TNPSC Thervupettagam

எப்படி இருக்கிறது தமிழ்நாடு பட்ஜெட்

March 23 , 2023 372 days 293 0
  • தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், 2021ஆம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இன்று வரை 2.5 நிதிநிலை அறிக்கைகளைத் தயாரித்திருக்கிறார். இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையானது முந்தைய அறிக்கைகளுடன் ஒப்பிட எப்படி இருக்கிறது? பார்ப்போம்!
  • தமிழ்நாட்டின் நிதிநிலைமையை மிக எளிதாகப் புரிந்துகொள்ள முதல்நிலைத் தரவு வருவாய்ப் பற்றாக்குறை ஆகும். மாநிலத்தின் வருவாய்க்கும், செலவுக்கும் உள்ள இடைவெளி.
  • நம் வீட்டு வரவு செலவுக் கணக்கை நாம் முன்வைத்துப் புரிந்துகொள்ள வேண்டும் எனில், நம் சம்பளத்தைவிட நம் செலவினங்கள் அதிகமாக உள்ளன என்பதுதான். வீட்டு வரவு செலவுக் கணக்கில் இப்படித் துண்டு விழுந்தால், தனிமனிதன் தாங்க முடியாது. ஆனால், அரசு அப்படியல்ல. அது இறையாண்மை மிக்க நிறுவனம். பெரும் சொத்துக்களைக் கொண்டது. இந்தியா, தமிழ்நாடு போன்ற அரசுகள் மிக வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்டவை. எனவே, அடுத்தடுத்த ஆண்டுகளில் வரி வருமானம் பெருகிக்கொண்டே செல்லும். எனவே, ஓரளவு வருவாய் பற்றாக்குறையைச் சமாளித்துக்கொள்ள முடியும்.
  • ஆனால், தொடர்ந்து அரசின் செலவினங்களுக்கே வருவாய் பற்றாமல் போவதும், அது தொடர்ந்து அதிகரித்துவருவதும் ஆரோக்கியமான போக்கு அல்ல. தமிழ்நாடு அப்படி ஒரு சிக்கலான நிலையில் இருந்தது. 2014-15ஆம் ஆண்டு ரூ.6,408 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை, கரோனாவுக்கு முந்தைய 3 ஆண்டுகளில், ரூ.21,594, ரூ.23,459, ரூ.35,909 கோடி எனத் தொடர்ந்து அதிகரித்து, கரோனா ஆண்டில், (அதிமுக ஆட்சியின் கடைசி ஆண்டு) உச்சகட்டமாக ரூ.62,326 கோடியாக உயர்ந்தது. ஆறு ஆண்டுகளில் பத்து மடங்கு அதிகப் பற்றாக்குறை உயர்வு.
  • திமுக பதவியேற்ற உடன் கரோனாவின் இரண்டாம் அலை வீசத் தொடங்கியது. ஜூன் மாதம் முதல் செப்டம்பர்-21 வரை மீண்டும் பொருளாதாரம் நின்றுபோனது. பின்னர், நவம்பர் மாதம் சென்னையில் மீண்டும் பெருமழை பெய்தது. ஆனாலும், அந்த நிதியாண்டில், வருவாய் பற்றாக்குறை ரூ.46,000 கோடியாகக் குறைக்கப்பட்டது.
  • கடந்த 2022-23ஆம் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை, ரூ.30,476 கோடியாக மேலும் குறைந்திருக்கிறது. இது தமிழ்நாடு தன் நிதிநிலையைச் சரிசெய்யும் திசையில் சீராகச் சென்றுகொண்டிருக்கிறது என்பதன் அடையாளம்.
  • இதில் 2023-24ஆம் ஆண்டு பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.37,540 கோடியாக உயர்ந்திருக்கிறது. அதிகரித்த ரூ.7,500 கோடியை, மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் உரிமைத் தொகை திட்டத்துடன் இணைத்துப் பார்த்துக்கொள்ளலாம். ஆனாலும், கடந்த 2.5 ஆண்டுகளில், நிதியமைச்சரின் நிதி மேலாண்மையை ஆய்வுசெய்கையில், 2023-24ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையின் மறுமதிப்பீடு வரும்போது, இந்த அதிகரிப்பு சமாளித்துக்கொள்ளப்படும் என நம்பலாம்.

நிதி மேலாண் திட்டம்

  • நிதியமைச்சர் தன், மத்திய கால நிதி மேலாண் திட்டத்தில் (Medium Term Fiscal Plan) வருவாய் பற்றாக்குறை, 2024-25 நிதியாண்டில் ரூ.18,540 கோடியாகவும், 2025-26ஆம் ஆண்டில் ரூ.1,250 கோடி உபரியாகவும் வரும் எனத் திட்டமிட்டிருக்கிறார். 2025-26ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதால், அந்த ஆண்டு உபரி வருமா என்பது சந்தேகம் என்றாலும், ரூ.62,000 கோடியில் இருந்து, வருவாய் பற்றாக்குறை இல்லாக் காலத்தை நோக்கி தமிழ்நாடு சென்றுகொண்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. 2014-15ஆம் ஆண்டிலிருந்து உயர்ந்துவந்த வருவாய் பற்றாக்குறை, 2024-25இல் மீண்டும் பத்தாண்டுக்கு முந்தய நிலைக்குத் திரும்பிவிடும் என்பதே அரசின் இலக்கு என்பது தெளிவாகத் தெரிகிறது.
  • வருவாய் பற்றாக்குறையைக் குறைக்கும் இந்தப் பயணத்தில், அரசின் வருவாய் அதிகரிப்பு மிக முக்கியப் பங்கை வகித்திருக்கிறது. 2021-22ஆம் ஆண்டு, ரூ.2,07,492 கோடியாக இருந்த வருவாய், ரூ.2,45,660 கோடியாக (18.39%) உயர்ந்தது ஒரு முக்கியக் காரணம். ஆனால், இந்த ஆண்டிலிருந்து ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி மானியம் கிட்டத்தட்ட ரூ.25,000 கோடி வரப்போவதில்லை. எனவே, அடுத்த ஆண்டு வருவாய் 10% மட்டுமே உயரும் என நிதிநிலை அறிக்கை சொல்கிறது.
  • செலவினங்களில் முக்கியமான அம்சங்களான அரசு ஊழியர் ஊதியம், ஓய்வூதியம், மானியங்கள் போன்றவை ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்துகொண்டே செல்வதால், அங்கே செலவைக் கட்டுப்படுத்துதல் கடினமான ஒரு விஷயம். எனவே, ரூ.2.84,188 கோடி எனத் திட்டமிடப்பட்ட மொத்த செலவினம், ரூ.2,76,136 கோடி எனக் கொஞ்சமே (2.8%) குறைந்துள்ளது.
  • இதில் 2022-23ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், ரூ.43,043 கோடி எனத் திட்டமிடப்பட்டிருந்த அரசு முதலீடுகள், ரூ.38,347 கோடியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அரசின் மிக முக்கியமான பணி என்பது நல்ல வளர்ச்சி தரும் பொருளாதாரக் கட்டமைப்புகளில் தொடர்ந்து முதலீடு செய்வதே ஆகும். அது கடந்த சில ஆண்டுகளில் பெரிதாக அதிகரிக்காமல் இருப்பது கவலைக்குரிய விஷயம்.

இதுவும் சாத்தியமே…

  • அரசு முதலீடுகள் 2023-24ஆம் ஆண்டு ரூ.44,369 கோடியாக உயரும் எனத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இது 2024-25இல், ரூ.64,683 கோடியாகவும், 2025-26இல், ரூ.90,301 கோடியாகவும் உயரும் என நிதிநிலைத் திட்ட அறிக்கை கூறுகிறது.  தெளிவாக 2014-15ஆம் ஆண்டு முதல் 2019-20ஆம் ஆண்டு வரையில் தொடர்ந்து உயர்ந்த வருவாய் பற்றாக்குறை, 2021-26ஆம் ஆண்டு காலகட்டத்தின் அரசு முதலீடுகளைப் பாதித்திருக்கிறது எனச் சொல்ல வேண்டும்.
  • மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி அமைச்சர் பேசுகையில், தமிழ்நாடு 2022-23ஆம் ஆண்டில் 14% வளரும் எனச் சொல்கிறார். 2023-24ஆம் ஆண்டிலும் இந்த வளர்ச்சி தொடரும் என்றும், அடுத்த இரண்டு ஆண்டுகளில், உக்ரைன் போர், உலகப் பொருளாதார மந்தநிலை எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால், வளர்ச்சி விகிதம் 13%, 12% எனக் குறையும் என பொருளாதாரக் கணிப்புகளை முன்வைத்துச் சொல்கிறார்.
  • கடந்த பத்தாண்டுகளில், தமிழ்நாட்டின் வளர்ச்சி வேகம் குறைந்துள்ள நிலையில், தமிழ்நாடு மீண்டும் குறைவான வளர்ச்சி என்னும் தடத்துக்கு மாறிவிடக் கூடாது. அதைத் தவிர்க்கும் வழிகளை அரசு முன்கூட்டியே திட்டமிட வேண்டும். பி.டி.ஆர் போன்ற பன்னாட்டு அனுபவம் கொண்ட நிர்வாகியும், உலகத்தின் தலைசிறந்த பொருளாதார அறிஞர்களும் இருக்கையில், இது சாத்தியமே.

அரசின் முக்கியத் திட்டங்கள்

  • இப்போது அரசு அறிவித்துள்ள முக்கியமான திட்டங்களைப் பார்ப்போம்.
  • முதலாவது, திமுக அரசின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 என்னும் உரிமைத் தொகை திட்டம். பெண்களுக்கு அளிக்கப்படும் மானியங்கள் குடும்பத்தின் மேம்பாட்டுக்குப் பயன்படுகின்றன என்பது தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. இது வரவேற்கப்பட வேண்டிய திட்டம். வழக்கம்போல, இன்னும் 10-15 ஆண்டுகளுக்குப் பின்பு, இத்திட்டம் இந்தியா முழுவதும் எடுத்துச் செல்லப்படும் என எதிர்பார்க்கலாம்.
  • இரண்டாவது, பள்ளிக் குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டித் திட்டம். இதில் சிற்றுண்டித் திட்டம் ஏற்கெனவே சில ஆயிரம் பள்ளிகளில் வெள்ளோட்டம் நடத்தப்பட்டது. இது தற்போது 30,122 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற புதிய திட்டங்களைத் தீட்டுகையில், வெள்ளோட்டம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். திட்டம் சிறியதாக இருக்கையில், அதன் செயல்பாட்டிலுள்ள குறைகளை வெள்ளோட்டக் காலகட்டத்தில் மிக எளிதில் களைந்துவிட முடியும். மேலும் அத்திட்டத்தின் செயல்திறனையும் எளிதில் கணித்துவிட முடியும். இத்திட்டம் திட்டக்குழுவால் ஆய்வுசெய்யப்பட்டு, பெரும்பாலான பள்ளிகளில் மாணவர் வரத்து அதிகரித்திருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், இது தமிழ்நாடு முழுவதும் பரவலாக்கப்படுவது மிகச் சரியான செயல்முறை.
  • மூன்றாவது, ஒரு முக்கியமான திட்டம், 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், ’சீர்மிகு நிறுவன’ங்களாக (Centres of Excellence) ரூ.2,783 கோடி செலவில் மேம்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு, கிட்டத்தட்ட இதே அளவு நிதி ஐடிஐகளுக்கு ஒதுக்கப்பட்டு, டாட்டா நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையொப்பமானது.
  • தமிழ்நாட்டை ஒரு தொழில் மாநிலமாக்கும் முயற்சியின் முக்கியத் தேவை, செயல்திறன் மிகுந்த தொழில்நுட்பப் பணியாளர்கள். ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படித்த மாணவர்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளிலும், தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் நல்ல வேலைவாய்ப்புகளும் கிடைக்கின்றன. எனவே, இந்த முதலீடு, வருங்காலத்தில் மிக நல்ல பலன்களை ஈட்டித் தரும்.
  • ஐடிஐகளிலும், அரசு பாலிடெக்னிக்குகளிலும் இருக்கும் மிகப் பெரும் பிரச்சினை, நிர்வாகத்தில் ஊழல்கள். ஆசிரியர் நியமனம் முதல் கட்டுமானம் வரை அனைத்திலும் ஊழல் நீக்கமற நிறைந்திருக்கிறது. இந்த நிறுவனங்கள் நல்ல முறையில் செயல்பட சிறந்த ஆசிரியர்களும், நேர்மையான நிர்வாகிகளும் மிக முக்கியமான தேவை. குறைந்தபட்சம் இந்தச் சீர்மிகு நிறுவனங்களிலாவது, நிர்வாகம் மற்றும் கட்டுமான ஊழல்கள் அறவே நடைபெறாமல் தடுப்பரண்களை அமைத்து, அவற்றின் நிர்வாகத்தைச் செம்மை செய்ய வேண்டும்.
  • இந்த நிறுவனங்கள், ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளின் உயர்தொழில்நுட்பக் கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், பயிற்சிகள் போன்றவற்றை நடைமுறைப்படுத்தலாம். ஜப்பானிய தொழில்நுட்ப ஊழியர்களின் செயல்திறனும், ஜெர்மானிய இயந்திர உற்பத்தியாளர்களின் (precison engineering) திறன்களும் நம் தொழில் கல்விச் சூழலின் மிக முக்கியமான அங்கமாக மாற வேண்டும். உலகின் மிகச் சிறந்த ஐடிஐகளும், பாலிடெக்னிக்குகளும் தமிழ்நாட்டில் உருவாக வேண்டும்.
  • நான்காவது, முக்கியமான முதலீடு, அது கோயம்புத்தூரிலும் மதுரையிலும் மெட்ரோ ரயிலில் முதலீடு. மெட்ரோ ரயில் என்பது மிக அதிகச் செலவு பிடிக்கும் நகரப் போக்குவரத்து முறையாகும். ஒரு நகரத்தில் மெட்ரோ ரயில் என்பது அதற்கு ஒரு நவீன முகத்தை உருவாக்கித் தரும். மேலும், சென்னை மட்டுமே வளர்கிறது என்னும் அரசியல் பிரச்சினையைத் தவிர்க்கவும் உதவும். ஆனால், இதில் செய்யப்படும் முதலீட்டுக்கு உண்மையிலேயே நல்ல பலன் கிடைக்குமா என்பதை அரசு ஆராய்ந்து முன்னெடுக்க வேண்டும். இந்தியாவின் மிகப் பெரும் மெட்ரோவான டில்லி மெட்ரோவே மானியங்களால்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. டெல்லி போன்ற மாநகர்களுக்கு அது தேவை என்பதாலேயே அந்த மானியம் ஒத்துக்கொள்ளப்படுகிறது. இங்கே தேவை ஒரு மீளாய்வு.
  • தமிழ்நாட்டின் மிகவும் பின் தங்கிய 50 ப்ளாக்குகளின் மேம்பாட்டுக்கு என வெறும் ரூ.250 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது ஏமாற்றத்தைத் தருகிறது. ஒரு ப்ளாக்குக்கு ரூ.5 கோடியை வைத்துக்கொண்டு என்ன மேம்பாட்டை உருவாக்கிவிட முடியும்? போக்குவரத்துத் துறைக்கு என 1,000 புதிய பேருந்துகள் வாங்கவிருப்பது முக்கியமான முதலீடு. இவை மின் வாகனங்களா எனத் தெரியவில்லை.
  • ஒடுக்கப்பட்ட மக்களின் புத்தாக்கத் தொழில்களில் முதலீடு செய்ய இந்த ஆண்டும் ரூ.50 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகள் நல்ல முறையில் தொடங்கியுள்ளன. புத்தாக்கத் தொழில் நிறுவனம், மிகத் தெளிவான அணுகுமுறையில் ஒடுக்கப்பட்ட மக்களின் தொழில்களைத் தேர்ந்தெடுத்துள்ளது தெரியவருகிறது. இது ஏதோ அரசு மானியம் என இல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் தொழில்களை மற்றவர்களின் தொழில் போல செயல்திறன் மிக்க வகையில் மேம்படுத்த இந்த நிறுவனம் உதவியும் செய்ய வேண்டும். சாதிய வேறுபாடுகளைக் களையும் முயற்சிகளில் இது மிகப் புதிய அணுகுமுறை.

சில ஆலோசனைகள்:

1. குறைவான ஜிஎஸ்டி வசூல்

  • நமது நாட்டின் பல்வேறு முன்னேறிய மாநிலங்களின் ஜிஎஸ்டி வரி வருவாயை ஆராய்ந்து பார்க்கையில், முன்னேறிய மாநிலங்களான மஹராஷ்டிரம், கர்நாடகம் மற்றும் குஜராத் மாநிலங்களின் சராசரி ஜிஎஸ்டி வரி வருவாய் தமிழ்நாட்டைவிட மிக அதிகமாக இருக்கிறது. இந்தப் புள்ளி விவரம் ஆராயப்பட்டு, இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான தமிழ்நாட்டில் ஏன் சராசரி ஜிஎஸ்டி வரி வசூல் குறைவாக உள்ளது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
  • ஜிஎஸ்டி வரி என்பது நுகர்வின் மீதான வரி என்பதால், தமிழ்நாட்டில் நுகர்வு குறைவாக உள்ளதா என்பது தெரியவில்லை. எனவே, ஜிஎஸ்டி வரி வசூல் அளவுகள் ஒப்பீடு செய்யப்பட்டு, ஜிஎஸ்டி வரி வசூல் மேம்படும் சாத்தியங்கள் இருந்தால் உடனடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

2. தேவையற்ற நிர்வாகச் செயல்பாடுகளும், செலவுக் குறைப்பும்

  • தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை அறிவுத் துறைகள் மிக வேகமாக வளர்ந்துவரும் இக்காலத்தில், அரசின் செயல்பாடுகள் பல துறைகளில் இன்னும் பல தளங்களில் புராதன முறையிலேயே நடந்துவருகின்றன. அரசின் ஒவ்வொரு துறையும், ஒவ்வொரு ஆண்டும் தேவையற்ற அரசு நிர்வாக நடைமுறைகளில் ஒரு 5%ஆவது குறைக்கலாம். அதேபோல ஒவ்வொரு துறையும் தனது செலவுகளை ஆராய்ந்து, ஒவ்வொரு ஆண்டும் தேவையற்ற செலவுகளை ஒரு 5% குறைக்க வேண்டும் என்னும் ஒரு முன்னெடுப்பைச் செய்யலாம்.
  • இதை அரசுத் துறைகளே உணர்ந்து செய்ய இயலாது. செலவு நிர்வாகத்தில் உலகின் மிகச் சிறந்த மேலாண் நிறுவனங்கள் உள்ளன. அவற்றைக் கொண்டு, அரசு நிர்வாக நடைமுறைகளை ஒரு முழுமையான ஆய்வுசெய்து, அதன் அடிப்படையில், துறைத் தலைவர்கள் தங்கள் ஊழியர்களுடன் கலந்து பேசி நடவடிக்கைகளை எடுக்கலாம். நீடித்து நிலைக்கும் முன்னெடுப்புகளைச் செய்யும் அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு, பணி உயர்வு போன்றவற்றை பரிந்துரைக்கலாம்.
  • செலவுக் குறைப்பு என்பதை ஆட்குறைப்பு என்றோ, அத்தியாவசியச் செலவுக் குறைப்போ என்றோ புரிந்துகொள்ளக் கூடாது. அரசின் நிர்வாகச் செயல்பாடுகளை மாற்றியமைப்பது, புதிய வழிகளைச் சமைப்பது என இத்துறையில் ஏராளமான சாத்தியங்கள் உள்ளன.

3. நிதித் துறை நிர்வாகச் சீர்திருத்தங்கள் பற்றிய தகவல்கள்

  • அரசியல் அனுபவத்தில் மிகவும் இளையவராக இருந்தாலும், பிடிஆரின் கல்வி மற்றும் அனுபவப் பின்புலத்தை வைத்து, தமிழ்நாடு அரசின் மிக முக்கியமான துறையான நிதித் துறையையும், மனிதவள மேம்பாட்டுத் துறையையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ளார்.
  • முதல் இரண்டரை ஆண்டுகளில், அவரது செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளன. சமூக ஊடகங்களில் அவரது பேச்சுக்கள் பல விமர்சனங்களை எழுப்பியுள்ளன. அவர் வகிக்கும் பொறுப்புக்கும், நிலைக்கும், இந்தப் பேச்சுக்கள் தவிர்க்கப்படலாம் என கருத்துகள் நிலவிவருகின்றன. நிதித் துறைச் செயல்பாடுகளில் பல முக்கிய நிர்வாகச் சீர்திருத்தங்களைச் செய்திருக்கிறார் எனப் பலரும் சொல்கிறார்கள். இந்த முன்னெடுப்புகளை முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் போன்ற பெரும் அறிஞர்களும் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளதாகச் செய்திகள் சொல்கின்றன. இந்தச் சீர்திருத்தங்களைப் பற்றிய ஒரு பொது அறிக்கையை அமைச்சர் முன்வைக்கலாம். அரசு நிர்வாக மேம்பாட்டின் செயல்திறன் அளப்பறியது. இதுபற்றி பொதுவெளிகளில் பேசப்படுவது மிக முக்கியமானது.

4. பட்ஜெட் தொடர்பான பொதுவெளி விவாதங்கள்

  • நிதிநிலை மேலாண்மை என்பது அரசின் செயல்திறனை வெளிக்காட்டும் முக்கியமான அளவுகோல். துரதிருஷ்டவசமாக, இது தொடர்பான விவாதங்கள் பொதுவெளியில் செறிவான முறையில் நிகழ்வதில்லை. இது மத்திய பட்ஜெட்டுக்கும் பொருந்தும். நிகழ்வின் பரபரப்புக் கருதி, ஓரிரண்டு நாட்களில் பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் தொலைக்காட்சிகளில், சமூக ஊடகங்களில் நடந்து முடிந்துவிடுகின்றன. நிதிநிலை அறிக்கை என்பது மாநில, தேசிய அரசுகளின் நிர்வாகத் திட்டங்களின் வெளிப்பாடு. எவ்வளவு பெரிய அறிஞராலும், நிதியமைச்சர் படிக்கப் படிக்க, அதை உடனடியாக முழுவதும் அறிந்துணர்ந்து எதிர் வினையாற்றுதல் இயலாத காரியம்.
  • எனவே, நிதிநிலை அறிக்கையை பல தரப்பு அறிஞர்களும் முழுவதுமாக படித்து, தங்கள் தரப்பை முன்வைக்க ஒரு வாய்ப்பு இருக்க வேண்டும். இந்த உரையாடல், மிகவும் செறிவான மொழியில் இருக்கும் என்பதால், இதை ஊடகங்கள் முன்னெடுக்காது.
  • எனவே, இதற்கான ஒரு களத்தை அரசே அமைத்துத் தர வேண்டும். அறிஞர்கள், பொருளியல் ஆய்வாளர்கள், மாணவர்கள் என சமூகத்தின் அறிவார்ந்த தரப்பை உயிர்ப்பித்து, சமூகப் பொருளியல் வாதங்களின் தரத்தை உயர்த்த இது உதவும். தமிழ்நாட்டின் மிக முக்கியமான பொருளியல் அறிஞரான மால்கம் ஆதிசேஷய்யாவின் பெயரால் இது முன்னெடுக்கப்படலாம்.

நன்றி: அருஞ்சொல் (23 – 03 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories