TNPSC Thervupettagam

என்ன செய்கிறார்கள் ஆசிரியர்கள்

October 4 , 2022 570 days 427 0
  • சென்னை மேயர் ஆர்.ப்ரியா விரைவில் ஒரு கல்விக் குழுமத்தின் தலைவர் ஆகவிருக்கிறார். தமிழ்நாடு அரசின் எண்ணம் காரியமானால் அடுத்தடுத்து கோவை, மதுரை, திருச்சி, நெல்லை என்று பல மாநகரங்களின் தலைவர்களும் ஒரு கல்வி அறக்கட்டளைகளின் தலைவர் ஆகலாம். “முதல்வர் ஸ்டாலின் முன்னெடுப்பில் சென்னை மாநகராட்சி சார்பில் விரைவில் ஒரு மருத்துவக் கல்லூரியையும் பொறியியல் கல்லூரியையும் ஆரம்பிக்கவிருக்கிறோம்” எனும் அமைச்சர் கே.என்.நேருவின் அறிவிப்பானது, கல்வித் துறை சார்ந்து தமிழக அரசு எடுத்துவைத்திருக்கும் நல்ல முன்னகர்வுகளில் ஒன்று.
  • கடைசி மனிதருக்குமான அதிகாரத்தைக் குறிப்பது கூட்டாட்சி. அப்படியென்றால், கல்வி உள்பட சாத்தியமுள்ள துறைகள் அனைத்தின் அதிகாரங்களும் பகிரப்பட வேண்டும். இந்தப் பகிர்வு என்பது மத்தியிலிருந்து, மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிப்பதோடு நின்றுவிடக் கூடாது. உள்ளாட்சிகள் வரை நீள வேண்டும்.
  • ஆட்சியாளர்களில் மக்களுக்கு மிக அருகில் இருப்பவர்கள் உள்ளாட்சி நிர்வாகிகள். மக்களால் அவர்களை நேரடியாகக் கேள்வி கேட்க முடியும். தங்களுக்குத் தேவையானதை அவர்கள் மூலம் கேட்டுப் பெற முடியும். அதனால்தான் பள்ளிகள் நிர்வாகத்தில் உள்ளாட்சிகளுக்கும் பங்கு இருக்க வேண்டும் என்று பேசுகிறோம். 
  • உலகம் எங்கும் உள்ளாட்சி நிர்வாகங்கள் தங்களுடைய பணிகளைத் தொடங்கும்போது பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகளைக் கட்டமைப்பதை ஒரு பணியாகக் கொண்டிருந்தன. தமிழ்நாட்டின் பழமையான நகராட்சிகளில் குறைந்தது ஒரு நூற்றாண்டு, ஒன்றரை நூற்றாண்டு பள்ளிகள், மருத்துமனைகள் இருப்பதைக் காணலாம். அந்தந்த ஊரின் நகராட்சித் தலைவர்களுக்கு இவற்றின் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் முக்கியமான பங்கு இருந்தது. படிப்படியாகக் கல்வியை மையப்படுத்தி இப்போது எல்லாவற்றையும் டெல்லியின் கைகளில் கொடுத்து நிற்கிறோம்.
  • இந்தியாவில் முதன்முதலில் இப்படி மருத்துவக் கல்வியை வழங்கும் பணியில் மும்பை காலடி எடுத்துவைத்தது. இன்று லோக்மான்ய திலகர் பெயரில் அமைந்திருக்கும் அந்தக் கல்லூரி (எல்டிஎம்எம்சி), மும்பை மாநகரத்தின் முன்வரிசையில் உள்ள கல்லூரிகளில் ஒன்று. மும்பை மாநகராட்சி நிர்வாகத்தின் பங்களிப்பில் நடக்கும் கல்லூரி இது. மெல்ல வளர்ந்து இப்போது முதுநிலைப் படிப்புகளையும் கற்பிக்கும் கல்லூரியாக உருவெடுத்திருக்கிறது.
  • சுவாரஸ்யமாக, குஜராத்தின் அகமதாபாத் மாநகராட்சி நிர்வாகம் இப்படி ஒரு மருத்துவக் கல்லூரியை 2009இல் உருவாக்கியது. அகமதாபாத் மாநகராட்சி மருத்துவக் கல்வி அறக்கட்டளை என்றே ஓர் அமைப்பை ஆரம்பித்து அது முன்னெடுத்த இந்த முயற்சிக்குப் பின்னே இருந்தவர் அன்றைய குஜராத் முதல்வர் மோடி. கல்லூரி அமைந்திருக்கும் மணி நகர் அவருடைய சொந்த தொகுதியும்கூட. இப்போது அந்தக் கல்லூரிக்கு அவர் பெயரையே சூட்டிவிட்டார்கள். நரேந்திர மோடி மருத்துவக் கல்லூரி.
  • மும்பை, அகமதாபாத், சூரத் இப்படி மிகச் சில மாநகராட்சி நிர்வாகங்களே இப்படி ஒரு முடிவை எடுக்க முடிந்ததற்கு அவற்றின் நிதியாதாரமும் ஒரு காரணம். வடகிழக்கில் உள்ள பல மாநிலங்களைவிடவும் அதிகமாக பட்ஜெட் போடும் மாநகரம் மும்பை. அகமதாபாத், சூரத்தை மும்பையோடு ஒப்பிட முடியாது என்றாலும், செழிப்பில் குறைந்தவை இல்லை. இந்த விஷயத்தில் தமிழ்நாடு எடுத்திருப்பது தாமதமான முடிவு என்றாலும், நல்ல முடிவு.  
  • சென்னையில் இன்று 279 மாநகராட்சிப் பள்ளிகள் இருக்கின்றன. 1.04 லட்சம் மாணவர்கள் இங்கு படிக்கிறார்கள். இந்த மாணவர்களிலிருந்து மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்குச் செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை இன்று குறைவாகவே இருக்கிறது. மாநராட்சி ஆரம்பிக்கவிருக்கும் கல்லூரிகளின் மூலம் இந்த எண்ணிக்கையை உயர்த்தலாம் என்று எண்ணுகிறது தமிழ்நாடு அரசு. சென்னை மாநகராட்சியே நடத்தவிருப்பதால், மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு என்று சிறப்பு ஒதுக்கீட்டு முறையை அறிமுகப்படுத்தக் கூடும்.
  • நல்ல எண்ணம். நல்ல முடிவு. ஆனால், பிரச்சினையை உற்று நோக்கினால், இது மட்டுமே தீர்வாக இருக்க முடியுமா என்ற கேள்வி எழும்.
  • திரும்ப இந்த எண்ணிக்கைக்குள் செல்வோம். 279 பள்ளிகள், 1.04 லட்சம் மாணவர்கள். இவர்களில் எத்தனை பேர் அரசு மருத்துவக் கல்லூரிகள், பொறியியல், சட்டக் கல்லூரிகளில் – அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டைத் தாண்டி – பொது வரிசையில் இடம் பிடிக்கிறார்கள்? எத்தனை பேர் மத்திய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் சேர்கிறார்கள்? ஒரு சதவீதம் பேர்கூட கிடையாது.
  • இந்த எண்ணிக்கையை உயர்த்தத் தமிழ்நாடு அரசு துடிக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடுகள், மாதிரிப் பள்ளிகள் போன்ற முயற்சிகள் எல்லாம் ஆட்சியாளர்களின் உணர்வைத் தெளிவாகவே வெளிப்படுத்துகின்றன. சரிதான், இந்தப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் எந்த அளவுக்கு இந்த விஷயத்துக்கு முகம் கொடுக்கிறார்கள்?
  • இந்திய அளவில் இன்று தமிழ்நாட்டின் சாதனைகளாக முன்னிறுத்தப்படுபவை எல்லாம் கடந்த காலச் செயல்பாடுகளின் அறுவடை. இன்றைக்கு வெகுவாகப் பள்ளிக்கல்வியின் தரம் கீழே போய்க்கொண்டிருக்கிறது. மாநிலத்திலேயே அதிகமான மாணவர்களைக் கொண்டிருக்கும் அரசுப் பள்ளிகளுக்கு இந்த வீழ்ச்சியில் முக்கியமான பங்கு உண்டு.
  • பலவீனமான அடிப்படைக் கட்டமைப்பு, போதிய வசதிகள் இன்மை, ஏராளமான காலிப் பணியிடங்கள், கற்பிக்கும் பணிக்கு அப்பாற்பட்டு திணிக்கப்படும் பணிகள் தரும் கூடுதல் சுமை என்று பல சங்கடங்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இருந்தாலும், ஒட்டுமொத்த நீரோட்டத்திலிருந்து அவர்கள் விலகி நிற்க முடியாது. நல்ல கல்விவாய்ப்புகள், வேலைவாய்ப்புகளைத் தனியார் பள்ளி மாணவர்கள் மட்டும் அள்ளிக்கொண்டு செல்ல, அரசுப் பள்ளி மாணவர்கள் வேடிக்கை பார்த்தபடி நிற்க முடியாது. அரசுப் பள்ளிகளின் சீரமைப்பில் தவிர்க்க முடியாத ஓர் அங்கம் ஆசிரியர்களின் மேம்பாடு. படிப்படியாகவேனும் தமிழக அரசு இந்த இடத்தில் கை வைக்க வேண்டும்.
  • ஏன் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளிலிருந்து ஆரம்பிக்கக் கூடாது

நன்றி: அருஞ்சொல் (04 – 10 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories