TNPSC Thervupettagam

கட்டுக்குள் வரட்டும் அரசு ஊழியர்க்கான செலவு

May 16 , 2022 705 days 471 0
  • தமிழக அரசு, 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அரசு ஊழியர்களுக்கு 2022 ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளது. இதனால் அரசுக்கு வருடம் ரூ.6,500 கோடி அதிகச் செலவாகும் எனத் தெரிகிறது. அரசு ஊழியர் சங்கங்கள் சிறு முணுமுணுப்புடன் இதை ஏற்றுக்கொண்டன. 2022-23ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், தமிழக நிதியமைச்சர், அரசு ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியங்கள், அரசின் செலவுத் திட்டத்தில் 37.9%ஆக இருக்கும் எனத் திட்டமிட்டுள்ளார். ஆனால், அது கொஞ்சம் புத்திசாலித்தனமான கணக்கு.
  • சரியான கணக்கு என்பது, மாநில அரசின் வருவாயில் எவ்வளவு அரசு ஊழியர்களுக்கு ஊதியமாகச் (ஒய்வு ஊதியமும் சேர்த்து) செலவிடப்படுகிறது என்பதே ஆகும்; இங்கே வருவாய் வேறு; செலவுத் திட்டம் வேறு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 2022-23ஆம் ஆண்டு தமிழக அரசின் வருவாய் ரூ.2,31,000 கோடி எனத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த வருவாயுடன் ஒப்பிட்டால், ஊதியச் செலவுகள் 46.5% ஆகும். கிட்டத்தட்ட வருவாயில் பாதி அரசு ஊழியர்களின் ஊதியத்துக்காகச் செலவாகிறது.
  • நாட்டிலேயே மகாராஷ்டிரத்துக்கு அடுத்து, அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்துக்காகச் செலவிடும் மாநிலம் தமிழகம். இது ஒரு பெரிய தொகை. இந்தியாவில் மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்று என்பதால், தமிழக அரசு இதை ஓரளவு சமாளித்துவருகிறது.
  • இந்த அளவு நிர்வாகச் செலவுகள் சரியான அளவுதானா, இத்தகைய நிர்வாகச் செலவு நீண்ட கால நோக்கில் ஆரோக்கியமானதா என்பதைப் பொதுவெளியில் விவாதிக்க வேண்டிய தேவை உள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சுமார் 16 லட்சம் பேர் இருக்கிறார்கள். ஓர் ஊழியர் வீட்டில் 4 பேர் என வைத்துக்கொண்டால், இது தமிழக மக்கள்தொகையில் 8% ஆகும்.
  • இந்தியா விடுதலை பெற்ற காலத்தில், இந்தியர்களின் சராசரி ஆயுள் 30 ஆண்டுகள். ஆனால், தற்போது இந்தியர்களின் சராசரி ஆயுள் 73 ஆண்டுகள். ஊழியர்கள் எவ்வளவு ஆண்டுகாலம் பணிபுரிகிறார்களோ, அதற்கு இணையான காலம் ஓய்வூதியம் வாங்கும் நிலை வந்துள்ளது. இது அரசின் ஓய்வூதியச் செலவினங்களை அதிகரிக்கிறது. இந்த நிலையில்தான், பெரும்பாலான அரசுகள் செலவுகளைக் கட்டுப்படுத்த, புதிய ஓய்வூதியக் கொள்கைகளைப் பின்பற்றிவருகின்றன.
  • புதிய ஓய்வூதியக் கொள்கையைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத்துக்கான குரல்கள் தமிழகத்தில் கேட்கின்றன. நியாயமாகப் பார்த்தால், அரசு ஊழியர்களின் ஊதியத்திலேயே கை வைக்க வேண்டிய நிலையிலேயே பொருளாதாரம் இருக்கிறது.

கவலை தரும் வருவாய்ப் பற்றாக்குறை

  • பத்தாண்டுகளுக்கு முன்பு, ரூ.2,000 கோடி என இருந்த வருவாய் உபரி, கரோனா ஆண்டில் (2020-21) ரூ.62,000 கோடி வருவாய்ப் பற்றாக்குறையாக உயர்ந்தது. இந்த ஆண்டு பற்றாக்குறை ரூ.55,000 கோடியாகக் குறைந்துள்ளது. வரும் ஆண்டில் ரூ.52,000 கோடியாகக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலை மிகவும் கவலை தரக் கூடியதாகும்.
  • கரோனாவுக்கு முந்தைய இரு வருடங்களில் (2017-18, 2018-19), இந்திய மாநிலங்களின் சராசரி வருவாய்ப் பற்றாக்குறை பொருளாதாரத்தில் 0.1% ஆக இருந்தபோது, தமிழகத்தின் வருவாய்ப் பற்றாக்குறையானது, 1.5%, 1,4% ஆக அபாயகரமான அளவில் இருந்தது.
  • நிதியமைச்சர் தனது வெள்ளை அறிக்கையில், 2006ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையிலான 7 ஆண்டுகளில், 5 ஆண்டுகள், தமிழகம் வருவாய்ப் பற்றாக்குறையின்றி இருந்தது எனக் குறிப்பிட்டிருந்தார். மீதி இரண்டு ஆண்டுகளில் வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணம், 6ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்பேரில், அரசு ஊழியர் ஊதியம் அதிகரித்ததே ஆகும்.
  • 2013-14ஆம் ஆண்டு, வருவாய்ப் பற்றாக்குறையானது, மாநிலப் பொருளாதாரத்தில் 0.18% ஆக இருந்தது. ஆனால், 2019-20 (கரோனாவுக்கு முன்பு), 1.95% ஆக உயர்ந்துள்ளது. அதாவது 6 ஆண்டுகளில், வருவாய்ப் பற்றாக்குறையானது 10 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த அளவு வருவாய்ப் பற்றாக்குறை என்பது நீண்ட கால நோக்கில் நல்லதல்ல என்பதையே அரசின் வெள்ளை அறிக்கை மிகத் தெளிவாகக் கூறுகிறது.
  • அதாவது, 2017-18, 2018-19 காலகட்டத்தில், தமிழகத்துடன் ஒப்பிடக் கூடிய மாநிலங்களான மகாராஷ்டிரம், குஜராத் போன்ற மிகக் குறைவான வருவாய்ப் பற்றாக்குறையில் இருந்துள்ளன. 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில், தமிழகத்தின் வருவாய்ப் பற்றாக்குறையானது மொத்த நிதிப் பற்றாக்குறையில் 52%ஆக அதிகரித்திருக்கிறது.
  • அதேபோல், 2005-2006 ஆண்டில், தமிழக வரி வசூல், தமிழகப் பொருளாதாரத்தில் 12.49%ஆக இருந்தது. 2020-21ஆம் ஆண்டில், இந்த சதவீதம் 8.70%ஆகக் குறைந்துள்ளது. (30% வரி வசூல் வீழ்ச்சி). பொருளாதாரம் வளர்ந்தாலும், வரி வசூல் சதவீதம் வீழ்தல் என்பது நிர்வாகச் சீர்கேடுகளைச் சுட்டுகின்றது.
  • வருவாய்ப் பற்றாக்குறை அதிகமாக இருக்கும்போது, மாநிலம் தன் வருடாந்திரச் செலவினங்களுக்கே கடன் வாங்கிச் செலவிட நேர்கிறது. வருவாய், செலவுகளைவிட உபரியாகவோ அல்லது மிகக் குறைவான பற்றாக்குறையாகவோ இருக்கையில், ஒரு மாநிலம் முதலீட்டுக்காக மட்டுமே கடன் வாங்கும் நிலை உருவாகிறது. முதலீடுகள் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். பொருளாதார வளர்ச்சி மாநிலத்தின் வரி வருவாயை அதிகரிக்கும். அவ்வாறான பொருளாதார மாதிரிதான் நீடித்து நிலைக்கும்.

முன்செல்லும் வழி

  • மாநிலத்தின் வருவாயில் பாதி அரசு ஊழியர்களுக்கான ஊதியம் (மற்றும் ஓய்வூதியம்) என்பது நீடித்து நிலைக்கக் கூடியதல்ல. இதைச் சீரமைக்கும் வழிகளை அரசு மிகத் தீவிரத்துடன் முன்னெடுக்க வேண்டும். அதற்கான சில வழிமுறைகளைக் காண்போம்.

அ) வெள்ளை அறிக்கை

  • தமிழகம் போன்ற மாநிலத்துக்கான சரியான நிர்வாக அமைப்பையும், ஊழியர் தேவையையும் பற்றிய ஒரு வெள்ளை அறிக்கை முதலில் தயாரிக்கப்பட வேண்டும். அதே போல, தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதியக் கணக்கீட்டு முறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

ஆ) செயல்திறன் மேம்பாடு

  • சாதாரண மனிதர்களைவிட அதிக ஊதியம் பெறும் அரசு ஊழியர்களின் மனநிலையானது நிர்வாகம் - அதிகாரம் என்னும் தளங்களோடு பெருமளவில் நின்றுவிடுகிறது. அது பெருமளவு மாறி, சேவை என்னும் மனநிலைக்கு வர வேண்டும்.
  • அரசு நிர்வாகத்தில் இதற்கான முன்னெடுப்பை இந்த அரசு ஆரம்பித்திருப்பதைக் காண்கிறோம். அரசு ஊழியர்களுக்கான பயிற்சி, மேம்பாடு போன்ற தளங்களில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை.
  • அதேபோல, அரசின் சேவை தேவைப்படும் மக்களுக்கு எளிதில் சென்றடையும் புதிய திட்டங்கள் உருவாக்கப்படுவதையும் (இல்லம் தேடி மருத்துவம்) காண முடிகிறது. சாதாரண மக்களுக்கான அரசின் சேவைகளில் பல இன்று மக்களைத் தேடிச் சென்றடையும் வகையில் உருவாக்கும் முனைப்பில் பல மாநில அரசுகள் உள்ளன. தமிழக அரசும் அந்தத் திசையில் திட்டங்களை உருவாக்க வேண்டும்.
  • தொழில்நுட்பத்தின் உதவியுடன் இவற்றைக் குறைவான செலவில் செய்யும் வழிகள் உருவாக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, மாநிலம் எங்கும் இயங்கும் 108 ஆம்புலன்ஸ் அப்படி ஒரு அருமையான திட்டம்.
  • செயல்திறன் மேம்பாடு என்பது, செலவு செய்யும் பணத்துக்கான சரியான பயன் என்பதேயாகும். இதனால், மக்கள் நலம் மேம்பட்டு பொருளாதார வளர்ச்சியின் பலன் மக்களுக்குப் போய்ச் சேரும். நவீன தொழில்நுட்பம் மற்றும் திட்ட உருவாக்கம் மூலம், செயல்திறனை மேம்படுத்துகையில், செலவுகளை மிச்சம் செய்ய முடியும்.

இ) ஒருங்கிணைந்த நிர்வாகம்

  • ஆனால், இந்த மாற்றங்கள் எளிதானவை அல்ல. ஒரு முழுமையான அணுகுமுறையின் மூலம், நீண்ட கால நோக்கில் மட்டுமே இவற்றைச் செய்ய முடியும்.
  • தொடர்ந்த அதிகப் பொருளாதார வளர்ச்சி.
  • வரி வசூலைப் பொருளாதார அளவில் 12.5%ஆக உயர்த்துதல் (இதில் ஜிஎஸ்டி காரணமாக தமிழகத்தின் வரி வசூல் குறைந்திருக்கிறதா என்னும் ஒரு ஆய்வுசெய்யப்பட வேண்டியது மிக முக்கியம். ஏனெனில், ஜிஎஸ்டியினால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டிருந்தால், அதை வேறு தளங்களில் முன்னெடுக்க வேண்டியிருக்கும்).
  • மக்கள் நலத் திட்டங்களை நவீன தொழில்நுட்பம் மூலம் குறைந்த செலவில் நிறைவேற்றுதல் – செயல்திறன் மேம்பாடு.
  • சரியான, செயல்திறன் மிக்க நிர்வாக அமைப்பு. அரசு நிர்வாகத்தை சேவை என்னும் மனப்பான்மையுடன் அணுகுதல்.
  • இந்த நான்கு புள்ளிகளும் ஒன்றிணைந்த ஓர் அணுகுமுறையை, ஐந்தாண்டு கால நோக்கில் செயல்படுத்தினால் மட்டுமே, இன்று இருக்கும் வருவாய்ப் பற்றாக்குறையைச் சரிசெய்ய முடியும். இல்லையெனில், தமிழகப் பொருளாதார வளர்ச்சியும், மேம்பாடும் பாதிக்கப்பட்டு, தமிழகத்தின் கடந்த கால வளர்ச்சி என்பது பழங்கதையாகப் போய்விடும்!
  • நன்றி: அருஞ்சொல் (16 – 05 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories