TNPSC Thervupettagam

கரோனா காலத்தில் யோகா: உலகளாவிய பெருங்கவனம்

June 21 , 2021 1062 days 481 0
  • ஏழாவது ஆண்டாக இன்று சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது என்றாலும், கரோனா பெருந்தொற்றின் காரணமாக இந்த ஆண்டில்தான் அதன் மீது பெருங்கவனம் கூடியிருக்கிறது.
  • 2014-ல் பிரதமர் நரேந்திர மோடி ஐநா அவையில் உரையாற்றியபோது விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்தத் தினம் பின்பற்றப்பட்டுவருகிறது.
  • வட அரைக்கோளத்தின் மிக நீண்ட பகல் பொழுதைக் கொண்ட நாள் என்பது இந்த நாளைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம்.
  • தற்போது கரோனா தொற்றுக்கு ஆளானவர்களுக்கும் அதிலிருந்து மீண்டவர்களுக்கும் அளிக்கப் படும் சிகிச்சைகளுடன் கூடவே யோகப் பயிற்சிகளும் பரிந்துரைக்கப் படுகின்றன.
  • பொதுமுடக்கத்தின் காரணமாக வீட்டுக்குள்ளேயே பெரும்பாலானவர்கள் முடங்கிக் கிடக்கும் நிலையில் மூச்சுப் பயிற்சிகள் உடலுக்கும் மனதுக்கும் அளிக்கும் பாதுகாப்பு அனுபவபூர்வமாக உணரப்படுகிறது.
  • வீட்டிலிருந்து வேலைசெய்வதும், பொருளாதாரத் தேக்க நிலையும் மன உளைச்சலுக்கு இட்டுச் சென்றுவிடாதபடி காக்கும் எளியதொரு வாய்ப்பாகவும் யோகா பார்க்கப்படுகிறது.
  • உயர் ரத்த அழுத்தத்தாலும் சுவாசப் பிரச்சினைகளாலும் ஏற்கெனவே பாதிக்கப் பட்டிருப்பவர்கள் கரோனாவால் தாக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன; யோகா அவர்களது நோய் எதிர்ப்பாற்றலை வலுவாக்குகிறது.
  • பெருந்தொற்றின் விளைவாக நுரையீரல் பாதிக்கப்பட்டு உடல்நலம் தேறிவருபவர்களுக்கு யோகப் பயிற்சிகள் நல்ல பலனளிக்கின்றன.
  • கரோனா சிகிச்சைகளில் பிரணாயாமத்தின் பங்கு குறித்தும் பயன்கள் குறித்தும் மருத்துவ ஆய்விதழ்களில் கட்டுரைகள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன.
  • ஆனால், யோகா வகுப்புகளில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியிருப்பதால், முன்புபோல இப்போது வகுப்புகள் நடைபெறுவதில்லை. அதன் காரணமாக இணையவழி யோகா வகுப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது.
  • யோகாவின் பயன்களைக் குறித்து இந்தியாவுக்கு வெளியே சர்வதேச அளவிலும் இப்போது பேசப் படுகிறது.
  • பெருந்தொற்றுக்கு ஆளானவர்கள் யோகப் பயிற்சியை மேற்கொள்ளுமாறு கடந்த மே மாதம் பிரிட்டன் இளவரசர் சார்லஸ் கேட்டுக்கொண்டதை அதற்கு ஒரு உதாரணமாகச் சொல்லலாம்.
  • கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவர் யோகாவின் மீது உலகளாவிய கவனத்தை ஈர்த்து வருகிறார்.
  • யோகம், இந்தியப் பெருநிலத்தின் அறுபெரும் மெய்யியல் கோட்பாடுகளில் ஒன்று. அனைத்துத் தத்துவங்களுக்கும் பொதுவானது.
  • சமய வேறுபாடுகளைக் கடந்து நிற்பது; தமிழ் மெய்யியலின் இயக்குவிசையும் அதுவே. சாத்திரங்களுக்கும் தோத்திரங்களுக்கும் பொதுவில் நிற்கும் திருமந்திரமானது யோகத்தையே முன்னிறுத்துகிறது.
  • பயிற்றுவிக்கும் முறைகள் ஆசிரியர்களுக்கு ஏற்ப காலம்தோறும் மாறிக்கொண்டே இருந்தாலும், யோகத்தின் அடிப்படைகள் அதே உயிர்ப்போடு இன்னும் இருக்கின்றன.
  • இறை மறுப்பாளர்களும் ஏற்றுக்கொள்ளும் மெய்யியல் கோட்பாடு யோகம் மட்டுமே. இந்தியா உலகுக்கு அளித்த அறிவுக்கொடை. கரோனா பெருந்தொற்று அதன் அவசியத்தை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது புரிய வைத்திருக்கிறது.
  • ‘நலமாக இருப்பதற்கு யோகா’ என்பது இந்த ஆண்டின் சர்வதேச யோகா தினத்துக்கான மையப் பொருள். இழுத்துவிடுகிற மூச்சின் மீதான முழுக் கவனமும், மனதை ஒருமுகப் படுத்திப் பயிற்சி கொள்வதும் அன்றாடப் பழக்கங்களில் ஒன்றாக இருக்கட்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (21 - 06 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories