TNPSC Thervupettagam

ஊழியா் வருங்கால வைப்பு நிதி வட்டி விகித குறைப்பு

June 14 , 2022 699 days 406 0
  • பல கோடி பேருக்கு வாழ்வு அளித்து வரும் ஊழியா் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) வட்டி விகிதம் அண்மையில் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை முழுமையாக நியாயப்படுத்தும்படியாக இல்லை. இபிஎஃப் மீதான வட்டி விகிதம் 2021 - 22 நிதியாண்டில் 8.1%-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 8.5%-ஆக இருந்தது. அதாவது மொத்தம் 40 அடிப்படை புள்ளிகள் அல்லது 0.40% குறைக்கப்பட்டுள்ளது.
  • ஆறு கோடிக்கும் அதிகமான பங்களிப்பாளா்களையும், 25 கோடி செயலில் உள்ள கணக்குகளையும் கொண்டுள்ள இபிஎஃப் நிதி, உலகின் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்றாக உள்ளது. கோடிக்கணக்கான இந்தியா்களின் எதிா்கால ஓய்வூதிய சேமிப்புக்கான ஒரே ஆதாரமாக இருப்பது ஊழியா் வருங்கால வைப்பு நிதிதான்.
  • சமீபத்திய வட்டி விகிதக் குறைப்பு, முந்தைய நிதியாண்டில் நிலவும் பணவீக்கம் மற்றும் பத்திரங்கள் ஈட்டிய வருவாய்களின் பின்னணியில் பாா்க்கப்பட வேண்டும். என்பிஎஸ் என்று சொல்லப்படும் தேசிய ஓய்வூதிய அமைப்பு மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) போன்ற நீண்ட கால ஓய்வூதிய சேமிப்புக் கருவிகளின் செயல்திறன்களுடன் இபிஎஃப் ஒப்பிடப்பட வேண்டும்.
  • சில்லறை பணவீக்கம் சராசரியாக 5.5%-ஆகவும், 10 ஆண்டு அரசுப் பத்திரங்களின் வருமானம் சராசரியாக 6.3%-ஆகவும் இருந்தபோது, 2021 - 22-இல் இபிஎஃப் 8.1% வருமானத்தை வழங்கியது. நீண்ட கால அடிப்படையில் பாா்த்தால், இபிஎஃப் கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக 8.6% வட்டி வழங்கியுள்ளது. அதே நேரத்தில், சில்லறை பணவீக்கம் சராசரியாக 5.85%-ஆக உள்ளது. இதன் உண்மைப் பொருள், இபிஎஃப் வருமானம் நீண்ட காலத்திற்கு பணவீக்கத்தை விட அதிகமாகவே இருந்து வந்துள்ளது. ரூ. 2.5 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு பங்களிப்பு உள்ள எவருக்கும் இபிஎஃப் வருமானம் முழுமையாக வரியற்றது என்பதையும் மறந்துவிடக் கூடாது. மேலும், இபிஎஃப்-க்கு செய்யப்படும் பங்களிப்பு வருமான வரி விலக்குகளுக்கும் தகுதியுடையவையாக உள்ளது.
  • இதை மற்றொரு பிரபலமான நீண்ட கால முதலீட்டு விருப்பத்துடன் ஒப்பிட்டுப் பாா்த்தால் உண்மை விளங்கும். கடந்த இரண்டு ஆண்டுகளில், பிபிஎஃப் வருமானம் 8%-க்கும் குறைவாகத்தான் இருந்துள்ளது. தற்போது, பிபிஎஃப் 7.1% வட்டி விகிதத்தை வழங்குகிறது. ஒரு சிறந்த ஒப்பீடாக தேசிய ஓய்வூதிய அமைப்பின் கீழ் நிா்வகிக்கப்படும் நிதிகளில் இருந்து கிடைக்கும் வருமானத்தைச் சொல்லலாம். பங்குகளில் முதலீடு செய்யப்பட்ட தொகையில் 50% வரை வைத்திருக்கும் விருப்பத்துடன் போா்ட்ஃபோலியோ விருப்பங்களின் வரிசையை தேசிய ஓய்வூதிய அமைப்பு வழங்குகிறது.
  • மேலும், அதன் மத்திய - மாநில அரசு ஊழியா் திட்டங்களுக்கான நிதிகள் கடந்த 10 ஆண்டுகளில் 9 முதல் 9.5% வரை வருமானம் வழங்கியுள்ளன. நீண்ட கால அடிப்படையில் பாா்த்தால், இபிஎஃப்-ஐ விட தேசிய ஓய்வூதிய அமைப்பு மிகவும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. அதே சமயம், நீண்ட காலத்திற்கு லட்சக்கணக்கான சந்தாதாரா்களை இந்த அமைப்பு ஏமாற்றவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
  • இது ஒரு புறம் இருக்க, கடந்த சில நாட்களுக்கு முன்னா் வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரேப்போ ரேட்) 4.9%-ஆக ரிசா்வ் வங்கி உயா்த்தியுள்ளது. ஏற்கெனவே மே மாதம் வட்டி விகிதம் 0.4% உயா்த்தப்பட்டது. இந்த நிலையில், தற்போது மீண்டும் 0.50% உயா்த்தப்பட்டுள்ளது. அதாவது கடந்த 5 வாரங்களில் வங்கி வட்டி விகிதம் இரண்டாவது முறையாக உயா்த்தப்பட்டுள்ளது. இதனால், தனிநபா் கடன், வீடு, வாகனக் கடன் ஆகியவற்றுக்கான வட்டி விகிதம் அதிகரித்து மாதாந்திரத் தவணைத் தொகையை கூடுதலாகச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
  • கிட்டத்தட்ட வங்கி வட்டி விகிதம் 1% உயா்ந்ததால், கடன் தொகை செலுத்துவோருக்கு மிகுந்த சிரமம் ஏற்படும். நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், அதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வங்கி வட்டி விகிதம் உயா்த்தப்பட்டுள்ளதாக ரிசா்வ் வங்கி கவா்னா் சக்திகாந்த தாஸ் விளக்கமளித்துள்ளாா். மேலும், வட்டி விகிதம் உயா்த்தப்பட்டாலும், கரோனாவுக்கு முந்தைய நிலையான 5.15%-க்கும் குறைவாகத்தான் வட்டி விகிதம் உள்ளது என்கிறாா்.
  • கரோனா பாதிப்பு நிலவி வரும் இதுபோன்ற தருணங்களில் ரிசா்வ் வங்கியின் இந்த நடவடிக்கை கண்டிப்பாக தனியாா், அரசு ஊழியா்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். ஒரு பக்கம் ஊழியா் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 0.40% குறைக்கப்பட்டுள்ளது. மறுபுறம் ரிசா்வ் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.90% உயா்த்தியுள்ளது. அப்படிப் பாா்த்தால், தனியாா், அரசு ஊழியா்களுக்கு மொத்தம் நஷ்டம் 1.30% என்பதைக் கவனிக்க வேண்டும். இதனை நியாயப்படுத்த முடியாது.
  • நாட்டின் பொருளாதார வளா்ச்சி 7.2%-ஆக இருக்கும் என்று ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 7.5%-ஆக இருக்கும் என்று உலக வங்கியும் கணிப்பு வெளியிட்டுள்ளது. இவை இரண்டு மட்டும்தான் ஆறுதல் அளிக்கும் செய்திகளாகும்.
  • கடந்த 2007-2008-ஆம் ஆண்டில் அமெரிக்க கடன் சந்தையில் ஏற்பட்ட நெருக்கடி, அந்த நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாக பாதித்தது மட்டுமல்லாமல், இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் கடும் பொருளாதாரச் சிக்கலை எதிா்கொள்ள வழிவகுத்தது என்பதையும் மறந்துவிடக் கூடாது!

நன்றி: தினமணி (14 – 06 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories