TNPSC Thervupettagam

கச்சத்தீவுக்கொரு தீர்வு காண்போம்!

June 8 , 2022 704 days 435 0
  • தமிழ்நாட்டின் கச்சத்தீவை இந்திய அரசு இலங்கைக்குக் கொடுத்து விட்டதால் தமிழ்நாட்டுக் கடலோர மீனவர் சமுதாயம் பேரிழப்பிற்கு ஆளாகிறது. இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க இதுவே தக்க தருணம்.
  • இலங்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்தியா எப்போதும் போல இப்போதும் ஆதரவு கரம் நீட்டி நிற்கிறது. துன்பம் நேரிட்டால் துணை நிற்பது மனிதநேயம் என்பது சரிதான். ஆனால், மனிதநேயம் கொண்டவர்களுக்கு துணைநிற்பது என்பது அதைவிட சரியானது.
  • இலங்கையின் நெருங்கிய அண்டை நாடாக பல நூற்றாண்டு கால உறவு இந்தியாவுக்கு உள்ளது. அங்கு மக்களாட்சி, நிலைத்த தன்மை, பொருளாதார மீட்சி திரும்பிட இந்தியா தனது முழுமையான ஆதரவை அளிக்கிறது. அதற்காக கடந்த மாதம் ரூ. 11,400 கோடி நிதியுதவியை இந்தியா வழங்கியது. மேலும் மருந்து, உணவுப் பொருள்களையும் இலங்கைக்கு அனுப்பியது. தமிழக அரசும் தனது பங்கிற்கு ரூ. 45 கோடி அளவில் உதவிப் பொருட்களை அனுப்பி வைத்தது.
  • இந்திய அரசாங்கத்தினால் "நட்பு நாடு' என்று கூறப்படும் இலங்கை, தமிழ்நாட்டு மீனவர்களை நாள்தோறும் வேட்டையாடுகிறது. இதுவரை ஆயிரக்கணக்கான மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களை தொழில் செய்ய விடாமல் பிடித்து, அடித்து, அவமானப்படுத்தி சிறைபிடிக்கிறது. நம் மீனவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதை இன்னும் எத்தனை காலம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது?
  •  2022 ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் சமயத்தில் 68 தமிழக மீனவர்கள் இலங்கைச் சிறையில் கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தனர். இராமேஸ்வரம் மண்டபம் பகுதியிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 43 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். இதே போல் புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களை படகுகளுடன் அடுத்தடுத்த நாள்களில் சிறைபிடித்துச் சென்றனர்.
  • உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், மத்திய அரசு முயற்சி மேற்கொண்டும் விழா நாள்களில் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. தமிழக அரசுத் தரப்பில், "கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்பவர்களே தவிர, தீவிரவாதிகள் இல்லை. அவர்கள் காரணமின்றி துன்புறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்' என்று கூறப்பட்டது.
  • கடந்த ஆண்டில் மட்டும் இலங்கை கடற்படையினர் 19 முறை நம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பல படகுகள் அழிக்கப்பட்டு ஐந்து மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை 73 படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். அவற்றைத் திருப்பித் தரவில்லை. அன்று முதல் இன்று வரை, தமிழக முதல்வர்கள் இந்திய பிரதமர்களுக்கு கடிதம் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
  • மத்தியில் அன்று காங்கிரஸ் ஆண்டது. இப்போது பாஜக ஆள்கிறது. ஆனாலும் எந்த மாறுதலும் இல்லை. நிலைமை அப்படியே தொடர்கிறது. நமது மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படும்போதுதான் கச்சத்தீவு கவனத்துக்கு வருகிறது. கச்சத்தீவு நமது கட்டுப்பாட்டில் இருந்தபோது நம் மீனவர்கள் தாக்கப்படவில்லை. கச்சத்தீவு இலங்கைக்கு கைமாறிய பிறகுதான் இலங்கைக் கடற்படைக்கு துணிச்சல் வந்திருக்கிறது.
  • கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி. நாட்டின் எந்தவொரு பகுதியையும் வேறு நாட்டிற்கு விட்டுக் கொடுப்பதென்றால், இந்திய அரசியல் சட்டம் 368-ஆம் பிரிவின்படி நாடாளுமன்றத்தில் விவாதித்து, ஒப்புதல் பெற்று அதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும்.
  • இந்த தீவு விஷயத்தில் எந்த விதிமுறையும் பின்பற்றப்படவில்லை. 1974-ஆம் ஆண்டு இந்திய அரசு ஓர் ஒப்பந்தத்தின் வாயிலாக இலங்கைக்கு கச்சத்தீவைக் கொடுத்து விட்டது. நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறாத காரணத்தால் இந்த ஒப்பந்தம் செல்லாது என்று தமிழ்நாட்டின் சார்பாக 1991-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
  • உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு எழுத்துபூர்வமாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் "கச்சத்தீவு எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாமல் இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கச்சத்தீவுக்கு யார் உரிமை கொண்டாடுவது என்ற பிரச்னை இந்தியா - இலங்கை இடையே நீடித்து வந்தது. அதைத் தொடர்ந்து இந்திய-இலங்கை கடற்பகுதியில் சர்வதேச எல்லைக் கோட்டை நிர்ணயித்தபோது கச்சத்தீவு இலங்கை வரம்புக்குள் சென்று விட்டது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • "அந்தத் தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதியின் மீன்பிடிக்கும் உரிமை தமிழ்நாட்டுக்குக் கிடையாது. இருந்தபோதும் மீன் பிடிக்கும்போது இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது' என்றும் பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
  • கச்சத்தீவு யாழ்ப்பாணத்திலிருந்து 70 கி.மீ. தொலைவிலும், இராமேஸ்வரத்திலிருந்து 18 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது. இதன் மொத்தப் பரப்பளவு 1.15 கி.மீ. புனித அந்தோணியார் திருக்கோயில் மட்டுமே அங்கே இருக்கிறது. வேறு எவ்விதக் கட்டுமானமும் இல்லை. 1974-ஆம் ஆண்டு இந்திய பிரதமராக இந்திரா காந்தியும், இலங்கை பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயகவும் இருந்தபோது இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
  • அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரண்சிங் 1974 ஜூலை 23 அன்று கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்துவிட இந்தியா முடிவெடுத்து விட்டதை நாடாளுமன்றத்தில் அறிவித்தார். 1976-இல் மீண்டும் ஒருமுறை இது தொடர்பாக இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
  • இந்திய - இலங்கை கடற்பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்குவதற்கு கச்சத்தீவைக் கொடுத்து சிறிமாவோ பண்டாரநாயக இலங்கையில் செல்வாக்கு பெற்று பதவியில் நீடிப்பதற்காக இந்திரா காந்தி எடுத்த ராஜதந்திர முடிவு என்றும், 40 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் குரல் எழுப்புகின்றன என்றும் அப்போது ஆளும் தரப்பில் கூறப்பட்டது.
  • தமிழ்நாட்டில் அப்போது திமுகதான் அதிகாரத்தில் இருந்தது. திமுக தலைவர் மு. கருணாநிதியே முதலமைச்சராகவும் இருந்தார். அப்போது திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாகவே இருந்தது. இருந்தும் மாநில அரசின் ஒப்புதல் இன்றி மத்திய அரசே ஒரு தரப்பாக முடிவெடுத்தது. இலங்கை நட்பு நாடு என்ற முறையில் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தது.
  • அதன் தொடர்ச்சியாகவே இப்போது இந்த பிரச்னை எழுந்துள்ளது. மாநில அரசு மத்திய அரசிடம் விண்ணப்பம் வைத்துள்ளது. இந்தியாவின் தயவை எதிர்பார்க்கும் ஒரு நாடு இந்தியாவின் வேண்டுகோளை மறுதலிக்காது என்று எதிர்பார்க்கின்றனர்.
  • கச்சத்தீவு தமிழ்நாட்டின் இராமநாதபுரம் பகுதியை ஆண்ட சேதுபதிகளுக்கு வருவாய் தரும் தீவாக முன்பு இருந்தது. 1947-இல் ஜமீன்தாரி ஒழிப்பு சட்டம் வரும் வரை அது அவர்களது ஆட்சியில்தான் இருந்தது. இதற்கு ஆதாரங்களும், ஆவணங்களும் உள்ளன.
  • இந்தத் தீவு முத்துக் குளிக்கவும், மூலிகைச் செடி, கொடி, வேர்களைக் கொண்டு வரவும், மீன்பிடித் துறையாகவும் பயன்பட்டு வந்தது. அந்தத் தீவினை சேதுபதிகளே குத்தகைக்கு விட்டு வருவாய் பெற்று வந்தனர். இவ்வாறு இராமநாதபுரம் சேதுபதிகளின் ஆட்சியில் கச்சத்தீவு இருந்து வந்தது என்பதற்கு 1822 முதல் வரையறையான சான்றுகள் உள்ளன.
  • சேதுபதிக்கு 69 கடற்கரை ஊர்களும், 8 தீவுகளும் உரிமை உடையனவாய் இருந்தன. அந்த எட்டு தீவுகளில் ஒன்றுதான் கச்சத்தீவாகும். 1822ஆம் ஆண்டு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி, சேதுபதியிடம் 69 கடற்கரை ஊர்களில் வணிகம் செய்யவும், தீவுகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தது.
  • இந்திய அரசோடு இராமநாதபுரம் சமஸ்தானம் இணைந்தபோது இராமநாதபுரம் மன்னருக்கு சொந்தமான கச்சத்தீவும் இந்தியாவோடு சேர்ந்துவிட்டது. இந்த உண்மைகளையெல்லாம் மறைத்து விட்டு, கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தமானது என்று உச்சநீதிமன்றத்திலேயே இந்திய அரசாங்கம் கூறியுள்ளது.
  • இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரிஸ், புதுதில்லி வந்தபோது செய்தியாளர்களை சந்தித்தார். "கச்சத்தீவை இலங்கை வசம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தில் முறைப்படி அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்திதான் கையொப்பமிட்டுள்ளார். அதன்படி சர்வதேச எல்லைக்குட்பட்ட கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒப்பந்தத்தில் இலங்கை மீனவர்களுக்கும் இலங்கைக்கும் கச்சத்தீவில் உள்ள உரிமைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் இந்திய அரசின் நிலை தெளிவாக உள்ளது. எனவே கச்சத்தீவை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை' எனத் தெரிவித்தார்.
  • இந்திய அரசின் பிரமாண வாக்குமூலம் இதையும் விஞ்சி விட்டது.
  • மீனவர் பிரச்னை தலைதூக்கும்போதெல்லாம் கச்சத்தீவு பிரச்னையும் தலையெடுக்கும். அந்த அளவுக்கு அவை இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. அதை இரு நாடுகளும் கவனத்தில் கொள்வது நல்லது.
  • கச்சத்தீவு ஆண்டாண்டு காலமாக தமிழகத்துக்கே சொந்தமாக இருந்து வந்தது. அதுவே தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு எல்லையாகவும் இருந்து வந்தது. அதனை இந்திய அரசு, 1974-ஆம் ஆண்டு இலங்கைக்கு தூக்கிக் கொடுத்து விட்டது. அப்போது முதலே மீனவர்களின் பிரச்னை தொடங்கி விட்டது.
  • 1974-ஆம் ஆண்டு ஒப்பந்தம் கச்சத்தீவை இலங்கைக்கு அளித்தது. 1976-ஆம் ஆண்டு ஒப்பந்தம் கச்சத்தீவு பகுதிக்கு தமிழக மீனவர்கள் போகக் கூடாது, மீன் பிடிக்கவும் கூடாது. ஆண்டுதோறும் நடக்கும் அந்தோணியார் திருவிழாவுக்கும் மக்கள் போகக் கூடாது என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
  • 1991-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியை ஏற்றிவிட்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கச்சத்தீவை மீட்கப்போவதாக சபதம் செய்தார். "தமிழக மீனவர் நலன் காக்க கச்சத்தீவை மீட்போம்' என்ற முழக்கத்தை முன்வைத்தார். 1991 அக்டோபர் 4-ஆம் நாள், தமிழக சட்டப்பேரவையில் கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை இப்போது மறுபடியும் எழுந்துள்ளது. தமிழக மீனவர்களின் வாழ்வாதார உரிமையைத்தான் நாம் கேட்கிறோம். காங்கிரஸ் ஆட்சி செய்த தவறைத் திருத்தம் செய்ய அடுத்தடுத்து வரும் ஆட்சிகளுக்கு அதிகாரம் இருக்கிறது. அதனை நிரூபிக்க இது ஒரு வாய்ப்பு. இப்போதே கச்சத்தீவுக்கொரு தீர்வு காண்போம்.

நன்றி: தினமணி (08 – 06– 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories