TNPSC Thervupettagam

குடியுரிமையல்ல, குடியமர்த்தல்!

August 28 , 2021 981 days 649 0
  • இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்பது, பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் சந்தித்தபோது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த பல கோரிக்கைகளில் ஒன்று.
  • இப்போது, தமிழகத்தில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு ரூ.317.4 கோடி அளவிலான திட்டங்களை அவர் அறிவித்திருக்கிறார். அவர்களுக்காக 7,469 வீடுகள் கட்டித் தரப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
  • திமுகவின் 2021 தேர்தல் அறிக்கையில், இலங்கைக்குத் திரும்ப விழையும் அகதிகளுக்கு எல்லா உதவிகளும் வசதிகளும் இந்திய அரசு செய்து கொடுக்க வேண்டும், அவர்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும் என்று கூறப் பட்டிருக்கிறது.
  • ஐ.நா. மனித உரிமை அமைப்பின் அறிக்கையின்படி, 2002-க்கும் 2020-க்கும் இடையில் 17,718 அகதிகள் தான் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
  • இதிலிருந்து அவர்களில் பெரும்பாலோருக்கு இலங்கைக்கு திரும்புவதில் ஆர்வமில்லாத நிலை இருப்பது தெரிகிறது.
  • அகதிகளாக நுழைபவர்களுக்கெல்லாம் மனிதாபிமான அடிப்படையில் குடியுரிமை வழங்குவது என்பதை கொள்கையாகக் கடைப்பிடிக்க முடியாது.
  • ஏற்கெனவே வறுமைக் கோட்டுக்குக் கீழே கணிசமான பகுதியினர் வாழும் நிலையில், அகதிகளையும் அனுமதித்து கூடுதல் சுமையைத் தாங்க இந்தியப் பொருளாதாரம் இடமளிக்காது.
  • இதைத்தான் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, வங்கதேசப் போருக்குப் பிறகு லட்சக்கணக்கில் அகதிகள் நுழைய முற்பட்டபோது தெளிவுபடுத்தினார்.
  • இந்தியாவிலுள்ள தமிழ் அகதிகள் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டு முறையாக குடியமர்த்தப்படுவார்களா? மாட்டார்களா? என்பது கேள்விக்குறியாகத் தொடர்கிறது.
  • அவர்களில் பெரும்பாலானோர் இந்தியக் குடியுரிமை பெற்று இங்கேயே இணைந்து விடுவது என்பதில்தான் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
  • 1983 முதல் தமிழகத்தில் 3, 04,269 இலங்கைத் தமிழ் அகதிகள் இருக்கிறார்கள். அவர்களில் 52,822 பேர் 29 மாவட்டங்களிலுள்ள முகாம்களில் தங்கியிருக்கிறார்கள்.
  • பெரும்பாலானோர் முகாம்களுக்கு வெளியே இருக்கிறார்கள். அவர்களில் சிலர் வெளிநாடுகளுக்கு போய்விட்டனர். பலர் மக்களோடு மக்களாகக் கலந்துவிட்டனர்.
  • இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகளுக்கும், சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா திரும்பாத இலங்கை வாழ் தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்கும் சட்டத்தை இலங்கை அரசு 2003-இல் நிறைவேற்றியிருக்கிறது.
  • அதனடிப்படையில் இந்தியாவிலிருந்து இலங்கைக்குத் திரும்பும் அகதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் குடியுரிமை பெறுவது பிரச்னையாக இருக்காது. அப்படியிருந்தும் இலங்கை திரும்ப அகதிகள் விரும்பாமல் இருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
  • சிங்கள இனவெறித் தாக்குதலுக்கு மீண்டும் உள்ளாகிவிடுவோமோ என்கிற அச்சமும், அமைதியாக வாழ முடியுமா என்கிற கவலையும் அவர்களை யோசிக்க வைக்கின்றன.
  • அதையும் மீறி தாயகம் திரும்பினால், தங்களது வாழ்வாதாரத்துக்கு என்ன வழி என்பது தெரியாத நிலையும் அவர்களின் தயக்கத்தை அதிகரிக்கிறது.

தாய் மண்ணில் குடியமர்த்துவது

  • இந்திய குடியுரிமைச் சட்டத்தின் அடிப்படையில், ஹிந்துக்களான இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியக் குடியுரிமை பெறுவதற்கான தகுதி பெறவில்லை.
  • இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்திலிருந்து இனவெறித் தாக்குதலுக்கு உள்ளான ஹிந்து, கிறிஸ்தவ, பௌத்த, சீக்கிய, பார்ஸி, சமணர்களைப் போல இலங்கைத் தமிழ் அகதிகள் கருதப்படாததுதான் அதற்கு காரணம்.
  • இலங்கையில் சிங்கள இனவெறி காணப்பட்டாலும், அது தன்னை ஒரு மதச்சார்பற்ற நாடாக அறிவித்திருப்பதால் ஏற்பட்டிருக்கும் பிரச்னை இது.
  • சிங்கள பௌத்தர்களுக்கு எதிராக யாழ்ப்பாணத் தமிழர்கள் போராட வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியது மதப் பிரச்னைதானே தவிர, மொழிப் பிரச்னை அல்ல.
  • வடக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் ஹிந்துக்களுக்கும், கிழக்குப் பகுதியில் வாழும் தமிழ் முஸ்லிம்களுக்கும் எதிராக சிங்கள பௌத்தர்களால் தொடுக்கப்பட்ட இனவெறித் தாக்குதலின் விளைவுதான் இலங்கைப் பிரச்னை என்பதை பலரும் மறந்துவிடுகிறார்கள்.
  • பனதுராவில் பிராமண அர்ச்சகர் ஒருவர் சிங்கள இனவெறியர்களால் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம்தான், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கொதித்தெழ வைத்தது என்பது வரலாறு.
  • இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது என்பது இலங்கையிலிருந்து தமிழர்களை ஒட்டுமொத்தமாக விரட்டியடிக்கும் ராஜபட்ச சகோதரர்களின் இன வெறிக்கு வலு சேர்ப்பதாக அமைந்துவிடும்.
  • வட கிழக்கு மாகாணத்தின் மண்ணின் மைந்தர்களான தமிழர்கள் அனைவரும் இலங்கைக்குத் திரும்பி, தங்களது சொத்துக்களை மீட்டெடுத்து, சம உரிமையுடன் வாழும் நிலைமைக்கு வழிகோலுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்குமே தவிர, வட கிழக்கு மாகாணத்தை சிங்களர்களுக்கு தாரை வார்ப்பது என்ன நியாயம்?
  • தமிழகத்தில் தஞ்சமடைந்திருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான நல்வாழ்வுத் திட்டங்கள் அவர்களை இங்கே நிரந்தரமாகக் குடியேற வழிகோலுமானால், ஈழத்தின் மீதான தமிழர்களின் உரிமையை சிங்களர்களுக்கு விட்டுக் கொடுப்பதாக அமைந்துவிடக் கூடும்.
  • போராளிகள் சிந்திய ரத்தத்துக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். குடியுரிமை வழங்குவதைக் கைவிட்டு, பாதுகாப்பாக இலங்கை அகதிகளை தாய் மண்ணில் குடியமர்த்துவதுதான் இந்திய அரசின் நோக்கமாக இருக்க வேண்டும்.

நன்றி: தினமணி  (28 - 08 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories