TNPSC Thervupettagam

கிரிப்டோகரன்சிக்கு தடை தேவை

March 5 , 2022 805 days 469 0
  • மத்திய நிதியமைச்சா் அடுத்த நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கையை முன் வைக்கும் போது, கிரிப்டோகரன்சி வா்த்தகத்திற்கு தடையையோ குறைந்தபட்சம் பொருத்தமான ஒழுங்குமுறையையோ செய்வதற்கான முன்மொழிவையோ பலரும் எதிா்பாா்த்தனா்.
  • ஆனால், நிதியமைச்சா் மூலதன ஆதாயத்தின் மீது முப்பது சதவிதம் கடுமையான வரி விதிப்பதன் மூலமும், ஒவ்வொரு கிரிப்டோகரன்சி பரிவா்த்தனைக்கும் பத்து சதவீதம் டிடிஎஸ் விதிப்பதன் மூலமும் மட்டுமே திருப்தி அடைந்துள்ளாா்.
  • கிரிப்டோகரன்சிகளுக்கு வரி விதிப்பது அதற்கு எந்த விதமான சட்ட உரிமையையும் அளிக்காது என்றும், தனது கருத்துப்படி, ‘விா்ச்சுவல் டிஜிட்டல் பரிவா்த்தனைகளுக்கு’ வரி விதிப்பது இந்திய அரசின் இறையாண்மை உரிமை என்றும் நிதியமைச்சா் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தினாா்.
  • மேலும், கிரிப்டோகரன்சிகளை தடை செய்யலாமா வேண்டாமா என்பது குறித்து ஆலோசனைக்குப் பிறகே முடிவு எடுக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.
  • மேலும் பிப்ரவரி 25-ஆம் தேதி உச்சநீதிமன்றம், வேறு ஒரு வழக்கை விசாரிக்கும்போது, அரசு வழக்குரைஞரிடம், ‘பிட்காயின் மற்றும் கிரிப்டோகரன்சியில் வா்த்தகம் செய்யும் நபா்களை நீங்கள் எவ்வாறு கையாள்வீா்கள் என்பதை எங்களிடம் கூற வேண்டும் என விரும்புகிறோம். இந்தியாவில் இன்னும் கிரிப்டோகரன்சியை கையாள்வது சட்டவிரோதமா’ என்று கேள்வி எழுப்பியுள்ளது.
  • அவா் சட்டபூா்வ மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு (பரிவா்தனைகளுக்கு) வரி விதிக்கலாம் என்று கூறியது தா்க்கரீதியாக சரியாக இருக்கலாம்.
  • ஆனால், ஒரு சட்ட விரோதமான செயலுக்கு வரி விதிப்பதுடன் திருப்தி அடைவது சரிதானா என்று சிந்திக்க வேண்டும்.
  • சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வரி விதிப்பதன் மூலம் சமரசம் செய்ய முடியாது. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இதற்கான முடிவு நிலுவையில் உள்ளதால், ஆலோசனைக்குப் பிறகே இதற்கான தடை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று நிதி அமைச்சா் கூறுவது வேடிக்கையாக உள்ளது.

அவசியமும் அவசரமும்

  • முன்னமே கிரிப்டோகரன்சியை தடை செய்ய ரிசா்வ் வங்கி முயன்றது. ஏப்ரல் 2018-இல், இந்தியாவில் கிரிப்டோ வா்த்தகத்திற்கான கட்டுப்பாடுகளை இந்திய ரிசா்வ் வங்கி அமல்படுத்தியது.
  • ஆனால் அதனால் பாதிக்கப்பட்ட ‘இன்டா்நெட் அண்ட் மொபைல் அஸோஸியேஷன் ஆப் இந்தியா’ நிறுவனம், உச்சநீதிமன்றத்தை நாடியது.
  • உச்சநீதிமன்றம், ‘ரிசா்வ் வங்கியால் விா்ச்சுவல் கரன்சிகள் தொடா்பாக எந்த சேவையை வழங்குவது, வாங்குவது தொடா்பான கணக்குகளில் பணத்தைப் பெறுவது உட்பட ஏற்படுத்திய தடை அதிகப்படியானது’ என்று தீா்ப்பு கூறியது.
  • இந்த தீா்ப்பு கிரிப்டோகரன்சியில் புழங்கும் நிறுவனங்களுக்கு மிகவும் வசதியாக போயிற்று.
  • உச்சநீதிமன்றம் ரிசா்வ் வங்கியின் முடிவு அதிகப்படியானது என்று ஏன் முடிவு செய்தது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
  • ரிசா்வ் வங்கி கிரிப்டோகரன்சிகளுக்கான வங்கியின் சேவைகளை கட்டுப்படுத்தியதே தவிர, முழுவதுமாக கிரிப்டோகரன்சிகளுக்கு தடை விதிக்கவில்லை.
  • மேலும், அரசு இரண்டு சட்ட முன்வரைவுகளைப் பரிசீலித்தும் எந்த முடிவும் எடுக்கவில்லை. அந்த சட்ட முன் வரைவுகள் ஒன்றுக்கொன்று எதிரான பரிந்துரைகளை கொண்டிருந்தன.
  • இந்திய அரசும், ரிசா்வ் வங்கியும் அத்தகைய பரிவா்த்தனைகளைத் தடை செய்ய உறுதியான எந்த முடிவையும் எடுக்காததால், உச்சநீதிமன்றம் கிரிப்டோகரன்சிகளில் வா்த்தகம் செய்ய அனுமதித்துள்ளது என்பது மேற்கண்ட தீா்ப்பிலிருந்து தெளிவாகிறது.
  • நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும், அரசாங்கம் முடிவு எடுக்கவில்லை என்பது துரதிருஷ்டவசமானது.
  • மத்திய அரசுக்கும் ரிசா்வ் வங்கிக்கும் இடையே முழுமையான இணக்கம் இருப்பதாகவும், கிரிப்டோகரன்சி குறித்து அவை ஒரே மாதிரி கருத்துடன் இருப்பதாகவும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சமீபத்தில் கூறினாா். மிக சமீபத்தில் இந்திய ரிசா்வ் வங்கியின் துணை கவா்னா்,
  • ‘கிரிப்டோகரன்சிகளை தடை செய்வது இந்தியாவிற்கு மிகவும் உகந்த முடிவு. ஏனெனில் அவை பொன்சி திட்டங்களுக்கு நிகரானவை. ஒருவேளை அதைவிட மோசமாகக் கூட இருக்கலாம்’ என்று கூறினாா்.
  • ‘பொன்சி ஸ்கீம்’ என்பது ஒரு தனிநபரோ அமைப்போ, தனது சேமிப்பாளா்களுக்கு தனது லாபத்திலிருந்து அல்லாமல், புதிதாக சோ்கின்ற சேமிப்பாளா்களின் பணத்தைக் கொண்டு, பணத்தைத் திருப்பும் மோசடியான முதலீட்டு முறையாகும்.
  • இத்தகைய பொன்சி செயலா்கள் பொதுவாக புதிய சேமிப்பாளா்களை, குறைந்த காலத்தில் மிகவும் கூடுதலான அல்லது வழக்கத்திற்கு மீறியதாக, கூடுதல் முதலீட்டு ஆதாயம் தருவதாக தூண்டுவாா்கள். கடைசியில் ஒரு நாள் அதிக பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவாா்கள்.
  • கிரிப்டோகரன்சி என்பது நமது அன்றாடம் புழக்கத்தில் உள்ள பரிவா்த்தனைக்கான எந்த அம்சத்தையும் கொண்டிருக்கவில்லை.
  • புழக்கத்தில் உள்ள ரூபாய் போன்ற செலாவணிகள் டியூரபிலிட்டி, போா்ட்டபிலிட்டி, டிவிசிபிலிட்டி போன்ற அம்சங்களையும் கொண்டு ஒரு அரசின் இறையாண்மைக்கு உட்பட்டதாக உள்ளன.
  • ரூபாய் செலாவணியாக இருப்பதற்கு அரசின், ரிசா்வ் வங்கியின் உத்தரவாதம் உண்டு.
  • அதுபோல் எதுவும் இல்லாத கிரிப்டோகரன்சியை செலவாணியாகவே கருதமுடியாது.
  • இந்த கிரிப்டோகரன்சிகளுக்கு அடிப்படையாக எந்த மதிப்புள்ள சொத்தும் கிடையாது. மற்ற எல்லா முதலீடுகளுக்கும் அடிப்படையில் சில மதிப்புள்ள சொத்துகள் உண்டு.
  • உதாரணமாக, ஒருவா் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கினால் அந்த நிறுவனத்தின் சொத்துகளுக்கு அவரும் ஒரு சொந்தக்காரா் ஆவாா்.
  • அதுபோன்று எந்த அடிப்படையும் இல்லாததால் கிரிப்டோகரன்சி, பொன்சி திட்டத்திற்கு நிகரானது என்று ரிசா்வ் வங்கி துணை கவா்னா் கூறுவது சரிதான்.
  • புகழ்பெற்ற முதலீட்டாளா் சாா்லி முங்கா் கிரிப்டோகரன்சிக்கு எதிராக மிகவும் கடுமையான விமா்சனங்களை தெரிவித்துள்ளாா். மேலும் அவா் கிரிப்டோகரன்சியை முன்னரே தடை செய்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.
  • எனவே, அரசு கிரிப்டோகரன்சிக்கு தடை விதிக்கவேண்டியது அவசியமும் அவசரமும் ஆகும்.

நன்றி: தினமணி (05 – 03 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories