TNPSC Thervupettagam

ஒன்றிய அரசு எனும் சொல்லாடல் சரியா?

October 1 , 2021 960 days 659 0
  • தமிழ்நாடு அரசு தனது அலுவல் தொடர்பான பரிவர்த்தனைகளில் ‘மத்திய அரசு என்பதற்குப் பதிலாக ‘ஒன்றிய அரசு என்பதைப் பயன்படுத்தும் முடிவு நமது அரசமைப்புச் சட்டத்தின் பிரக்ஞையை மீட்டெடுப்பதை நோக்கி எடுத்து வைத்திருக்கும் பெரிய காலடி ஆகும்.
  • அரசமைப்புச் சட்டத்தை நாம் பின்பற்ற ஆரம்பித்து 71 ஆண்டுகள் ஆகின்றன, “பாரத் என்ற இந்தியாவானது மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும் என்று சட்டக் கூறு 1-ல் அற்புதமாகப் பொறிக்கப்பட்டிருக்கும், நமது தேசத்தை உருவாக்கிய சிற்பிகளின் உண்மையான நோக்கத்தை மீட்டெடுக்க வேண்டிய தருணம் இது.
  • இந்திய அரசியலின் வரலாற்றைப் பயிலும் மாணவர் ஒருவர் ‘மத்திய அரசு என்ற வார்த்தையைத் தேட முயன்றால் அரசமைப்புச் சட்டம் அவர்களுக்கு ஏமாற்றத்தையே தரும்; ஏனெனில், அரசமைப்புச் சட்டத்தின் தொடக்கக் கால வடிவத்தில் 22 பாகங்களிலும் எட்டு அட்டவணைகளிலும் உள்ள 395 சட்டக் கூறுகளிலும் அரசமைப்பு நிர்ணய சபையினர் ‘மத்திய அல்லது ‘மத்திய அரசு என்ற சொற்களைப் பயன்படுத்தவில்லை.
  • நம்மிடம் உள்ளதெல்லாம் ‘ஒன்றியம் மற்றும் ‘மாநிலங்கள்தான்; ஒன்றியங்களின் செயல் அதிகாரங்கள் குடியரசுத் தலைவரிடம் இருக்கும், அவர் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையின் உதவியையும் ஆலோசனைகளையும் கொண்டு செயல்படுவார். அப்படியென்றால், நீதிமன்றங்களும் ஊடகங்களும் மாநிலங்களும்கூட ஒன்றிய அரசை ‘மத்திய அரசு என்று ஏன் குறிப்பிடுகின்றன?

என்ன சொல்கிறது அரசமைப்பு?

  • அரசமைப்பில், ‘மத்திய அரசு என்பதற்குக் குறிப்புகள் இல்லாதபோதும், ‘பொதுப் பிரிவுகள் சட்டம், 1897’ அதற்கென்று விளக்கத்தைத் தருகிறது. அரசமைப்பின் அமலாக்கத்துக்குப் பிறகு ‘மத்திய அரசு என்பது எல்லா நடைமுறை நோக்கங்களையும் கருதி குடியரசுத் தலைவரையே குறிக்கும். ஆகவே, அரசமைப்புச் சட்டமானது அதிகாரத்தை மையத்தில் குவிப்பதை அனுமதிக்காத நிலையில் ‘மத்திய அரசு என்பதற்கு அளிக்கப்பட்டிருக்கும் மேற்கண்ட விளக்கமானது அரசமைப்புரீதியில் செல்லுபடியாகுமா என்பதுதான் உண்மையான கேள்வி.
  • டிசம்பர் 13, 1946-ல் இந்தியாவானது சுதந்திரமான இறையாண்மை கொண்ட குடியரசில் இணைய விருப்பம் கொண்ட பிரதேசங்களின் ஒன்றியமாக இருக்கும் என்று உறுதிபூண்டு ஜவாஹர்லால் நேரு நாடாளுமன்றத்தின் குறிக்கோள்களையும் இலக்குகளையும் அறிமுகப்படுத்தினார். வலுவான, ஒருங்கிணைந்த நாட்டை உருவாக்குவதற்காக சமஸ்தானங்களையும் பிரதேசங்களையும் ஒருங்கிணைப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
  • அரசமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினர்கள் பலரும் பிரிட்டிஷ் கேபினட் மிஷன் திட்டத்தின் (1946) கொள்கைகளைத் தழுவிக்கொள்ளலாம் என்று கருதினார்கள். அந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை குறைந்த அதிகாரங்களைக் கொண்ட ஒரு மத்திய அரசு இருக்கும்; மாகாணங்கள் கணிசமான தன்னாட்சியைப் பெற்றிருக்கும். தேசப் பிரிவினையும் 1947-ல் காஷ்மீரில் நிகழ்ந்த வன்முறையும் வலுவான ஒரு மத்திய அரசு தேவை என்ற எண்ணத்தை அரசமைப்பு நிர்ணய சபையினரிடம் ஏற்படுத்தியதால் அவர்கள் தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொண்டார்கள்.
  • ஒன்றியத்திலிருந்து மாநிலங்கள் பிரிந்துசெல்லக்கூடிய சாத்தியம் பற்றிய அச்சவுணர்வானது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் மனதில் இருந்தது. ஆகவே, இந்திய ஒன்றியமானது ‘அழிக்கப்பட முடியாதது என்பதை உறுதிப்படுத்தினார்கள். “இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும் என்பதை வலியுறுத்தி, பிரிந்து போவதற்கான மாநிலங்களின் உரிமையைச் செல்லாததாக ஆக்குவதற்காக ‘ஒன்றியம் என்ற சொல் தீர்க்கமான பரிசீலனைக்குப் பிறகு பயன்படுத்தப்பட்டது என்று அரசமைப்பு நிர்ணய சபையில் அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவர் அம்பேத்கர் கருத்துத் தெரிவித்தார்.
  • இந்தியா ஒரு கூட்டாட்சி நாடாக ஆகவிருந்தாலும் அது ஒரு ஒப்பந்தத்தின் விளைவு அல்ல; ஆகவே, அதிலிருந்து பிரிந்துபோவதற்கு எந்த மாநிலத்துக்கும் உரிமை இல்லை என்று கூறியதன் மூலம் ‘மாநிலங்களின் ஒன்றியம் என்ற பதத்தை அம்பேத்கர் நியாயப்படுத்தினார். “கூட்டாட்சி நாடு என்பது ஓர் ஒன்றியம் ஆகும், ஏனெனில் அது அழிக்கப்பட முடியாதது என்றார் அம்பேத்கர்.

அம்பேத்கரின் விளக்கம் என்ன

  • அம்பேத்கர் கூறிய ‘மாநிலங்களின் ஒன்றியம் என்ற பிரயோகம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இது மௌலானா ஹஸ்ரத் மொஹானியிடமிருந்து விமர்சனங்களை எதிர்கொண்டது. அரசமைப்பின் இயல்பையே அம்பேத்கர் மாற்றிக்கொண்டிருக்கிறார் என்று அவர் வாதிட்டார். ‘மாநிலங்களின் ஒன்றியம் என்ற சொற்கள் ‘குடியரசு என்ற சொல்லைத் தெளிவற்றதாக ஆக்கிவிடும் என்று செப்டம்பர் 18, 1949-ல் மொஹானி அரசமைப்பு நிர்ணய சபையில் கடுமையான உரையொன்றை ஆற்றினார்.
  • ஜெர்மனியில் இளவரசர் பிஸ்மார்க்கால் முன்மொழியப்பட்டு அவருக்குப் பிறகு கெய்ஸர் வில்லியமாலும், அவருக்குப் பிறகு அடால்ஃப் ஹிட்லராலும் பின்பற்றப்பட்ட ஒன்றியம் என்பதைப் போன்ற ஒன்றாக இந்த ‘ஒன்றியம் இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பினார் எனும் அளவுக்கு மொஹானி பேசினார். மொஹானி மேலும் தொடர்ந்தார், “எல்லா மாநிலங்களும் ஒரே குடையின் கீழ் வர வேண்டும் என்று அவர் (அம்பேத்கர்) விரும்புகிறார், இதைத்தான் நாம் அரசமைப்புச் சட்டத்தின் அறிவிக்கை என்று கூறுகிறோம்.
  • அந்த எண்ணத்தில்தான் அம்பேத்கர் இருக்கிறார் என்றும், அது போன்ற ஒன்றியத்தைக் காண்பதற்கே அவர் விரும்புகிறார் என்றும் நான் நினைக்கிறேன். எல்லா அலகுகளையும் எல்லா சமஸ்தானங்களையும் மாநிலங்களின் குழுக்களையும் மத்திய அரசின் அதிகாரத்துக்குக் கீழ் கொண்டுவர விரும்புகிறார்.
  • அம்பேத்கர் தன்னுடைய நிலைப்பாட்டை இப்போது தெளிவுபடுத்தினார், “ஒன்றியம் என்பது தளர்வான உறவால் பிணைக்கப்பட்டிருக்கும் மாநிலங்களின் குழு கிடையாது; மாநிலங்கள் ஒன்றியத்திடமிருந்து அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் முகமைகளும் கிடையாது. ஒன்றியமும் மாநிலங்களும் அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்படுபவை.
  • இரண்டு தரப்புகளும் தங்களுக்குரிய அதிகாரங்களை அரசமைப்புச் சட்டத்திலிருந்து பெறுகின்றன. ஒரு தரப்பானது தனது செயல்பாட்டு எல்லையில் இன்னொன்றைவிடக் குறைந்த அந்தஸ்து கொண்டதல்ல… ஒன்றின் அதிகாரமானது இன்னொன்றின் அதிகாரத்துக்கு இணையானது!
  • அதிகாரங்களை ஒன்றியமும் மாநிலங்களும் பகிர்ந்துகொள்வதென்பது அரசின் செயலாக்க அமைப்புக்கு மட்டும் உரித்தான பணியல்ல. நாட்டிலேயே உயரிய அந்தஸ்தை வகிக்கும் நீதிமன்றமான உச்ச நீதிமன்றமானது உயர் நீதிமன்றங்களின் மீது மேலாண்மை கொண்டிருக்காத விதத்தில் அரசமைப்பில் நீதித் துறையானது வரையறுக்கப்பட்டிருக்கிறது. உயர் நீதிமன்றங்களில் மட்டுமல்லாமல் பிற நீதிமன்றங்களிலும் தீர்ப்பாயங்களிலும் வழங்கப்படும் தீர்ப்புகளை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் அதிகார வரம்பை அது கொண்டிருந்தாலும் அதனால் அந்த நீதிமன்றங்கள் உச்ச நீதிமன்றத்தைவிடக் கீழ்நிலையில் உள்ளவை என்று அர்த்தமல்ல.
  • சட்டம் தொடர்பான விவகாரங்களில் நாடாளுமன்றங்களும் சட்டமன்றங்களும் தங்கள் எல்லைகள் தொடர்பில் தெளிவாக இருக்கின்றன; நீதிமன்றங்களின் எல்லைகளைத் தாண்டாமல் ஜாக்கிரதையாக இருக்கின்றன. எனினும், ஏதாவது முரண் இருப்பின் ஒன்றிய நாடாளுமன்றத்துக்கே இறுதி அதிகாரம்.

வார்த்தை விளையாட்டு

  • அதிகாரங்களை ஒரு அலகில் குவிக்கும் போக்கை விலக்கும் நோக்கத்தில் அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையினர் ‘மத்திய அல்லது ‘மத்திய அரசு என்ற பிரயோகங்களை அரசமைப்புச் சட்டத்தில் பயன்படுத்தாமல் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார்கள். ‘ஒன்றிய அரசு அல்லது ‘இந்திய அரசு என்பதற்கு ஒருங்கிணைக்கும் இயல்பு இருக்கிறது; இதன் மூலம் அரசானது எல்லாவற்றாலும் ஆனது என்பது உணர்த்தப்படுகிறது.
  • அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சிய இயல்பு என்பது அதன் அடிப்படை அம்சம் மட்டுமல்லாமல் அதை மாற்ற முடியாது என்றாலும் அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் நமது அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சிய அம்சத்தைக் காப்பாற்றும் நோக்கம் கொண்டிருக்கிறார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நானி பல்கிவாலாவின் புகழ்பெற்ற வாசகங்கள்போல், “மிகுந்த சிக்கலான பிரச்சினைக்கான திருப்திகரமானதும் நீடிக்கக்கூடியதுமான ஒரே ஒரு தீர்வை சட்டப் புத்தகத்தில் காண முடியாது. அதிகாரத்தில் இருக்கும் மனிதர்களின் மனசாட்சியில்தான் தேடிக் கண்டடைய வேண்டும்!

நன்றி: அருஞ்சொல் (01 – 10 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories