TNPSC Thervupettagam

க்வாட்: நால்வர் ஆடும் சதுரங்கம்

October 22 , 2021 927 days 528 0
  • சுதந்திர இந்தியா எனும் பெருங்கனவு தவிர்க்கவே இயலாத பிரிவினை எனும் சிக்கலான ரண சிகிச்சையுடன்தான் நிறைவேறியது. கூடவே, பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தால் முற்றாகச் சுரண்டப்பட்ட சூழல், பஞ்சம், பசி, ஏழ்மை, பிரிவினை போன்ற பல்வேறு உள்நாட்டுச் சிக்கல்கள். இத்தனை இக்கட்டுகளுக்கு மத்தியில் சர்வதேச அரங்கில் மூக்கை நுழைப்பதும், அதன் மூலம் உருவாகும் புற அழுத்தங்களை எதிர்கொள்வதும் இந்தியாவைப் பள்ளத்தில் தள்ளிவிடும் என்பதை மிகச் சரியாக உணர்ந்திருந்தார்கள் சுதந்திர இந்தியாவின் சிற்பிகள். இந்த இடத்திலிருந்தே இந்தியா இன்று சர்வதேச உறவுகளில் தனக்கென்று உருவாக்கிக்கொண்டிருக்கும் இடத்தைப் புரிந்துகொள்ள முடியும். 
  • இந்தியாவின் பார்வையைப் போன்றே சில ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளும் கொண்டிருந்தன. காலனியாதிக்கத்திலிருந்து வெளியேறிய நாடுகள் முதலில் தங்களை ஸ்திரமாக்கிக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கருதின. இந்தப் பொதுநோக்கில் அவர்களுடன் இந்தியாவும் இணைந்து 1961-ல் உருவாக்கியதே அணிசேரா இயக்கம் (Non-Aligned Movement). இரண்டாம் உலகப் போரின் பாதிப்புகள் நிலத்திலும், நினைவுகளிலும் ரணமாக இருந்த காலகட்டம் என்பதால், வல்லரசுகளுடன் அணி சேர்வது கடைசியில் நம்மை மறுபடியும் ஏதாவது உலகப் போரில் இழுத்துவிட்டுவிடும் என்கிற புரிதலுடன் உருவாக்கப்பட்ட இயக்கம் இது.
  • பனிப் போர் உச்சத்தில் இருந்த 1960-களில் இந்தியாவானது, அமெரிக்கா அல்லது ரஷ்யாவுடன் அணி சேர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் எழுந்து பெரும் அழுத்தத்தை உருவாக்கியிருந்தது. அப்படி அணி சேர்ந்திருந்தால் சில உடனடி நன்மைகளும், சலுகைகளும்கூட கிடைத்திருக்கக் கூடும். ஆனால், அதற்குப் பிரதிபலனாக நீண்ட கால நோக்கில் தன் மீது அது உருவாக்கும் எதிர்பார்ப்பு மற்றும் தளைகளில் இருந்தும் இந்தியா எளிதில் வெளியேறியிருக்கவே முடியாது. வல்லரசு நாடுகளுடனான உறவு என்றுமே சரிநிகர் நலன் அளிப்பதாக அமைந்திடாது. 

அதிகாரப் படிநிலை

  • இன்று திரும்பிப் பார்க்கையில் இந்த அணி சேராமை என்பது எவ்வளவு தொலைநோக்குடன் முன்னெடுக்கபட்ட ஒரு நடவடிக்கை என்பது புலப்படும். அணி சேரா நாடுகள் என்ற கூட்டமைப்பில் அன்று நாமெல்லாம் ஒன்று சேராமல் போயிருந்தால் அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியத்துக்கு இடையே நடந்த பனிப்போரில் ஏதோ ஒரு பக்கத்தில் மாட்டிக்கொண்டு அலைக்கழிக்கப்பட்டிருப்போம். பனிப் போரானது, அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேதான் என்றாலும், அழிவு என்னவோ அவற்றின் அணியில் இருந்த நாடுகளில்தான் அதிகம் நிகழ்ந்தது.
  • அணி சேரா நாடுகள் அமைப்பு உருவாகி 60 வருடங்கள் கழித்து இன்று பார்க்கும்போது, சர்வதேச அதிகாரப் படிநிலை (International order)  முற்றிலும் வேறொரு பரிணாமப் புள்ளியை வந்தடைந்திருப்பதை உணரலாம். பனிப் போர் முடிந்து, சோவியத் ஒன்றியம் உடைந்து சிதறிவிட்டது. உலகமயமாக்கலும், தொழில்நுட்பப் பாய்ச்சலும் வேறு விதமான அதிகார எல்லைகளை வரையறுத்திருக்கிறது.
  • இருபது ஆண்டு காலம் நீடித்த ஆஃப்கன் போரின் முடிவு, ஈராக் ஆக்கிரமிப்பு, சீனாவின் அபரிமித வளர்ச்சி, அணு ஆயுத நாடாக மெல்ல மெல்ல வலுபெற்றுவரும் வட கொரியா என்று சர்வதேச தளத்தில் நிறைய மாற்றங்கள். சர்வதேச அரசு சூழ்கையின் மையம் அமெரிக்கா - ரஷ்யா என்ற இருமையில் இருந்து நகர்ந்து, அமெரிக்கா - சீனா என்ற இருமை நோக்கி நகர்ந்திருக்கிறது. 

நால்வரணி...

  • இந்தப் பின்ணனியில்தான் நாம் ‘க்வாட் (The Quad) என்று செல்லமாக அழைக்கப்படும் சர்வதேச நால்வரணியின் ஒன்றுகூடலைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். பொதுவாக இதுபோன்ற சர்வதேச கூட்டமைப்புகள் ஒத்த நாடுகளுக்கு இடையிலேயே நிகழும். பூகோளரீதியாக நெருங்கி இருக்கும் நாடுகளைக் கொண்ட ‘சார்க் (SAARC), இனம் அல்லது கலாச்சாரரீதியாக ஒன்றான நாடுகளைக் கொண்ட ‘ஜிசிசி (GCC), முற்காலத்தில் ஒரே குடையின் கீழ் அதாவது அதிகாரத்தின் கீழ் இருந்த நாடுகளைக் கொண்ட ‘காமன்வெல்த் (commonwealth), ராணுவ பலம் பொருந்திய வளர்ந்த நாடுகளின் அமைப்பான ‘நேட்டோ (NATO).
  • இவற்றுக்கும் ‘க்வாட் என்றழைக்கப்படும் இந்த நால்வரணிக்கும் கொஞ்சம் வேறுபாடு உண்டு. அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் என்று உலகின் வெவ்வேறு முனைகளில் இருக்கும் இந்த நால்வரின் கூட்டணிக்கான மையம் என்னவென்றால், இவை அனைத்துமே நிலையான ஜனநாயக பாரம்பரியம் கொண்ட நாடுகள். இந்த நாடுகள் எதன் பொருட்டு இணைந்துள்ளன என்பதற்கான ஒரு சமிக்கையை இந்தப் பொதுமையிலிருந்து நாம் தொட்டு எடுக்கலாம்.
  • வேறெப்போதும் நிகழ வாய்க்காத இந்த இணைவு தற்போது நிகழ்வது  தற்செயலானது அல்ல. இந்தோ-பசிபிக் பகுதிகளில் சமகாலத்தில் நிகழும் பல்வேறு அதிகார உரசல்கள் மற்றும் அத்துமீறல்களின் பிரதிபலிப்பாகவே இதைக் கருத வேண்டும். இந்த உரசல்கள் அல்லது அத்துமீறல்களின் மையம் சீனா. அதைச் சமன் செய்யும் விதமாகவே இந்த நால்வர் அணி உருவாகியிருக்கிறது.

இந்தியாவின் பங்கு என்ன?

  • இந்த நால்வர் அணியில் ஒருவகையான உறவுச்சமமின்மை (relationship assymetry) இருக்கிறது. ஏனென்றால், இதில் இருக்கும் மூன்று நாடுகள் ஏற்கனவே நீண்ட கால இருதரப்பு (Bi-lateral) உறவில் இருப்பவை. அமெரிக்கா - ஜப்பான் உறவுகள் இரண்டாம் உலகப் போரிலிருந்து இன்றும் தொடரும் ஒன்று. ஜப்பானில் இன்றும்கூட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கப் போர் வீரர்கள் இருக்கின்றனர். அமெரிக்க - ஆஸ்திரேலிய உறவுகளும் நெருக்கமானவை. இரண்டாம் உலகப் போரில் ஆரம்பித்து சமீபத்தில் முடிவுக்கு வந்த ஆஃப்கன் போர் வரை நட்பு நாடான அமெரிக்காவின் சார்பில் போரிட்ட நாடு ஆஸ்திரேலியா. அமெரிக்கப் பயன்பாட்டுக்கான ராணுவத் தளம் 1942லேயே ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்டதையும் நினைவுகூரலாம்.
  • ஆஸ்திரேலியா தனது வரலாற்றில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களை இழந்துள்ளது. ஆனால், இவை எதுவுமே ஆஸ்திரேலியா நேரடியாக ஈடுபட்ட போர்கள் அல்ல. எல்லாப் போர்களுமே பிரிட்டன் அல்லது அமெரிக்காவுக்கு உதவும் பொருட்ட ஆஸி ஈடுபட்ட போர்களே. இந்தியாவைவிட பாகிஸ்தானுக்கு நெருக்கமானது அமெரிக்கா. பயங்கரவியத்துக்கு எதிரான போரில் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு நேரடி ஆயூதங்களும் பண உதவியும் அளித்தது உலகறிந்தது.
  • பாகிஸ்தானை அமெரிக்கா கண்டிக்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும்கூட, இந்தியா - பாகிஸ்தானை வலுக்கட்டாயமாக சம முக்கியத்துவம் வாய்ந்த இணையர்களாகவே அது நடத்திவந்தது. இந்தியாவுக்கு வரும் அமெரிக்க அதிபர் பாகிஸ்தானுக்கும் சேர்ந்து ஒரு பயணம் செல்லாமல் திரும்ப மாட்டார் என்பது உங்கள் நினைவுக்கு வரலாம்.
  • எனவே இந்த நால்வர் அணியில் பலமற்ற கண்ணி என்றால், அது இந்தியாதான்! ஒருவகையில் இந்த நால்வர் அணி என்பது இந்தியாவை உள்ளே இழுக்க ஏற்படுத்தப்பட்ட ஒன்று என்று சொல்வதுகூட பொருந்தமானதே. சரி, இதில் இந்தியாவை ஏன் உள்ளே இழுக்க வேண்டும்? மற்ற மூன்று நாடுகளும் சேர்ந்து மூவர் அணி ஆகியிருக்கலாமே?
  • இந்தக் கேள்விகளுக்கு விடை காண, முதலில் இந்த நால்வரணி எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது என்று தெரிந்துகொள்வது அவசியம் என்று நினைக்கிறேன். அதைப் புரிந்துகொண்டால் இந்த நால்வரணி என்பது ஒருவகையில் எப்படி காலத்தின் கட்டாயத்தினால் உருவாகியது என்பது புரியும்.

அச்சுறுத்தும் சீனா 

  • இந்த நால்வரணிக்கான முன்னெடுப்பை முதலில் நிகழ்த்தியது ஜப்பான். 2006-ல் ஆசியான் (ASEAN) நாடுகளின் கூட்டத்தின் இந்த நான்கு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் அலுவல்சாரா (unofficial) முறையில் சந்தித்துக்கொண்டனர். 2006-2007 காலகட்டத்தில் இது ஒரு காதிதத்தில் எழுதிக் கையெழுத்திடாத ‘ஒத்துழைக்கும் அணி என்ற அளவிலேயே கூடியது.
  • அதன் பின் ஒரு பத்து ஆண்டுகள் இந்த அணியின் செயல்பாடு கிடப்பில் போடப்பட்டது. தலைவர்களின் சந்திப்போ, கூட்டறிக்கையோ எதுவுமே நிகழ்வில்லை. நிழல் அணியாகவே வைத்திருந்தார்கள். காரணம்? சீனா!
  • பொருளாதாரரீதியாகவும் ராணுவரீதியாகவும் சீனா பகாசுர வளர்ச்சியை நிகழ்த்திய காலகட்டம் அது. இந்த அணியில் உள்ள நான்கு நாடுகளுமே சீனாவுடன் பெரும் வியாபாரத் தொடர்பு கொண்டவை. இப்படி நால்வர் அணி உருவாவதை சீனா கட்டாயம் தனக்கு எதிரான அணி திரள்வாகவே பார்க்கும்; அது சர்வதேச வர்த்தகம் உட்பட வேறு பல வகைகளில் தங்களுக்கு இடையூறாக அமையும் என்று தயக்கம் காட்டின இந்நாடுகள். மேலும், இந்த அணியின் மிக வலுவான நாடான அமெரிக்கா, அந்தக் காலகட்டத்தில் ஏற்கெனவே ஆஃப்கன், ஈரான் என்று தனது ராணுவ பலத்தையும் கவனத்தையும் கணிசமாகக் குவித்திருந்தது.

சமீபத்திய நகர்வுகள்

  • சரி, இந்த அணி அவசரகதியில் இப்போது தூசு தட்டப்படும் காரணம் என்னவாக இருக்கும்? முதலாவதும் முக்கியமானதும் என்னவென்றால், ஆஃப்கனிலிருந்து தனது படைகளை அமெரிக்கா விலக்கிக்கொண்டது ஆகும். 20 ஆண்டு காலப் போர் நடவடிக்கைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வதானது, அமெரிக்காவுக்குப் பெரும் ஆசுவாசத்தையும் தனது பலத்தைக் காட்டிக்கொள்வதில் சுதந்திரத்தையும் அளித்துள்ளது. அடுத்த இரு விஷயங்கள், ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்க அமெரிக்கா ஒத்துக்கொண்டிருப்பதும், தைவானுக்கு 750 மில்லியன் டாலர்  ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புக்கொண்டிருப்பதும் ஆகும்.
  • ஆஸ்திரேலியா மிக நீளமான கடல் எல்லையைப் பாதுகாக்க வேண்டிய நிர்பந்தம் கொண்டது. இந்தத் தேவை கொண்ட ஒரு நாட்டுக்கு அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் கைவசம் இருப்பது என்பது ஒரு பலம். இந்த ஒப்பந்தம் ஏற்கனவே ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸுக்கு இடையே உள்ள ஒப்பந்தத்தை ரத்துசெய்து உருவாக்கப்பட்டது என்பது, இதன் முக்கியத்துவத்தை மேலும் கோடிட்டுக் காட்டுகிறது. இதன் மூலம் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களைக் கொண்ட ஏழாவது நாடாக ஆஸ்திரேலியா உருவெடுக்கிறது.
  • அடுத்து, இன்று ஆசியாவிலேயே அதிகபட்ச ராணுவத் தயார் நிலைகளில் இருக்கும் இரண்டு நாடுகளைச் சுட்ட வேண்டும் என்றால், ஒன்று தைவான் மற்றொன்று தென் கொரியா. சீன விமானங்கள் தைவான் எல்லைக்குள் அத்துமீறுவது கிட்டத்தட்ட அன்றாட நிகழ்வாகிவிட்டது. தைவான் சிறிய நாடாக இருந்தாலும், தனது ஒட்டுமொத்த ஜி.டி.பி.யில் கணிசமான சதவிகிதத்தை ராணுவ விஷயங்களுக்கே செலவளிக்கிறது. கூடுதலாக இன்னும் 8 பில்லியன் டாலர் அடுத்த ஜந்து ஆண்டுகளில் செலவளிக்க உத்தேசித்துள்ளது.
  • இந்த நிகழ்வுகள் அனைத்தும் முன்னர் சீனா மீது நிலவிய பரவலான அதிருப்தியை ஒரு பொதுப் புள்ளியில் திரட்ட ஆரம்பிக்கிறது.

இந்தியாவின் நிலை

  • கடந்த வருடத்தில் சீனா கால்வான் பள்ளத்தாக்கில் நிகழ்த்திய அத்துமீறல், அதன் பின் நிகழ்ந்த எல்லைச் சச்சரவுகள், இந்தியாவை இன்னுமே ஒரு நெருக்கடியான நிலைக்குத் தள்ளியிருக்கிறது. நம்மைச் சுற்றியிருக்கும் பாகிஸ்தான், இலங்கை, மியான்மர் போன்ற நாடுகள் ஏற்கெனவே சீனாவின் நட்பு வட்டத்துக்குள் வந்துவிட்டன. சீனாவின் தொடர் அத்துமீறலுக்குச் சரியான பதிலடியைக் கொடுக்கும் சூழலிலும் இந்தியா இல்லை. அப்படியே முயன்றாலும், அது மேலும் ராணுவச் செலவீனங்களை அதிகரிக்கும்; பொருளாதாரத்தையும் பாதிக்கும். இதையெல்லாம் மனதில் கொண்டு இந்த நால்வர் அணியை ஒருவிதமாக காப்பீட்டுத் திட்டம்போல எண்ணியே இந்தியா உள்ளே வந்திருக்கிறது.
  • இந்த அணி தற்சமயம் மிகக் கவனமாகவே இந்த ஒன்றுசேரலைக் கையாள்கிறது. தங்களது அதிகாரப்பூர்வ அறிக்கைகள் ஆவணங்கள் எதிலுமே அவர்கள் சீனாவைக் குறிப்பிடவில்லை. மாறாக, இந்த அமைப்பின் நோக்கம், ‘இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வர்த்தகம்  சுதந்திரமாக நடைபெறுவதை உறுதிசெய்தல், தடுப்பூசிகள் கிடைக்கச் செய்தல், விநியோகச் சங்கிலியை உறுதிசெய்தல், பரஸ்பர வர்த்தகம் என்று நேர்மறைத் திட்டங்களையே அடையாளப்படுத்திக்கொள்கின்றன. எங்குமே ராணுவ உதவி, ஒப்பந்தம் போன்ற விஷயங்கள் இடம்பெறவில்லை.
  • இந்த அணுகுமுறை சரியானது. சீனாவை நேரடியாக அச்சுறுத்தும் ஒன்றாக இதை முன்வைக்க வேண்டிய அவசியமோ தேவையோ இப்போது இல்லை. இந்த நால்வர் அணியின் அதிகாரப்பூர்வ பெயருக்கேற்ப (Quadrilateral Security Dialogue - QSD) இது ஒரு பேச்சுவார்த்தை மட்டுமே. ஒப்பந்தமோ, கூட்டமைப்போகூட இல்லை. இந்த ஒன்றுகூடலை அவர்கள் எழுதப்பட்ட ஒப்பந்தமாக ஆக்கிக்கொள்ளாமல் இருப்பதும் நல்லதே. எதிர்காலத்தில் அதன் நோக்கம் செயல்பாடு போன்றவற்றில் தேவைப்படும் மாற்றங்களை எளிதாகச் செய்துகொள்ள முடியும். ஆனால், தேவை ஏற்படுமாயின் இந்த அணி இன்னுமே நெருக்கமாக கூடிவருமா என்பது பெரிய கேள்வி.
  • இந்த ஒன்றுகூடல் சீனாவுக்கு முற்றிலும் எதிர்பாராத ஒன்றாக இருக்காது. இந்திய எல்லையிலும், தைவானிலும், தென் சீனக் கடல் பகுதியிலும் தனது அத்துமீறலான  செயல்பாட்டுக்கு, கூடிய சீக்கிரம் ஏதோ ஒரு எதிர்வினை உருவாகும் என்பதை சீனா ஏற்கெனவே ஊகித்திருக்கும். இந்த ஒன்றுகூடலுக்கு சீனாவின் பதில் என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த நால்வர் அணியின் ஒற்றுமையை சீனா ஏதாவது விதத்தில் சோதித்துப் பார்க்கவே முயலும். இந்த நோக்கில் மிக முக்கியமான புள்ளியாக இருப்பது தைவான். தைவானை எப்படி நடத்தப்போகிறது என்பதில் சீனா தன் பலத்தை நிறுவிக்கொள்ள முயலும்.

இந்தியாவின் அணுகுமுறை

  • இந்த நால்வர் அணியில் மற்ற மூவரும் ஏதோ ஒருவகையில் பரஸ்பர உறவுகளை நிலைநிறுத்திக்கொண்டவர்கள். இந்த அணியில் தன்னை சரியாக நிறுவிக்கொள்ள வேண்டியது இந்தியாதான். இந்தியா இதில் அளிக்கவும் பெறவும் நிறைய இருக்கிறது. தனது சந்தையை அணுகுவதில் இந்த நாடுகளுக்கு இந்தியா சில சலுகைகளை அளிக்கலாம். அதற்குப்  பதிலாக அவர்களிடம் சாதகமான வியாபார, ஏற்றுமதி ஒப்பந்தங்களைக் கோரலாம். அதேபோல, இந்த நால்வர் அணியில் அதிகம் பயன்பெறப்போவது ஜப்பானாகத்தான் இருக்கும்.
  • ஜப்பானுடனும் ஆஸ்திரேலியாவுடனும் இந்தியா பரஸ்பரம் வணிகம், வர்த்தகம் தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்களை மேலும் விரிவாக்கலாம். கடந்த சில வருடங்களாக இந்திய அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளில் ஜப்பான் தன் பங்களிப்பை அதிகரித்துள்ளது. இருப்பதிலேயே மிகவும் பலம் குறைந்த உறவு இந்தியா - ஆஸ்திரேலியா உறவென்று சொல்லலாம். பல்வேறு சாத்தியக்கூறுகள் இருந்தும் இவ்விரு நாடுகளுக்கும் இடையே வலுவான கொடுக்கல் - வாங்கல் அமையவில்லை. அப்படி அமைத்துக்கொள்ள இரு நாடுகளுக்குமே இது ஓர் அரிய வாய்ப்பு. அதற்கு நம் வெளியுறவுக் கொள்கைகளை இன்னுமே கூர்மையாகவும் பரஸ்பரம் நன்மை அளிப்பதாகவும் அமைத்துக்கொள்ள வேண்டும். புதிய நண்பர்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
  • இது நால்வர் ஒரே சமயம் சேர்ந்து ஆடும் சதுரங்கப் போட்டி போன்றது. மற்ற மூவரும் ஏற்கெனவே ஆட்டத்தில் உள்ளவர்கள். இந்தியா நான்காவதாக இணைந்துள்ளது. தனது காய்களை வேறு யாரையும் விட துல்லியமாக நகர்த்த வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது. சீனா இந்த ஆட்டத்தை தூர இருந்து கவனமாகப் பார்த்துக்கொண்டே இருக்கிறது. இந்த ஆட்டம் கலைந்தால் வெற்றி சீனாவுக்கே. சுவாரசியமான ஆட்டம் விரைவில் வெளிப்படும் என்று தோன்றுகிறது.

நன்றி: அருஞ்சொல் (22 – 10 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories