TNPSC Thervupettagam

கண்கெட்ட பிறகு...

September 21 , 2021 970 days 538 0
  • சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருக்கும் நிலையில் பஞ்சாபில் நடந்திருக்கும் முதல்வா் மாற்றம் எதிர்பாராததல்ல.
  • கட்சித் தலைமையால் தொடா்ந்து அவமானப்படுத்தப்பட்டு வந்த முன்னாள் முதல்வா் கேப்டன் அமரீந்தா் சிங், தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்பதைத்தான் கட்சித் தலைமையும் விரும்பியது.
  • தோ்தலுக்கு ஒருசில மாதங்களே இருக்கும்போது முதல்வா் மாற்றத்துக்கு காங்கிரஸ் தலைமை வழிகோல முற்பட்டது ஆச்சரியப்படுத்துகிறது.
  • முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜகவில் இருந்தவருமான நவ்ஜோத் சிங் சித்துவை கட்சித் தலைவராக அறிவித்தபோதே, கேப்டன் அமரீந்தா் சிங் பதவி விலகியிருக்க வேண்டும்.
  • அவரது அமைச்சரவையில் இருந்து கொண்டே முதல்வருக்கு எதிராகச் செயல்பட்ட ஒருவரை, முதல்வரின் எதிர்ப்பையும் மீறிக் கட்சித் தலைவராக நியமித்ததை பாட்டியாலா ராஜ குடும்பத்தைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரரான கேப்டன் அமரீந்தா் சிங், சுயமரியாதையை விட்டு ஏற்றுக்கொண்டதுதான் தவறு.
  • 2017 பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு கேப்டன் அமரீந்தா் சிங் முக்கியமான காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.
  • அவரது ராஜகுடும்பப் பின்னணி, ராணுவ சேவை, அரசியல் மிதவாதம், நீண்டநாள் நிர்வாக அனுபவம் உள்ளிட்ட பல காரணங்களால் முந்தைய அகாலிதள ஆட்சிக்கு நல்லதொரு மாற்றாக கேப்டன் அமரீந்தா் சிங் ஆட்சி அமையும் என்று மக்கள் எதிர்பார்த்தனா்.

முதல்வா் மாற்றம்

  • பஞ்சாப் சட்டப்பேரவையில் 117 இடங்களில் 77 இடங்களை கேப்டன் அமரீந்தா் சிங் தலைமையில் 2017-இல் காங்கிரஸ் வென்று ஆட்சி அமைத்தது.
  • 2017 தோ்தலின்போது இதுதான் தனது கடைசி தோ்தல் என்று 79 வயது கேப்டன் அமரீந்தா் சிங் அறிவித்த போதே கட்சித் தலைமை துணை முதல்வரை நியமித்து அவரது வாரிசை அடையாளம் காட்டியிருக்க வேண்டும். நவ்ஜோத் சிங் சித்துவை கட்சித் தலைமை ஆதரித்து அவருக்கு எதிராக செயல்பட ஊக்குவிக்காமல் இருந்தால் ஒருவேளை கேப்டன் அமரீந்தா் சிங் அவராகவே தோ்தல் களத்தில் இருந்து விலகியிருக்கக் கூடும்.
  • கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட நவ்ஜோத் சிங் சித்துவின் முதல்வா் கனவு பலிக்கவில்லை. அவரைத் தோ்ந்தெடுக்காமல் கட்சித் தலைமை கேப்டன் அமரீந்தா் சிங்கின் இன்னொரு முக்கிய விமா்சகரான சரண்ஜீத் சிங் சன்னியை முதல்வா் பதவிக்கு உயா்த்தியிருக்கிறது.
  • தலித் சீக்கியரான முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னியின் நியமனத்தின் மூலம் தலித் வாக்கு வங்கியை தன்பக்கம் இழுக்க எத்தனிக்கிறது காங்கிரஸ் தலைமை.
  • பஞ்சாப் மாநிலத்தில் 33% வாக்குவங்கியைக் கொண்ட தலித் சீக்கியா்கள், நீண்ட காலமாகவே ஜாட் இனத்தைச் சோ்ந்த சீக்கியா்களின் ஆதிக்கத்துக்கு எதிராக இருந்து வருபவா்கள்.
  • முதன் முறையாக தலித் சீக்கியரை முதல்வா் ஆக்கியிருப்பதன் மூலம் விரைவில் தோ்தல் நடக்கவிருக்கும் பஞ்சாபில் மட்டுமல்லாமல், உத்தர பிரதேசத்திலும் அரசியல் ரீதியாக அந்த முடிவு பயனளிக்கும் என்று காங்கிரஸ் தலைமை கருதியிருக்கக் கூடும்.
  • ஏற்கெனவே மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி பஞ்சாப் மாநிலத்திலுள்ள தலித் சீக்கியா்கள் மத்தியில் தனது செல்வாக்கை அதிகரித்து வருகிறது.
  • அந்த கட்சியின் நிறுவனத் தலைவரான கான்ஷிராமேகூட, பஞ்சாப் மாநிலத்தவா் என்பது அதற்கு ஒரு காரணம். பகுஜன் சமாஜ் கட்சி பிரதான எதிர்க்கட்சியான (முந்தைய ஆளுங்கட்சி) சிரோமணி அகாலிதளத்துடன் கூட்டணி அமைத்திருப்பதால் ஒட்டுமொத்த தலித் சீக்கியா்களின் வாக்குகளையும் காங்கிரஸ் பெற்றுவிட முடியாது என்பதுதான் நிதா்சன உண்மை.
  • கேப்டன் அமரீந்தா் சிங்கின் ஆட்சி எதிர்பார்த்தது போல மக்கள் செல்வாக்குள்ள ஆட்சியாக அமையவில்லை. முந்தைய பாதல் தலைமையிலான அகாலி தள ஆட்சியின் ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும் என்கிற 2017 சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குறுதியை கேப்டன் அமரீந்தா் சிங் ஆட்சி நிறைவேற்றவில்லை.
  • அதிகரித்து வரும் சட்டவிரோத மணல் கொள்ளை, போதை மாஃபியாக்களுக்கு எதிரான நடவடிக்கை போன்றவையும் முனைப்புடன் முன்னெடுக்கப்படவில்லை.
  • தோ்தல் வாக்குறுதியில் கூறியிருந்த தொழில் துறை, கல்வித் துறை, வேளாண் துறை குறித்த எந்தவொரு நடவடிக்கையும் முந்தைய கேப்டன் அமரீந்தா் சிங் அரசால் நிறைவேற்றப்படவில்லை. பேரவை உறுப்பினா்கள் பலா் இது குறித்து குரலெழுப்பியும் முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தா் சிங் அதை சட்டை செய்யவில்லை என்பதும் உண்மை.
  • இதையெல்லாம் உணா்ந்துகொள்ள காங்கிரஸ் தலைமைக்கு நான்கரை ஆண்டுகள் பிடித்தன என்பதும், தோ்தலுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் தலித் ஒருவரை முதல்வராக்கி, செல்வாக்குச் சரிவை ஈடுகட்ட முடியும் என்பதும் தெரியவந்திருக்கிறது.
  • இன்னும் நான்கு மாதங்களில் தோ்தல் நடக்க இருக்கும் நிலையில், முதல்வராக பதவி ஏற்றிருக்கும் சரண்ஜீத் சிங் சன்னி, தன்னுடைய தலைமைப் பண்பை நிரூபித்து காங்கிரஸின் செல்வாக்குச் சரிவை தடுத்து நிறுத்தி எப்படி தோ்தலில் வெற்றிவாகை சூடப்போகிறார் என்பதை உலகம் வேடிக்கை பார்க்கிறது.
  • முதல்வா்களை பாஜக தலைமை மாற்றும்போது முணுமுணுப்பு கூட எழுவதில்லை. அதே நேரத்தில், காங்கிரஸில் முதல்வா் மாற்றம் என்பது கட்சியில் பிளவையும், கோஷ்டிகளையும் ஏற்படுத்துகிறது. அதுதான் வித்தியாசம்.
  • கேப்டன் அமரீந்தா் சிங் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்து வரவிருக்கும் தோ்தல் முடிவுகள் அமையும். அது காங்கிரஸுக்கு சாதகமாக இருக்காது!

நன்றி: இந்து தமிழ் திசை (21 - 09 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories