TNPSC Thervupettagam

கழிப்பறை பயன்பாடு அறிவோம்

August 27 , 2021 982 days 512 0
  • 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்னும் பழமொழி நாம் என்றுமே நினைவில் கொள்ள வேண்டியது.
  • தூய்மையே நம் ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படை. கிராமங்களிலும் நகரங்களிலும் மக்கள் கழிப்பறையை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்னும் அறிவுரையை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசும் மாநில அரசும் ஊடகங்கள் மூலம் தினமும் வலியுறுத்தி வருகின்றன.
  • கரோனா தீநுண்மியின் ஆதிக்கத்திலிருந்து இன்னும் நாம் முழுமையாக விடுதலை பெறாத நிலையில், ஒழுங்காக பராமரிக்கப்படாத கழிப்பறைகள் நோய்களை இலவசமாக பரப்பும் மையங்களாக மாறக்கூடும்.

பொதுக்கழிப்பறைகள்

  • இது ஒரு சமூகப் பிரச்னை. அரசும் பொதுமக்களும் பொதுக்கழிப்பறைகளின் முறையான பராமரிப்பில் தங்கள் முழுக்கவனத்தையும் செலுத்த வேண்டும்
  • வசதியானவர்கள் வீட்டில் உள்ள கழிப்பறை வசதி சாமானிய மக்களுக்குக் கிடைப்பதில்லை.
  • கிராமங்களை விட மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள நகர்ப்புறங்களில் பொதுக்கழிப்பறைகளின் தேவை அதிகமாக இருக்கிறது. பேருந்து நிலையம், வணிக வளாகங்கள், கோயில்கள் போன்ற இடங்களில் பொதுமக்கள் அதிகமாக வந்து கூடுகின்றனர்.
  • இங்குள்ள பொதுக்கழிப்பறைகளை பயன்படுத்தவேண்டிய அவசியமும் அவசரமும் அவர்களுக்கு ஒவ்வொரு தொலைதூர பயணத்துக்குப் பிறகும் ஏற்படுகிறது.
  • அரசாங்கம் வீட்டுக்கு ஒரு கழிப்பறை கட்ட உதவுகின்றது. பொதுக்கழிப்பறைகள் நகரங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்கள் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கென அமைக்கப்படுகிறன. ஆனால் அவை அங்கு பரவியுள்ள மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் அமைந்திருப்பதில்லை.
  • பல இடங்களில் கழிப்பறைக்குக் கதவுகள் கிடையாது. கதவுகள் இருந்தாலும், தாழ்ப்பாள் கிடையாது. சுகாதார வசதிகளும் முழுமையாக இருப்பதில்லை. பல கழிப்பறைகள் பூட்டப்பட்டும், செடிகொடிகள் சூழ்ந்தும் மின்சார வசதியின்றியும் காணப்படுகிறன.
  • ஒப்பந்ததாரர்களால் அவசர கதியில் கட்டப்படும் கழிப்பறைகள் உறுதித்தன்மை அற்றவையாக இருக்கின்றன. கட்டப்பட்டு திறக்கப்படாமலும் பல பொதுக்கழிப்பறைகள் உள்ளன.
  • மேலும் கழிப்பறையின் சுவர்களில் ஒட்டப்படும் இரங்கல் செய்தி முதல் பொதுக்கூட்ட நிகழ்வு வரையிலான சுவரொட்டிகள் அதனுடைய வெளிப்புற தோற்றத்தை மோசமாக்குகின்றன.
  • இலவச கழிப்பறைகளுக்கும், கட்டணக் கழிப்பறைகளுக்கும் இடையில் பெரிய வேறுபாடு எதுவும் காணப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் கழிப்பறையை பயன்படுத்துவதைத் தவிர்த்து கழிப்பறைக்கு வெளியே உள்ள இடத்தையே பயன்படுத்துகின்றனர்.
  • மேலை நாடுகளில் கழிப்பறைகளை இலவசமாகப் பயன்படுத்தலாம். அங்கு பொதுவெளிகளைப் பயன்படுத்தினால் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
  • ஆனால், நம் நாட்டில் கழிப்பறைகளைப் பயன்படுத்தக் கட்டணம். பொதுவெளி கழிப்பிடங்கள் இலவசம். கழிப்பறைகளை முறையாக பயன்படுத்தும் வழக்கம் மக்களிடையே ஏற்பட வேண்டும். பொதுக்கழிப்பறைகளும் பயன்பாட்டுக்கேற்ற நிலையில் இருக்க வேண்டும்.
  • பொதுக்கழிப்பறைகளைப் பராமரிக்க தனியான துறை நம் அமைப்பில் இல்லை. அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு சுகாதாரத்துறை, மின்சாரத்துறை, நீர் வழங்கல் துறை போன்ற அனைத்து துறைகளுடைய கூட்டுப் பொறுப்பாக இருக்கிறது.
  • இதில் ஏதேனும் ஒரு துறையின் செயல்பாட்டில் குறைபாடு ஏற்பட்டாலும், பொதுக் கழிப்பறையின் முறையான பயன்பாடு கேள்விக்குறியாகிவிடுகிறது.
  • நீரிழிவு நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோருக்கு அடிக்கடி கழிப்பறையைப் பயன்படுத்தவேண்டிய தேவை ஏற்படுகிறது.
  • எனவே பொதுக்கழிப்பறைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதோடு தேவைப்படும் தண்ணீர் வசதி, மின்சார வசதி, பாதுகாப்பு போன்றவற்றையும் அரசு வழங்க வேண்டும். முதியவர்களின் பயன்பாட்டுக்காக மேற்கத்திய வகை கழிப்பறைகளும் ஆங்காங்கே இருத்தல் நலம்.
  • தேவைப்படும் இடங்களில் உதவியாளர்களைப் பணியமர்த்த வேண்டும். தரைப்பகுதி பாசிபடிந்து வழுக்கும் நிலையில் இருந்தால், பயன்பாட்டாளர்கள் உள்ளே நுழையவே தயங்குவார்கள். தேவையான அளவு துப்புறவு சாதனங்களும், கிருமிநாசினிப் பொருட்களும் அன்றாட பயன்பாட்டுக்கு உள்ளாட்சி நிர்வாகம் அளிக்க வேண்டும்.
  • தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது உபயோகிப்பாளரின் முக்கியக் கடமையாகும்.
  • உள்ளாட்சி அமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொரு வாரமும் இது பற்றிய விவரங்களை உள்ளாட்சி கூட்டங்களில் விவாதிக்கவேண்டும்.
  • பொதுக்கழிப்பறைகளில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு அவை அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு மக்களின் குறைகள் சரி செய்யப்பட வேண்டும். எனவே நோய் தோன்றும் இடமாக கழிப்பறைகள் மாறிவிடாமல் இருக்க, தேவையான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
  • அரசு இதற்கென ஒரு தனித்துறையை ஏற்படுத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கழிப்பறையை முறையாகப் பயன்படுத்துவது குறித்த விளம்பரங்களை அடிக்கடி ஒளிபரப்பி மக்களிடையே இது சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
  • பள்ளி வகுப்புகளிலும் இதன் அவசியத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் கழிப்பறைப் பயன்பாடு குறித்து அறிந்துகொள்வார்கள். அத்துடன் நமது நாட்டை முழு சுகாதாரமான நாடாக மாற்றும் நடவடிகைகளில் ஈடுபடுவார்கள்.
  • நாமும் நாகரிகமானவர்கள். படித்த பண்புள்ள மனிதர்கள் என்று உலகுக்கு காட்டுவோம். பொதுக் கழிப்பறைகளை முறையாகப் பயன்படுத்துவோம்.

நன்றி: தினமணி  (27 – 08 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories