TNPSC Thervupettagam

ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தின் அரை நூற்றாண்டுப் பயணம்

March 4 , 2022 795 days 583 0
  • கென்யாவின் நைரோபி நகரில் நடந்துவரும் ஐநா சுற்றுச்சூழல் அவையின் சிறப்புக் கூட்டமானது, ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தின் (யுஎன்இபி) ஐம்பதாவது ஆண்டைக் கொண்டாடும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
  • வளம்குன்றாத வளர்ச்சிக்கான 2030-ம் ஆண்டு இலக்குகளின் சூழலியல் பரிமாணத்தைச் செயல்படுத்த இவ்வமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதே இந்தச் சிறப்புக் கூட்டத்தின் நோக்கம்.
  • சர்வதேச அளவில் இந்தக் கூட்டமே பெருங்கவனத்தைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரால் சுற்றுச்சூழல் தொடர்பிலான ஆக்கபூர்வமான விவாதங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன.
  • 1972-ல் ஸ்டாக்ஹோம் நகரில் நடந்த ஐநாவின் சூழலியல் மாநாடு, சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் சட்டங்கள் இயற்றப்படுவதற்கு முதல் படியாக அமைந்தது. மனித வாழ்க்கைக்கு ஆரோக்கியமான சுற்றுச்சூழல் முக்கியமானது என்பதை அம்மாநாடு ஏற்றுக் கொண்டது.
  • அம்மாநாட்டின் நோக்கத்தைச் செயல்படுத்துவதற்காக, அதே ஆண்டில் ஐநா சுற்றுச்சூழல் திட்டம் தொடங்கப்பட்டது.
  • இவ்வமைப்பு, கடந்த ஐம்பதாண்டுகளாக ஐநாவின் உறுப்பினர் நாடுகளோடு சேர்ந்து உலகின் முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளைக் குறித்த செயல்திட்டங்களை வகுத்தும் ஒருங்கிணைத்தும் வருகிறது.
  • தொடங்கப்பட்ட அடுத்த ஆண்டிலேயே, கப்பல்கள் தங்களது பயணங்களின்போது கடலில் ஏற்படுத்தும் மாசுபாடுகளைக் கட்டுப்படுத்தும்வகையில் கடுமையான விதிமுறைகளைக் கொண்ட சர்வதேச உடன்படிக்கையை இந்தத் திட்டம் சாத்தியமாக்கியது.
  • அரிதான உயிரினங்கள் மற்றும் தாவரங்களின் சர்வதேசக் கள்ளச் சந்தையைத் தடுப்பது, நாடுகளைக் கடந்து வலசை செல்லும் பறவைகளைப் பாதுகாப்பது, காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது, ஓசோன் அடுக்கைப் பாதுகாப்பது, ஆபத்து விளைவிக்கக்கூடிய ஆலைக்கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவது, சூழலியல் பன்மைத்துவத்தைக் காப்பது, பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது, பாலைவனமாதலைத் தடுப்பது என இதுவரையில் மொத்தம் 15 பன்னாட்டு உடன்படிக்கைகள் உருவாக இவ்வமைப்பு பின்னணிக் காரணமாக இருந்துள்ளது.
  • சர்வதேச அளவில் மட்டுமின்றி, நாடுகளுக்கிடையே பிராந்திய அளவிலும் பல்வேறு உடன்படிக்கைகள் கையெழுத்தாகியுள்ளன.
  • 1974-லிருந்து ஜூன் 5 அன்று சர்வதேச சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படுவதும் இந்த அமைப்பின் முன்னெடுப்பே. உலகின் பெரும்வளமான நீரின் தூய்மையைப் பாதுகாக்கவும் பல்வேறு செயல்திட்டங்களை இவ்வமைப்பு செயல்படுத்திவருகிறது.
  • நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் தூய்மையான குடிநீரைப் பாதுகாக்கவும் நன்னீர் சூழல் மண்டலங்களைப் புதுப்பிக்கவும் தொடர் முயற்சிகளை எடுத்துவருகிறது.
  • பருவநிலை மாற்றத்துக்கான நாடுகளுக்கிடையிலான குழுவைத் தொடங்கி, நாடுகள் தங்களுக்கிடையில் பருவநிலை மாற்றம் குறித்த அறிவியல்பூர்வமான தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பையும் இவ்வமைப்பு உருவாக்கியுள்ளது.
  • உலக வங்கியுடன் சேர்ந்து சுற்றுச்சூழல் திட்டங்களுக்கான நிதிநல்கைகளையும் இவ்வமைப்பு வழங்கிவருகிறது.
  • இன்று, சூழலியல் பாதுகாப்பு குறித்து உலகளாவிய விழிப்புணர்வு உருவாகியிருப்பது ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளின் விளைவே.
  • சூழலியலுடன் இயைந்த வளர்ச்சியே நீடித்த வளர்ச்சியாக இருக்க முடியும். ஆனால், நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் வளம்குன்றாத இலக்கை எட்ட முடியுமா என்பதே உலகம் எதிர்கொண்டுள்ள சவால்.

நன்றி: தி இந்து (04 – 03 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories