TNPSC Thervupettagam

ஏவுகணை விபத்தால் இந்திய - பாகிஸ்தான் உறவு பாதிக்கப்படக் கூடாது

March 16 , 2022 795 days 328 0
  • கடந்த மார்ச் 9 அன்று ராஜஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஏவுகணைகளில் ஒன்று, பராமரிப்புப் பணிகளின்போது தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சீறிப் பாய்ந்தது.
  • குடியிருப்புப் பகுதியில் விழுந்து சேதங்களை ஏற்படுத்தினாலும் இந்த ஏவுகணையால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
  • இது குறித்துத் தனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்ட இந்தியப் பாதுகாப்புத் துறை, உடனடியாக இது தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட்டிருப்பது சரியான முடிவு.
  • ஏவுகணைப் பராமரிப்பின்போது நடந்த விபத்துக்கு இந்தியா வருத்தம் தெரிவித்துள்ள நிலையில், இருதரப்பு விசாரணை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தத் தேவையில்லை.
  • அத்தகைய கூட்டு விசாரணை, இரு நாடுகளுக்கிடையே பரஸ்பர நம்பிக்கையின்மையை மட்டுமின்றி, இந்தப் பிரச்சினையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதில் விருப்பமில்லாத நிலையையும் வெளிப்படுத்துவதாகவே அமையும்.
  • ஏவுகணை விபத்து தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் முறையிடுவோம் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி தெரிவித்திருந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் இது குறித்துத் தனது கருத்தை முதன்முறையாக வெளியிட்டுள்ளார்.
  • ‘இந்திய ஏவுகணை விழுந்ததற்குப் பதிலடி கொடுத்திருக்கலாம். ஆனால், நாம்தான் வேண்டாம் என்று விட்டுவிட்டோம்’ என்பதாக அவரது பதில் அமைந்துள்ளது.
  • பதற்ற நிலையை உருவாக்க பாகிஸ்தானுக்கு விருப்பமில்லை என்ற கருத்து அவரது பதிலில் வெளிப்பட்டாலும் இந்தியாவைப் பகை நாடாகக் கருதும் பாகிஸ்தானின் மனநிலையில் இன்னும் மாற்றம் வரவில்லை என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
  • மார்ச் 9 அன்று நடந்த சம்பவம், வழக்கமான பராமரிப்புப் பணிகளின்போது நிகழ்ந்தது என்பதையும் தொழில்நுட்பக் கோளாறின் விளைவாகவே அந்த விபத்து ஏற்பட்டது என்பதையும் இந்தியா தெரிவித்துள்ளது.
  • தாக்குதல் நடத்தும் எண்ணத்தோடு இந்தச் சம்பவம் நடந்திருந்தால், வருத்தம் தெரிவிக்கவோ காரணங்களைத் தெளிவுபடுத்தவோ இந்தியாவுக்குத் தேவையிருந்திருக்காது என்பதையும் பாகிஸ்தான் கருத்தில் கொள்ள வேண்டும்.
  • எனவே, இந்தியாவுக்கு எதிராகக் குற்றம்சாட்டுவதற்கான வாய்ப்பாக பாகிஸ்தான் இச்சம்பவத்தைக் கையாளக் கூடாது.
  • இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு என்பது பாகிஸ்தானை மட்டுமல்ல, மற்ற நாடுகளையும்கூட உள்ளடக்கியது என்பதும் பாகிஸ்தான் அறியாததல்ல.
  • கடந்த ஓராண்டு காலமாக காஷ்மீர் எல்லைப் பகுதியில் நீடித்துவரும் போர் நிறுத்த உடன்படிக்கையால் இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுமே பயன்பெற்றுள்ளன என்பதையும் அப்பிராந்தியத்தில் நிலவும் அமைதியால், அங்கு வாழும் மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குப் புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன என்பதையும் இரு நாடுகளும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • எல்லைப் பகுதியில் நடந்த ஏவுகணை விபத்து குறித்து இரு நாடுகளின் கூட்டு விசாரணை அவசியமற்றது என்பதோடு, இவ்விரு நாடுகளுக்கு இடையேயான கருத்து முரண்பாடுகளில் சர்வதேச சமூகத்தையோ வேறொரு நாட்டையோ ஈடுபடுத்துவதற்கு முயல்வது பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது ஆகாது.

நன்றி: தி இந்து (16 – 03 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories