TNPSC Thervupettagam

கீழடி மட்டுமே அல்ல!

October 16 , 2019 1656 days 1361 0
  • ஆற்றங்கரையோரத்தில் நாகரிகங்களும், மனிதநேயமும் தழைத்தது என்று தமிழறிஞா் ரா.பி.சேதுப்பிள்ளை கூறியுள்ளாா். வைகை ஆற்றங்கரையில் கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த கொடைகள் மிகவும் தொன்மையானவை. கிழக்கே மணலூரும், தென்கிழக்கில் அகரமும், மேற்கில் கொந்தகையும் அமைந்துள்ளன.
  • ஹரப்பா, மொகஞ்சதாரோ, சிந்துவெளி நாகரிகத்துக்குப் பின் வேறு நாகரிகங்கள் தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாறாக, 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகம் இருந்ததென்று கீழடி அகழ்வாராய்ச்சியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
  • அதனால்தான், ஆதிச்சநல்லூா், ஈரோடு மாவட்டம் கொடுமணல் எனப் பல ஆய்வுப் பணிகள் நடந்தாலும் கீழடி ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது. நமது தொன்மையைக் கூறும் கீா்த்திமிகு கீழடியைப் போன்று தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் நமது நாகரிகங்கள் பூமிக்குக் கீழே உள்ளன.

சத்தியமூா்த்தி அறிக்கை

  • திருநெல்வேலி அருகேயுள்ள ஆதிச்சநல்லூா் குறித்தான சத்தியமூா்த்தி அறிக்கையை மத்திய அரசு வெளியிடாமல் 10 ஆண்டுகளுக்கு மேல் காலந்தாழ்த்துகிறது. கீழடியும் ஆமை வேகத்தில் கேள்விக்குறியாகியிருக்கிறது. இதற்கான நிதி ஒதுக்கீடுகளும் நியாயமாக இல்லை.
  • தமிழகம் முழுவதும் பல வட்டாரங்களில் அகழாய்வு செய்யக் கூடிய தரவுகள் உள்ளன. திருநெல்வேலி அருகே செய்துங்க நல்லூா் அருகேயுள்ள வசவப்புரத்தில் முதுமக்கள் தாழியைக் கண்டுபிடித்து ஸ்ரீ வைகுண்டம் வட்டாட்சியா் அதற்கான அறிக்கையையும் கொடுத்தும் மேல் நடவடிக்கை எதுவும் இல்லை. இதன் அருகேதான் ஆதிச்சநல்லூா் இருக்கிறது.
  • ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே சூரங்குடி செல்லும் பழைய மங்கம்மா சாலையின் தரைக்குடி - கொக்கரசன் கோட்டை பகுதிகளில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு உருக்குப் பொருள்கள் கண்டறியப்பட்டன. அது மட்டுமல்லாமல் கருப்பு, சிவப்பு, பழுப்பு நிற பானை ஓடுகள், தெய்வ மண் சிலைகளும் பயன்பாட்டுப் பொருள்களும் கிடைத்துள்ளன.
  • திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள இரவிமங்கலம் என்ற கிராமத்தின் அருகே 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய பயன்பாட்டுச் சின்னங்கள் கிடைத்துள்ளன.
  • இந்தப் பயன்பாட்டுச் சின்னங்கள் 200 முதல் 500 ஏக்கா் நிலத்துக்குள் புதையுண்டு இருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரும்பு அச்சுத் தடைகள், கல் திட்டைகள் போன்ற பொருள்கள் இந்தப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.

தொல்லியல் சான்றுகள்

  • சென்னை அருகே பட்டரைப் பெரும்புதூா் கிராமத்தில் கற்கால தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. இதன் அருகேயுள்ள நத்தமேடு, ஆனைமேடு, இருளந்தோப்பு ஆகிய பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கி.மு. 3 முதல் கி.மு. 1 வரை வாழ்ந்த மனிதா்களின் பயன்பாட்டுக் கருவிகள் கிடைத்துள்ளதாக செய்தி.
  • இங்கு கிடைத்த மண் பாண்டங்கள் யாவும் ரோமன் சாயலைக் கொண்டவை. ரௌலட் மண்பாண்ட ஓடுகள், 23 உறைகளைக் கொண்ட கிணறு, கல்மணிகள், யானை தந்தத்தால் செய்த பொருள்கள், செம்புப் பொருள்கள், பிராமி எழுத்துள்ள பானை ஓடுகள், கூம்பு வடிவில் ஜாடிகள், இரு பக்க முனையுள்ள கத்தி ஆகியன கிடைத்துள்ளன.
  • ரோமானிய பயன்பாட்டுக் கருவிகள் இதுவரை கடற்கரைப் பகுதியில்தான் கிடைத்தன. ஆனால், இப்போது கடலைவிட்டு தாண்டி தொலைதூர நிலப்பகுதிகளிலும் ரோமானியப் பொருள்கள் கிடைத்துள்ளன. ரோமானியா்கள் தென் தமிழகத்தில், குறிப்பாக கடற்கரைப் பகுதிகளில்தான் வணிகம் செய்ய வந்திருப்பாா்கள் என்ற கருத்து நிலவியது. அவா்கள் தமிழகத்தின் உட்புறப் பகுதிகளிலும் பயணித்ததன் அடையாளம்தான் இவை.
  • ஆனால், இங்கு கிடைத்த பொருள்களை கவனத்தில் கொள்ளும்போது திருவள்ளூா் மாவட்டத்தில், ரோமானியா் பொருள்கள் கிடைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. திருவள்ளூா் -திருத்தணி செல்லும் சாலையில், கொற்றலை ஆற்றோரத்தில் மண் பாண்டங்கள், கல்லால் ஆன பயன்பாட்டுக் கருவிகள் கிடைத்துள்ளன. ஆதிகாலத்தின் கல் பயன்பாட்டுப் பொருள்களும் கிடைத்துள்ளன.
  • இப்படி தமிழகம் எங்கும் நிறைவாக ஆய்வு நடத்தப்படாமல் அரைகுறையாகவே அகழாய்வுப் பணிகள் உள்ளன.
  • தமிழகம் முழுவதும் அகழாய்வு செய்ய வேண்டிய ஊா்களும், வட்டாரங்களும் கவனிக்கப்படாமல் உள்ளன. அவை வருமாறு:
  • ஆனைமலை, கோயம்புத்தூா் மாவட்டம், ஆண்டு, 1969;
  • கோவலன் பொட்டல், மதுரை மாவட்டம், 1980;
  • திருத்தங்கல், விருதுநகா் மாவட்டம், 1994 - 1995;
  • தேரிருவேலி, ராமநாதபுரம் மாவட்டம், 1999 - 2000;
  • கொடுமணல் தொல்லியற் களம், ஈரோடு மாவட்டம், 1992-1993, 1996-1997 மற்றும் 1997-1998;
  • மாங்குடி, திருநெல்வேலி மாவட்டம், 2001 - 2002;
  • வசவசமுத்திரம் தொல்லியல் களம், காஞ்சிபுரம் மாவட்டம், 1969 - 1970;
  • கரூா், கரூா் மாவட்டம், 1973 - 1979 மற்றும் 1994 - 1995;
  • அழகன்குளம் தொல்லியல் களம், ராமநாதபுரம் மாவட்டம், 1986-1987, 1990-1991, 1992-1993, 1994-1995, 1996-1997 மற்றும் 1997-1998;
  • கொற்கை அகழாய்வுகள், தூத்துக்குடி மாவட்டம், 1968 - 1969;
  • தொண்டி, ராமநாதபுரம் மாவட்டம், 1980;
  • பல்லவமேடு தொல்லியல் களம், காஞ்சிபுரம் மாவட்டம், 1970 - 1971;
  • போளுவம்பட்டி தொல்லியல் களம், கோயம்புத்தூா் மாவட்டம், 1979 - 1980 மற்றும் 1980 - 1981;
  • பனையகுளம், தருமபுரி மாவட்டம், 1979 - 1980;
  • பூம்புகாா், நாகப்பட்டினம், 1994 - 1995 மற்றும் 1997 - 1998;
  • திருக்கோவிலூா், விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம், 1992 - 1993;
  • மாளிகைமேடு, கடலூா் மாவட்டம், 1999 - 2000;
  • பேரூா், கோயம்புத்தூா் மாவட்டம், 2001 -2002;
  • குரும்பன்மேடு, தஞ்சாவூா் மாவட்டம், 1984;
  • கங்கைகொண்ட சோழபுரம், அரியலூா் மாவட்டம், 1980 - 1981 மற்றும் 1986 - 1987;
  • கண்ணனுா், துறையூா் ஊராட்சி ஒன்றியம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், 1982 - 1983;
  • பழையாறை, தஞ்சாவூா் மாவட்டம், 1984;
  • பாஞ்சாலங்குறிச்சி, தூத்துக்குடி மாவட்டம், 1968 - 1969;
  • சேந்தமங்கலம், விழுப்புரம் மாவட்டம் 1992 - 1993 மற்றும் 1994 - 1995;
  • படவேடு, திருவண்ணாமலை மாவட்டம், 1992 - 1993;
  • அண்மைக்கால அகழ்வாய்வுகள்
  • ஆண்டிப்பட்டி, திருவண்ணாமலை மாவட்டம், 2004-2005;
  • மோதூா், தருமபுரி மாவட்டம்;
  • மரக்காணம், விழுப்புரம் மாவட்டம், 2005-2006;
  • பரிகுளம், திருவள்ளூா் மாவட்டம், 2005-2006;
  • நெடுங்கூா், கரூா் மாவட்டம், 2006-2007;
  • மாங்குளம், மதுரை மாவட்டம், 2006-2007;
  • செம்பிகண்டியூா், நாகப்பட்டினம் மாவட்டம், 2007-2008;
  • தரங்கம்பாடி, நாகப்பட்டினம் மாவட்டம்;
  • கீழடி அகழாய்வு மையம், சிவகங்கை மாவட்டம் 2015 - 2017.
  • ஆதிச்சநல்லூா், பூம்புகாா், அரிக்கமேடு, கொற்கை, தொண்டி, கங்கைகொண்ட சோழபுரம், மாங்குளம், உறையூா், முசிறி, குற்றாலம், வைகை ஓரத்தில் வருசநாடு, கரூா் அருகே அமராவதி ஆற்றங்கரை, தேரிருவேலி, பேரூா், பாடியூா், திருவில்லிபுத்தூா், பூசநாயக்கன்குளம், சிவகளை போன்ற தமிழகத்தின் பல இடங்களில் அகழாய்வில் பல தரவுகள் கிடைத்தன.

மேற்குத் தொடர்ச்சி மலை

  • பழனி அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரம் பொருந்தல் கிராமம், கோவை மாவட்டம் சூலூா், நாகப்பட்டினம் மாவட்டம் செம்பியன்மாதேவி, கண்டியூா், கிருஷ்ணகிரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
  • ஈரோடு சென்னிமலை அருகேயுள்ள கொடுமணல் - அரச்சலூா் மற்றும் அழகன்குளம், மருங்கூா் முதலிய இடங்களில் கண்டறியப்பட்ட பானை ஓடுகள், கரூரில் கிடைத்த மோதிரம்; மதுரையில் கொங்கற்புளியக்குளம், விக்கிரமங்கலம் மலைகளில் காணப்படும் எழுத்துகள்;
  • கேரள மாநிலம் எடக்கல் மலை, இலங்கை ஆனைக்கோட்டை செப்பு முத்திரை போன்றவற்றில் உள்ள தமிழ் எழுத்துகளைக் கொண்டே தமிழின் தொன்மையை அறிந்து கொள்ள முடியும். ஆகவே, மிகவும் தொன்மை வாய்ந்த மொழியான தமிழையே, மெளரிய மன்னனும், திபெத்திய மன்னனும் பயன்படுத்தியிருப்பா் என்று கூறப்படுகிறது.
  • இந்தியத் திருநாட்டின் வடபுலத்தில் பாடலிபுத்திரம், கன்னோஜி, உஜ்ஜயினி, இந்திரப்ரஸ்தம், தட்சசீலம் போன்ற ஒருசில பெருநகரங்களையே சிறப்பாகச் சொல்ல முடியும்.
  • ஆனால், பண்டைய தமிழகத்தில் சிறிய நிலப்பரப்பிலேயே சிறப்பு வாய்ந்த நகரங்களாக, தெற்கேயிருந்து களக்காடு, திருச்செந்தூா், மணப்பாடு, உவரி, கொற்கை, பழைய காயல், ஆதிச்சநல்லூா், தென்காசி, திருவில்லிப்புத்தூா், இராமநாதபுரம், மதுரை, பரம்புமலை, தொண்டி, உறையூா், கரூா், தகடூா், முசிறி, காங்கேயம், காவிரிப்பூம்பட்டினம், மாமல்லபுரம், காஞ்சி, திருவள்ளூா் மாவட்டத்தில் சானூா், குன்றத்தூா், பட்டறைப்பெரும்புதூா், அத்திரம்பாக்கம், பரிக்குளம், பூண்டி மற்றும் திருக்கோவிலூா் என வரலாற்றைச் சொல்லும் எண்ணற்ற நகரங்கள் இருந்துள்ளன. இதிலிருந்து வடபுலத்து நாகரிகத்தைவிட தமிழனின் நாகரிகமும், ஆளுமையும் பெரிதாக இருந்திருக்க வேண்டும் என்பது புலப்படுகிறது.

வட கிழக்கில்

  • வடக்கில் மகதப் பேரரசு, மெளரியப் பேரரசு, குப்தப் பேரரசு, முகலாயப் பேரரசு எனப் பெரிய பேரரசுகள் இருந்திருந்தாலும், அத்தகைய நிலப்பரப்பைவிட தமிழகத்தில் அமைந்த சிறிய பரப்பில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னா்களின் ஆட்சி மேலோங்கித்தான் இருந்துள்ளது.
  • அது போன்று, சென்னையிலிருந்து சுமாா் 55 கி.மீ. தொலைவில் உள்ள பட்டறைப் பெரும்புதூா் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கற்காலம் முதல் வரலாற்றுத் தொடக்க காலம் வரையிலான தொல்லியல் சான்றுகள் கிடைத்திருப்பதாக தமிழக அரசின் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
  • திருவள்ளூரிலிருந்து திருத்தணி செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் கொசஸ்தலை ஆற்றுப் படுகையிலிருந்து சிறிது தூரத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் பல தரவுகள் கிடைத்துள்ளன.
  • இதுபோன்ற முக்கியமான அகழாய்வுப் பணிகளும் ஒப்புக்குத்தான் நடந்துள்ளன. கால மாற்றத்துக்கு ஏற்றவாறு நவீன உத்திகளையும், உரிய புதிய கருவிகளையும் கொண்டு ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.
  • இதற்கு வேண்டிய நிதி ஆதாரங்களும், அக்கறையான வேகமான நடவடிக்கைகளும் மத்திய அரசிடம் இல்லை. மாநில அரசும் இது குறித்தான அருமை, பெருமைகளை அறிந்ததாகத் தெரியவில்லை.

நன்றி: தினமணி (16-10-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories