TNPSC Thervupettagam

ஒரே தலைநகரம்..அதுவே ஒற்றுமைக்கும் நல்லது

November 29 , 2021 902 days 494 0
  • ஆந்திர மாநிலத்துக்கு மூன்று தலைநகரங்கள் எனும் முடிவை முதல்வர் ஜெகன்மோகன் கைவிட்டிருப்பது நல்ல விஷயம். இந்தியப் பின்னணியில் பல வகைகளிலும் மோசமான பின்விளைவுகளை உண்டாக்கக் கூடிய திட்டம் அது.
  • இந்தியாவில் இந்திக்கு அடுத்து, பெருவாரியான மக்களால் பேசப்படும் மொழியான தெலுங்கு மக்களின் மாநிலமான ஆந்திரமே தென் இந்தியாவின் பெரிய மாநிலமாகவும் இருந்துவந்தது.
  • மொழிவாரி மாநிலங்கள் எனும் அமைப்புக்கு வித்திட்ட அந்த மாநிலமே,  இந்தி பேசாத மாநிலங்களில் முதல் பிரிவினையை எதிர்கொண்ட முதல் மாநிலமாகவும் உருவெடுத்தது வரலாற்று முரண்.
  • காலங்காலமாக பிராந்தியரீதியாக அழுத்தப்பட்ட தெலங்கானா மக்கள் தம்முடைய உரிமைகளை நிலைநாட்டும் வகையில், ஆந்திரத்திலிருந்து பிரிந்து தெலங்கானா மாநிலத்தை வென்றெடுத்தார்கள்.
  • அதுவரை ஆந்திரத்தின் தலைநகரமாக இருந்துவந்த ஹைதராபாத் இதற்குப் பின் தெலங்கானாவின் தலைநகரம் ஆனது.
  • தமக்கென்று புதிய தலைநகரத்தை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஆந்திரத்துக்கு உருவானது. அப்போது ஆட்சிப் பொறுப்பில் இருந்த சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி அரசு 2015-ல் அமராவதியை தலைநகரமாக அறிவித்ததைத் தொடர்ந்து, அதைக் கட்டியெழுப்பும் பணிகள் நடந்தேறிவந்தன.
  • 2019 சட்டமன்றத் தேர்தலில் ஆந்திர சட்டமன்றத் தேர்தலில், முதல்வர் ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பின், அமராவதி திட்டத்தில் கை வைத்தது. அமராவதிக்குப்
  • பதிலாக ‘மூன்று தலைநகரங்கள்’ எனும் அறிவிப்பை வெளியிட்டார் ஜெகன்மோகன். இதன்படி, சட்டமன்றத்தைக் கொண்ட சட்டமன்றத் தலைநகராக அமராவதியும், தலைமைச் செயலகத்தைக் கொண்ட நிர்வாகத் தலைநகராக விசாகப்பட்டினமும், உயர் நீதிமன்றத்தைக் கொண்ட நீதித் துறைத் தலைநகராக கர்னூலும் அறிவிக்கப்பட்டன.
  • அதிகாரப்பரவலாக்கல் முனைப்பே இதற்கான காரணம் என்று சொன்னார் ஜெகன்மோகன். கூடவே, தலைநகருக்கு நிலம் கையகப்படுத்தும்போதும் அதன் வளர்ச்சியைத் திட்டமிடும்போதும் சட்டங்களையும் நடைமுறைகளையும் சந்திரபாபு அரசு மீறியது; நிறைய ஊழல் நடந்திருக்கிறது என்று குற்றஞ்சாட்டி அதற்கான விசாரணைக்கும் உத்தரவிட்டார்.
  • இதையெல்லாம் தாண்டி அமராவதி தலைநகரத் திட்டம் சந்திரபாபுவின் கனவுத் திட்டமாக இருந்ததும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே ஜெகன்மோகன் அதில் கைவைத்தார் என்பதும் வெளிப்படையாகத் தெரிந்தது.
  • ஆந்திர எல்லையைக் கடந்தும் இந்த விவகாரம் இந்திய மாநிலங்களில் புதிய விவாதத்தை உருவாக்கியது. தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட தலைநகரங்கள் என்ற யோசனை பேசப்படலானது.
  • ஏற்கெனவே மாநிலங்கள் எனும் அமைப்பைப் பலகீனப்படுத்தி, அவற்றைத் துண்டாடும் சக்திகள் பலம்பெற்று நிற்கும் காலகட்டத்தில், சுயமாக வைத்துக்கொள்ளும் சூனியம்போலத் தெரிந்தது இத்திட்டம்.
  • நிர்வாகரீதியாகவும் இது மோசமான யோசனை. வெவ்வேறு தொலைவில் உள்ள  பிராந்தியங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிப்பதே இதன் முக்கியமான நோக்கம் என்றால், பிராந்தியங்களுக்கு இடையேயான தொலைவே இதன் முக்கியமான பலவீனமும் ஆகும்.
  • ஆந்திரத்தையே எடுத்துக்கொண்டால், அமராவதியிலிருந்து சுமார் 400 கிமீ தொலைவில் விசாகப்பட்டினமும், விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 700 கிமீ தொலைவில் கர்னூலும், கர்னூலிலிருந்து சுமார் 350 கிமீ தொலைவில் அமராவதியும் இருக்கின்றன.
  • இத்தகு சூழலில், இப்படி மூன்று தலைநகரங்கள் அமைந்தால், அதிகாரிகள் தொடங்கி பொதுமக்கள் வரை எல்லோரும் பெரும் அலைக்கழிப்புக்கு ஆளாவார்கள். எல்லா விஷயங்களும் தாமதப்படும். பெரும் செலவு ஏற்படும்.
  • மக்களில் ஒரு தரப்பினரிடமிருந்தும் - குறிப்பாக விவசாயிகளிடமிருந்து - கடும் எதிர்ப்பு எழுந்ததோடு, ஜெகன்மோகன் அரசின் இந்த முடிவுக்கு எதிராக வழக்குகளும் தொடரப் பட்டன.
  • இன்றைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரமணா ஆந்திரத்தைச் சேர்ந்தவர் என்பதோடு, ஜெகன்மோகன் அரசு நேரடியாகவும், தனிப்பட்ட வகையிலும் அவரோடு முரண்பாடுகளைக் கொண்டது.
  • “சந்திரபாபுவுக்கு வேண்டியவர் ரமணா; அவர் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆந்திர உயர் நீதிமன்றத்தைக் கட்டுப்படுத்துகிறார்; அரசுக்கு எதிராக சதி தீட்டுகிறார்” என்று ஜெகன்மோகன் கடிதம் எழுதும் அளவுக்கு இரு தரப்பினருக்கும் இடையிலான உறவு மோசமான நிலையில் இருக்கிறது.
  • இவை எல்லாமும் கூடி ஜெகன்மோகன் தன்னுடைய மூன்று தலைநகரங்கள் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சட்டங்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதற்கான நிர்ப்பந்தத்தை உருவாக்கியிருக்கின்றன.
  • இது முழுமையான கைவிடலா அல்லது சமயம் பார்த்து திரும்பக் கொண்டுவருவதற்கான உத்தேசமா என்பது உறுதிபட தெரியவில்லை.
  • ஒருவேளை முழுமையான கைவிடல் என்றால், அது நல்ல முடிவு. அமராவதியைத் தலைநகரமாக்கும் பணியில் ஏற்கெனவே பல்லாயிரம் கோடிகள் செலவிடப்பட்டிருக்கும் நிலையில், அதில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்துவது மாநிலத்துக்கு நன்மை பயப்பதாக இருக்கும்.
  • ஆந்திரத்தின் ஜெகன்மோகன் மட்டும் அல்லாது, தமிழ்நாடு உள்ளிட்ட ஏனைய மாநில அரசியலர்களும் ஓர் அடிப்படை விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
  • அதிகாரப்பரவலாக்கம் என்பது வளங்களை சமமாகப் பகிர்வதிலும், பிராந்திய - சமூகச் சமநிலையிலும் இருக்கிறது. அது, தலைநகரங்களைப் பெருக்கிக்கொண்டேபோவதில் இல்லை.
  • ஒரே நகரம் அல்லது பிராந்தியத்தில் எல்லா வளங்களையும் குவிப்பதற்கு மாற்றாக, கல்வி நிறுவனங்கள் - தொழில் நிறுவனங்கள் - அடிப்படைக் கட்டுமானங்கள் - வாய்ப்புகள் இவற்றில் பேதம் இல்லாமல் பகிர்வு நடந்தாலே பாதிப் பிரச்சினைகள் முடிவுக்கு வந்து விடும்.
  • சென்னை உயர் நீதிமன்றக் கிளையானது மதுரையில் அமைக்கப்பட்டது போன்ற கிளை அமைப்புகளை உருவாக்கிடலையும் இதன் ஒரு பகுதியாகப் பார்க்கலாம்; மக்களுக்கு நன்மை பயக்கும்.
  • உள்ளாட்சிக்கு அதிகபட்ச அதிகாரங்களைப் பகிர்வது இதில் சிறந்த பலனை அளிக்கும். அதிகாரத்திலும், வளர்ச்சியிலும் ஏற்றத்தாழ்வுகள் வெளிப்படும்போதுதான் பாகுபாடுகளை மக்கள் உணருகிறார்கள்.
  • உலகில் பெரும்பான்மை நாடுகளும் மாநிலங்களும் ஒரே தலைநகரம் எனும் அமைப்பையே கொண்டிருக்கின்றன. ஆட்சிமன்றங்கள், நீதி, நிர்வாகம் மூன்றின் தலைமையிடங்களும் நிர்வாகக் கண்ணோட்டத்தில் ஒரே நகரத்தில் இருப்பதே அதிக பலன் தருவது என்பதே இதற்கான காரணம்.

நன்றி: அருஞ்சொல் (29 - 11 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories