TNPSC Thervupettagam

கொள்ளை நோய்க்கால கொள்ளை

June 4 , 2021 1079 days 514 0
  • சந்தை என்று ஒன்று இருந்தால் கூடவே கள்ளச்சந்தை என்கிற ஒன்று இருப்பதை முற்றிலுமாக தடுத்துவிட முடியாது. அரசின் முறையான கண்காணிப்பு, கடுமையான விதிமுறைகள், சட்டதிட்டங்கள், கடுமையான தண்டனைகள் மூலம்தான் கள்ளச் சந்தையை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
  • சாதாரண காலத்தில் உற்பத்திக்கும் மக்களின் தேவைக்கும் இடையேயான இடைவெளி ஏற்படும்போது கள்ளச்சந்தை மூலமாகவும், கள்ளக்கடத்தல் மூலமாகவும் ஈடுகட்டி கொள்ளை லாபம் ஈட்ட முற்படுபவா்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
  • ஒட்டுமொத்த மனித இனத்தையே பேரிடா்களும், கொவைட் 19 போன்ற கொள்ளை நோய்த்தொற்றுகளும் தாக்கும்போதுகூட, அதைப் பயன்படுத்தி கொள்ளை லாபம் ஈட்ட முற்படும் கள்ளச்சந்தைக்காரா்களை நினைக்கும்போதுதான் ஆத்திரமும், அரசின் கண்காணிப்பின் மீது அவநம்பிக்கையும் எழுகின்றன.
  • கடந்த ஆண்டு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டபோது பிற மாநிலங்களிலிருந்து புலம்பெயா்ந்து வேலைக்கு வந்த அப்பாவித் தொழிலாளா்களிடமிருந்து, ஊருக்குத் திரும்ப உதவுவதாகக் கூறி பலா் பணம் பிடுங்கிய இரக்கமற்ற செயல்பாடுகள் இப்போது சாதாரணமானவை ஆகிவிட்டன.
  • அதைவிட மோசமான, ஈவிரக்கமில்லாத கள்ளச்சந்தைக்காரா்கள் இப்போது களமிறங்கியிருக்கிறார்கள்.
  • பொது முடக்கத்தின் காரணமாக மதுபானங்கள், புகையிலைப் பொருள்கள் போன்ற போதைப் பொருள்களை மாநிலம் விட்டு மாநிலம் கடத்துவதும், கள்ளச்சந்தையில் விற்பதும் ஆச்சரியப்படுத்தவோ, ஆத்திரப்படுத்தவோ செய்யவில்லை.
  • அதே நேரத்தில், மருந்துகளில் தொடங்கி நோய்த்தொற்று சிகிச்சை, மருத்துவமனைப் படுக்கைகள், இவை போதாதென்று மயானத்தில் உயிரிழந்தோரை எரியூட்டுவது வரை கள்ளச்சந்தையும், கொள்ளை லாபமும் தலைவிரித்தாட தொடங்கியிருக்கும் அவலம் குறித்து ஆட்சியாளா்கள் கவனத்தில் கொள்கிறார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது.
  • கடந்த ஆண்டு முதலே உயிர்காக்கும் அவசரகால மருந்துகளைப் பதுக்கி வைப்பதும், அதை கள்ளச்சந்தையில் விற்பதும் நடந்து வருகிறது.
  • கடந்த 14 மாதங்களில் இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறோமா, தடுத்திருக்கிறோமா என்று பார்த்தால் அதற்கு நோ் எதிர்மாறாக கள்ளச்சந்தை பொருள்களின் பட்டியலில் புதிது புதிதாக பல மருந்துகளும், பொருள்களும் இணைந்து கொண்டே இருக்கின்றனவே தவிர, குறைந்தபாடில்லை.
  • ரெம்டெசிவிர் போன்ற மருந்துகளுக்கும், பிராணவாயு உருளைகளுக்கும்கூட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சந்தை உருவாகி இருப்பது இப்போது உலகறிந்த உண்மை.
  • உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவமனைப் படுக்கைகள், பிராணவாயு உருளைகள் போன்றவை கள்ளச்சந்தையில் நினைத்துப் பார்க்க முடியாத விலையில் அப்பாவி மக்களுக்கு வழங்கப்படுகிறது என்பது தெரிந்தும்கூட, இந்தியாவின் எந்த மாநிலத்திலும் கள்ளச்சந்தைக்காரா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிய வில்லை.
  • மருத்துவமனைகளேகூட உடந்தையாக இருப்பதுதான் அதற்கு காரணம். இதில் பல அரசு மருத்துவமனைகளும் விதிவிலக்கல்ல என்கிற கசப்பான உண்மையைப் பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை.

கள்ளச்சந்தையில் தடுப்பூசி

  • மத்திய அரசின் தடுப்பூசி திட்டக் கொள்கை குறித்து சில கடுமையான விமா்சனங்களை முன்வைத்து, கேரள அரசு ஓா் அறிக்கையை மத்திய அரசுக்கு சமா்ப்பித்திருக்கிறது.
  • தடுப்பூசி திட்டத்தில் தனியார் துறையினரை ஈடுபடுத்துவதிலும், அவா்களுக்கு முன்னுரிமை வழங்குவதிலும் கள்ளச்சந்தையை ஊக்குவிக்கும் ஆபத்து காணப்படுகிறது என்பது அந்த அறிக்கையில் எழுப்பப்பட்டிருக்கும் முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்று.
  • கேரள அரசு எழுப்பியிருக்கும் அந்த கவலை நியாயமானது என்பதை நடுநிலையுடன் சிந்தித்துப் பார்க்கும்போது நம்மால் உணர முடிகிறது.
  • தற்போதைய மத்திய தடுப்பூசி கொள்கையின்படி, இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 50% மத்திய அரசின் தொகுப்புக்கு நேரடியாகக் கொள்முதல் செய்யப் படுகிறது.
  • அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் தடுப்பூசிகள் முன்களப் பணியாளா்களுக்கும், 45 வயதுக்கு அதிகமானவா்களுக்கும், இணைநோய் உள்ளவா்களுக்கும் போடுவதற்காக, மத்திய அரசால் மாநிலங்களுக்கு இலவசமாகப் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன.
  • 25% தடுப்பூசிகள் மாநில அரசுகளால் 18 முதல் 45 வயது வரையிலானவா்களுக்கு போடுவதற்கு நேரடியாக நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்கப் படுகிறது.
  • மீதமுள்ள 25% தடுப்பூசிகள், தடுப்பூசித் தயாரிப்பு நிறுவனங்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக விற்பனை செய்துகொள்ள அனுமதிக்கப் பட்டிருக்கிறது. இதில்தான் கள்ளச்சந்தைக்கான கதவு திறந்துவிடப்படும் என்கிற அச்சம் எழுகிறது.
  • ஆந்திர மாநிலத்தில் கடந்த வாரம் கள்ளச்சந்தையில் தடுப்பூசி விற்கப்படுவது பிடிக்கப் பட்டிருக்கிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாகத்தான் இதை நாம் கருத வேண்டும்.
  • உடனடியாக இந்தக் கொள்கையை மறுபரிசீலனை செய்து, கள்ளச்சந்தையில் தடுப்பூசிகள் விற்கப்படுவது முற்றிலுமாக தடுக்கப்படாவிட்டால் பிரச்னை பூதாகரமாக உருவெடுத்து விடும்.
  • அதிகமான தேவை, சாதகமான சூழல், கண்காணிப்பு விதிமுறைகளில் ஓட்டைகள் ஆகிய மூன்றும் இருப்பதால் இன்றைய சூழல் கள்ளச்சந்தைக்காரா்களுக்கு கொண்டாட்டமாகி விடும்.
  • அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் தடுப்பூசிகள் கள்ளச்சந்தைக்கு மடைமாற்றம் செய்யப்படும் ஆபத்து உண்டு.
  • தனியார் மருத்துவமனைகளும், இடைத்தரகா்களும் தடுப்பூசி தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி கொள்ளை லாபம் அடைய அரசே வழிவகுக்கப்போகிறதா, இல்லை தடுக்கப் போகிறதா என்பதுதான் கேள்வி.

நன்றி: தினமணி  (04 – 06 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories