- இந்த கரோனா காலத்தின் எண்ணற்ற ஊரடங்குகளால், குழந்தைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல பாதிப்புகளுக்கு உள்ளாகி யிருக்கிறார்கள்.
- ஊரடங்கு காலத்தில் உலகம் முழுக்கவும் பசிபட்டினிக்குக் குழந்தைகள் தள்ளப்பட்டனர்; அடிப்படைக் கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து, இருப்பிடம் போன்றவற்றை இழந்தனர்.
- உலகம் முழுக்க ஏற்பட்ட பாதிப்புகளில் மூன்றில் ஒரு பங்கு பாதிப்பை எதிர்கொண்டது தெற்காசிய நாடுகள்தான்.
- இந்தியா போன்ற நாடுகளில், கல்வியில் ஏற்கெனவே இருந்துவந்த ஏற்றத்தாழ்வுகள் இன்னும் அதிகரித்திருக்கின்றன. தமிழ்நாட்டில்கூட இணையவழிக் கல்வியில் பங்கேற்க வசதியற்ற மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட செய்திகளைக் கடந்து வந்திருக்கிறோம்.
- உலகம் முழுக்க ஏழை, எளிய குழந்தைகளுக்கு இந்த ஊரடங்குக் காலம் சவால் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது. இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?
- அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளையே சமாளிக்க முடியாமல் போராடிக் கொண்டிருந்தவர்களுக்கு இணையவழிக் கல்வி சாத்தியமற்றதாக இருந்தது.
- உலகம் முழுக்க இதுபோலக் கிட்டத்தட்ட 5 கோடிக் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்கிறது ‘யூனிசெஃப்’ (UNICEF). இது தொடர்பாக எடுக்கப்பட்ட இன்னொரு ஆய்வில், அதிக தனிநபர் வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள குழந்தைகள் சராசரியாக ஆறு வாரங்கள் மட்டுமே இந்தப் பருவத்தில் கல்வியை இழந்திருக்கிறார்கள்.
- அதுவே வளரும், ஏழ்மை நாடுகளை எடுத்துக்கொண்டால் சராசரியாக நான்கு மாதங்கள் கல்வியை இழந்திருக்கிறார்கள். நாடுகளுக்கிடையே மட்டுமல்ல; ஒரே நாட்டில்கூட இந்த வேறுபாடு இருந்திருக்கிறது.
கேள்விக்குறியாகும் எதிர்காலம்
- கல்வி மட்டுமல்ல; ஊட்டச்சத்துக் குறைபாட்டினாலும்கூடக் குழந்தைகள் இந்தக் காலத்தில் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.
- இந்த இரண்டையும் கணக்கில்கொள்ளும்போது இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் ஊரடங்கு ஏற்படுத்திய பொருளாதாரச் சிக்கல் ஒரு காரணமாக இருந்தாலும், தடுப்பூசிகள் போடாதது, முறையான பேறு காலக் கண்காணிப்பைத் தொடராதது, பேறு கால ஊட்டச்சத்தில் ஏற்பட்ட குறைபாடு, இதனால் ஏற்பட்ட நிறைய நோய்கள் எனப் பல காரணங்களால் வழக்கமாகக் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து இந்தக் காலத்தில் குறைந்திருக்கிறது.
- இந்தக் காலகட்டத்தில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு வீதம் அதிகரித்திருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். புதிய சூழலும், புதிய இன்னல்களும், மாறிய வாழ்க்கை முறையும் உண்டாக்கிய நெருக்கடிகளால் குழந்தைகளின் மனநிலையும் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- குழந்தைகளிடம் ஏற்பட்ட இந்த உளவியல் பாதிப்புகள் உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த பாதிப்புகள் நீண்ட காலம் குழந்தைகளிடம் இருக்கும் என்று உலகளாவிய மனநல அமைப்புகள் ஊகித்திருக்கின்றன.
உளவியல் சிக்கலுக்கான காரணங்கள்
1) குழந்தைகள் பெரும்பாலும் தங்களது சக வயதினருடன் உரையாடுவதன் வழியாகவே நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள்.
2) ஒரு குழந்தை தனது சுய அடையாளத்தை இந்த உலகத்தோடு உறவாடுவதன் வழியாகவே பெறுகிறது.
3) பெரும்பாலும் பதின்ம வயதுக் குழந்தைகளுக்குத் தங்களது சுயத்தை உணர்ந்து கொள்வதே பிரதான நடவடிக்கையாக இருக்கிறது.
4) திடீரென அவர்கள் வீட்டுக்குள் முடங்க நேரிட்டதால், இந்த சுயதேடல் பாதிக்கப் பட்டிருக்கிறது; அது அவர்களுக்கு ஒருவிதப் பதற்றத்தைக் கொடுத்திருக்கிறது.
5) வெளியுலக உரையாடல்கள் இல்லாததால், அவர்களின் மிதமிஞ்சிய உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான வெளி இல்லாமல் போயிருக்கிறது. இந்த உணர்வுகளை வீட்டில் வெளிப்படுத்தும் போது, அது பெற்றோர்களின் கண்டிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. சக வயதினரிடமிருந்து கிடைத்த பரஸ்பரப் புரிதலும் அங்கீகாரமும் பெற்றோர்களிடம் கிடைக்க வில்லை என்பதால், பெற்றோர்களின் மீதான ஈடுபாடும் குறைந்துபோய் அவர்களின் மீது அச்சம் வந்திருக்கிறது.
6) இணையவழியில் கற்றல் மட்டுமே பிரதானமாக இருந்திருக்கிறது. பள்ளிக்கூடச் சூழல்களிலிருந்து சக வயதினருடன் உறவாடுவது, விளையாடுவது, ஆசிரியர்களுடன் இணக்கமாக இருப்பது என்பது இணையவழிக் கல்வியில் சாத்தியமில்லாததால் அதன் மீதான ஈடுபாடும் கவனமும் குறைந்திருக்கிறது; மேலும், அதில் எந்தப் பரஸ்பர அங்கீகாரமும் கிடைக்காதால் அது அவர்களின் தன்னம்பிக்கையையும் குலைத்திருக்கிறது. இவையெல்லாம் சேர்ந்து அவர்களின் கற்றல் திறனில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
7) கற்றலில் ஆர்வமின்மை, கவனமின்மை, அதீத உணர்வெழுச்சிகள் போன்றவற்றைப் பெற்றோர்கள் கண்டிப்புடன் அணுகியிருக்கிறார்கள். அது சார்ந்த குழந்தைகளின் மனநிலையை அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை.
8) எந்த நேரமும், எல்லா நடவடிக்கைகளும் பெற்றோர்களின் கவனத்திலேயே இருப்பது அவர்களுக்கும் பெற்றோர்களுக்குமான இணக்கத்தையும் பிணைப்பையும் கெடுத்திருக்கிறது. பெற்றோர்களால் ஆசிரியர்களைப் போல குழந்தைகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது இதில் ஆச்சரியமானது.
தாக்கங்களின் வீரியம்
- வெளியுலகத் தொடர்பின்மை, சுயதேடலின் தேக்கம், உணர்வுகளை வெளிப்படுத்த முடியாத நிலை, கற்றல் தொடர்பான தாழ்வுமனப்பான்மை, பெற்றோர்களின் கண்டிப்பு, அதனால் பாதிக்கப்பட்ட சுமுக உறவு, அதீத டிஜிட்டல் சாதனப் பயன்பாடு என அத்தனையும் சேர்ந்து குழந்தைகளைப் பாதித்திருக்கிறது.
- இந்த உளவியல் பாதிப்புகள் அதீதக் கோபம், அடம், பேச்சுக் குறைபாடு, தூக்கமின்மை, கவனிப்புத் திறன் குறைவு, கற்றல் குறைபாடு, துறுதுறுத்தன்மை என வெளிப்பட்டிருக்கிறது.
- எந்த அளவுக்கு மாறியுள்ள சூழலைப் புரிந்துகொண்டும், குழந்தைகளிடம் ஏற்பட்ட இந்த இயல்பான பாதிப்புகளைப் புரிந்துகொண்டும் பெற்றோர்கள் இருந்திருக்கிறார்களோ அங்கு இதன் தாக்கம் குறைவாக இருந்திருக்கிறது.
- இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட நோய் குறித்த அச்சம், பாதுகாப்பின்மை, நெருங்கிய உறவினர்களின் மரணங்கள் கொடுத்த நிச்சயமற்ற நிலை போன்றவையும், ஊரடங்குக் காலத்தில் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்கள், வேலையிழப்பு, வீட்டுக்குள் முடங்கியிருக்கும் நிலை, எதிர்காலம் குறித்த அச்சம் போன்றவையும் பெரியவர்களுக்கும் பல உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், பெரியவர்களைவிடக் குழந்தைகளுக்கே இதன் தாக்கம் நீண்ட நாள் இருக்கும்.
- பொதுவாக, ஒரு சிக்கலிலிருந்து, நெருக்கடியிலிருந்து பெரியவர்களால் மிக விரைவாக வெளியேறி, தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். ஏனென்றால், அவர்களுக்கு அதற்கான அனுபவங்கள் இருக்கின்றன. மனப்பக்குவம் இருக்கிறது.
- முதிர்ச்சி இருக்கிறது. அதற்கான தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால், அது நீண்ட கால நோக்கில் பாதிப்புகளை ஏற்படுத்தாது.
குழந்தைகள் என்ன செய்வார்கள்?
- அதுவே குழந்தைகளுக்கு மனநல பாதிப்பு ஏற்படும்போது அது அவர்களின் புறவுலகத்துடனான உறவைப் பாதிக்கும், நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும்; அச்சம் அவர்களது மனதில் ஏற்படும்போது அது அதன் வழியாகவே அவர்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களை அணுகுவார்கள்.
- உலகத்தின் மீதான உற்சாகமும் குதூகலமும் மறைந்து அச்சம் மட்டுமே மனதில் தங்கும். மனம் முழுக்க வியாபித்திருக்கும் இந்த எதிர்மறை உணர்வுகள் வழியாக இப்படிப்பட்ட சவாலான காலத்தைத் தாண்ட முடியாது. அது இன்னும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
- இந்த நிலையில், உடன் இருக்கும் பெற்றோர்களும் பெரியவர்களும்தான் அவர்களின் இந்த மனநிலையைப் புரிந்துகொண்டு நம்பிக்கையை ஏற்படுத்த முயல வேண்டும்.
- இது போன்ற அசாதாரண காலங்களில் மனிதர்கள் கூட்டாக இருந்து, ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர நம்பிக்கைகளாலும் உதவிகளாலுமே இந்த நெருக்கடியிலிருந்து மீள முடியும் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
- ஆனால், அதைச் சொல்லக்கூடிய நிலையில் பெரியவர்களும் இல்லாததுதான் இதில் சிக்கலே. பெரியவர்களுக்கே இந்த அச்சம் இருந்தபோது அவர்களால் குழந்தைகளிடம் இயல்பாக இருக்க முடியவில்லை.
- தங்களது இயலாமைகளை அவர்கள் நிறைய நேரங்களில் குழந்தைகளிடமே காட்டினர்.
- வீட்டிலேயே இருந்ததால் குழந்தைகளை அவர்கள் முன்பைவிட மிக அதிகமாகக் கவனிக்கத் தொடங்கினார்கள். குழந்தைகளிடம் ஏற்பட்ட இந்தச் சின்னச் சின்ன உளவியல் பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தினர். அதற்கான பழியையும் குழந்தைகள் மீதே சுமத்தினர்.
- அறிவுரைகள் என்ற பெயரில் அவர்களின் பயத்தை இன்னும் அதிகப்படுத்தினர். பெற்றோர்களின் இந்தப் போக்குதான் குழந்தைகளின் உளவியல் பாதிப்புகளைச் சிக்கலாக்கின.
- அதை ஆற்றுப்படுத்துவதற்குப் பதிலாக இன்னும் தீவிரப்படுத்திய இந்த நிலை இங்கு மட்டுமல்ல; உலகம் முழுக்க இருந்தது!
நன்றி: இந்து தமிழ் திசை (11 - 06 – 2021)