TNPSC Thervupettagam

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகள் திட்டம்

May 12 , 2022 739 days 1061 0
  • மேலை நாடுகளில் ஒரே நேரத்தில் பல்வேறு துறைகளில் கற்பதற்கும், விருப்பமான பாடங்களைத் தேர்ந்தெடுத்துப் படிப்பதற்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. பதின்ம வயதிலேயே முனைவர் பட்டம் பெறுவதுகூட அங்கே அனுமதிக்கப்படுகிறது. அந்த அளவில் இல்லாவிட்டாலும், நமது கல்வி முறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவர மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வழிகோலுகிறது.
  • மாணவர்கள் பன்முகத் திறனைப் பெற அனுமதிக்கும் வகையில், ஒரே நேரத்தில் இரண்டு முழு நேரப் பட்டப் படிப்புகளை மேற்கொள்ள அவர்களை அனுமதிக்க முடிவெடுத்திருக்கிறது பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி). இதற்கான வழிகாட்டுதல் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
  •  ஒரே பல்கலைக்கழகத்திலோ வெவ்வேறு பல்கலைக்கழகங்களிலோ மாணவர்கள் இனிமேல் இரண்டு வெவ்வேறு பட்டப் படிப்புகளை மேற்கொள்ள முடியும். இரண்டு இளநிலை அல்லது இரண்டு முதுநிலைப் பட்டப் படிப்புகள் என்கிற நிலையில் மட்டுமே அப்படி படிக்க முடியும்.
  •  மாறுபட்ட வகுப்பு நேரங்களில் இரண்டு பட்டப் படிப்புகளை நேரடி முறையில் வெவ்வேறு கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாம். நேரடி முறையில் ஒரு பட்டப் படிப்பையும், இணையவழி அல்லது தொலைதூர வழியில் இன்னொரு பட்டப் படிப்பையும் மேற்கொள்ளலாம். இணைய அல்லது தொலைதூர முறையில் இரண்டு பட்டப்படிப்புகளை மேற்கொள்ளவும் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
  •  இந்தப் புதிய நடைமுறையை ஏற்றுக்கொள்ளும் அல்லது தவிர்க்கும் உரிமை பல்கலைக்கழகங்களுக்குத் தரப்படுகிறது. மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையும் பல்கலைக்கழகங்களின் உரிமைக்கு உட்பட்டது.
  •  இந்தியப் பல்கலைக்கழகங்களின் கல்வித் தரத்தில் மிகப் பெரிய ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது. கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்களின் கற்பிக்கும் திறன், பாடத்திட்டம் உள்ளிட்டவற்றில் கல்லூரிக்குக் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்குப் பல்கலைக்கழகம் வேறுபாடு காணப்படுவது மறுக்க முடியாத உண்மை. மிக அதிகமாக எழுத்தறிவு பெற்றவர்களும், பட்டதாரிகளும் கொண்ட கேரளத்திலுள்ள நான்கு பல்கலைக்கழகங்கள் மட்டும்தான் இந்தியாவின் முதல் 100 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம் பெறுகின்றன. அப்படிப்பட்ட நிலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட பட்டங்கள் பெறுவதால் என்ன பயன் ஏற்பட்டுவிடப் போகிறது என்கிற கேள்வி எழாமல் இல்லை.
  •  பல்கலைக்கழக மானியக் குழு இப்போது பச்சைக்கொடி காட்டி அனுமதித்திருக்கும் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகள் திட்டம், சில அடிப்படை மாற்றங்களுக்கு வழிகோலக்கூடும். அறிவியல் படிக்கும் மாணவர், கூடுதல் பட்டமாக கலை, வணிகவியல் பட்டம் பெற இனிமேல் விழையலாம். மொழிப் பாடத்தில் பட்டப்படிப்பும், கணக்கு அல்லது வரலாற்றுப் பாடத்தில் இன்னொரு பட்டம் பெறுவதற்கும் படிக்கலாம். பட்டப் படிப்பு படிக்கும்போதே, சட்டம் பயில முனையலாம். பட்டப் படிப்பும், பாலிடெக்னிக்கில் பட்டயப் படிப்பும் ஒரே நேரத்தில் படிக்கலாம்.
  • அதையெல்லாம் விட வரவேற்புக்குரியது ஒரு முக்கியமான அம்சம். பட்டப்படிப்பில் ஒவ்வோர் ஆண்டு படிப்புக்கும் தனித்தனியாகச் சான்றிதழ் வழங்கப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. முதலாவது ஆண்டு சான்றிதழ் படிப்பு; இரண்டாவது ஆண்டு பட்டயப்படிப்பு; மூன்றாவது ஆண்டு பட்டப் படிப்பு என்று அதை எடுத்துக்கொள்ள முடியும். பாதிப் படிப்பின்போது வேலை கிடைத்தால் அல்லது மேலே படிக்க முடியாவிட்டால், அதுவரை முடித்த "செமஸ்டரின்' சான்றிதழை "கல்வி வங்கி'யில் வைத்துக்கொண்டு, எப்போது வேண்டுமானாலும் மேலே படிப்பைத் தொடர வழிவகுக்கப்படுகிறது.
  • 2040-ஆம் ஆண்டை இலக்காக்கி, 2030-க்குள் நடைமுறைப்படுத்த இருக்கும் புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படுவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. தற்போது பள்ளிக் கல்வியை முடித்து உயர்கல்விச் சாலைகளில் சேர்பவர்கள் எண்ணிக்கை தேசிய அளவில் 26.3% மட்டுமே. 2035-க்குள் இந்த எண்ணிக்கையை 50%-க்கும் அதிகமாக்க வேண்டும் என்பதுதான் புதிய தேசிய கல்விக் கொள்கையின் இலக்கு.
  • இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்துப் படிப்புகளும் அடங்கிய உயர்கல்வி நிறுவனம் அமைக்கப்படுவதும், அதில் குறைந்தது 3,000 மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்துவதும், வருங்காலத்துக்குத் தேவையான முன்மாதிரிப் படிப்புகள் கொண்டுவருவதும் புதிய தேசிய கல்விக் கொள்கையின் இலக்குகள். பல்கலைக்கழகங்களுடன் கல்லூரிகள் இணைந்திருப்பது காலப்போக்கில் கைவிடப்பட்டு, கல்லூரிகளே தரம் உயர்த்தப்பட்டுப் பட்டங்கள் வழங்கும் தன்னாட்சி உரிமை பெறுவதும் அதன் இலக்குகளில் ஒன்று.
  • கல்லூரிகள் பட்டப்படிப்புகள் வரை தன்னிச்சையாகச் செயல்படுவதும், பல்கலைக்கழகங்கள் ஆய்வுகளில் கவனம் செலுத்துவதும் எதிர்காலத்தில் தவிர்க்க முடியாததாகி விடும். கல்வித் தரம் இல்லாத கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இல்லாமல் போய்விடும் என்பதால், இந்தியாவின் கல்வித் தரம் மேம்படும்.
  •  அதே நேரத்தில், அதில் வணிகம் புகுந்து அடித்தட்டு மக்களுக்கு கல்வியை எட்டாக்கனியாக்கிவிடும் அபாயம் நிறையவே இருக்கிறது. அதை ஈடுகட்ட, அரசு கல்வி நிலையங்களின் கல்வித் தரம் உயர்த்தப்படுவதும், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் நியமனங்கள் திறமையின் அடிப்படையில் மட்டுமே அமைவதும்தான் சரியான அணுகுமுறையாக இருக்க முடியும்.
  •  ஒரே நேரத்தில் இரண்டு படிப்புகள் என்பது வரவேற்புக்குரிய முடிவு. இந்த முடிவால் நேரடிக் கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். இரண்டாவது பட்டப்படிப்பு தொலைதூர, இணையவழிக் கல்வியாக இருப்பது அதற்குத் தீர்வாக அமையும்!

நன்றி: தினமணி (12 – 05 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories