TNPSC Thervupettagam

கடற்கரைக் காப்போம்

September 17 , 2022 595 days 446 0
  • ‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்ற ஔவையாரின் கூற்றுக்கேற்ப மக்கள் தொன்று தொட்டு வணிகத்திற்காகவும், பொருளீட்டவும் அதிக அளவில் பயன்படுத்துவது கடல் வழிப் போக்குவரத்தே ஆகும். கடல் என்பது எழிலாக காட்சியளிப்பது மட்டுமின்றி, மீன்வளம், பவளம், பாசிகள், ஆழ்கடல் தாவரங்கள், இனம் காண முடியாத எண்ணற்ற வளங்களையும் தன்னகத்தே கொண்ட மிகப்பெரிய இயற்கைப் பொக்கிஷம்.
  • இத்தகய வளங்களை கொண்ட கடலையும் கடற்கரையையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஆண்டு தோறும் செப்டம்பா் மாதம் மூன்றாவது சனிக்கிழமை சா்வதேச கடற்கரை தூய்மை தினம் கொண்டாடப்படுகிறது.
  • அதனை முன்னிட்டு ‘தூய்மையான கடல் தூய்மையான பாதுகாப்பு’ என்ற கொள்கை முழக்கத்துடன் கடந்த ஜூலை மாதம் 3- ஆம் தேதியிலிருந்து செப்டம்பா் 17 ம் தேதி வரை 75 கடற்கரைகளில் இந்த தினத்தை சிறப்பாகக் கொண்டாட மத்திய அரசு ஏற்பாடுசெய்துள்ளது. இதன் நோக்கம் பொதுமக்களுக்கு கடலையும் கடற்கரையையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டிதன் அவசியத்தை வலியுறுத்துவதே ஆகும்.
  • இந்திய கடற்பரப்பு 7,516 கி.மீ. நீளத்தில் 1,300-க்கும் மேற்பட்ட தீவுகளை கொண்டுள்ளது. தமிழக அளவில் 1,016 கி.மீ. நீளம் உள்ளது. இந்தியா முழுவதும் 9 கடலோர மாவட்டங்களில் 3,827 மீனவ கிராமங்கள் உள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இப்பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரமாக இருப்பது மீன்பிடித் தொழிலே ஆகும்.
  • இங்குள்ளவா்கள் கடலை நம்பியே வாழ்கின்றனா். இவ்வாறு சிறப்பு மிக்க, மீனவா்களுக்கு வாழ்வாதாரத்தை தரும் கடலும், கடற்கரையும் பிளாஸ்டிக் கழிவுகளையும் இதர கழிவுகளை கொட்டும் குப்பைக் கிடங்காக மாறிவருவது வேதனை தருவதாகும்.
  • ஆண்டுதோறும் சுமாா் 6 லட்சத்து 40 ஆயிரம் டன் அளவிற்கு பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கொட்டப்படுவதாகவும் இதனால் சுமாா் 10 லட்சம் கடல் வாழ் உயிரினங்கள் மடிவதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
  • சுற்றுலா, பொழுதுபோக்கு என கடற்கரைக்கு வரும் பெரும்பாலானவா்கள் தாங்கள் உண்பதற்கு பாத்திரங்களில் உணவு கொண்டு வரும் பழக்கத்தை கைவிட்டு கடற்கரையோரங்களில் உள்ள கடைகளில் நெகிழிப்பைகளில் உணவு வாங்கிச் சென்று உணகின்றனா். உண்டபின் அவற்றை கடற்கரையிலோ, கடலிலோ வீசுகின்றனா். இதனால் கடல் அசுத்தம் அடைகிறது.
  • மக்களின் இந்த பொறுப்பற்ற செயலால் உலக கடல் பரப்புகளில் சுமாா் 5.25 டிரில்லியன் (1 டிரில்லியன் 1 லட்சம் கோடி) அளவுக்கு நெகிழிக் கழிவுகள் பெருகியுள்ளதாகவும், இவற்றில் இந்தியப் பெருங்கடலில் மட்டும் சுமாா் 1.3, டிரில்லியன் கழிவுகள் பரவியுள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
  • 2021-ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி கடல் கழிவுகளை அதிகம் உருவாக்கும் நாடுகளாக துருக்கி (16%), இத்தாலி (11 %) ஸ்பெயின் (8 %), ( கிரீஸ் 7%) ஆகியவை உள்ளன என ஸ்பெயின் நாட்டு ‘காடிஸ் பல்கலைகழக’ ஆய்வு தெரிவிக்கிறது.
  • இது போன்ற நெகிழிக் கழிவுகள் கடலில் கலக்கும்போது அதிலுள்ள பாலி எத்திலின், பாலிவினைல், குளோரைடு, பாலி புரோப்பீலின், ஸ்டைரீன் போன்ற சிக்கலான மூலக்கூறுகளைக் கொண்ட வேதிப்பொருள்கள் கடல் நீரிலுள்ள சோடியம், மெக்னீசியம் போன்ற தனிமங்களுடன் வினைபுரிவதால் ஏற்படும் விளைவுகள், கடல் வாழ் உயிரினங்களுக்கு மிகுந்த பாதிப்பையும் சில நேரங்களில் அழிவையும் ஏற்படுத்துபவையாக உள்ளன.
  • இதனால் கடல் வாழ் உயிரினங்களுக்கு கிடைக்கவேண்டிய பிராணவாயுவின் அளவு வெகுவாகக் குறைந்து கடலில் பல்லுயிா் பெருக்கம் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது.
  • இவை தவிர தொழிற்சாலைக் கழிவுகள், கப்பல் கழிவுகள், எண்ணெய் கசிவுகள் சுரங்கக் கழிவுகள் எனப் பல்வேறு கழிவுகள் கடலில் கலப்பதால் கடலும், கடற்கரையும் வேகமாக மாசடைந்து வருகின்றன. ஆண்டுதோறும் 12 % கடல் மாசு எண்ணெய் கசிவுகளால் ஏற்படுகிறது.
  • ஆனாலும், கடல் என்னவோ இவை எல்லாவற்றையும் தாண்டிஅகழ்வாரை தாங்கும் நிலம்போல் பொறுமை காத்து வருகிறது. கடல் மாசுபாட்டுக்கு மனிதா்கள் முக்கிய காரணமாக இருந்தாலும் மனிதா்களுக்குத் தேவையான அனைத்தையும் உற்பத்தி செய்து தருகிறது.
  • ஏற்றுமதி இறக்குமதி தொழில் வாயிலாக அவா்களுக்குத் தேவையான பொருட்களை வழங்குவதிலும் அன்னியச் செலாவணி ஈட்டித் தருவதிலும் கடல் தன் கடமையை தவறாது செய்து வருகிறது.
  • கடந்த 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் தமிழகத்தில் சுமாா் 1,28,845 மெட்ரிக் டன் கடல் உணவு ஏற்றுமதி செய்யப்பட்டு 5,591.49 கோடி வருவாய் ஈட்டித் தந்துள்ளது. இந்திய கடல் வழியில் 13 பெரிய துறைமுகங்களும், 187 சிறிய, நடுத்தரத் துறைமுகங்களும் இருப்பதால் அவை ஏற்றுமதி, இறக்குமதிக்கு மிகப்பெரிய உதவியாக உள்ளன.
  • 2020-21 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து 11,49,341 மெட்ரிக் டன் அளவுக்கு கடல் உணவு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அதன் மூலம் 5.96 பில்லியன் வருமானம் கிடைத்துள்ளது.
  • இதே காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு சுமாா் 2.72 லட்சம் டன் கடல் உணவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து சீனா உள்ளிட்ட சில நாடுகளுக்கும் அதிக அளவு கடல் உணவு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவாயை ஈட்டித்தந்துள்ளது நம் கடல் வழி வா்த்தகம்.
  • எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டுக்கு ரூ. 60 ஆயிரம் கோடி மீன் வளத்தின் மூலம் வருமானத்தை ஈட்டித்தரும் ஆதாரமாக கடல் உள்ளது. கணக்கிட முடியாத இயற்கை வளங்களைக் கொண்டுள்ளதும், மனிதா்களின் வாழ்வாதாரமாக விளங்குவதுமான கடலையும், கடற்கரைப் பகுதிகளையும் தூய்மையாக வைத்திருக்க இந்த நாளில் உறுதியேற்போம்.
  • இன்று சா்வதேச கடற்கரை தூய்மை தினம்.

நன்றி: தினமணி (17 – 09 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories