TNPSC Thervupettagam

குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த தலையங்கம்

March 6 , 2022 804 days 358 0
  • தலைநகர் தில்லியின் எல்லையையொட்டி பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேச மாநில விவசாயிகள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டன. ஓர் ஆண்டுக்கும் மேலாக நடைபெற்ற போராட்டம், பஞ்சாப், உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியதால் திரும்பப் பெறப்பட்டன என்பதும்கூட உண்மை.
  • புதிய வேளாண் சட்டங்களில் காணப்பட்ட சில தேவையற்ற அம்சங்கள் முறையாகக் கலந்தாலோசித்து, விவாதத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாததுதான் அந்தச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளை ஒருங்கிணைந்து போராட வைத்தது. இடதுசாரிக் கட்சிகளைத் தவிர, இந்தியாவின் பெரும்பாலான தேசிய - மாநிலக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளேகூட, வேளாண் சீர்திருத்தங்கள் குறித்து வாக்குறுதி வழங்கியிருந்தன. அரசுக்கு எதிராகப் போராட வாய்ப்புக் கிடைத்தபோது, அதை மறந்துவிட்டு எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து களமிறங்கியதில் வியப்பில்லை.
  • புதிய வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன என்பது மட்டுமல்ல, இப்போது குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டிருக்கிறது. விவசாயிகள் பாதுகாக்கப்பட வேண்டும், விவசாயம் லாபகரமாக மாற வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.
  • அதே நேரத்தில், குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது நிரந்தரமாக்கப்படுவதும், அதற்கு சட்ட உத்தரவாதம் அளிப்பதும் தவறான நிர்வாகக் கண்ணோட்டம் என்பதை நாம் உணர வேண்டும்.
  • நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஒருவகை கார்ப்பரேட் விவசாயம் இந்தியாவில் நிலைபெறத் தொடங்கிவிட்டது. சிறு விவசாயிகள் பலரும் வேளாண்மையைக் கைகழுவி வேறு தொழிலுக்கு மாறிவருகிறார்கள். விளைநிலங்கள் குடியிருப்புகளாகவும், தொழிற்சாலைகளாகவும் மாறி வருகின்றன.
  • பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில், நிலத்தில் இறங்கிப் பணிபுரிய இளைஞர்கள் பலரும் தயாராக இல்லை. இயந்திரங்கள்தான் பெரும்பாலான வேலைகளைச் செய்கின்றன. ஏர் உழவு அறவே அகன்று, டிராக்டர்கள் அந்தப் பணியைச் செய்கின்றன.
  • இந்த எதார்த்தம் ஒருபுறம் இருக்கட்டும். குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவது, விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக மட்டுமல்ல, குறிப்பிட்ட பயிர்களை வேளாண்மை செய்வதற்கான ஊக்கம் வழங்க வேண்டும் என்பதற்காகவும்தான். நமது தேவைக்கேற்ற உற்பத்தியை உறுதி செய்வதற்கு, விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவதற்காகக் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இன்றைய நிலைமை, உணவு தானிய உற்பத்திக் குறைவு அல்ல. தேவைக்கேற்ற பொருள்கள் பயிரிடப்படாமல் இருப்பதும், தேவைக்கு அதிகமாகச் சில தானியங்கள் பயிரிடப்படுவதும்தான் பிரச்னை. தேவைக்கு அதிகமாகப் பயிரிட்டு, அரசின் தானியக் கிடங்குகளில் தேங்கிக் கிடந்து சீரழியும் தானியங்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் நாம் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவது என்பது, வேடிக்கையாக இருக்கிறது. வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்பட வேண்டிய வரிப்பணம், பெரும் நிலச்சுவான்தார்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.
  • நடப்பு அறுவடைக் காலத்தில், இதுவரை இல்லாத அளவு நெல், கோதுமை விளைச்சல் இருக்கிறது என்று தயவு செய்து யாரும் பெருமைப்பட வேண்டாம். விவசாயிக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கக் கூடிய நெல், கோதுமை தவிர ஏனைய பயிர்களை வேளாண்மை செய்ய பெரும் நிலச்சுவான்தார்கள் தயாராக இல்லை என்பதை உணர வேண்டும். எண்ணெய் வித்துகளையும், பருப்பு வகைகளையும் நாம் அந்நியச் செலாவணி கொடுத்து இறக்குமதி செய்து கொண்டிருக்கும்போது, தேவைக்கு அதிமாக நெல்லும் கோதுமையும் அரசால் கொள்முதல் செய்யப்பட்டு உணவுக் கிடங்குகளில் நிரம்பி வழிகின்றன.
  • 2013-க்கும் இப்போதைக்குமான பத்தாண்டு இடைவெளியில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்படும் கோதுமையின் அளவு 70% அதிகரித்திருக்கிறது. நெல்லும் அதேபோலத்தான். 2021 ஜூலை - ஆகஸ்ட் நிலவரப்படி, ஒன்பது கோடி டன் உணவு தானியங்கள் அரசின் கிடங்குகளில் தேவையில்லாமல் தேங்கிக் கிடக்கின்றன.
  • இன்னொருபுறம், பருப்பு வகைகளுக்கும், எண்ணெய் வித்துகளுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை தருவதாக அரசு வழங்கிய வாக்குறுதியை நம்பிப் பயிரிட்டவர்கள் கண்ணீர் விடுகிறார்கள். அவர்கள் நெல், கோதுமை விவசாயிகளைப் போன்ற பெரு விவசாயிகள் அல்ல. ஐந்து ஏக்கருக்கும் குறைவாகப் பயிரிடும் சாமானிய விவசாயிகள்.
  • 2015 - 16-இல் 1.63 கோடி டன்னாக இருந்த பருப்பு வகைகளின் உற்பத்தி, இப்போது நான்கு கோடி டன்னாக உயர்ந்திருக்கிறது. ஆனால், மொத்த விளைச்சலில் 10% எண்ணெய் வித்துகள், 2.5% பருப்பு வகைகள் என்கிற அளவில்தான் "நாஃபெட்' கொள்முதல் செய்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் குறைவாக அந்த விவசாயிகள் தங்களது விளைபொருள்களைச் சந்தையில் விற்கிறார்கள்.
  • நமது தேவைக்கேற்ற தானியம், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் பயிரிட ஊக்குவிக்கும் வகையில்தான் குறைந்தபட்ச ஆதரவு விலை, ஆண்டுக்கு ஆண்டு நிர்ணயிக்கப்பட வேண்டுமே தவிர, தேவைக்கு அதிகமான விளைச்சலுக்கு மக்கள் வரிப்பணம் விரயமாகக் கூடாது. குறைந்தபட்ச ஆதரவு விலை, குறு, சிறு விவசாயிகளுக்கு மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். அதுவும், தேவைக்கேற்ப குறிப்பிட்ட பயிர்களுக்கு மட்டும்!

நன்றி: தினமணி (06 – 03 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories