TNPSC Thervupettagam

காற்றுக்கு எதற்கு வேலி வானொலி சேவை குறித்த தலையங்கம்

February 16 , 2023 457 days 286 0
  • வானொலியின் வீச்சையும் வலிமையையும் புரிந்து கொண்டிருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி. தனது "மனதின் குரல்' நிகழ்ச்சியால் கோடிக்கணக்கான இந்தியர்களிடம் வானொலியின் மூலம் மாதந்தோறும் உரையாடும் உத்தியை அவர் தேர்ந்தெடுத்ததற்கு அதுதான் காரணம்.
  • விளையாட்டானாலும், இசையானாலும், செய்தியானாலும், பருவநிலை அறிவிப்புகளானாலும் வானொலி அமைத்துத் தந்த பாதையில்தான் தகவல் தொடர்பு அறிவியல் புதிய பல மாற்றங்களைக் கண்டிருக்கிறது. வானொலியின் வலிமை எத்தகையது என்பது பரவலாக வெளியில் தெரியவில்லை. "காலம் மாறிவிட்டது,
  • வானொலிக்கான வரவேற்பு குறைந்துவிட்டது, தேவை முடிந்துவிட்டது' என்றெல்லாம் சொன்னாலும்கூட இன்றும் உலகின் மூலைமுடுக்கெல்லாம் சென்றடையும் ஒரே தகவல் தொடர்பு சாதனமாக வானொலியே இருக்கிறது என்பதுதான் உண்மை. குறிப்பாக இந்தியாவில் வானொலி மூலம்தான் ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்களும், போக்குவரத்து தொடர்பே இல்லாத கிராமங்களும் செய்திகளைப் பெற முடிகிறது. பேரிடர் காலங்களில் வானொலி சேவையின் அருமை தொடர்ந்து நிரூபிக்கப்படுகிறது.
  • உலகிலேயே மிகப் பெரிய வானொலி சேவையை நடத்தும் அமைப்பாக அகில இந்திய வானொலி திகழ்கிறது. இந்தியாவின் 92% பகுதிகளை சென்றடையும் வானொலி, 99% மக்கள்தொகையினருக்கு தனது சேவையை வழங்குகிறது என்கிற தகவல் பலரையும் வியப்படையச் செய்யலாம். ஆனால், அதுதான் உண்மை.
  • 23 மொழிகளில், 179 பேச்சுவழக்குகளில் அகில இந்திய வானொலி, நிகழ்ச்சிகளை வழங்குகிறது. 420 வானொலி நிலையங்கள் மூலம் நாள்தோறும் 647 செய்தியறிக்கைகள் ஒலிபரப்பப்படுகின்றன. இவ்வளவு பெரிய, பரந்து விரிந்த வானொலி சேவை உலகின் வேறெந்த நாட்டிலும் இல்லை.
  • அகில இந்திய வானொலி சேவை மட்டுமல்லாமல், பிரசார் பாரதியின் "நியூஸ் ஆன் ஏர்' செயலி, 240 மாநில வானொலி அலைவரிசைகளை ஒலிபரப்புகிறது. அதுமட்டுமல்லாமல், 388 தனியார் பண்பலை வானொலிகள் 107 நகரங்களில் சேவைகளை வழங்குகின்றன. பண்பலை தனியார் மயத்தின் 3-வது கட்டம் நிறைவடையும்போது மேலும் 236 நகரங்களில் அந்தந்த நகரத்துக்கான பண்பலை சேவைகள் வழங்கப்பட இருக்கின்றன.
  • வானொலிக்கும் ஏனைய தகவல் பரிமாற்றக் கருவிகளுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. அது தொலைக்காட்சியானாலும், "யூ டியூப்' போன்ற இணையம் மூலமாக பெறப்படும் சேவைகளானாலும், கைப்பேசியின் மூலம் பெறப்படும் சமூக ஊடகமானாலும் பயனாளிகளின் முழு கவனத்தையும் தன்பால் ஈர்த்து வேறு வேலை எதுவும் செய்யவிடாமல் தடுத்துவிடுகின்றன. ஆனால் வானொலி அப்படியல்ல. தங்களது அன்றாட அலுவல்களில் ஈடுபட்டவாறு வானொலி சேவையைப் பெற முடியும் என்பதுதான் அதன் தனிச்சிறப்பு.
  • பண்பலை ஒலிபரப்பு அறிமுகமான பிறகு, வாகனங்களில் பயணிப்போரும், தொலைக்காட்சி வசதிகள் இல்லாத பகுதியில் வசிப்போரும் அன்றாட அலுவல்களுக்கு இடையில் வானொலியுடன் பிணைந்தே இருக்கிறார்கள். விவசாயிகளின் பிரச்னைகளுக்கு அன்றாடத் தீர்வுகளை வழங்கும் சேவை வானொலியால் பெறப்படுகிறது. கடலோரப் பகுதிகளிலும், வனப் பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு பருவநிலை குறித்த அறிவிப்புகளை வழங்க வானொலியால் மட்டுமே முடியும்.
  • இந்தியாவின் பொருளாதார கொள்கைகளில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. விமான சேவை உள்பட அனைத்துத் துறைகளும் தனியார்மயத்தை நோக்கி நகர்ந்து விட்டன. தகவல் தொடர்பை எடுத்துக்கொண்டால் கட்டுப்பாடு இல்லாத சுதந்திரத்தை சமூக ஊடகங்கள் அனுபவிக்கின்றன. தனியார் தொலைக்காட்சி சேனல்களும் பெருகிவிட்டன. ஆனால், அகில இந்திய வானொலி மட்டும் இனியும்கூட அரசாங்கத்தின் கட்டுப்பாடு என்கிற சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருக்கிறது.
  • அரசின் அதிகாரபூர்வ செய்திகளை மட்டுமே ஒலிபரப்ப வேண்டும் என்கிற கட்டுப்பாட்டு வளையம் வானொலிக்கு மட்டுமே இருப்பது வேடிக்கை. அச்சு ஊடகமானாலும், காட்சி ஊடகமானாலும், இணைய ஊடகமானாலும் செய்திகளையும், நாட்டு நடப்புகளையும் சுதந்திரமாக வெளியிடும் உரிமை வழங்கப்பட்டிருக்கும்போது வானொலி மட்டும் ஆட்சி அதிகாரத்தின் கட்டுப்பாட்டில் ஏன் தொடர வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது.
  •  பண்பலை சேனல்களுக்கு செய்திகளை ஒலிபரப்ப அனுமதியில்லை. நடப்பு அரசியல் நிகழ்வுகள் குறித்து விவாதிக்க முடியாது. வணிக ரீதியிலான பொழுதுபோக்குக்காக மட்டுமே அவை இயங்க வேண்டும் என்கிற தடை நிலவுகிறது.
  • கருத்து சுதந்திரத்துக்கு இது எதிரானது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபோது அரசு விசித்திரமான வாதத்தை முன்வைத்தது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், தேச விரோத சக்திகள் தங்களது பிரசாரத்துக்குப் பயன்படுத்துவார்கள் என்றும், அதைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் அரசால் முடியாது என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
  • 900-க்கும் அதிகமான தொலைக்காட்சி சேனல்கள் இரவு பகல் பாராமல் செய்திகளையும், கருத்துகளையும் ஒளிபரப்புகின்றன. ஆனால் பண்பலை வரிசைகள், அகில இந்திய வானொலியின் செய்தி அறிக்கைகளைத்தான் ஒலிபரப்ப முடியும்.
  • உலகிலேயே வானொலிக்கு கடிவாளம் போட்டு வைத்திருக்கும் ஜனநாயக நாடு இந்தியா மட்டும் தான். அதிலிருந்து வானொலிக்கு எப்போது விடுதலை வழங்கப் போகிறோம்?

நன்றி: தினமணி (16 – 02 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories