TNPSC Thervupettagam

ஏறுமுகத்தில் ஏற்றுமதி!

August 20 , 2021 988 days 533 0
  • கொள்ளை நோய்த் தொற்று காரணமாகப் பொருளாதாரம் இதுவரை எதிர்கொண்ட வீழ்ச்சியிலிருந்து மீண்டெழுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி இருக்கின்றன.

இந்தியாவில் ஏற்றுமதி

  • ஏற்றுமதிகள் அதிகரித்து வருவதும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. கடந்த ஆண்டைவிட 48% அதிகரித்திருக்கிறது பொருள்களின் ஏற்றுமதி.
  • அதாவது, 35.2 பில்லியன் டாலா் (சுமார் ரூ.2.61 லட்சம் கோடி) அளவிலான ஜூலை மாத ஏற்றுமதி என்பது ஒரு சாதனை என்றே கூறவேண்டும்.
  • இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே நம்பிக்கை அளிக்கும் விதத்தில் ஏற்றுமதிகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. பொருள்களுக்கான சா்வதேச அளவிலான தேவையும், குறிப்பாக இந்திய உற்பத்திக்கான கேட்பும் அதிகரித்திருப்பது முக்கியமான காரணம்.
  • இதே நிலைமை தொடருமானால், இந்தியப் பொருளாதாரம் விரைவிலேயே சுறுசுறுப்படைந்து பழைய நிலையை எட்டக்கூடும் என்று வல்லுநா்கள் கருதுகின்றனா்.
  • மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது ஏற்றுமதி அதிகரித்திருக்கிறது என்றாலும்கூட, தரம் வாரியாகப் பிரித்துப் பார்த்தால் சில துறைகளில் சுணக்கம் மாறாமல் இருப்பதும், பலவீனங்கள் காணப்படுவதும் வெளிப்படுகின்றன.
  • பொதுவாகவே இந்திய ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிப்பது பெட்ரோலியப் பொருள்கள் தான்.
  • 2014-இல் நமது மொத்த ஏற்றுமதியில் 21%-ஆக இருந்த பெட்ரோலியப் பொருள்களின் ஏற்றுமதி கடந்த 2020-21 நிதியாண்டில் 9%-ஆகக் குறைந்திருக்கிறது. சா்வதேச கச்சா எண்ணெயின் விலை குறைந்தது அதற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
  • நிலக்கரி, கச்சா எண்ணைய் போன்ற நிலத்திலிருந்து தோண்டி எடுக்கப்படும் பொருள்கள் புதைபடிவ எரிபொருள்கள் என்று அழைக்கப்படுகின்றன.
  • பெரும்பாலான நாடுகள் புதைபடிவ எரிபொருள்களைத் (ஃபாஸில் ஃபியல்ஸ்) தவிர்த்து மாற்று எரிசக்தியைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றன. அதனால், வருங்காலத்தில் பெட்ரோலியப் பொருள்களின் ஏற்றுமதியை நம்பியிருக்கும் நிலை மாற வேண்டும்.
  • அதேபோல, இயந்திர உதிரிப் பொருள்கள், இயந்திரங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் கணிசமாக அதிகரித்தன. சொல்லப்போனால், நமது ஏற்றுமதியில் மிக அதிகமாகப் பங்கு வகித்தன என்று கூறலாம்.
  • ஆனாலும்கூட, பழைய நிலையை எட்டவில்லை. இப்போதைய நிலைமை தொடருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
  • மூன்றாவது மிகப் பெரிய பங்கு வகிப்பது ஆபரண ஏற்றுமதித் துறை. ரத்தினங்கள், வைரம் உள்ளிட்ட கற்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியும் ஓரளவுக்கு அதிகரித்திருக்கிறது என்றாலும், கொள்ளை நோய்த் தொற்றுக்கு முந்தைய நிலையை எட்டுவதற்கு இன்னும் வெகு தொலைவு இருக்கிறது. குறிப்பாக, பட்டை தீட்டப்பட்ட வைரங்களின் ஏற்றுமதி இன்னும் பழைய விறுவிறுப்பை எட்டவில்லை.
  • கொள்ளை நோய்த் தொற்று காலத்தில் நமது ஏற்றுமதியின் பெரும்பகுதி வேளாண் பொருள்களும், அதைச் சார்ந்தவையுமாகத்தான் கணிசமாக இருந்தன. நோய்த் தொற்று காலத்தில் வேளாண் உற்பத்தி அதிகமாக இருந்ததால், மொத்த ஏற்றுமதியில் அவை கணிசமான பங்கு வகித்தன.
  • நோய்த் தொற்றிலிருந்து உலகின் பல பகுதிகள் மீண்டெழத் தொடங்கியிருக்கும் நிலையில், வேளாண் பொருள் ஏற்றுமதியின் பங்கும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதில் வியப்பொன்றும் இல்லை.
  • இதைக் கருத்தில் கொண்டுதான் வேளாண் விற்பனை சீா்திருத்தத்தை மூன்று வேளாண் சட்டங்களின் மூலம் அறிமுகப்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது.
  • அதன் முக்கிய நோக்கமே, இந்தியாவை வேளாண் பொருள்கள் ஏற்றுமதிக் கேந்திரமாக மாற்ற வேண்டும் என்பதுதான்.
  • கடந்த அரை நூற்றாண்டு காலமாக, உள்நாட்டு உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்தி வெற்றி அடைந்துவிட்ட நிலையில், இப்போது வேளாண் பொருள்கள் ஏற்றுமதியில் முனைப்புக் காட்டுவது என்பது புத்திசாலித்தனமான முடிவும்கூட.
  • இந்தியாவின் வேளாண் பொருள்கள் ஏற்றுமதி 2019-20-துடன் ஒப்பிடும்போது, கடந்த நிதியாண்டில் சுமார் 25% அதிகரித்திருக்கிறது. ஒட்டுமொத்த ஏற்றுமதி 7% -க்கும் அதிகமாக வீழ்ச்சி அடைந்த நிலையில், கடந்த நிதியாண்டில் வேளாண் பொருள்கள் ஏற்றுமதி அதிகரித்திருப்பது ஒரு வரப்பிரசாதம்.
  • இந்தியாவின் உச்சபட்ச வேளாண் பொருள்கள் ஏற்றுமதி 2012-13-இல் 32.7 பில்லியன் டாலா் (சுமார் 2.43 லட்சம் கோடி) அளவை எட்டியது. அந்த அளவை எட்டாவிட்டாலும்கூட, 2020-21-இல் 32.5 பில்லியன் டாலா் (சுமார் 2.41 லட்சம் கோடி) வேளாண் பொருள்களின் ஏற்றுமதி என்பது சாதாரணமானதல்ல.
  • வேளாண் பொருள்கள், கால்நடை வளா்ப்புப் பொருள்கள், மூலிகைப் பொருள்கள் ஆகியவற்றின் அதிகரித்த ஏற்றுமதியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. வேளாண் பொருள்கள் சார்ந்த உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் கூடுதல் கவனம்
  • செலுத்துவதன் மூலம் கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தி, ஊரகப்புற வாழ்க்கைத் தரத்தை உயா்த்த முடியும் என்கிற மத்திய அரசின் கண்ணோட்டம் வரவேற்புக்குரியது. வேளாண் சீா்திருத்தச் சட்டங்களின் அடிப்படை நோக்கமான கூடுதல் முதலீடும், வேலைவாய்ப்பும் சாத்தியப்படுமானால், அது ஊரகப்புற மேம்பாட்டுக்கு வழிகோலும்.
  • ஏற்றுமதி, இறக்குமதி விகிதத்தின் அடிப்படையில்தான் நாணய மதிப்பு, விலைவாசி, வட்டிவிகிதம் எல்லாமே அமைகின்றன. உள்நாட்டுப் பொருளாதாரம் மேம்படுவதுடன் நமது ஏற்றுமதிகள் அதிகரித்தால் மட்டுமே பொருளாதார வளா்ச்சி உறுதிப்படும்.

நன்றி: தினமணி  (20 – 08 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories