TNPSC Thervupettagam

குழந்தைகள் மனநலத்தில் கூடுதல் அக்கறை தேவை!

February 17 , 2022 822 days 465 0
  • கரோனா பரவல் குறைந்துவருவதையொட்டி, தமிழ்நாட்டில் பிப்ரவரி 1-ம் தேதியிலிருந்து 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 16-லிருந்து நர்சரி, மழலையர் பள்ளிகளும் திறக்கப் பட்டுள்ளன.
  • கல்வியாண்டு முடியப்போகிற நிலையில், நர்சரி பள்ளிகளையும்கூட நடத்த வேண்டுமா என்ற கேள்விகள் ஒருபுறம் இருந்தாலும், கடந்த இரண்டாண்டுகளாகப் பெரிதும் செயல்படாதிருந்த அப்பள்ளிகளைத் திறந்திருப்பது அடுத்த கல்வியாண்டுக்கான ஆயத்தப்படுத்தலாக அமையும்.
  • தனியார் பள்ளி நிர்வாகிகளின் கோரிக்கைகளை ஏற்றே முதல்வர் மழலையர் பள்ளிகளைத் திறக்க அனுமதித்துள்ளார். அதே நேரத்தில், பள்ளி நிர்வாகிகள் கல்வியாண்டுக்கான முழுக் கட்டணத்தையும் பெறுவதற்கான வாய்ப்பாக மட்டுமே அதைக் கருதி விடக் கூடாது.
  • குழந்தைகள் மனநலம் குறித்த தீவிரமான பொறுப்பொன்றும் அவர்களுக்குக் காத்திருக்கிறது.
  • தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் பிப்ரவரி மாதத்திலிருந்து ஆரம்ப வகுப்புகள் தொடங்கியுள்ளன.
  • உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த வாரத்திலிருந்துதான் ஆரம்பப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
  • இரண்டாண்டுகளாகப் பெருந்தொற்றின் காரணமாகத் தடைபட்டிருந்த நேரடிப் பள்ளிக் கல்வி மீண்டும் இயல்பான முறையில் தொடர்வது பெற்றோர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது.
  • மாணவர்களுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும் இடையே ஏற்பட்டுவிட்ட இந்தக் கற்றல் இடைவெளியைச் சீர்செய்வதில் ஆசிரியர்கள் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டாலுமேகூட, மாணவர்கள் இணைய வழி வகுப்பு முறையிலிருந்து நேரடி வகுப்பு முறைக்கு மாறுவதற்குச் சில நாட்கள் தேவைப்படும்.
  • தங்களது நட்பைப் புதுப்பித்துக்கொள்ளவும், பள்ளிக்கூடச் சூழலுக்குப் பழகவும் அவர்களுக்குத் தேவையான கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும்.
  • இடைப்பட்ட காலத்தில் மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் தவிர்க்கும் முயற்சிகளை பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம், அரசு என அனைத்துத் தரப்பும் சேர்ந்து முன்னெடுக்க வேண்டும்.
  • கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மாணவர்கள் மனச்சோர்வு, அழுத்தம், கோபம், பெற்றோரின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாமை, ‘வீடியோ கேம்’ விளையாட்டுகளில் மிதமிஞ்சிய ஆர்வம் போன்ற மிகவும் பொதுவான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. என்றாலும், இக்காலக்கட்டத்தில் குழந்தைகளின் மனநலம் குறித்து ஒருங்கிணைந்த வகையில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.
  • டெல்லியில் மட்டும் அத்தகைய ஒரு முயற்சியை அரசு முன்னெடுத்துள்ளது. மாணவர்களின் இந்த நடத்தைசார் பிரச்சினைகளுக்கு அவர்கள் வீட்டிலேயே அடைந்துகிடக்க நேரிட்டதும் தாங்களே சுயமாகப் படிக்க வேண்டியிருந்ததும் காரணங்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
  • கல்வியாண்டின் நிறைவை நெருங்கிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில், ஆசிரியர்களின் முன்னுரிமை என்பது குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தையாவது உரிய நாட்களுக்குள் முடித்து விட வேண்டும் என்பதாகவே இருக்கும்.
  • வழக்கமான எண், எழுத்து, விளையாட்டுப் பயிற்சிகளுடன் கூடவே தொற்றுப் பரவல் தடுப்பு குறித்த விழிப்புணர்வையும் ஊட்ட வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு இருக்கிறது.
  • இந்தக் கல்வியாண்டில் மாணவர்கள் பெறுகின்ற மதிப்பெண்களைக் காட்டிலும் அவர்களது உற்சாகமான மனநிலையை மீட்டெடுப்பதே முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும்.

நன்றி: இந்து (17 – 02 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories