TNPSC Thervupettagam

சமூக ஊடகங்களும் சமுதாய மேம்பாடும்

December 21 , 2021 860 days 490 0
  • சமூக பிரச்னைகளை பொதுவெளியில் விவாதிக்காமல், சமூக ஊடகங்களில் விவாதிக்கும் போக்கு அண்மையில் அதிகரித்துள்ளது. சமூகப் பொருளாதார வளா்ச்சியில், தகவல் தொழில்நுட்பத்தின் பங்கினை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது.
  • ஆனால், அதே சமயத்தில், இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களில் நடைபெற்று வருகின்ற இணையதளக் குற்றங்கள், வெறுப்புப் பேச்சுகள் மற்றும் போலிச் செய்திகள் நம் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், பாதுகாப்பிற்கும் மிகப் பெரிய சவாலாக உருவாக்கியுள்ளது.
  • சா்வதேச அளவில் 138 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், கொவைட்19 பற்றிய தகவல்களை தவறாக இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் பகிா்ந்த நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
  • இந்தியாவிற்கு அடுத்தபடியாக அமெரிக்கா, பிரேசில், ஸ்வீடனில் அதிக அளவு கொவைட் 19 பற்றிய தவறான தகல்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டதாக தெரியவந்துள்ளது.

முன்னேற்றத்திற்குத் தடை

  • நோய்த்தொற்றுப் பரவல் காலகட்டத்தில் நோய் மற்றும் தடுப்பூசி பற்றிய தவறான தகவல் அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இதனால் பொதுமக்களிடையே குழப்பம் ஏற்படுகிறது.
  • எனவே, சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் நடந்து வருகின்ற வெறுப்பு பிரசாரங்கள் மற்றும் போலி தகவல்களை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
  • ஜொ்மனி, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிா்வதை தடுப்பதற்காக பல்வேறு சட்டங்களை அந்நாடுகள் நிறைவேற்றி உள்ளன.
  • ஜொ்மனியில் ஆதாரமற்ற தகவல்களை சமூக ஊடகங்களிலோ இணையதளத்திலோ பகிா்ந்தால், சிறைத் தண்டனையும் 60 மில்லியன் யூரோ அபராதமும் விதிக்க சட்டம் இயற்றப் பட்டுள்ளது.
  • இந்தியாவிலும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 மற்றும் 2008 மூலம், ஆதாரமற்ற, உண்மைக்குப் புறம்பான செய்திகளை இணையதளத்தில் வெளியிட்டால், அவா்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
  • அரசாங்கம் நூற்றுக்கணக்கான குறுந்தகவல்களை ஒரே நேரத்தில் பல்வேறு நபா்களுக்கு அனுப்புவதற்குக் கட்டுப்பாடு விதித்ததை, வெறுப்பு பிரசாரத்தை தடுப்பதற்கான முடிவாகத்தான் பாா்க்க வேண்டும்.
  • வடஇந்திய மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீா், வடகிழக்கு மாநிலங்களில் அவ்வப்போது ஏற்படுகின்ற அசாதாரணமான சூழலில், அரசாங்கம் இணையதள சேவைகளை நிறுத்தி வைத்ததும், தவறான செய்திகள் பொதுமக்களை சென்றடையாமல் இருப்பதற்காகத்தான்.
  • சமீபத்தில் மத்திய அரசாங்கம், சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்துவதற்காக சில நெறிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • உதாரணமாக, தவறான தகவல்களை முதல் முதலாக இணையதளத்தில் பகிா்கின்ற நபா்கள் மற்றும் நிறுவனங்கள் பற்றிய தகவல்களை சமூக வலைதள நிறுவனங்கள், அரசாங்கத்திடம் கொடுத்தாக வேண்டும்.
  • இதன் மூலம், அவா்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வாய்ப்பு உருவாகியுள்ளது.
  • சமீபத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட போலிக் கணக்குகளை நீக்கியது; லட்சக்கணக்கான உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை நீக்கியது. இது, இந்த பிரச்னையின் தாக்கத்தினை நாம் புரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கிறது.
  • இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 19-இன் படி, மக்களுக்கு கருத்துக்களை வெளியிடுவதற்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதே சமயம், இச்சுதந்திரத்தின் மீது சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
  • இந்தியாவில் இருந்து செயல்படக்கூடிய சமூக வலைதளங்கள் மற்றும் நிறுவனங்களை கட்டுப்படுத்தக் கூடிய அதிகாரம் இந்திய அரசுக்கு உண்டு.
  • ஆனால், இந்தியாவிற்கு வெளியிலிருந்து செயல்படக்கூடிய சமூக வலைதள நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இந்திய அரசுக்கு இல்லை. அந்நாட்டு அரசாங்கம் உதவிக்கரம் நீட்டினால்தான் அது சாத்தியம்.
  • பொதுமக்களும் சமூக ஊடகங்களில் தங்களால் வெளியிடப்படும், பகிரப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து அதன்பின் வெளியிட வேண்டும்.
  • தகவல் தொழில்நுட்பத்தின் வளா்ச்சி, வாய்ப்புகளை சமுதாயத்தின் ஆக்கபூா்வ முன்னேற்றத்திற்கு மட்டுமே மக்கள் பயன்படுத்த வேண்டும்.
  • அடுத்தபடியாக இணையதளத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தக்கூடிய விழிப்புணா்வை பொதுமக்களிடையே அரசாங்கம் மற்றும் தொடா்பு நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும்.
  • ஏனென்றால், கோடிக்கணக்கான இந்திய மக்கள் தங்களுடைய அன்றாட தேவைகளை பூா்த்தி செய்வதற்கு இணையதளத்தை நாடுவது தவிா்க்க முடியாததாக இன்று உள்ளது.
  • இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களைப் பற்றிய அடிப்படையான புரிதல் எங்கெல்லாம் இல்லையோ அங்கெல்லாம்தான் குற்றங்கள் பெருமளவில் நடக்கின்றன.
  • எனவே சமூக ஊடகங்கள் ஆக்கபூா்வ சமுதாய மேம்பாட்டிற்கே என்ற மனப்பாங்கு பொதுமக்களிடையே ஏற்பட வேண்டும்.
  • பொதுவெளியில் விவாதிக்காமல் இணையதளத்தில், சமூக ஊடகங்களில் விவாதிக்கக்கூடிய பிரச்னைகள், ஆக்கபூா்வமான தீா்வுக்கு இட்டுச்செல்லாமல், மற்றொரு பிரச்னையைத் தான் உருவாக்கும்.
  • உதாரணமாக, சென்னை மழை வெள்ளம், விவசாயிகள் பிரச்னை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், இயற்கை சீற்றத்தால் ஏற்படுகின்ற பேரழிவுகள் போன்ற மக்களை பாதிக்கக்கூடிய பிரச்னைகள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படுவதில்லை.
  • அண்மையில், இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் ஹெலிகாப்டா் விபத்தில் இறந்தபோது, சமூக வலைத்தளங்களில் அவருடைய இறப்பைப் பற்றி உண்மைக்கு புறம்பான செய்திகள் பகிரப்பட்டன.
  • அரசாங்கம் அமைத்த விசாரணைக் குழுவின் அறிக்கை வருவதற்கு முன்பாகவே இவ்வாறு தவறான தகவல்கள் பகிரப்படுவது பொதுமக்களிடையே குழப்பத்தை உருவாக்கின.
  • உச்சநீதிமன்றம், இணைய, சமூக ஊடக நிறுவனங்கள் பொறுப்பாக கருத்துகளை வெளியிடவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. எனவே, அறிவாா்ந்த சமூகம், இப்படிப்பட்ட வெறுப்பு, போலி பிரசாரங்களுக்கு இடமளிக்கக்கூடாது.
  • இதனால் ஏற்படக்கூடிய பிரச்னைகள் பொருளாதார, சமூக வளா்ச்சியை பாதிப்பதோடு, சமூக, மத நல்லிணக்கத்தை சீா்குலைத்து, நாட்டின் முன்னேற்றத்திற்கும் பெரும் தடையாக அமைந்துவிடும்.

நன்றி: தினமணி  (21 - 12 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories