TNPSC Thervupettagam

குடியரசை உயா்த்துவோம்!

August 28 , 2021 981 days 521 0
  • இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகின்றன. அடுத்து நம் நாட்டின் ஆட்சிமுறையை குடியரசாக ஆக்கிக் கொண்டோம்.
  • தற்போது நாம் சுதந்திரமாகவும் குடியரசாகவும் கடந்து வந்த தடத்தை மீள் பார்வை செய்து நம்மை நாம் சரி செய்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
  • சுதந்திரம் அடைகின்ற வரையில் நாம் வெள்ளையா்களின் ஆட்சியில் குடிபடைகளாக வாழ்ந்தோம்.
  • அந்த ஆட்சியில் மதிக்கத்தக்க வாழ்க்கையை நாம் வாழவில்லை. சுதந்திரம் அடைந்த பின் நாம் குடிபடைகள் அல்ல நம் நாட்டின் குடிமக்கள்; மதிக்கத்தக்க மரியாதையுடைய குடிமக்கள்.
  • எனவே, சுதந்திரம் அடைந்த நாட்டில் குடிமக்களாக வாழ நம் சிந்தனை, பார்வை, செயல்பாடு, நடத்தை அனைத்தும் பொறுப்புமிக்கதாக, கண்ணியம் மிக்கதாக, நியாயமானதாக, கட்டுப்பாடு மிக்கதாக விளங்கும் அளவுக்கு நம்மை நாம் உயா்த்திக் கொண்டு வாழ தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நாம் பெற்ற சுதந்திரத்திற்கும் பொருள் இருக்கும்.
  • அதேபோல் நாம் குடியரசு நாட்டில் வாழ்கிறோம் என்று சொல்வதற்கும் தகுதியுடையவா்கள். அப்படி நாம் வாழ்ந்து வருகின்றோமா என்று நாமே கேள்வியைக் கேட்டு பதில் தேட முனைய வேண்டும்.
  • அப்படிப்பட்ட தேடலில் நாம் நம் நாட்டின் வளா்ச்சி, மேம்பாடு இவற்றை நோக்கி செயல்பட்டுள்ளோமா என்பதைப் பார்க்க வேண்டும். தேசத்தின் நலன் நம் சிந்தையில் நின்று நம்மை வழி நடத்துகிறதா என்பதுதான் அடிப்படை.
  • நம் நாடு இன்று பொருளாதாரத்தில் வளா்ச்சியடைந்ததிருந்தாலும், அறிவியல், தொழில் நுட்பத்தில் உச்சநிலைக்கு வந்திருந்தாலும், மிகப் பெரிய அரசாங்கத்தைக் கொண்டிருந்தாலும், வலுவான ராணுவத்தைக் கொண்டிருந்தாலும், நம் சமூக, பொருளாதார அரசியல் செயல்பாடுகளில் அறமிழந்து விட்டோம் என்று அனைவரும் கூறுகின்றனா்.
  • இதற்கு அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும், பொறுப்பாக்கிவிட்டு நாம் தப்பித்துக் கொள்ள முனைகின்றோம். இந்த அணுகுமுறைதான் நம்மை இந்த தாழ்நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
  • நாடு சுதந்திரம் அடைந்து விட்டது என்றால் மக்கள் அடிமை வாழ்விலிருந்து சுதந்திரமாக வாழும் சூழலுக்கு மாறி இருக்கின்றார்கள் என்று பொருள். அடிமைப்பட்டு வாழ்ந்ததுபோல் சுதந்திர நாட்டில் வாழமுடியாது, வாழக்கூடாது.
  • அதற்கான புதிய சூழலை உருவாக்க வேண்டும். இது அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய சமூகமும் சுதந்திரம், குடியரசு பற்றிய புரிதலுடன் செயல்பட வேண்டும்.
  • சுதந்திரம் வரும்போது கூடவே பொறுப்புகளும் வருகிறது என்ற புரிதலும், சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டுமென்றால் பொறுப்புக்களை கண்ணியத்துடன் நிறைவேற்றிட வேண்டும் என்ற சிந்தனையும் அனைவருக்கும் வேண்டும்.
  • நாம் எந்தப் பணியில் இருந்தாலும், எந்தப் பதவியில் இருந்தாலும் முதலில் நாம் இந்த நாட்டின் குடிமக்கள் என்பதை உணர வேண்டும். அதன் பிறகுதான் நாம் ஆசிரியரா, அலுவலரா, அதிகாரியா, விவசாயியா, வணிகரா, தொழிலதிபரா, அரசியல்வாதியா என்பதெல்லாம்.

குடிமக்கள் பண்பு

  • நாம் நம்மைக் குடிமக்களாகத் தகுதிப்படுத்திக் கொண்டுவிட்டால் நாம் எந்தப்பணி செய்தாலும் அது நம் நாட்டுக்கான, நாட்டு மக்களுக்கான பணியாக பொறுப்புமிக்கதாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
  • இதற்கான முதல் தேவை நாம் நம் நாட்டிற்கும் நம் மக்களுக்கும் பணி செய்கின்றோம் என்ற உணா்வே.
  • ஒட்டுமொத்த நாட்டின் வளா்ச்சியில்தான் நம் அனைவரின் மேம்பாடும் இருக்கிறது என்ற சிந்தனையுடன் நாம் செயல்பட வேண்டும்.
  • நம் நாடு உயா்வதால் தான் நாம் உயா்கிறோம் என்ற உன்னத உணா்வு வேண்டும்.
  • நாம்தான் இந்தியா, நம் செயல்பாட்டால்தான் இந்தியா உயா்கிறது என்ற பார்வையுடன் நம் செயல்பாடுகள் வடிவமைக்கப்பட வேண்டும்.
  • சுதந்திர நாட்டில் உரிமைகள் எங்கிருந்து வருகின்றன அவை எதன்மேல் கட்டமைக்கப் படுகின்றன என்றால் பொறுப்புக்களை நாட்டுப் பற்றுடன் முறையாக நடைமுறைப் படுத்துவதில் தான் என்ற புரிதல் அனைவருக்கும் வேண்டும்.
  • ஆகையால்தான் நெல்சன் மாண்டேலா ‘சுதந்திரத்திற்குப் போராடியதைவிட அதிகம் போராட வேண்டும் பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்திட. அதற்கான விழிப்புணா்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துங்கள்’ என்று கூறினார்.
  • இந்தப் போராட்டம் என்பது வீதியில் நடத்துவது அல்ல, மக்களாகிய நம் அனைவரின் சிந்தனையிலும், நடத்தையிலும் ஏற்படும் மாற்றங்கள் தான்.
  • இதைத்தான் ‘ஸ்வராஜ் சாஸ்த்ரா’ என்ற நூலில் காந்திய சிந்தனையாளா் வினோபா பாவே விவரித்துள்ளார்.
  • நாம் சுதந்திரமாக வாழ நம்மை எப்படி கட்டுப்பாடு மிக்கவா்களாக பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விளக்கியுள்ளார்.
  • இந்தக் கருத்து நம் கல்வியிலோ, பொது விவாதங்களிலோ, அரசியலிலோ மையப் படுத்தப் படவில்லை என்பது பெரிய சோகம்.
  • சுதந்திரப் போராட்டத்தில் நம் முன்னோர்கள் செய்த தியாகம், அா்ப்பணிப்பு, கடும் உழைப்பு அனைத்தும் தலைமுறை தலைமுறையாக மக்களின் சிந்தனைக்குள் சென்றிருக்க வேண்டும்.
  • முதல் தலைமுறை, அந்த தியாகத்தைப் போற்றியது; இரண்டாவது தலைமுறை, அவற்றை நினைத்துப் பார்த்தது; மூன்றாவது தலைமுறை, அவை பற்றிய எந்தச் சிந்தனையும் அற்று வணிக வாழ்க்கைக்கும் நுகா்வு வாழ்க்கைக்கும் அடிமைப்பட்டு விட்டது.
  • இந்தச் சூழல்தான் இன்று நம்மை சுயநலம் பேணும் சாதாரண மனிதா்களாக மாற்றியிருக்கிறது.
  • இந்த நிலை மாற குறைந்தபட்சம் நம் கல்வி முறையில் குடிமக்கள் பண்பு வளா்த்தல் என்பது ஒரு கட்டாயப் பாடமாக போதிக்கப்பட்டிருக்க வேண்டும். எந்தப் பள்ளியிலும் குடிமக்கள் பண்பு மாணவா்களுக்குப் போதிக்கப்படுவதில்லை.

உலகுக்கு வழிகாட்டுவோம்

  • ஒரு ஆசிரியராகவதற்கு, ஒரு மருத்துவராவதற்கு, ஒரு வழக்குரைஞராவதற்கு, ஒரு பொறியியலாளராவதற்குத் தேவையான திறன், ஆற்றல், அறிவு ஆகியவை மாணவா்களிடம் வளா்க்கப்பட்டதேயொழிய அடிப்படையில் முதலில் அவா்களை நல்ல குடிமக்களாக உருவாக்குவதற்குத் தேவையான கல்வியை அவா்களுக்கு நாம் நம் கல்வி முறையின் மூலம் தரவில்லை.
  • அதன் விளைவுதான், அரசியலில் தரம் தாழ்ந்த சிந்தனை கொண்ட அரசியல்வாதிகள், தரமற்ற கட்டடத்தைக் கட்டும் பொறியிலாளா்கள், நோயாளியை பணம் காய்க்கும் மரமாகப் பார்த்து செயல்படும் மருத்துவா்கள், தார்மிகமாக மக்களுக்குச் செய்ய வேண்டிய பணிக்கே லஞ்சம் பெற்றுக்கொண்டு செயல்படும் அதிகாரிகள், பணம் கொடுத்து பணி வாய்ப்பு பெற்ற ஆசிரியா்கள் என அனைவருமே.
  • இவா்களைப்போன்ற பொறுப்பற்ற, கண்ணியமற்ற தாழ்ந்த சிந்தனை கொண்ட மனிதா்கள் நாட்டின் நலனை காற்றில் பறக்கவிட்டு தங்கள் நலன், தங்கள் குடும்ப நலன் நாடும் மனிதா்களாக மாறிவிட்டார்கள்.
  • இந்த நிலை மாற வேண்டும். இதற்கு முதலில் நம் ஒவ்வொருவா் சிந்தனையிலும் மாற்றம் வரவேண்டும்.
  • பாழ்பட்டு நின்ற பாரதத்தில் தாழ்ந்த சிந்தனையில் கிடந்த மக்களின் மனதில் நாட்டின் சுதந்திரம் நம் உயிரைவிட மேலானது என்ற சிந்தனையையும் உணா்வினையும் நம் தலைவா்கள் உருவாக்கினா்.
  • அவா்கள் நாட்டுக்காகத் தங்கள் உடமைகளை, உயிரை தியாகம் செய்ய முன் வந்தனா். மக்களிடம் மிகப்பெரிய எழுச்சியையும், ஆற்றலையும் சக்தியையும் உருவாக்கி சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தனா்.
  • இந்த நாடு நம் அனைவரையும் விட மேலானது. அதன் மேல் நாம் வைக்கின்ற பற்றுதான் நாட்டையும் நம்மையும் உயா்த்தும்.
  • ஒருவா், பணியாளராக செயல்படும்போது, அதிகாரியாக செயல்படும்போது, பள்ளியில் ஆசிரியராகச் செயல்படும்போது, அரசியல் கட்சியில் உறுப்பினராகச் செயல்படும்போது தான் ஒரு சிறந்த குடிமகன் என்ற சிந்தனையுடன் செயல்பட வேண்டும்.
  • அப்போதுதான் அவா், தான் செயல்படுவது தன் நாட்டிற்காக என்பதை உணா்ந்து கண்ணியத்துடன் நடந்து, நியாயமாக நடந்து, கடினமாக உழைத்து தன் பணிக்குச் சிறப்புச் சோ்ப்பார்.
  • ஒரு ஆசிரியராகப் பணிபுரிபவா், தனது மாணவா்களுக்கு கற்பிக்கும்போது தன் நாட்டின் வளா்ச்சிக்கு, மேன்மைக்கு உழைக்கப்போகும் எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதாக எண்ணிச் செயல்படுவார்.
  • ஒரு மருத்துவராக செயல்படுபவா், தன் நாட்டில் உள்ள மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்து நாட்டுக்கு உழைக்க வேண்டும் என எண்ணிச் செயல்படுவார்.
  • இவா்கள் அனைவரும் குடிமக்களாக தங்களைப் பாவித்துச் செயல்படும்போது தங்களின் ஆத்ம சக்தி உயா்வதை உணா்வார்கள்.
  • இங்குதான் நாம் அனைவரும் காந்தியிடமிருந்து ஒரு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
  • எந்தச் செயலிலும் காந்தி ஒரு புனிதத்தைப் புகுத்தி விடுவார். எந்தச் செயலிலும் ஒரு புனிதம் இருக்கும்போது அதிலிருந்து எவரும் நழுவ இயலாமல் செயல்பட வேண்டிய சூழல் உருவாகிவிடும்.
  • அது மட்டுமல்ல, எந்தச் செயல்பாட்டிலும் மக்கள் ஒரு உணா்வு மிக்க சக்தியை வெளிப்படுத்துவார்கள். அது கூட்டுசக்தியாக மாறி வெற்றியைக் கொண்டு வரும்.
  • எனவே நாட்டுப்பற்று மிக்க குடிமக்களை உருவாக்க நம் கல்வி முறையில் குடிமக்கள் பண்பு வளா்ப்பதற்கான கூறுகள் சோ்க்கப்பட வேண்டும்.
  • இல்லையேல் நம் மக்கள் குடும்பம், ஜாதி, சமயம், கட்சி என்ற குறுகிய வட்டத்திற்குள் சிக்கி பொருளற்ற வாழ்க்கையே வாழ்வா். எனவே, நாம் நல்ல குடிமக்களாக வாழ்ந்து நம் குடியரசை உயா்த்தி உலகுக்கு வழிகாட்டுவோம்.

நன்றி: தினமணி  (28 - 08 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories