TNPSC Thervupettagam

குற்றப் பின்னணியினரை அரசியலிலிருந்து விலக்க வேண்டும்

January 29 , 2020 1549 days 1113 0
  • குற்றப் பின்னணி உள்ளவர்களை வேட்பாளர்களாக நிறுத்தக் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிடக் கோரும் தேர்தல் ஆணையத்தின் மனுவை ஏற்றுக்கொண்டு, உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவானது சரியான நேரத்தில் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை என்றே சொல்ல வேண்டும்.
  • முந்தைய நாடாளுமன்ற அவைகளைக் காட்டிலும் தற்போதைய அவையில் அதிக அளவிலான உறுப்பினர்கள் குற்றப் பின்னணியுடன் வந்திருக்கிறார்கள். 233 உறுப்பினர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன.
  • மொத்த உறுப்பினர்களில் இது ஏறக்குறைய 43%. கடுமையான குற்றப் பின்னணி உள்ளவர்கள் 29%. கடந்த 2014 மக்களவையில் குற்றப் பின்னணி உள்ளவர்களின் எண்ணிக்கை 185 ஆக இருந்தது. இந்தப் போக்கு சரிவடையாமல் வளர்ந்துகொண்டேசெல்வது இந்திய ஜனநாயகத்துக்குப் பெரும் கேடு விளைவிக்கும்.

குற்றப் பின்னணி

  • குற்றப் பின்னணியைக் கொண்டிருந்தபோதிலும் அப்படியானவர்களால் தேர்தலில் வெல்ல முடிவதற்கான காரணம், பொதுமக்களிடம் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கும், தேர்தலுக்கு அதிக அளவில் பணம் செலவிடுவதில் அவர்களுக்கு உள்ள ஆற்றலும்தான் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
  • இத்தகைய வேட்பாளர்களைப் பற்றிப் பேசுகையில், அவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர்களின் பார்வையையும் நாம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. தங்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதி தங்களது விருப்பங்களை நிறைவேற்றக்கூடியவராக இருக்கிறாரா என்பதை மட்டுமே இத்தகைய குறுகிய பார்வையாளர்கள் பார்க்கிறார்கள். இந்நிலை மாற வேண்டும். இது ஒரு கூட்டு முயற்சிதான். அரசியல் கட்சிகளும் இந்தப் பொறுப்பேற்பில் முக்கியப் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும்.
  • உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தன்னளவில் இவ்விஷயத்தில் வழிகாட்டும் தீர்ப்புகள் பலவற்றை வழங்கியிருக்கிறது. குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்ட பிரதிநிதிகளை உடனடி தகுதியிழப்பிலிருந்து சட்டரீதியாகப் பாதுகாக்கும் நடைமுறைகளை 2013, 2014-ம் ஆண்டுகளில் நீக்கியதோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளோடு தொடர்புடைய வழக்குகளின் விசாரணையை ஓராண்டுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அது உத்தரவிட்டதை நினைவுகூரலாம்.

வழக்குகள் – அரசியல்

  • 2017-ல் அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பதற்காகச் சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
  • 2018-ல் அரசியல் கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்கள் எதிர்கொண்டுள்ள குற்றவியல் வழக்குகள் பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும் என்று அது உத்தரவிட்டது. எனினும், இந்த உத்தரவுகளால் குற்றப் பின்னணி உள்ளவர்களை தேர்தலில் போட்டியிடாமல் தடுக்க முடியவில்லை.
  • இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளில் உள்ள பிரச்சினைகளின் விளைவு இது. நம்முடைய நாடாளுமன்றம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் கொண்டுவந்த திருத்தங்களும் சேர்ந்துதான் குற்றப் பின்னணியாளர்களுக்கு இடமளிக்கின்றன என்பதை நாம் மறந்துவிடலாகாது.
  • சட்டம் இயற்றும் மன்றங்களில் குற்றவாளிகள் கோலோச்சுவது தேசிய அவமானம் என்று ஒவ்வொரு தரப்பும் கருத வேண்டும். வாக்காளர்களில் தொடங்கி அரசியல் கட்சிகள் வரை சகல தரப்பினரும் இந்நிலையை மாற்றிடப் பணியாற்ற வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (29-01-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories