும் அளவுக்குப் போயிருக்கிறது. இதற்கு முன்பு இது போன்ற நீண்ட தனிமைப்படுத்துதலை, உலகம் தழுவிய ஊரடங்கை நாம் எதிர்கொண்டது கிடையாது. பிறகு, எதன் அடிப்படையில் இப்போது உளச் சிக்கல்கள் ஏற்படும் என நம்புகிறோம்?
  • அடிப்படையில், ‘மனிதன் ஒரு சமூக விலங்கு. அதாவது, சமூகமாய் வாழக்கூடிய பண்புகளைத் தனது மரபணுவில் பொதிந்து வைத்திருக்கும் மனிதனைத் திடீரென சமூக விலக்கல் செய்யும்போது அது அவனுக்கு மிகப் பெரிய உளவியல் முரணாக அமைந்துவிடுகிறது. இந்த முரணின் விளைவாக உளப் பிரச்சினைகள் வருவதற்கு சாத்தியமிருக்கிறது.’ இப்படியான ஊகத்தின் அடிப்படையிலேயே இந்த விவாதம் இங்கு தொடர்ச்சியாக எழுகிறது.

சமூக விலங்கின் குணாம்சம்

  • மனிதன் சமூக விலங்குதான். ஆனால், சமூகமாய் வாழ்வதால் மட்டும் அல்ல; சமூகத்துக்காக வாழ்வதாலேயே சமூக விலங்கு ஆகிறான். உதாரணமாக, சில விலங்குகள்கூட சமூகமாய் வாழ்கின்றன. ஆனால், சமூகத்துக்காக வாழக்கூடிய பண்பை மனிதனே பெற்றிருக்கிறான். ‘சமூக அமைப்பு’ என்பது ஒரு மனப்போக்கு. அது ஒரு நிறுவனமாக்கப்பட்ட கூட்டமைப்பு. இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், மனிதன் என்பவன் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளைவிட சமூகத்தின் நலனையே பிரதானமாகக் கொண்டு இயங்குபவன். இந்தப் பண்புதான் ஒரு சமூக விலங்கின் அடிப்படைப் பண்பாக இருக்க முடியும். அதனால்தான், சமூகத்தின் நலனைப் பற்றிக் கவலைப்படாமல் தன்னிச்சையாக, சுயநலன் சார்ந்து இயங்குபவர்களைச் சமூக விரோதிகள் என்கிறோம்.
  • தன்னை ஒரு சமூகத்தின் அடிப்படை அங்கம் என்று உணரும் மனிதன் சமூக ஒழுங்குக்கு ஏற்றவாறு தனது தேவைகளை உருவாக்கிக்கொள்கிறான். ஆக, இந்தச் சமூகத்துக்கு மிகப் பெரிய ஆபத்தாய்ப் பரவிவரும் வைரஸ் தொற்றிலிருந்து சமூகத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை அவன் இயல்பாகவே பெற்றிருக்கிறான். இதில் எந்த முரணும் கிடையாது. அப்படியென்றால், இந்தத் தனிமைப்படுத்துதலால் உளப் பிரச்சினை இல்லையா என்று கேட்டால் உளவியலைப் பற்றி நாம் மிகத் தட்டையாகவே புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதைத்தான் பதிலாகத் தருவேன். பொதுவாகவே, ‘மனம் ஒரு தனி அமைப்பு. அதுவும் சுயசார்பு அமைப்பு. இந்த அமைப்பு பலவீனமாக இருந்தால் அவர்களுக்குப் பல உளச் சிக்கல்கள் வரும். அவர்களுக்கு ஒரு தொடர்ச்சியான ஆற்றுப்படுத்தல் சிகிச்சையைக் கொடுத்துப் பலப்படுத்தினால் அவர்களைப் பாதுகாக்க முடியும்’ என்று நம்புகிறோம். அதனால்தான், விவசாயிகள் தற்கொலை செய்தும்கொள்ளும்போதும், மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும்போதும் ஒரே தீர்வாக அவர்களுக்கான தனிநபர் ஆற்றுப்படுத்தல் சிகிச்சையைப் பரிந்துரைக்கிறோம். இதன் அடிப்படையில்தான் சமூக ஊரடங்கானது உளப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் எனவும் நம்புகிறோம்.

உண்மை நிலவரம் என்ன?

  • சமீபத்தில், பிரபல மருத்துவ இதழான ‘லான்செட்’டில் தனிமைப்படுத்துதலின் உளவியல் தாக்கங்களைப் பற்றி ஒரு கட்டுரை வந்திருக்கிறது. ‘சார்ஸ்’, ‘எபோலா’, ‘மெர்ஸ்’ போன்ற வைரஸ் தொற்று வந்தபோது தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது. அதில் சில முக்கியமான தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன. மக்கள் முழுமையாகத் தனிமைப்படுத்தப்படும்போது அவர்களுக்கு அது சார்ந்த பயம், பதற்றம் அதிகரிக்கின்றன. ஆனால், தனிமைப்படுத்தப்பட்ட எல்லோருக்கும் அல்ல. குறிப்பிட்ட சில காரணிகளே உளச் சிக்கல்களுக்குக் காரணமாக இருந்திருக்கின்றன. அதாவது, நோய் குறித்த சரியான தகவல் இல்லாதபோதும், தனிமைப்படுத்தப்படலின்போது அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்யாமல் இருக்கும்போதும், ஒருவருக்குப் பொருளாதார நெருக்கடிகள் இருக்கும்போதும், தனிமைப்படுத்தப்பட்டவரைச் சார்ந்து அவரது குடும்பம் இருக்கும்போது அந்தக் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற முடியாத இயலாமையின் காரணமாகவுமே உளச் சிக்கல்கள் வந்திருக்கின்றன.
  • அப்படியென்றால், இதை வெறும் உளச் சிக்கலாக மட்டுமே பார்க்க முடியுமா? முடியாது. அன்றாட வாழ்க்கையையே சவால் நிறைந்ததாக நடத்திக்கொண்டிருக்கும் நபரைத் தனிமைப்படுத்தும்போது அது இனிவரும் வாழ்க்கை தொடர்பான அச்சத்தை உருவாக்குகிறது. அதை அவரின் தனிப்பட்ட உளச் சிக்கலாகப் புரிந்துகொள்வதை விடுத்து அவரின் சமூக, பொருளாதார, வாழ்க்கைப் பின்னணியில் புரிந்துகொள்வதுதான் நியாயமானது. அப்போதுதான் இதற்கான தீர்வை யோசிக்க முடியும்.

முழுமையான தீர்வு

  • பொது ஊரடங்கை அமல்படுத்தும்போது அது எல்லோருக்கும் ஒரே மாதிரியானதாக இருக்கும் என்று நினைப்பது நியாயமல்ல. ஒருவருக்கு வாழ்வாதாரப் பிரச்சினையாக, நிச்சயமற்ற வாழ்க்கை மீது அழுத்தப்பட்ட சுமையாக இருக்கும்போது இந்தச் சுமையால் வரக்கூடிய எண்ணங்களையும் நம்பிக்கையின்மையையும் போக்க வேண்டியது இந்தச் சமூகத்தின் கடமை. எந்தச் செயல்திட்டங்களையும் ஒட்டு மொத்த தேசத்தின் நலனை முன்னிறுத்திக் கொண்டுவந்தாலும் அது அனைவருக்குமான நலனாக இருக்காது; ஒரு சாராருக்கு சாதகமாகவும், மற்றொரு பிரிவினருக்கு மிகப் பெரிய இழப்பாகவும் போய்விடும். இந்த இழப்புகளையும், அது சார்ந்து உருவாகும் வாழ்க்கையின் மீதான அச்சங்களையும் நாம் வெறும் உளச் சிக்கல்களாகச் சுருக்கிப் பார்த்து, அதற்கான தீர்வுகளை உளவியல் சிகிச்சைகளிலேயே தேடிக்கொண்டிருப்பது அபத்தமானது.
  • எனவே, சமூகத்தின் நலிந்த பிரிவினர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அதைக் களைவதன் மீது உண்மையான ஈடுபாட்டோடு ஒட்டுமொத்த சமூகமும் இருக்கிறது என்ற நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். நோயிலிருந்து மீண்ட பிறகு இது தொடர்பாக ஏற்பட்ட அத்தனை சமூக, பொருளாதார இடர்களையும் களைந்துவிடுவோம் என்ற நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். அது மிகப் பெரிய பாதுகாப்புணர்வை அவர்களுக்குக் கொடுக்கும். அதன் வழியாகவே அவர்களுடைய உளப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். அதுதான் முழுமையான தீர்வாக இருக்கும்.

நன்றி: தி இந்து (07-04-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories