TNPSC Thervupettagam

காலநிலை மாற்றத்துக்கு மனித உரிமைத் தீர்வு

April 23 , 2024 12 days 46 0
  • அழிந்துவரும் பறவையினமான கானமயிலின் பாதுகாப்பு குறித்த வழக்கு ஒன்றில், காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளிலிருந்து விடுபடுவது அடிப்படை உரிமை - மனித உரிமை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்திய அரசமைப்புச் சட்டக் கூறுகள் 14 (சட்டத்தின் முன் எல்லாரும் சமம், சம பாதுகாப்பு), 21 (வாழ்வதற்கான உரிமை) ஆகியவற்றால் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது என அந்தத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • இந்தியாவைப் பொறுத்தவரை சில காலநிலை வழக்குகள் மட்டுமே நீதிமன்றங்களுக்கு வந்துள்ளன. காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளுக்கு எதிரான மனித உரிமையை முன்னிறுத்தும் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, எதிர்காலப் பாதிப்புகளுக்கு எதிரான முன்கூட்டிய நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • கானமயில்கள் தமிழ்நாட்டிலும் ஒரு காலத்தில் வாழ்ந்துவந்த பறவையினம் என்றாலும் இப்போது ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில், ஆபத்தான நிலையில் வாழ்ந்து வருகின்றன. இந்த இரண்டு மாநிலங்களிலும் கானமயில்கள் வாழும் பகுதிகளில் சூரிய, காற்றாலை மின் உற்பத்திக்கான கட்டுமானங்களும் பெருகிவருகின்றன.
  • கானமயில்களைப் பாதுகாக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை 2019இல் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தாக்கல் செய்தனர். அதில் சூரிய, காற்றாலை உள்கட்டமைப்பை அமைப்பதற்குத் தடை விதிக்க உத்தரவிடவும் கோரியிருந்தனர். இந்தக் கட்டுமானங்கள் ஆபத்தை விளைவிப்பதாகவும், அடிக்கடி மின்கம்பிகள், காற்றாலை விசிறிகளில் மோதி கானமயில்கள் இறந்துவிடுவதாகவும் அவர்கள் வாதிட்டனர்.
  • வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பில் 99,000 சதுர கி.மீ. பரப்பளவில் மேல்நிலை மின்கம்பிகள் அமைப்பதற்குத் தடை விதித்தது. தற்போதுள்ள மின்கடத்திகளை நிலத்தடியில் அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், நிலத்தடியில் மின்கடத்திகளை அமைப்பதில் உள்ள சிக்கலை மத்திய அரசு பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்தது.
  • இதையடுத்து, தடையை 13,663 சதுர கி.மீ. ஆகக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகளைப் பரிசீலிக்க நிபுணர் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. ஜூலை 31 அன்று இந்தக் குழு அறிக்கை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட், ரீநியூ பவர் பிரைவேட், அக்மி சோலார் ஹோல்டிங்ஸ் போன்ற நிறுவனங்கள் தார் (ராஜஸ்தான்), கட்ச் (குஜராத்) ஆகிய பகுதிகளில் மின்சக்தி, காற்றாலைத் திட்டங்களை அமைத்துள்ளன. இந்தத் திட்டங்களுக்கு நிலத்தடி மின்கடத்திகளை அமைக்க அதிகத் தொகை செலவாகும் என இந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
  • காலநிலை மாற்றத்துக்கு எதிரான பாதுகாப்பை வாழ்வதற்கும் சமத்துவத்துக்குமான அடிப்படை உரிமையாக உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது இதுவே முதல் முறை. ‘காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படாத சூழல் இல்லாமல், வாழ்வதற்கான உரிமை முழுமை அடையாது’ என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
  • இந்த உரிமைகள் எவ்வளவு சரியாக வரையறுக்கப்படுகின்றன என்பதை நாம் காத்திருந்துதான் பார்க்க வேண்டும். வாழ்வதற்கான உரிமை, சமத்துவம், கருத்துச் சுதந்திரம் போன்றவற்றைப் போல் காலநிலை மாற்றம் தொடர்பான உரிமைகளை நடைமுறையில் கொண்டுவருவதற்கு இந்தத் தீர்ப்பு நல்ல தொடக்கமாக இருக்கும்.
  • கடந்த 30 ஆண்டுகளில் நீதித் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களில், காலநிலை உரிமையும் இணைந்துள்ளது, காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளுக்கான நல்ல தீர்வுக்கு வழி வகுக்கும் என்னும் நம்பிக்கையை இந்தத் தீர்ப்பு அளித்திருக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories