TNPSC Thervupettagam

சர்வதேசப் பெருமைகள் சாமானியர்க்கும் உதவட்டும்

December 22 , 2021 876 days 473 0

 

  • பிரபலங்களில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனம், மும்பையைச் சேர்ந்த பாரக் அகர்வாலைச் சமீபத்தில் சிஇஓ பதவியில் அமர்த்தியது குறித்து நிறையப் பேசப்பட்டுவிட்டது.
  • இந்தியாவைச் சேர்ந்த 37 வயது நிரம்பிய இளைஞர், இந்த சமூக வலைதள நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றிருப்பது உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
  • யார் இந்த பாரக் அகர்வால்? இவர் மும்பை ஐஐடியில் இளங்கலைத் தொழில்நுட்பம் படித்தவர். அதன் பிறகு அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கணிப்பொறிப் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவர்.
  • படிப்பை முடித்த பிறகு, உலகப் புகழ்பெற்ற மைக்ரோசாஃப்ட் மற்றும் யாஹூ நிறுவனங்களில் திறம்படப் பணியாற்றியவர். அங்கிருந்து இடம்மாறி, கடந்த 10 ஆண்டுகளாக ட்விட்டர் நிறுவனத்தில் தொழில்நுட்பப் பிரிவின் வல்லுநராகப் பணியாற்றியிருக்கிறார்.
  • அவரின் ஆற்றல் மிகுந்த தலைமைத்துவம், புதிய புதிய சிந்தனைகளையும் கருத்துகளையும் கொடுக்கும் திறமைக்குக் கிடைத்திருக்கிற பரிசாக இந்தப் புதிய பதவி உயர்வை இந்தியர்கள் கொண்டாடுகிறார்கள்.

பிரபஞ்ச அழகி

  • இது ஒருபுறம் இருக்க, கடைசியாக 2000-ல் பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட லாரா தத்தாவுக்குப் பிறகு, இப்போது 21 வயது நிரம்பிய ஹர்ணாஸ் சாந்து பிரபஞ்ச அழகிப் பட்டத்தைப் பெற்றிருக்கிறார்.
  • ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பின்பு பஞ்சாபைச் சேர்ந்த ஓர் இளம்பெண் பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
  • இந்த இரண்டு நிகழ்வுகளும் தனித்தனியே நடந்தாலும், வெவ்வேறு தளங்களில் நிகழ்ந்தாலும் இரண்டுக்கும் உறவும் தொடர்பும் இருக்கத்தான் செய்கின்றன.
  • அதேபோல இரண்டு நிகழ்வுகளுக்கும் தெளிவான நோக்கங்களும் இருக்கின்றன. சமூக வலைதளங்கள் மனித வாழ்க்கையை முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் புதிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
  • இணையவழி வணிகத்துக்கும், இந்தியாவில் அழகுசாதனப் பொருட்களுக்கான சந்தையை விரிவுபடுத்துவதற்கும் இந்த இரண்டு நிகழ்வுகள் பெரிதும் உதவுகின்றன என்பதை மட்டும் நாம் மறுக்க முடியாது.

விளம்பரச் சந்தை

  • இணையப் பயன்பாட்டாளர்களுக்கு இலவசமாகத் கதவுகளைத் திறந்துவிட்டிருக்கும் சமூக வலைதளங்களின் எண்ணிக்கை அதிகம்.
  • இவற்றின் வழியாக உலகளாவிய விளம்பரங்கள் வாடிக்கையாளர்களை வந்துசேர்கின்றன. இந்த விளம்பரங்கள்தான் இந்த நிறுவனங்களை வாழ வைக்கின்றன. இதில் ட்விட்டரும் விதிவிலக்கல்ல.
  • கடந்த காலத்தில் இதற்கு முன்னால் சிஇஓ-வாக இருந்த ஜேக் டார்சி இரண்டு நிறுவனங்களுக்கு சிஇஓ-வாக இருந்தார். எனவே, ட்விட்டர் நிர்வாகத்தில் அவரால் அதிகமாகக் கவனம் செலுத்த முடியவில்லை.
  • இதன் விளைவாக, ட்விட்டருக்கு வணிகரீதியாகக் கிடைக்க வேண்டிய விளம்பரங்கள் மிகவும் குறைந்துவிட்டன. உதாரணமாக, விளம்பரங்கள் வழியாக 50% ஆக உயர்த்தப்பட வேண்டிய லாபம் 15% ஆகக் குறைந்துவிட்டது.
  • இதனால் ட்விட்டர் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்காகப் பெரிய பணக்காரர்கள் முன் வரவில்லை. இது நிறுவனத்தின் வளர்ச்சிப் போக்கைப் பெரிதும் பாதித்துவிட்டது. எனவே தான், அதிரடியாக ஜேக் டார்சி ராஜினாமா செய்துவிட்டார்.
  • இப்போது பொறுப்பேற்றுக்கொண்ட பாரக் அகர்வாலின் சீரிய முயற்சியினால் நிறுவனத்துக்கு விளம்பரங்கள் வழியாக வந்துசேரும் லாபம் பெரிய அளவு கூடும் என்று நம்புகிறார்கள். ட்விட்டரின் போட்டியாளர்களில் ஒன்றான ஃபேஸ்புக் நிறுவனம், அதிகமான விளம்பரங்களையும் லாபத்தையும் பெற்றது என்பது உண்மை.
  • புதிய சிஇஓ சிறப்பாகச் செயல்பட்டால், ட்விட்டருக்கு விளம்பரம் இன்னும் கூடுதலாகக் கிடைக்கும், அதன் மூலமாக அந்த நிறுவனத்துக்கு வந்துசேர வேண்டிய லாபத்தை இன்னும் அதிகரிக்கலாம் என்ற நோக்கத்திலேயே அகர்வால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இணைய வலை

  • இணையத்தில் அதிகமாகத் தேடப்படும் உள்ளடக்கங்களைத் தேடுதளங்களின் உதவியோடு ஒவ்வொரு வணிக நிறுவனமும் உற்றுக் கவனிக்கிறது.
  • அழகுசாதனப் பொருட்களுக்கான இந்தியச் சந்தையின் பரப்பு உணரப்படுவதும் அவ்வாறாகத் தான் இருக்க வேண்டும். இந்தியப் பெண்கள் பிரபஞ்ச அழகிகளாகவும் உலக அழகிகளாகவும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தேவை இங்குதான் எழுகிறது.
  • இந்தியப் பெண்கள், ‘நிறம் கருப்பு’, ‘முகத்தில் பரு’, ‘உடல் பருமன்’ ஆகியவற்றின் காரணமாக ‘நான் அழகில்லை’ என்று தாழ்வுணர்வு கொள்ளும் நிலையை உருவாக்கி வைத்திருக்கிறோம்.
  • எனவே, அழகுபடுத்திக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை அவர்களிடம் விதைக்கப் படுகிறது. இந்த உளவியலை வணிக நிறுவனங்கள் சரியாகப் பிடித்துக் கொள்கின்றன.
  • அதேபோல சிவப்புத் தோல், வெள்ளைத் தோல் கொண்டவர்கள் அழகானவர்கள் என்ற சிந்தனையும் தவறானது. உள்ளத்திலும் பேச்சிலும் உண்மையாக இருப்பதே ஒரு பெண்ணுக்கு அழகைத் தருகிறது.
  • ஆனால், இதற்கு மாறான சிந்தனைகளைத்தான் வணிக விளம்பரங்கள் மீண்டும் மீண்டும் விதைக்கின்றன. இக்காலப் பெண்கள் அழகுசாதனப் பொருட்களை இணையத்தின் வழியாக ஆர்டர் செய்கிறார்கள்.
  • ஒவ்வொரு முறையும் அவ்வாறு வாங்கும்போது அந்த நிறுவனங்கள் தரவுகளைச் சேகரித்து வைத்துக்கொள்கின்றன.
  • மீண்டும் மீண்டும் அந்த அழகுசாதனப் பொருட்களை விற்பதற்கு வரிந்துகட்டிக்கொண்டு நிற்கின்றன.
  • வேறு இணையதளத்துக்குச் சென்றாலும், வேறு எந்தப் பொருளைத் தேடினாலும் முன்பு தேடிய, வாங்கிய பொருட்கள் கண்முன்னே வந்து நிற்கின்றன. அவற்றைக் குறித்த மின்னஞ்சல்களும்கூட வந்து சேருகின்றன.
  • இந்நிலையில், சர்வதேசப் புகழை அடைந்திருக்கும் பாரக் அகர்வால், ஹர்ணாஸ் சாந்து போன்றோரின் கவனம் இந்தியாவின் பக்கமும் திரும்ப வேண்டும்.
  • இந்தியாவில் நிலவிவரும் டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பதற்கு பாரக் அகர்வால் தனது பரிந்துரைகளைக் கொடுக்கலாம்.
  • கரோனா ஊரடங்குக் காலத்தில் ஆன்லைன் கல்வி பெற முடியாமல் தவித்துக் கொண்டிருந்த மாணவர்களைப் பற்றியும் இவருக்குத் தெரிந்திருக்கும் இல்லையா?
  • ஹர்ணாஸ் சாந்து செய்ய வேண்டியது என்ன? இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகமாக இழைக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது.
  • பச்சிளம் குழந்தைகள்கூடப் பாலியல் வக்கிரங்களுக்கு இரையாக்கப்படுவதை மீண்டும் மீண்டும் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
  • இது குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை ஹர்ணாஸ் சாந்து முன்னெடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? உயர் கல்வியால் பெற்ற அறிவு, பதவிகள், பிரபஞ்சப் பேரழகி என்ற கிரீடம் இவையெல்லாம் கடைக் கோடியில் வாழும் சாமானியர்க்கும் ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (22 - 12 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories