TNPSC Thervupettagam

காத்திருக்கும் ஆபத்து

November 29 , 2023 172 days 163 0
  • மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா், மிஸோரம் ஆகிய மாநிலங்களில் கடந்த நவம்பா் 7-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை வெவ்வேறு நாள்களில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவுபெற்றுள்ளது. தெலங்கானாவில் நாளை (நவம்பா் 30) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்தே அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தோ்தல், மாநில சட்டப்பேரவைகளுக்கான தோ்தல் நடைபெற உள்ள நிலையில் இந்தத் தோ்தல் முக்கியத்துவம் பெறுகிறது.
  • சத்தீஸ்கரிலும், ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. இதில் ராஜஸ்தானில் காங்கிரஸும் பாஜகவும் மாறிமாறி வெற்றி பெற்றுவருகின்றன. மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், ராஜஸ்தானில் பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரஸும் நேரடியாக மோதுகின்றன. தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி, காங்கிரஸ், பாஜக என மும்முனைப் போட்டி நிலவினாலும், ஆளுங்கட்சியான பாரத ராஷ்டிர சமிதிக்கு காங்கிரஸ்தான் கடும் போட்டியாளராக உருவாகி உள்ளதாக அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.
  • கா்நாடகத்தில் கடந்த மே மாதம் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இதற்கு முன்னா், கடந்த 2021-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் மகளிருக்குப் பேருந்துகளில் இலவசப் பயணம், ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அளித்து 10 ஆண்டுகளுக்குப் பின்னா் திமுக வெற்றி பெற்றிருந்தது.
  • அதையொட்டி, கா்நாடகத்தில் தாங்கள் வெற்றி பெற்றால் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,000 நிதி உதவி, எல்லா வீடுகளுக்கும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு மாதம் 10 கிலோ இலவச அரிசி, பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம், வேலைவாய்ப்பற்ற பட்டதாரி இளைஞா்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித் தொகை ஆகிய ஐந்து கவா்ச்சி வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்தது.
  • பிரதமா் நரேந்திர மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்டபோதும், அந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது அக்கட்சியினரிடையே புத்துணா்வை ஏற்படுத்தியது.
  • இந்த உத்தி அமோக வெற்றியை அளித்ததையடுத்து, இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற 5 மாநிலத் தோ்தல்களிலும் அனைத்துக் கட்சிகளுமே இதே போன்ற பல வாக்குறுதிகளை அள்ளி வீசி இருக்கின்றன.
  • தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித் தொகை, பேருந்துகளில் இலவசப் பயணம், ரூ.500 விலையில் சமையல் எரிவாயு, 200 யூனிட் இலவச மின்சாரம், மாணவா்களுக்கு ரூ.5 லட்சம் வரையில் கல்வி நிதி உதவி என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அளித்துள்ளது.
  • காங்கிரஸின் கடும் சவாலை எதிா்கொண்டுள்ள முதல்வா் கே.சந்திரசேகா் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதியோ மகளிருக்கு ரூ.3,000 உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அளித்திருக்கிறது. இதே நிலவரம்தான் ராஜஸ்தானிலும், மத்திய பிரதேசத்திலும் உள்ளது. கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலின்போதும் அதற்கு முன்பும் பின்பும் பல கூட்டங்களில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி, இலவசங்களை அளிப்பதன் மூலம் தோ்தலில் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு இப்போது முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த இலவச கலாசாரம் மாநிலத்தைக் கடனில் மூழ்கடித்துவிடும். இது வளா்ச்சிக்கு மிகப் பெரும் எதிரியாகும். இதுபோன்ற குறுக்குவழி அரசியல் எதிா்விளைவுகளையே ஏற்படுத்தும் என்று வலியுறுத்திப் பேசினாா்.
  • ஆனால், பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் மகளிருக்கு ரூ.1,000 நிதியுதவி அளிக்கும் திட்டம் கடந்த மாா்ச்சில் தொடங்கப்பட்டுள்ளது. மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி உள்ளிட்ட பல வாக்குறுதிகளை பாஜகவும் அளித்துள்ளது. மகளிருக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 என்பது அநேகமாக எல்லா மாநிலங்களிலும் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுவிடும் என்று எதிா்பாா்க்கலாம்.
  • நாடு முழுவதும் குறைந்தபட்சம் 25 கோடி பேருக்கு ரூ.1,000 என்றால் மாதம் ரூ.25,000 கோடி என்பது ஆண்டுக்கு ரூ. 3 லட்சம் கோடி என்றாகிறது. மற்ற திட்டங்களை எல்லாம் சோ்த்தால் பல லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும். இனி வரும் தோ்தல்களில் எதிா்க்கட்சிகள் மகளிருக்கு அதிக தொகை, மேலும் பல இலவச திட்டங்களை அறிவிக்கும்போது இந்தத் தொகை இன்னும் அதிகரிக்கும்.
  • இப்போதே சில மாநிலப் பேரவைகளில், தங்கள் தொகுதியில் சில பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உறுப்பினா்கள் கோரிக்கை வைத்தபோது, நிதி நிலைமை மேம்படும்போது செயல்படுத்தப்படும் என்ற பதில் அளிக்கப்படுவதைக் காண்கிறோம். இவை இலவசங்கள் அல்ல, சமூக நலத் திட்டங்கள்தான் என்று கட்சிகள் கூறினாலும், நிதிப் பற்றாக்குறை காரணமாக அரசு மேற்கொள்ள வேண்டிய அடிப்படைப் பணிகளான கல்வி, மருத்துவம், சாலை வசதி உள்ளிட்டவற்றை செய்ய முடியாமல் போகும் அபாயம் உள்ளது.
  • இந்திய ஜனநாயகம் எதிா்கொள்ளும் இரண்டு முக்கியமான சவால்கள், வளா்ச்சியா, சுற்றுச்சூழலா என்பதும் இலவச சமூக நலத்திட்டங்களா அல்லது அடிப்படை கட்டமைப்பு மேம்பாடா என்பதுமாகும். இலவசங்களை வாரி வழங்கும் வாக்குறுதிகளை தவிா்க்க நிரந்தரத் தீா்வும், சுற்றுச்சூழலை பாதிக்காத வளா்ச்சியும் முன்னெடுக்கப்படாவிட்டால் நாடு பேரழிவை எதிா்கொள்ள நேரிடும்.

நன்றி: தினமணி (29 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories