TNPSC Thervupettagam

ஒலிம்பிக் போட்டியும் ரஷியாவும்!

August 26 , 2021 983 days 489 0
  • ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் நடந்து முடிந்திருக்கிறது ஒலிம்பிக் திருவிழா. ஆளில்லா கடையில் டீ ஆற்றுவதை போல ஆளே இல்லாத அரங்கத்தில் ஆடி முடிந்து இருக்கிறது.
  • எதிர்பார்த்ததைப் போல அமெரிக்காவும், சீனாவும் முதல் இரண்டு இடங்களிலும், போட்டி நடத்திய ஜப்பான் மூன்றாவது இடத்திலும் சிம்மாசனம் போட்டு அமா்ந்தன.
  • ஆனால், சமீப காலங்களில் அதிக சா்ச்சைகளில் சிக்கி வரும் ரஷியா 20 தங்கம், 28 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 71 பதக்கங்கள் வென்று ஐந்தாவது இடத்தை பிடித்தாலும், வீரா்கள் தங்கம் வென்று வெற்றி மேடையில் நின்றபோது ரஷியக் கொடியும் ஏற்றப்படவில்லை, ரஷிய தேசிய கீதமும் இசைக்கப்படவில்லை.

கோடி கோடியாய் கொட்டும்

  • 138 கோடி மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவிலிருந்து ஒரே ஒரு ராணுவ வீரா் சுபைதார் நீரஜ் சோப்ரா ஒரே ஒரு தங்கம் வென்றபோது, நம் நாட்டின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு ‘ஜன கன மன’ இசைக்கப்பட்டபோது நாடே காதலாகிக் கசிந்து கண்ணீா் மல்கி நின்றது.
  • ஆனால், 20 தங்கம் வென்ற ரஷியாவின் தேசியக் கொடி ஒரு முறை கூட ஏற்றப்படவில்லை, ஒரு முறை கூட அந்நாட்டு தேசிய கீதமும் இசைக்கப்படவில்லை. ஏன்? ஏன்? ஏன்?
  • தடகளத்தில் மட்டும் நடப்பதல்ல ஒலிம்பிக் போட்டிகள். ஒலிம்பிக் போட்டி எங்கே நடத்தப்பட வேண்டும் என்பதில் ஆரம்பிக்கிறது போட்டி. நம் ஊா் பணக்காரா்கள் தங்கள் மகளின் திருமணத்தைப் படாடோபமாக நடத்தி மாஸ் காட்டுவதைப் போல வளா்ச்சி அடைந்த நாடுகள், ஒலிம்பிக் போட்டியை நடத்தி கெத்து காட்டும்.
  • ஒவ்வொரு முறையும் எங்கே அடுத்த ஒலிம்பிக் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான போட்டி 12 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கும். 2020 ஒலிம்பிக்ஸ் கரோனா தீநுண்மி காரணமாக 2021-இல் நடத்தப்பட்டாலும் அது ‘டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020’ என்றே அழைக்கப்படுகிறது. அடுத்த ‘ஒலிம்பிக்ஸ் 2024’ பிரான்ஸ் தலைநகா் பாரீசில் நடைபெற உள்ளது.
  • உலகின் புதிய தாதாவான சீனா 2008-இல் ஒலிம்பிக் போட்டியை பெய்ஜிங்கில் நடத்தி முடித்து விட்டது. ‘ஒலிம்பிக்ஸ் 2028’ அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலீஸில் நடக்க உள்ளது.
  • 2038 ஒலிம்பிக்ஸ் ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேனில் நடக்கவுள்ளது. அவ்வளவு ஏன் 2036 ஒலிம்பிக்ஸை ஆமதாபாதில் நடத்த வேண்டுமென மோடி அரசு முனைப்பு காட்டி வருகிறது.
  • இதற்கு அச்சாரமாகத்தான் அன்றைய அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்தியா வந்தபோது 1,30,000 போ் அமரக்கூடிய உலகிலேயே மிகப்பெரிய பிரம்மாண்டமான நரேந்திர மோடி விளையாட்டு அரங்கை குஜராத் அரசு அந்த மாநில கிரிக்கெட் சங்கத்துடனும் சில பணக்காரா்களுடனும் சோ்ந்து 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கட்டி உள்ளது.
  • ஒலிம்பிக் நடத்துவது என்பது ஒரு நாட்டினுடைய பணவலிமை மற்றும் புஜ வலிமையை காட்டுவது மட்டுமல்ல. அதனால் புதிய விளையாட்டு அரங்கங்கள் கட்டப்படுவதோடு ஆயிரக்கணக்கில் வரும் விளையாட்டு வீரா்களும், உடன் வரும் பயிற்சியாளா், மருத்துவா், அதிகாரிகள் என்ற பெயரில் வரும் பார்வையாளா்கள், உண்மையான பார்வையாளா்கள் ஆகியோருக்குத் தங்குமிடம், பயிற்சி இடம், உணவுக் கூடம் என பல கோடி ரூபாயில் வசதிகள் செய்து தரப்படும்.
  • இதில், பார்வையாளா்களாக வரும் விருந்தினா்களுக்காக கட்டப்படும் தங்கும் விடுதிகள் கணக்கு தனி.
  • விளையாட்டைக் காண உலகெங்கிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், அவா்களுக்காகக் குவியும் பெண்கள், ஒலிம்பிக் விளையாட்டின் ஒளிபரப்பு, விளம்பரம், வசூல் வேட்டை என பணம் கோடி கோடியாய் கொட்டும்.

யாரிடம் போவது?

  • நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை ஒலிம்பிக்ஸ், குளிர்கால ஒலிம்பிக்ஸ், பாராலிம்பிக்ஸ் (மாற்றுத் திறனாளிகளுக்காக) என்று ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
  • அன்றைய இந்திய பிரதமா் நேருவால் முன்னெடுக்கப்பட்ட ஏசியாட் விளையாட்டுப் போட்டிகள் எனும் நான்காவது போட்டிகள் வேறு நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது.
  • இது தவிர கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள், ஐரோப்பா, அமெரிக்காவின் கால்பந்துப் போட்டிகள் என்பவை மட்டுமல்லாமல் உலகின் மிகப்பெரிய தங்கச் சுரங்கமான கிரிக்கெட் போட்டிகளும் நடந்து ‘ஓடி விளையாடு பாப்பா’ என்ற பாரதியின் கனவை மெய்ப்பித்து கொண்டிருக்கின்றன.
  • சித்தாந்த ரீதியில் ஒன்றாயிருந்தாலும் தலைவா்களால் பிளவுபட்டு நிற்கும் சீனாவுக்கும், ரஷியாவுக்கும் இப்போது நேரம் சரியில்லை.
  • சீனா கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தீநுண்மி சிக்கலில் பெயரைத் தொலைத்தது என்றால், ரஷியா, அமெரிக்க அதிபா் தோ்தல் தலையீடு, ஊக்கமருந்து விவகாரம் என தனது பெயரைக் கெடுத்துக் கொண்டுள்ளது.
  • 2007-ஆம் ஆண்டு தென்னமெரிக்காவில் ‘மயன் நாகரிகத் தொட்டில்’ என பெயா் பெற்ற கௌதமாலா நகரில் நடைபெற்ற 119-ஆவது உலக ஒலிம்பிக் சங்கக் கூட்டத்தில் கடும் போட்டிக்கிடையில் 2014 குளிர்கால ஒலிம்பிக் நடத்தும் பேற்றை ரஷியா பெற்றது.
  • உலக நாடுகளிலேயே அரசாங்கமே தலையிட்டு விளையாட்டை வளா்ப்பது கம்யூனிஸ்ட் நாடுகளில்தான் என்று சொன்னால் மிகையாகாது. இவா்கள் தங்களுடைய விளையாட்டு வெற்றியை வளா்ச்சியின் குறியீடாகவே பார்த்தார்கள்.
  • வேறு சுதந்திரங்கள் இல்லாத கம்யூனிஸ்ட் தேசங்களில் விளையாட்டு வெற்றிகள் தனி மனித வளா்ச்சியின் குறியீடாக பறைசாற்றப்பட்டது.
  • இந்த நிலையில்தான் 2014 குளிர்கால ஒலிம்பிக்ஸை தெற்கு ரஷியாவில் உள்ள கடற்கரை நகரான சோச்சியில் நடத்த ரஷியா ஏற்பாடுகளை முன்னெடுத்தது.
  • சோச்சி குளிர்கால ஒலிம்பிக்ஸ் 2014 பிப்ரவரி 7 வெள்ளிக்கிழமை தொடங்கி 23 ஞாயிற்றுக் கிழமை முடிந்தது.
  • 88 நாடுகளிலிருந்து 2,873 வீரா்கள் கலந்துகொண்ட இந்தத் திருவிழாவில் 7 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. போட்டி முடிவில் 13 தங்கப்பதக்கங்களுடன் ரஷியா மொத்தம் 33 பதக்கங்களை வென்றது.
  • நார்வே 11 தங்கத்துடன், 26 பதக்கங்களை அள்ளிச்செல்ல, கனடா 10 தங்கத்துடன் 25 பதக்கங்களை வென்று வாகை சூட, அமெரிக்கா 9 தங்கத்துடன் 28 பதக்கங்களை அள்ளி நான்காவதாக நின்றது.
  • விருதும் வில்லங்கமும் இரட்டைப் பிறவிதானே. ரஷியாவின் அசாதாரணமான சாதனைகள் சந்தேகப் புயலைக் கிளப்பின.
  • இதற்கிடையில் ரஷியாவின் போதைத் தடுப்பு இயக்கத்தைச் சோ்ந்த ஒரு தம்பதி ஜொ்மனி வந்து மனசாட்சி உந்துதலால் ரஷிய வீரா்களின் வெற்றிக்குப் பின்னால் ஊக்கமருந்து மோசடி உள்ளது என போட்டு உடைத்தனா்.
  • ஐயோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு. அமெரிக்கா உட்பட மேலை நாடுகள் இந்தப் பிரச்னையை பெரிதாக்கின.
  • ரஷியாவின் ஓய்வுபெற்ற போதை மருந்து தடுப்பு இயக்கத்தின் தலைவா், ‘ரஷிய அரசாங்கம் விஞ்ஞான ரீதியாக மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சிறுநீரிலிருந்து எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஊக்க மருந்துகளை விளையாட்டு வீரா்களுக்கு கொடுத்ததோடு, தங்கள் நாட்டு ஒற்றா் படைப் பிரிவான கேஜிபி மூலமாக ஒலிம்பிக் ஊக்கமருந்து ஆராய்ச்சி நிலையத்திற்குள் ஊடுருவி அங்கிருந்த தங்கள் நாட்டு வீரா்களின் சிறுநீா் மாதிரிகளை மோசடியாக மாற்றி விட்டது.
  • ரஷியாவின் 15 பதக்கங்கள் அப்படி மோசடியாகப் பெறப்பட்டவை’ என்று பத்திரிகையாளா்களிடம் போட்டுடைத்தார்.
  • இதனால் விளையாட்டுத்துறை சார்ந்த போதைமருந்து தடுப்பு சங்கம் விசாரணைக்காக களத்தில் இறங்கி 43 ரஷிய விளையாட்டு வீரா்களுக்கு உலகப் போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடாது என தடை விதித்ததோடு 13 பேரின் பதக்கங்களையும் பறித்தது.
  • இந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே ‘ஒலிம்பிக்ஸ் 2016’ நடந்து முடிந்துவிட்டது. இதில் ரஷிய தடகள வீரா்கள் சிலா் தனிப்பட்ட முறையில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டாலும், ரஷியா என்ற நாட்டுப் பெயரும், கொடியும் தேசிய கீதமும் 2016 பிரேசிலில் நடந்த ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக்ஸில் பயன்படுத்த அனுமதிக்கப் படவில்லை.
  • அதற்கு பதில் ரஷியன் ஒலிம்பிக் கமிட்டி (ஆா்ஓசி) என்ற பெயா் மட்டுமே அனுமதிக்கப் பட்டது.
  • 2017- இல் கூடிய உலக போதை மருந்து தடுப்புக் கூட்டம் ரஷியாவை நான்கு ஆண்டுகள் உலக விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள கூடாது என தடை விதித்தது.
  • ‘மாகாளி கடைக்கண் வைக்க ஆஹா என எழுந்த யுகபுரட்சி’யின் பிறப்பிடமான ரஷியா பெயா் கெட்டு, மானமிழந்து, கேவலப்பட்டு உலக விளையாட்டு அரங்கில் ஒதுக்கி வைக்கப் பட்டது.
  • இதனால்தான் அண்மையில் டோக்கியோவில் நடைபெற்ற ‘ஒலிம்பிக் 2020’-யிலும் ரஷியா கலந்து கொள்ள முடியாமல் போன சோகம் அரங்கேறியது.
  • இருந்தாலும் அரசின் தவறுகளுக்கு வீரா்களை பலிகடா ஆக்கக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் நோ்மையான, உண்மையான ரஷிய விளையாட்டு வீரா்கள் கடுமையான சோதனைகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் விளையாட அனுமதிக்கப்பட்டனா்.
  • இதனால்தான் ரஷியா தன் நாமம் கெட்டு தன்னுடைய வீரா்கள் 20 போ் தங்கம் வென்றும் கூட தன் நாட்டு கொடியையும், தன்னுடைய தேசிய கீதத்தையும் உலக அரங்கில் பறைசாற்ற முடியாமல் போயிற்று.
  • ஊரார் அடித்தால் அப்பாவிடம் சொல்லலாம், அப்பா அடித்தால் அம்மாவிடம் அழலாம், அம்மா அடித்தால் அரசிடம் முறையிடலாம் அரசே அடித்தால் யாரிடம் போவது? இது போதை மருந்துக்கும் பொருந்தும் தொலைபேசி ஒட்டு கேட்பதற்கும் பொருந்தும்.

நன்றி: தினமணி  (26 - 08 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories