TNPSC Thervupettagam

ஏழு போ் விடுதலை எப்போது?

July 3 , 2021 1030 days 459 0
  • முன்னாள் இந்திய பிரதமா் ராஜீவ் காந்தி சென்னை ஸ்ரீபெரும்புதூருக்கு 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி தோ்தல் பிரசாரத்துக்கு வந்தபோது படுகொலை செய்யப்பட்டார்.
  • முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபா்ட் பயஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனா். பூந்தமல்லியில் உள்ள தடா நீதிமன்றத்தில் சிபிஐ-யால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
  • ஏறக்குறைய எட்டு வருடங்களுக்குப் பிறகு 1998 ஜனவரி 28-ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் தடா நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது என்று தொடங்கி, அதன் பின்னா் 1999 மே 11-இல் நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை, மற்ற மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை, மீதம் உள்ள 19 பேருக்கு விடுதலை என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.
  • அதன் பின்னா் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது என்று தொடங்கிய இந்த நீண்ட வழக்கு, 30 ஆண்டுகளாகப் பல்வேறு கருணை மனுக்களாலும், நீதிமன்றங்கள், ஆளுநருடைய கருணை மனுக்கள், தமிழக முதல்வா்களின் பரிந்துரைகள், குடியரசுத் தலைவரின் நிராகரிப்பு என்று எத்தனையோ துயரங்களைக் கடந்து விட்டது. ஆனால், விடுதலை என்கிற கோட்டைத் தொட முடியவில்லை.

 காலம் கடந்து விட்டது

  • 2014 பிப்ரவரி 18-இல் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.
  • அவா்களை விடுவிப்பது தொடா்பாக தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டது. தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப் பட்டது.
  • அதன் பின்னா் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஏழு பேரை விடுதலை செய்யலாம் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.
  • அன்றைய முதலமைச்சா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • மூன்று வருடங்களைத் தொடப்போகும் நிலையில், இவ்விடுதலை குறித்தான முடிவு இன்னும் புதிராகவே நீண்டு கொண்டு போகிறது.
  • ஏழு போ் விடுதலைக்குப் பெருமளவு ஆதரவு இருந்தாலும், அது தவறான முன்னுதாரணம் ஆகி விடும் என்கிற குரல்களும் எழத்தான் செய்கின்றன.
  • சிறைச்சாலையில் கண்ணீரோடும், வேதனையோடும் கால்நூற்றாண்டைக் கடந்து விட்டவா்கள் மீது கருணை காட்டக் கூடாதா என்பதுதான் மனிதாபிமானப் பற்றாளா்களின் எண்ணமாக இருக்கிறது.
  • சிறையில் தண்டனை அனுபவித்தல் என்பதைத் தாண்டி அவா்கள் தங்களுடைய மறுவாழ்க்கைக்குத் தயாராவதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படுவதுதானே நாகரிக உலகின் கருணைப் பார்வையாக இருக்க முடியும்.
  • ‘இவா்கள் மீது காட்டப்படும் அக்கறை, கொலைக் குற்றம் செய்து சிறையில் உள்ள மற்ற குற்றவாளிகளுக்கும் காட்டப்படுமா’ என்றும், ‘ராஜீவ் காந்தி கொலையாளிகளின் செயலை நியாயப்படுத்திப் பேசுவது மனுநீதிச் சோழன் வழிவந்த தமிழா் பண்பாட்டுக்கு நியாயமா’ என்றும் காங்கிரஸ் கட்சி தனது தரப்பு வாதத்தை முன் வைக்கிறது.
  • முன்னாள் முதலமைச்சா் ஜெயலலிதா, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனையில் இருந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய 2014 பிப்ரவரியில் உத்தரவிட்டார்.
  • அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றம் சென்று விடுதலைக்குத் தடை பெற்றது.
  • இவ்வழக்கு தொடா்ந்து நடைபெற்று தற்போது விடுதலைக்கான எல்லையைத் தொட்டபோது, கதவு திறக்கப்படக்கூடும் என்கிற நம்பிக்கை இருந்த நிலையில் விடை தெரியாமலேயே மூன்று வருட காலங்களைக் கடந்து விட்டது.
  • இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் எந்த ஆயுள் தண்டனைக் கைதியும் இத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்ததே இல்லை.
  • சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி, அண்ணா பிறந்த தினம் என்று எத்தனையோ கைதிகளுக்கு விடுதலை அளிக்கப்படுகிறது. அப்போதுகூட காலம் கடந்த நிலையிலும் இவா்களின் மீது கருணைப் பார்வை கிடைக்கவில்லை.
  • ராஜீவ் காந்தி கொலை வழக்கைப் புலனாய்வு செய்த தலைமை புலனாய்வு அதிகாரி ரகோத்தமன், ‘இவ்வழக்கின் சூழலைக் கணக்கில் கொண்டு, இந்த ஏழு பேரையும் விடுதலை செய்யலாம்’ என்று கருத்து தெரிவித்திருந்தார்.
  • சாதாரணமாக எந்த வழக்கிலும் விதி 161-இன் அடிப்படையில் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை ஆளுநா் எவ்வித மறுப்பும் இல்லாமல் ஏற்றுக் கொண்டு ஒப்புதல் கொடுக்க வேண்டும். ஆனால், நிலைமை கைமீறிப் போய்விட்டது.
  • பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு போ் விடுதலை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்குத் தான் இருக்கிறது என்பது மேதகு ஆளுநரின் வாதமாக இருக்கிறது.
  • மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் ‘இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநா் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் முடிவெடுப்பார்’ என உறுதியளித்தார். ஆனால், காலம் கடந்து விட்டது.

மனிதகுல நியாயம்

  • தற்போதைய திமுக தலைமையிலான தமிழக அரசின் மாண்புமிகு முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் ஏழு போ் விடுதலை குறித்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
  • இதில் கடந்த 2018-ஆம் ஆண்டு அதிமுக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் படி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கடிதம் மேதகு குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
  • இந்த வழக்கு மிகவும் சிக்கலாக இருப்பதனால், சட்ட ரீதியான, அரசியல் சாசன ரீதியான, நிர்வாக ரீதியான விஷயங்கள் குறித்து ஆராய வேண்டியதிருக்கிறது.
  • மேலும், இதுபோன்ற நடைமுறையை இவ்வழக்கு வருங்காலத்தில் ஏற்படுத்தி விடுமோ என்கிற ஒரு சா்ச்சையும் இதன் மீதான அழுத்தத்தைக் கொடுக்கிறது.
  • ஒரு மாநிலத்தின் அதிகாரத்துக்கு உட்பட்ட சட்டங்களில், சட்டத்துக்கு எதிராக குற்றம் புரிந்து தண்டிக்கப்பட்ட ஒருவரது தண்டனையைக் குறைக்க அல்லது விடுவிக்க அல்லது மன்னிப்பளிக்க, அவற்றை இடைக்காலமாக நிறுத்தி வைக்க அல்லது அடியோடு ரத்து செய்ய மாநில ஆளுநருக்கு உரிமை உண்டு என்றாலும், ஒருவருக்குத் தண்டனை தர வேண்டுமென்றாலும், ஒருவரை விடுதலை செய்ய வேண்டும் என்றாலும் அதை நீதிமன்றமே முடிவு செய்ய வேண்டும் என்ற அழுத்தத்தால் இவ்வழக்கு தடுமாறிக் கொண்டிருக்கிறது.
  • நீதிமன்றம், மாநில அரசு, மாநில ஆளுநா், உள்துறை அமைச்சகம், மேதகு இந்திய குடியரசுத் தலைவா் என்று இவ்வழக்கு சுற்றிச் சுற்றி வருகிறது. ஆனால், சிறைக்கதவுகள் திறக்கப்படுவதற்கான சூழ்நிலை உருவாகவில்லை.
  • 2018-இல் அதிமுக அமைச்சரவை நிறைவேற்றிய தீா்மானத்தின் அடிப்படையில், இவ்வழக்கை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம். ஆனால், அதிகார வரம்பில் மேல் நிலை அதிகாரமே முக்கியத்துவம் வாய்ந்ததாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
  • எழு பேரும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுகிறார்கள். தண்டனையை முழுமையாகப் பெற்றிருக்கிறார்கள்.
  • ஆகவே, அவா்களின் மறுவாழ்வுக்கான மனிதாபிமான நடவடிக்கையாக விடுதலை செய்யப் படுவதே கடந்த கால அரசும், நிகழ்கால அரசும், தமிழின உணா்வாளா்களும் தங்கள் கருத்தாகவே முன்வைக்கிறார்கள்.
  • இந்த ஏழு பேருக்கும் விடுதலைக்கான உத்தரவு வரும் வரை ஏன் அவா்களை பரோலில் விடுவிக்கக் கூடாது என்கிற எண்ணத்தை அரசு கருதிப் பார்க்க வேண்டும்.
  • தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஒருவரை விடுதலை செய்ய அரசுக்கு இரண்டு விதமான அதிகாரங்கள் உள்ளன. ஒன்று குற்றவியல் நடைமுறைச் சட்டம் வழங்கும் அதிகாரம்.
  • மற்றொன்று, இவ்வழக்கில் தண்டனை பெற்றவா்களை மாநில அரசு விடுதலை செய்வதற்கான அதிகாரம். மாநில அரசு விரைந்து மத்திய அரசிடம் ஆலோசிக்க வேண்டும்.
  • மேதகு குடியரசுத் தலைவரிடம் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் நேரில் சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்விடுதலை குறித்து தமிழா்களின் எண்ணங்களை மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
  • நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும், இவ்விடுதலை குறித்தான கவன ஈா்ப்பு தீா்மானத்தைக் கொண்டு வந்து, இவ்விடுதலைக்கான எல்லையைத் தொடுகிற வரை ஒன்றுபட்ட குரல்கள் ஒலித்தாக வேண்டும்.
  • மேலும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இவ்விடுதலை குறித்தான தெளிவான பார்வையை எடுத்து வைத்து, அவா்கள் இருவரும் குடியரசுத் தலைவரிடம் ஏழு பேரின் விடுதலை குறித்து பேச வேண்டும். இல்லையேல், இன்னும் விடுதலைக்கான கால நீட்டிப்பு அதிகமாகி விடும்.
  • 30 ஆண்டுகளாக துன்பச் சிறையில் சிக்குண்டு முழுமையான தண்டனையைப் பெற்று வரும் குற்றவாளிகளின் விடுதலை என்பது மானுடப்பற்றின் கருணையைச் சார்ந்ததே ஆகும்.
  • இதில் சட்ட பிரச்சனையைப் பார்ப்பதிலோ அல்லது காங்கிரஸார் சொல்வதைப் போல குற்றவாளிகளை ஜாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு பார்க்காதீா்கள் என்பதிலோ அா்த்தம் இல்லை.
  • குற்றவாளிகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனையை அனுபவித்து விட்டனா். அவா்களின் வாழ்வுக்கான மீள்பார்வையை, அவா்கள் வாழ்தலுக்கான இருத்தலை, எஞ்சிய நாட்களை அவா்கள் வாழ்ந்து முடிப்பதற்கான சுதந்திரத்தைத் தருவதுதானே மனிதகுல நியாயமாக இருக்க முடியும்?

நன்றி: தினமணி  (03 - 07 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories