TNPSC Thervupettagam

எல்லாம் இருந்தும்...

June 1 , 2021 1069 days 521 0
  • என்னதான் வளா்ச்சி அடைந்த நாடாக இருந்தாலும்கூட, பேரிடா் காலங்களில் நிலை தடுமாறுவதும், அதை எதிர்கொள்ள முடியாமல் கட்டமைப்பு வசதிகள் திணறுவதும் புதிதொன்றுமல்ல.
  • இரண்டாவது அலை நோய்த்தொற்று தொடங்கி ஒரு மாதத்திற்கு மேலாகிறது. நம்மால் இன்னும்கூட நிலைமையை எதிர்கொள்ள முடியவில்லை என்பது பலவீனத்தின் வெளிப்பாடு.
  • கொவைட் 19-இன் இரண்டாவது அலை இந்திய மருத்துவமனைகளின் பலவீனங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
  • நாளொன்றுக்கு 30,000-க்கும் அதிகமான நோயாளிகள் மருத்துவமனைகளை நாடும் நிலை ஏற்படும்போது நிலைகுலைந்து போவதில் வியப்பில்லைதான்.
  • ஆனால், ஒரு மாதத்திற்குப் பிறகும்கூட நிலைமை தெளிவடையாமல், முறையான செயல்முறைகள் வகுக்கப்படாமல் இருப்பதுதான் வேதனையளிக்கிறது.

பாடம் கற்க வேண்டும்

  • தமிழக அரசு உள்ளிட்ட மாநில அரசுகள் பிராணவாயு உற்பத்திக்கு ஊக்கமளித்திருக்கின்றன. நோய்த்தொற்று காலத்துக்கு முன்பு பிராணவாயுவை ஏற்றுமதி செய்து கொண்டிருந்த இந்தியாவில் இப்போது நோயாளிகள் மூச்சுத் திணறுகிறார்கள் என்பது என்ன ஒரு முரண்?
  • இந்தியாவில் 17 பிராணவாயு உற்பத்தித் தொழிற்சாலைகள்தான் இருக்கின்றன என்கிற உண்மை, அதற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டபோதுதான் நமக்குத் தெரியவந்தது.
  • நமது தேவைக்கேற்ற பிராணவாயு உற்பத்தி இருந்தும் அதை எல்லா பகுதிகளுக்கும் உடனடியாகக் கொண்டு செல்ல முடியாததும், சிறிய மருத்துவமனைகளுக்குப் பிரித்து வழங்க போதுமான பிராணவாயு உருளைகள் இல்லாமல் இருப்பதும் நமது நிர்வாகக் கட்டமைப்பின் பலவீனமல்லாமல், வேறென்ன?
  • பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகள்கூட பிராணவாயு போன்ற அத்தியாவசியத் தேவைகளை வெளியில் இருந்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
  • ‘பிரஷா் ஸ்விங் அப்சார்ப்ஷன்’ தொழில்நுட்ப முறையில் சொந்தமாக ஆக்சிஜன் தயாரிப்பதற்கு முதலீடு செய்ய அவை தயாராக இல்லை.
  • நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்த நிலையில், அரசு பிராணவாயு தரவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் புகார் செய்தார்களே தவிர, அப்போதும் தங்களுக்கென்று பிராணவாயு உற்பத்தி செய்து கொள்ள முன்வரவில்லை.
  • குஜராத்திலுள்ள அமுல் பால் பண்ணை மருத்துவமனையில் 72 மணி நேரத்தில், அதாவது மூன்றே நாள்களில், நாளொன்றுக்கு 35 முதல் 40 நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜனை மேலே குறிப்பிட்ட முறையில் உற்பத்தி செய்ய முடிகிறபோது, கார்ப்பரேட் மருத்துவமனைகள் ஏன் அதற்கு முன்வரவில்லை என்கிற கேள்வியை யாரும் எழுப்பாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
  • 2010-இல் கொண்டுவரப்பட்ட மருத்துவக் கட்டமைப்பு சட்டம் (கிளினிக்கல் எஸ்டாபிளிஷ்மென்ட் ஆக்ட்) பல மாநிலங்களால் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனால், முறையான கண்காணிப்பு இல்லாமல் இருக்கிறது.
  • மருத்துவமனைகளில் பிராணவாயு மட்டுமல்ல, படுக்கை வசதிகள், வென்டிலேட்டா் வசதிகள், அவசர சிகிச்சைப் படுக்கைகள், கிராமப்புற அளவில் பரிசோதனைகள் ஆகியவை இல்லாமல் இருப்பது இப்போது தெரியவந்திருக்கிறது.
  • இதிலிருந்து பாடம் படித்து, அதனால் இந்தியாவின் சுகாதாரக் கட்டமைப்பு மேம்படுமானால் அதுதான் கொள்ளை நோய்த்தொற்றால் உயிரிழந்த ஆன்மாக்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.

எல்லோருக்கும் இல்லை

  • கடந்த சில நாள்களாக இறந்தவா்களுக்கான அஞ்சலி விளம்பரங்களைப் போலவே, மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் ஆகிய பணியிடங்களுக்கான மருத்துவமனை விளம்பரங்களும் காணப்படுகின்றன.
  • சுகாதாரக் கட்டமைப்பு எந்த அளவுக்கு கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொள்ள முடியவில்லையோ, அதே அளவிலான குறைபாடு மருத்துவ ஊழியா்களுக்கும், மருத்துவத் துறையினருக்கும் காணப்படுகிறது.
  • உலகிலுள்ள பல நாடுகளிலிருந்தும் குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சை பெற இந்தியா நோக்கிப் பலா் வந்தது போய், இப்போது மருத்துவ சிகிச்சை பெற பல லட்சங்கள் செலவழிக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பது எவ்வளவு பெரிய வீழ்ச்சி?
  • இந்திய மருத்துவ கவுன்சிலில் 2018-இல் 10 லட்சத்துக்கும் அதிகமான மருத்துவா்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.
  • 2017 நிலவரப்படி, ஆயிரம் பேருக்கு 1.34 மருத்துவா்கள் இருக்கிறார்கள். அதன்படி பார்த்தால், உலக சுகாதார நிறுவனத்தின் வரையறையை நாம் எட்டியிருக்கிறோம்.
  • தேசிய மருத்துவ கமிஷன், தேசிய மருத்துவம் / குடும்ப நல நிறுவனம், இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய செவிலியா் கவுன்சில் உள்ளிட்ட பல அமைப்புகள் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவமனை செயல்பாடுகள் ஆகியவற்றை கண்காணித்து வருகின்றன.
  • இவ்வளவு இருந்தும்கூட, கொள்ளை நோய்த்தொற்று தொடங்கி ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் அதை எதிர்கொள்ளும் அளவில் நமது மருத்துவக் கட்டமைப்பை நாம் ஒருங்கிணைத்து பிரச்னையை எதிர்கொள்ள முடியவில்லை என்றால், எங்கேயோ நாம் பலவீனமாக இருக்கிறோம் என்பது தெரிகிறது.
  • இந்தியாவைப் பொருத்தவரை சா்வதேச அளவிலான மருத்துவ சிகிச்சை வழங்கும் மருத்துவமனைகள் இருக்கின்றன.
  • தோ்ந்த மருத்துவா்கள் பலரும் உருவாகியிருக்கிறார்கள். அப்படியிருந்தும்கூட, சாமானிய குடிமகனுக்குக் கிடைக்கும் மருத்துவத்தின், மருத்துவ வசதியின் தரமும், சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்பும் கேள்விக்குறியாக இருக்கிறதே. இது குறித்தும் சிந்திக்க வேண்டிய கட்டாயம் ஆட்சியாளா்களுக்கு உண்டு.
  • எல்லாம் இருந்தும் எல்லோருக்கும் இல்லை; எல்லாம் இருந்தும் ஒழுங்குமுறையுடன் இல்லை; எல்லாம் இருந்தும் தயார் நிலையில் இல்லை - இதுதான் இன்றைய இந்திய மருத்துவக் கட்டமைப்பின் பரிதாபநிலை.

நன்றி: தினமணி  (01 – 06 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories