TNPSC Thervupettagam

க்யூபாவின் புதிய தலைமை முன்னிருக்கும் சவால்கள்

April 23 , 2021 1120 days 525 0
  • க்யூபாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மைச் செயலர் பதவியிலிருந்து ஓய்வுபெறுவதாக ரவுல் கேஸ்ட்ரோ அறிவித்திருப்பது உலகெங்கும் உள்ள இடதுசாரிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
  • 1959-ல் ஃபிடெல் கேஸ்ட்ரோவின் தலைமையில் ஆயுதப் புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்த தலைமுறையின் இறுதித் தூண்களில் ரவுல் கேஸ்ட்ரோவும் ஒருவர்.
  • ஃபிடெல் கேஸ்ட்ரோவுக்கு 2006-ல் உடல்நலம் குன்றிய பிறகு இரண்டாண்டுகள் கழித்து அவர் தன் தம்பியும், சக போராளியுமான ரவுல் கேஸ்ட்ரோவிடம் ஆட்சியை ஒப்படைத்தார்.
  • க்யூபாவின் மீதான பொருளாதாரத் தடைகளை அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா தளர்த்தியதும், அவர் க்யூபாவுக்கு வந்து அமெரிக்கத் தூதரகத்தைத் திறந்துவைத்ததும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் சற்று சுமுகம் ஏற்பட்டது.
  • 2018-ல் அதிபர் பதவியை விட்டு விலகிய ரவுல், பொறுப்பைத் தனது அடுத்த தலைமுறைத் தலைவரான மிகெல் டியாஸ் கனேலிடம் ஒப்படைத்தார்.
  • இப்போது ரவுல் ஓய்வுபெற்றதை அடுத்துத் தலைமைப் பொறுப்பில் அமர்ந்திருக்கும் மிகெல் டியாஸ் கனேலிடம் கொள்கை மாற்றங்கள் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை.
  • சோஷலிஸத்துடன் நாடு கொண்டிருக்கும் மாற்ற முடியாத அர்ப்பணிப்பில் புதிய தலைமையும் உறுதியாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
  • கேஸ்ட்ரோ சகோதரர்கள் கட்டியெழுப்பிய மூடுண்ட, சோஷலிஸப் பொருளாதாரம் பல பத்தாண்டுகள் வெற்றிகரமாகவே இயங்கின.
  • கல்வியிலும் சுகாதாரத் துறையிலும் க்யூபா புரிந்திருக்கும் சாதனைகள் குறிப்பிடத்தக்கவை. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியால் ஆளப்படும் சீனா செய்ததுபோல் இல்லாமல், க்யூபா தன் பொருளாதாரத்தைத் திறந்துவிடுவதில் மெதுவாகவே செயல்பட்டது என்பது அதன் விமர்சகர்களின் குற்றச்சாட்டு.
  • 1990-களில் சோவியத் ஒன்றியத்தின் உதவி கிடைப்பது நின்றுபோன பிறகு, தன் நாட்டு மக்களைச் சிக்கனமாக இருக்கும்படி ஃபிடெல் கேட்டுக் கொண்டார்.
  • ஒருவழியாக அனைத்து முட்டுக்கட்டைகளையும் க்யூபா வெற்றிகரமாகச் சமாளித்தது. அதே நேரத்தில், தென்அமெரிக்க நாடுகள் பலவற்றிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சிக்கு வந்தது க்யூபாவின் அரசியல், பொருளாதார வளர்ச்சிக்கு உதவியது.
  • ஆனால், தற்போது அங்கே கம்யூனிஸ அலை ஓய்ந்திருக்கிறது. க்யூபாவுக்குக் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வழங்கிவந்த வெனிஸுலாவே தற்போது நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.
  • ஒபாமா காலத்தில் வழங்கப்பட்ட சலுகைகள் எல்லாம் ட்ரம்ப் காலத்தில் ரத்துசெய்யப்பட்டன.
  • போதாதற்கு, கரோனா பெருந்தொற்று க்யூபாவின் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய பாதிப்பால் 1990-களைப் போலவே உணவுப் பொருட்களில் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.
  • ரவுலுக்கு அடுத்து கட்சிப் பொறுப்பேற்பவர் இந்தச் சவால்களுக்கெல்லாம் முகம் கொடுப்பதே க்யூபாவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும்.

நன்றி: இந்து தமிழ் திசை (23 - 04 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories