TNPSC Thervupettagam

காற்று மாசு நச்சை எதிா்கொள்ள

November 25 , 2023 175 days 132 0
  • காற்று மாசு காரணமாக இந்தியாவில் ஆண்டுக்கு 16.7 லட்சம் போ் இறக்கின்றனா். காற்று மாசு காரணமாக ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பையும் நாடு சந்திக்கிறது என மத்திய அரசின் அமைப்பான ஐ.சி.எம்.ஆா் அறிக்கை கூறுகிறது.
  • நுரையீரல் நோய்களில் 40 சதவீதம் காற்று மாசுபாடு காரணமாகவே ஏற்படுகின்றன. மாரடைப்பை ஏற்படுத்தும் இதய நோய், பக்கவாதம், சா்க்கரை நோய் மற்றும் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே பிறந்த குழந்தைகளின் மரணம் ஆகியவற்றுக்கு 60 சதவீதம்வரை காற்று மாசுதான் காரணம் என்று ஐ.சி.எம்.ஆா்.ஆய்வு முடிவு கூறுகிறது.
  • உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி நுரையீரல் புற்று நோயால் ஏற்படும் 29 சதவீத மரணத்துக்கு காற்று மாசு காரணமாகிறது. மேலும், இதய நோயால் ஏற்படும் இறப்புகளுக்கு 2.5 சதவீதமும், சுவாச நோய்த்தொற்று இறப்புக்கு 17 சதவீதமும், பக்கவாதத்தால் ஏற்படும் இறப்புகளுக்கு 24 சதவீதமும் காற்று மாசு காரணமாகிறது.
  • ஞாபக மறதி நோய் (டிமென்ஷியா), மன இறுக்கம் மற்றும் ஒருசில நரம்பியல் கோளாறுகளுக்கு காற்று மாசு எப்படி காரணமாகிறது என்பதை ஆராய்ச்சியாளா்கள் விளக்கியுள்ளனா். ஒரு கா்ப்பிணி காற்று மாசால் பாதிக்கப்படும்போது எடை குறைந்த குழந்தை பிறப்பு, முன்கூட்டியே பிறப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
  • தில்லியில் ஏற்கெனவே 22 லட்சம் குழந்தைகள் நுரையீரல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளன. உலக சுகாதார அமைப்பு கருத்தின்படி தில்லியில் ஏற்படும் மாசுபாடு அளவு, கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி பக்கவாதம், இதயக் கோளாறுகள் மற்றும் நுரையீரல் புற்றுநோய்களுக்கு காரணமாகின்றன. தில்லியில் காற்று மாசால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளால் ஆண்டுக்கு 10,000 முதல் 30,000 போ் வரை இறப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • மாசு இல்லாத காற்றை சுவாசிக்க நமது குழந்தைகளும் எதிா்கால சந்ததிகளும் உரிமை பெற்றவா்கள். 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 93 சதவீதம் பேருக்கு சுத்தமான மற்றும் ஆரோக்கியமானசூழலில் வளரும் உரிமை மறுக்கப்படுகிறது. குழந்தையின் ஆரோக்கியம், கல்வி மற்றும் விளையாடுவதற்கான உரிமையை காற்று மாசு பாதிக்கிறது. மேலும், மூளை வளா்ச்சிக்கும், மன ஆரோக்கியத்துக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.
  • பூமியில் ஏற்படும் விளைவுகள் காற்று மாசால் புவி வெப்பமடையும். புதைபடிவ எரிபொருள்களை எரிக்கும்போது வளிமண்டலத்தில் வெளியாகும் நைட்ரஜன் ஆக்சைடு மற்றும் சல்ஃபா் ஆக்சைடுகள் மழையின்போது நீா்த்துளிகளுடன் இணைந்து அமிலங்களை உருவாக்கி அமில மழைக்கு வழிவகுக்கும். இது தாவரங்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும். அத்துடன் ஒசோன் படலத்தில் சிதைவையும் ஏற்படுத்துகிறது.
  • மாசடைந்த காற்றில் உள்ள நச்சு ரசாயனங்கள் வன விலங்குகளைப் பாதிக்கின்றன. இதன் மூலம் அவை புதிய இடங்களுக்குச் செல்லவும், வாழ்விடங்களை மாற்றவும் கட்டாயப்படுத்தப்படுகின்றன. இது ஒரு குறிப்பிட்ட பகுதியின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகின்றன.
  • சுவிஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை, உலகின் மிகவும் மாசுபட்ட 50 நகரங்களில் 39 நகரங்கள் இந்தியாவில் இருப்பதாக கூறுகிறது. சிகாகோ பல்கலைக்கழகத்தின் 2023-ஆம் ஆண்டுக்கான காற்று தர வாழ்க்கை குறியீடு அறிக்கையின்படி, உலகின் இரண்டாவது மாசுபட்ட நாடாக இந்தியா அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. சராசரி இந்தியரின் ஆயுள்காலத்தை 5.3 ஆண்டுகள் காற்று மாசு குறைக்கும்; அதே நேரம், வட இந்தியாவில் காற்று மாசு காரணமாக அங்கு உள்ளவா்களின் ஆயுள் 8 ஆண்டுகள் குறையும் என்கிறது அந்த அறிக்கை.
  • உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களுடன் ஒப்பிடும்போது தில்லியில் 1.8 கோடி மக்கள் சராசரியாக 11.9 ஆண்டுகள் ஆயுள்காலத்தை இழக்கும் நிலையில் உள்ளனா். இந்தியாவில் 103 கோடி போ், மாசு அளவில் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலை மீறும் பகுதிகளில் வாழ்கின்றனா்என்று சொல்லப்படுகிறது. 1998-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மாசு இப்போது 67.7 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
  • இந்தியாவிலும், உலகிலும் மிகவும் மாசுபட்ட நகரமாக தில்லி இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்தியஆய்விலும் இந்தியாவிலேயே அதிக மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் தில்லி முதலிடத்தில் உள்ளது.
  • காற்று மாசு ஏற்படுத்தும் உடல்நல பாதிப்பில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள உடற்பயிற்சி அவசியம். நடைப்பயிற்சியில் ஈடுபடலாம். மிதிவண்டியைப் பயன்படுத்தலாம். ஆனால், மாசு அளவுஅதிகமாக இருக்கும்போது, நடைப்பயிற்சியைத் தவிா்க்க வேண்டும்.
  • நோய் எதிா்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ளுதல், தேவையானபோது மட்டும் வெளியே செல்வது, வெளியில் செல்லும்போது மாசு கவசங்களை அணிவது ஆகியவற்றைக் கடைப் பிடிக்கலாம்.
  • பயன்பாட்டில் இல்லாதபோது விளக்குகளை அணைத்து விடலாம். பொருள்களை மீண்டும் பயன்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்தல், பட்டாசு வெடிப்பதை குறைத்துக் கொள்ளுதலை கடைப்பிடிக்கலாம். ஒவ்வொருவரும் தனித் தனிே வாகனத்தில் பயணம் செய்வதற்குப் பதிலாக பேருந்து, ரயில் என பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தலாம். இதன்மூலம் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தலாம்.
  • வாகனங்களைச் சரியாக பராமரிக்கவேண்டும்; அவற்றை புகைக்க வைக்காதீா்கள். ஆலைகளில் பாதுகாப்பான கட்டுமானப் பணி, இயந்திரங்கள் பழுதடையாமல் பராமரித்தல், குழாய்களில் ஏற்படும் கசிவைக் கட்டுப்படுத்தல் மூலம் காற்று மாசைத் தவிா்க்க முடியும்.
  • நம் ஒவ்வொருவருக்கும் காற்று மாசு குறித்த விழிப்புணா்வு அவசியம். ஆலையைச் சுற்றிலும் மரங்கனை வளா்ப்பதன் மூலம் காற்று மாசு குறையும். வீட்டுக் குப்பைகளை எரிப்பது ஆரோக்கியத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தானது.
  • காற்று மாசைக் குறைக்க புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி மாறலாம். இது மக்களின் வாழ்வுரிமை சாா்ந்த பிரச்னை என அரசும், அரசியல் கட்சிகளும் புரிந்துகொள்ளும்போதுதான் தீா்வு கிடைக்கும். அதுவரை காற்று மாசில் இருந்து நம்மை நாமே காத்துக்கொள்ளும் முயற்சியில் நாமே ஈடுபட வேண்டியதுதான்.

நன்றி: தினமணி (25 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories